* அரும்பாடுபட்டு உழைத்து விளைச்சலின் பலன்காணும் கட்டத்தில் புயலாலும், வெள்ளத்தாலும் பயிர்கள் நாசமான கொடுமை - விவசாயிகள் கண்ணீர்!
* பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், இழப்பீடு வழங்கப்படவேண்டும்!
இவ்வாண்டு நல்ல விளைச்சலால் பலன் கிட்டும் என்று விவசாய மக்கள் மகிழ்ந்திருந்த ஒரு காலகட்டத்தில் புயலும், மழையும் சேர்ந்து அவர்களின் கனவை பொய்த்துப் போகச் செய்துவிட்டது; கண்ணீரும், கம்பலையுமாகத் துயருறும் விவசாயிகளுக்கு நிவாரணமும், இழப்பீடும் உடனடி தேவை - அடுத்த புயல் அறிவிப்பின் எச்சரிக்கை வந்துள்ளது; அரசு இயந்திரம் வேகமாக செயல்படட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த ‘நிவர்' புயலால் கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களில் கடும் மழை பெய்த காரணத்தால், உயிர்ச்சேதம் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைய வேண்டிய பயிர்கள் சேதமானது அவர்களை வாட்டிக் கொண்டுள்ள வேதனை தொடர்கிறது!
சில நாட்களுக்குமுன் பச்சைப் பசேல் என்று காட்சியளித்து, நம்பிக்கை விதையை ஊன்றிய அவர்களது மனதில் இந்தப் பெருவெள்ளம், விளைந்த பயிர்களை மூழ்கடித்து - நம்பிக்கையை நாசப்படுத்திவிட்டது கொடுமையிலும் கொடுமை!
‘‘கதிரை அறுக்க நினைத்த நாங்கள் அரிவாளை எடுத்து கழுத்தை அறுத்துக் கொள்ளவோ'' என்று கதறி அழும் உழவர் பெருமக்களின் ஓலக்குரல் அரசின் செவிப்பறைக்கு எட்டாமல் இருக்க முடியாது!
எல்லாப் பகுதிகளிலும் பயிர்க் காப்பீடு இல்லை!
பயிர் காப்பீடு எல்லாப் பகுதிகளிலும் செய்து முடிக்கப்படவில்லை. அதன்மூலம் மனமுடைந்த விவசாயிகளுக்கு ஆறுதலும், நம்பிக்கையையும், ஆக்கப்பூர்வ நிவாரணமும், இழப்பீடும் உரிய முறையில் கிடைக்கச் செய்யவேண்டியது தலையாய கடமை.
நாகை, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பல பகுதிகளில் ‘கஜா' புயலின் நிவாரணங்களேகூட எங்களுக்குச் சரியாகக் கிடைக்கவில்லை என்ற மனக்குறை மறையாத நிலையில், இப்படி ஒரு அவலம், செய்யாறு போன்ற பல பகுதிகளில் என்பதை தமிழக அரசு, வருவாய்த் துறை இதில் தீவிர கவனம் செலுத்த முன்வரவேண்டும்!
அதுபோலவே மற்றொரு கொடுமை! தலைநகர் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளான செம்மஞ்சேரி, தாம்பரம், முடிச்சூர், படப்பை, மணிமங்கலம் இன்னமும் - மூன்று நாட்களுக்கு மேலாகியும் - வெள்ளக்காடாகவே தெருக்களில் குளமும், ஆறும், ஏரியும் எப்படி ஏற்பட்டன என்று பார்ப்போர் வியக்கும் அதிர்ச்சியை அளிக்கக் கூடிய அளவில், மழை வெள்ள நீரால் சூழ்ந்து மக்கள் குடியிருப்புகள் தீவுகளாகவும், ‘தீபகற்பங்களாகவும்' ஆக்கப்பட்டு விட்டனவே - அவசரப் பணிகளுக்கு ஏனோ கமிட்டி மேல் கமிட்டி போடும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சென்று ஆறுதல் கூறவும் ஏன் வரவில்லை என்பது பாதிக்கப்பட்டோர் எழுப்பும் வேதனையான கேள்வி.
உணவில்லை, வெள்ள நீர் குடிநீருடன் கலந்ததால், விஷக்காய்ச்சல் தொடங்கி, பல நோய்களுக்கு அவை மூலகாரணமாகி விடும் அபாயம் உள்ளது என்பதை அரசு அறியாததா?
ஏனோ அங்கே இந்த அரசு அதிகாரிகள் பட்டாளம் விரைந்து செல்லவில்லை என்பது அவர்களது வலியால் ஏற்பட்ட வேதனை மிக்க கேள்வி.
மழைநீரை சேகரிக்க என்ன திட்டம்?
மழை காலத்தில் செய்யப்படும் உதவிகள் இப்போது தேவை என்றாலும், எப்போதும் தேவைப்படாத அளவுக்கு தண்ணீர் தேங்கி குளமாகி வெள்ளக்காடாக ஆகாதவாறு அந்தப் பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வினை நகர்ப்புறத் திட்டமிடும் துறை, பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சித் துறை எல்லாம் இணைந்து ஒரு வல்லுநர் குழு அமைத்து, எவ்வளவு மழை பெய்தாலும் அது கடலுக்குள் வடியும் அளவுக்கு வடிகால், தடுப்பணைகள், மழை நீரைச் சேகரிக்க மகத்தான திட்டங்களை ஊருக்கு ஊர் மேலும் பயனுறு (effective) வகையில் அமைப்பதைப்பற்றி அரசுகள் சிந்திக்கவேண்டும். மழையைத் தேக்கி வைத்து தேவையான நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டமும் முக்கியம்!
பிளாட் மனைகளாக மாறும் வயல்வெளிகள் - அதன் பின்னணியில் ஊழலோ, ஊழல்!
வயல்வெளிகளையும், புறம்போக்கு நிலங்களையும், நகர்களாக்கி வீடு கட்டும் திட்டம் போட்டு, அதற்குக் கையூட்டு (லஞ்சம்) தந்து, அந்த இடத்தில் ‘பிளாட்' மனைகள் போட்டு விற்று காசாக்கி, வீடுகளைக் கட்டியிருப்பது மற்ற நீர் வடியும் வசதிகள்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது அவசரக்கோலம் அள்ளித் தெளித்ததுபோல், இதற்குத் துணை போகும் அவலம்! இவற்றை அறவே அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை புதிய அணுகுமுறையில் ஓர் அரசு கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன்மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.
எதிர்க்கட்சிகள் குறை கூறுகிறார்களே என்று அங்கலாய்க்காமல், ஆக்கப்பூர்வ விமர்சனமாக அவற்றை எடுத்து, நியாயப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
அடுத்த புயல் அறிவிப்பு - எச்சரிக்கை!
மற்றொரு புயல் மிரட்டல் வரும் நிலையில், மெத்தனமோ, ‘எல்லாம் சரியாக இருக்கிறது' என்ற மிதப்போ அரசுக்கு இல்லாமல், என்றும் தயார் நிலையில், அதன் இயந்திரங்கள் செயல்பட வேண்டியது அவசியம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
29.11.2020