செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

செய்தியும், சிந்தனையும்....!

பிச்சைக் காசோ!


நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு வருகை.


தமிழ்நாடு அரசு கேட்ட தொகையைக் கொடுக்கவா போகிறார்கள்? 2015 சென்னை வெள்ளத்தின்போது தமிழ்நாடு அரசு கோரிய தொகையோ ரூ.2,500 கோடி. மத்திய அரசு கொடுத்ததோ வெறும் ரூ.1,365 கோடி. 2017 ஒக்கிப் புயலின்போது நிவாரணத் தொகையாக ரூ10 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு கேட்க, மத்திய அரசு தூக்கிப் போட்ட பிச்சைக் காசோ ரூ.133 கோடி.


2018 கஜா பயலின்போது, தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரணத் தொகையோ ரூ.15 ஆயிரம் கோடி.


மத்திய 'எஜமான' பி.ஜே.பி. அரசு கொடுத்ததோ ரூ.1,146 கோடி. ஆம் அவர்கள் எஜமானர்கள் - நாம் பிச்சைக்காரர்கள்.


இதிலும் ஒரு மனுநீதியா?


அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு அய்.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவுக் கல்லூரிகளில் உள்ளதுபோல கட்டணத்தை அ.தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளது: - தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்.


அரசு கல்லூரிகளுக்குள் ஏன் இந்த இரட்டை அளவுகோல்? இதிலும் ஒரு மனுநீதியா?


என்ன தவறு?


‘நீட்' தேர்வுக்குத் தடை கோரும் நிலையில், தேர்வு கையேடு வழங்கிய தி.மு.க.வினர்: - ‘தமிழ் இந்து' செய்தி


இதில் என்ன தவறு. ‘நீட்' கூடாது என்பதால், ‘நீட்' தேர்வை எழுதக் கூடாது என்று யாரும் சொல்லவில்லையே! ‘நீட்' தொடரும் வரை - அதை எழுதுவதற்குத் தயார்படுத்திட வேண்டிய பொறுப்பும் - கடமையும் இருக்கிறதே!


‘‘வீடு பேறு'' அடைவார்களா?


திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி


 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம்.


சொர்க்க வாசலுக்குள் நுழையும் பக்தர்கள் திரும்பி ‘‘வீடு பேறு'' அடைவார்களா அல்லது சொந்த வீட்டுக்குத் திரும்புவார்களா?


நினைவிருக்கட்டும்!


வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் போராட்டம் வலுக்கிறது!


இந்துத்துவாவின் படி விவசாயம் பாவத் தொழில் ஆயிற்றே - அந்த மனுதர்மம் இப்போது செல்லுபடியாகாது என்பது நினைவிருக்கட்டும்!


சக்தி எங்கே?


42 ஆண்டுகளுக்குப்  பிறகு லண்டனில் மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள்  நாகை மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை!


இதற்கு மேலும் இந்த சாமிகளுக்கு சக்தி உண்டு என்று மக்கள் நம்புவார்களா?


அது என்ன சட்ட விரோதம்?


சட்ட விரோத மத மாற்றத் தடை அவசர சட்டம் உத்தரப்பிரதேசத்தில்.


மதம் மாறுதல் அல்லது மத மறுப்பு என்பவை எல்லாம் தனி மனித உரிமை. இதில் அரசு தலையிட ஏது உரிமை? சட்ட விரோதமாக மத மாறுதல் என்றால் என்ன? சட்டப்படியான மத மாறுதல் என்று ஒன்று இருக்கிறதா? அதனை விளக்கினால் நன்று!


‘எ(இ)துவும் நடக்கும்!'


பூஜை செய்வதாகக் கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் அபேஸ்: - ‘தினத்தந்தி' செய்தி


பூஜையால் நடக்கும் என்ற பேராசையால் இதுவும் நடந்திருக்கிறது. ஏடுகளும் ஆன்மீக இதழ்கள் வெளியிடுவதை நிறுத்தவேண்டாமா?


No comments:

Post a Comment