தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை'யே என்ற குன்றக்குடி அடிகளாரின் மெய்வாக்குப் பலிக்கட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை'யே என்ற குன்றக்குடி அடிகளாரின் மெய்வாக்குப் பலிக்கட்டும்!

* நமது கருத்துகளையும், அறிக்கைகளையும் இருட்டடிக்கும் ஊடகங்கள்!


* கரோனா காலகட்டத்திலும் நம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும்


*திருப்பணியைச் செய்து வருவது ‘விடுதலை'யே!



நமது கழகப் பொறுப்பாளர்கள் சந்தா சேர்க்கும் பணி பாராட்டத்தக்கது!


தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை'யே என்ற குன்றக்குடி அடிகளாரின் மெய்வாக்குப் பலிக்கட்டும்!


நமது கருத்துகளையும், அறிக்கைகளையும் இருட்டடிக்கும் ஊடகங்கள் ஒருபக்கம்; கரோனாவால் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடு இன்னொரு பக்கம்; இந்த நிலையில், நம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் ‘திருப்பணி'யைச் செய்வது ‘விடுதலை'யே. இதற்குச் சந்தா சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடும் கழகப் பொறுப்பாளர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள்; தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை'யே என்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மெய்வாக்கைப் பலிக்கச் செய்வீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


அன்பார்ந்த பாசமிகு கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களே,


பகுத்தறிவாளர் கழக உடன்பிறப்புகளே,


இன உணர்வாளர்களே, அன்பர்களே,


அனைவருக்கும் வணக்கம்.


கரோனா கொடுந்தொற்று சற்றுக் குறையத் தொடங்கிவிட்டது என்று, புள்ளிவிவரங்களைக் கண்டு அலட்சியமாய் இருக்காதீர்கள். ஒவ் வொரு தோழரின் உடல்நலமும் முக்கியம். பகுத்தறிவாளர்களும், கருஞ்சட்டையினரும், சுயமரியாதை வீரர்களும், வீராங்கனைகளும் விஞ்ஞானிகளைப் போன்றவர்கள் - அத்திப்பூத்ததுபோல - எண்ணிக்கையில் அதிகம் இல்லையென்றாலும், மானுடத்தின் முன்னேற்றம் - இவர்களது அறிவு, ஆராய்ச்சி, உழைப்பு, தொண்டறம் இவற்றைப் பொறுத்தல்லவா?


தேனாய் இனிக்கும் செய்தி!


அதுபோல இப்போது ‘விடுதலை' நாளேடு அச்சிட்ட பிரதிகள் நாளும் அஞ்சல் வழியிலும், முகவர்கள்மூலமாகவும் அனுப்பப்படுவது கண்டு ஆனந்தம் கொள்ளுகின்றார்கள் - நம் அறிவார்ந்த வாசகப் பெருமக்கள் என்ற செய்தி தேனாய் இனிக்கிறது எமக்கு!


சமையல் செய்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது, பலரும் உண்டார்கள்; சுவைத்தார்கள் என்பதில்தானே! அதுபோல, பலதரப்பிலும் படிக்கப்படுவதோடு பாதுகாக்கப்படும் கொள்கை ஏடாக ‘விடுதலை' கரோனாவையும் வென்று பீடுநடை போடுகிறது.



இதை ஊக்கப்படுத்த நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள் மானமிகு முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப் புச் செயலாளர்கள் ஊமை.ஜெயராமன், மதுரை வே.செல்வம், ஈரோடு சண்முகம், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்தி ரையன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன் மற்றும் மண்டல, மாவட்டக் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள் சென்று அமைதியாக எவ்வித ஆர்ப் பாட்டமுமின்றி ஏராளமான ‘விடுதலை' நேயர்களை வீடு தேடிச் சென்று, ஓராண்டுச் சந்தா, அரையாண்டு சந்தா வசூலித்து வருகின்றனர் தேனீக்கள்போல!


எம்மை மகிழ்வுறச் செய்யும் ‘கொள்கைத் திருப்பணி' பிரச்சாரப் பெரும்பணியை எல்லா மாவட்டங்களிலும், வட்டங்கள், நகரங்கள், கிராமங்களிலும் தோழர்கள் அவரவர்கள் எல்லைக்குட்பட்டு அலைச்சல் இல்லாமல், அனாயசமாக செய்து முடிக்க கடமையாற்றினோம் என்று கன மகிழ்ச்சி கொள்ளும் அரிய வாய்ப்பு கிட்டுகிறதே!


நம் செய்திகளை இருட்டடிக்கும்


இன எதிரிகள்!


ஊடகங்கள், செய்தி ஏடுகள், திராவிடர் கழகத்தின் அறிக்கைகள் துல்லியமானதாகவும், தூய வழியை விருப்பு வெறுப்பின்றி வெளிச்சமாய் காட்டுவதாக இருப்பினும்கூட, நம் செய்திகளை இருட்டடிப்பதில் இன எதிரிகளுக்கும் சரி, இனத்தின் ‘நம்மாழ்வார்களுக்கும்' சரி, ஒரே அணுகுமுறைதான்!


சமூகப் புரட்சியை நோக்கும் தெம்புள்ளம் உள்ள நமது கருத்தொளி, முகிலைக் கிழித்து வையத்துக்கு ஒளிதரும் முழு மதியாகப் பரப்ப - ‘விடுதலை'தானே நமது அறப்போர்க் கருவி. அது ஒவ்வொரு திராவிடரின் கையில் தவழ்ந்தால், சமூக விடுதலை தானே வந்து, நம் வீட்டுக் கதவைத் தட்டும்!


‘விடுதலை'யின் வீச்சு -


புது வாழ்வுக்கான மூச்சு!


எனவே, இப்பணியில் இறங்கி, வெற்றி பெற்றுவரும் நம் இயக்கக் குடும்பத்திற்கு, எமது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!!


‘விடுதலை'யின் வீச்சு


நம் மக்களின் புது வாழ்வுக்கான மூச்சு!


மறவாதீர்!


‘‘தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை' அங்கு இருப்பதே'' என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.


அவர் இலக்கணம் என்றும் மெய்தான்!


ஒருபோதும் பொய் ஆகக்கூடாதல்லவா?


 


உங்கள் தொண்டன்,


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை       


31.10.2020         


No comments:

Post a Comment