திண்டுக்கல், பொள்ளாச்சி தொகுதிகளில் ஆசிரியர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எழுச்சி உரை ஆற்றினார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

திண்டுக்கல், பொள்ளாச்சி தொகுதிகளில் ஆசிரியர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எழுச்சி உரை ஆற்றினார்!

featured image

எதேச்சதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் தான் இப்போது போட்டி!

திண்டுக்கல், உடுமலை, ஏப்.6, இந்தியா கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து நான்காம் நாளாக திண்டுக்கல், உடுமலைப்பேட்டையில் சி.பி.அய்(எம்), தி.மு.க. வேட் பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நான்காம் நாள் முதல் கூட்டமாக திண்டுக்கல் மணிக் கூண்டு அருகில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் 5.4.2024 அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திண்டுக்கல்லில் தமிழர் தலைவர்!
இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன் தலைமையேற்க, தலைமைக்கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான அய். பெரியசாமி, சி.பி.அய்.(எம்) தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராசன், பிலால் உசேன், தி.மு.க. மாநகரச் செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா, மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், சி.பி.அய்.(எம்) மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, தி.மு.க. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெடுஞ்செழியன், தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் வெள்ளிமலை, காங்கிரஸ் மாநகர் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், ம.தி.மு.க. பொறுப்பாளர் செல்வராகவன், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் மணிகண்டன், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் அம்சா, வி.சி.க. மாவட்டச் செயலாளர் மைதீன் பாவா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் சீனிவாச பாபு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சேக்பரீத், கொங்குநாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அருள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை புலேந்திரன், ஆதித் தமிழர் பேரவை தலித் சுப்ரமணியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஜெயராமன், சி.பி.அய். மாநகரச் செயலாளர் அரபு முகமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அந்தோணி, எம்.ஜி.ஆர்.கழக மாவட்டச் செயலாளர் சீனிவாசன், தி.மு.க. வழக்குரைஞர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர்.

கழகத்தின் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் மயிலை கிருஷ்ணன், ரா.நாராயணன், மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் தலைவர் மாணிக்கம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் தி.க.செல்வம், மாநகரச் செயலாளர் கருணாநிதி, பழனி மாவட்டத் தலைவர் முருகன், பழனி மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஆகியோரும் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் வருகை தந்தவுடன் குறித்த நேரப்படி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டவர் மக்களைக் கவர்ந்தார். கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்திப் பேசினார். ஆசிரியர் வருகைக்குப்பின்னும் எதிர் வெயிலின் வெப்பம் குறைந்த பாடில்லை. இருந்தாலும் புத்தக அறிமுகம், விற்பனை, இந்தியா கூட்டணி கட்சிப் பிரமுகர்கள் ஆசிரியருக்கு ஆடை அணிவித்தல் போன்றவை மின்னல் வேகத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, இறுதியாக ஆசிரியர், “வெயிலின் வெப்பம் அதிகம். அதையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கிறீர்கள்.

ஆனாலும் மோடி ஆட்சியின் வெப்பம் இதைவிட அதிகம். அதனால் நாம் சந்தித்து பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது” என்றே தொடங்கினார். மக்கள் அதை உணர்ந்து கைதட்டி ஆசிரியரின் கூற்றை ஆமோதித்தனர். மேலும் மோடி ஆட்சியில் பாசிசமும், ஊழலும் எப்படி தலைவிரித்தாடுகின்றன என்பதை விளக்கிப் பேசி தனது உரையை நிறைவு செய்தார். இறுதியாக மாவட்டச் செயலாளர் காஞ்சிதுரை நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இரவு 7 மணிக்கு மேல் திண்டுக்கல் மக்கள், தோழர்கள், இந்தியா கூட்டணிக் கட்சிப் பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் பிரியா விடைபெற்று உடுமலைப்பேட்டையை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார்.

உடுமலைப்பேட்டையில் தமிழர் தலைவர்!
ஆசிரியர் சரியாக இரவு 9 மணிக்கு உடுமலைப் பேட்டை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து விட்டார். உடுமலைப்பேட்டைத் தோழர்கள் வாண வேடிக்கைகளுடன் ஆசிரியரை சிறப்பாக வரவேற்றனர். பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற அந்த பொதுக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கயல்விழி செல்வராஜ் முன்னிலையேற்று உரையாற்றினார். தி.மு.க. மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன், தி.மு.க. நகரச் செயலாளர் வேலுச்சாமி, வி.சி.க. மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் செல்வராசு, சி.பி.அய். வட்டாரச் செயலாளர் கிருஷ்ணசாமி, கொங்குநாடு மக்கள் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் கொங்கு ரவி, இந்திய அய்க்கிய கட்சி பொறுப்பாளர் மூர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை தென்றல் சேகர், உடல் உழைப்பு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி புள்ளையண்ணன், மயில்சாமி, காப்பாளர் பொறியாளர் பரமசிவம், பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் மாரிமுத்து, பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், உடுமலை ஒன்றியத் தலைவர் பெரியார் பித்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை ஏற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக 9:20 மணிக்கு வெள்ளமென திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஆசிரியர் உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் காவிகள் காலூன்ற முடியாது!
அவர் தனது உரையில், “இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது” தொடர்ந்து, “காவிகளால் தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது” என்று அடுத்தடுத்து சொல்லி எடுத்த எடுப்பிலேயே, மணிக்கணக்கில் காத்திருந்த மக்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தினார். அந்த வார்த்தைகளில் மக்களுக்கு அப்படியொரு ஈர்ப்பு. 10 ஆண்டு கால துயரத்தைப் போக்கும் ஆறுதல் அல்லவா அது! மக்களை உற்சாகப்படுத்திவிட்டு, “உடுமலைப்பேட்டை வழக்கம் போல உற்சாகமாக எனக்கு வரவேற்பு அளித்திருக்கிறது” என்று தனது உற்சாகத்தையும் மக்களிடம் பகிர்ந்துகொண்டார். இந்தியா கூட்டணி இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நினை வூட்டி, “இந்தியா கூட்டணி உருவாவதற்கு நம்முடைய முதலமைச்சர்தான் அடித்தளம் இட்டார்” என்பதை நினைவுபடுத்தினார். ”காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையே இதற்கு சான்று” என அதற்கு நடப்பு சான்றையும் எடுத்துக்காட்டினார். பா.ஜ.க. என்ற பாசிச அமைப்பால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி, “எதேச்சதிகாரத்திற்கும், ஜனநாயகத் திற்கும் இப்போது போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதில் இந்தியா கூட்டணிதான் வெல்லப் போகிறது” என்று முடித்த போது மக்களின் ஆரவாரம் அந்தத் திடலையே நிறைத்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அதன் புகழ் தென்னகம் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் பரவிக்கொண்டிருப்பதை கனடா நாட்டைச் சுட்டிக்காட்டிப் பேசி, திராவிட மாடலின் வீச்சை மக்களுக்கு எளிமையாகப் புரிய வைத்தார்.

மோடிஜீ.. ராஜாஜீயைப் பாருங்கள்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, தி.மு.க. வை ஒழித்துக்கட்டி விடுவேன் என்று தரம் தாழ்ந்து பேசியிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இப்படித்தான் ராஜாஜி திராவிட இயக்கத்தையும், கம்யூனிஸ்ட் கட்சி யையும் மூட்டைப் பூச்சியைப் போல் நசுக்கிவிடுவேன் என்று சொன் னார். அவர் காணாமல் போய் விட்டார். இன்று திராவிட இயக்கம் திராவிட மாடலாக உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே சொல்லிவிட்டு, “மோடிஜீ… ராஜாஜீ..யைப் பாருங்கள்” என்று முத்தாய்ப்பு வைத்தார். மக்கள் அதை ரசித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மணிப்பூர் கலவரம், தூத்துக்குடி வெள்ள பாதிப்பு, தேர்தல் பத்திரங்கள், சாகர்மாலா ஊழல், கம்பெனிகளை மிரட்டி, நன்கொடை என்ற பெயரில் வன்கொடையாக பணம் வசூலித்தது உள்ளிட்டவற்றை விவரித்துப் பேசினார். அதையொட்டி, “வடகிழக்கு மாநிலங்களில் பி.ஜே.பி.யை தோற்கடிக்கவே முடியாது. ஏன் தெரியுமா?” என்று நிறுத்தி, “ஏனெனில், அங்கு பி.ஜே.பி. போட்டியிடவே இல்லை. போட்டியிடாதவர்களை எப்படித் தோற்கடிப்பது?” என்று பதிலையும் கேள்வியாகவே சொன்னதும் குபீர் சிரிப்பு எழுந்து அடங்கியது. 10 மணிக்கு சற்றே முன்னதாக தனது உரையை நிறைவு செய்ய, “பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டு முடித்துக்கொண்டார். இறுதியாக உடுமலைப்« பட்டை நகரத் தலைவர் கலையரசன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அடுத்த நாள் அதிகாலை 12:30 மணியளவில் கோவையில் முகாமிட்டது பரப்புரைக்குழு.

No comments:

Post a Comment