தேர்தல் பத்திரமும்- உச்சநீதிமன்றத் தீர்ப்பும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 5, 2024

தேர்தல் பத்திரமும்- உச்சநீதிமன்றத் தீர்ப்பும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் எழுச்சியுரை

featured image

சென்னை,மார்ச் 5- ‘தேர்தல் பத்திரமும்- உச்சநீதிமன்றத் தீர்ப்பும்’ எனும் தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் திரா விடர் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (4.3.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புப் பொதுக்கூட்ட அறிமுக உரையுடன் அனைவரையும் வரவேற்றார்.
அவர் உரையில்,

தேர்தல் பத்திரம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசுக்கு விழுந்த பெரிய அடியாகும். இதை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

யார் கொடுக்கிறார்கள், யாருக்கு கொடுக்கிறார்கள் என்கிற விவரம் எதுவும் வெளியே தெரியாது. இது ஒரு ஜனநாயக நாடு. ஆளும் பாஜகவுக்கு 6,566 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் சென்றுள்ளது என்கிற தகவல் வெளியாகி யுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஓராயிரம் கோடி என்றால், ஆளும் பாஜகவுக்கு ஆறாயிரம் கோடிக்குமேல் என்றால் எண்ணிப்பார்க்கவேண்டும். இந்த ஆட்சியில் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சுமார் 20 லட்சம் கோடி கடன் வராக்கடன் ஆகியுள்ளது. வராக்கடன் என்று சொல்லி இவர்களுக்கு வருகின்ற தொகையாக மாறியிருக்கிறது என்பதுதான் எண்ணிப்பார்க்க வேண்டும். மேலோட்டமாக பார்த்தால் வராக்கடன். அது ஆளும் கட்சிக்கு பிஜேபிக்கு வருகின்ற தொகையாக மாறியிருக்கிறது என்று எண்ணுவதற்கு எல்லா வகையிலும் நியாயங்கள் உள்ளன.

இந்த தேர்தல் பத்திரங்களைப்பெற்றுக்கொண்ட கட்சி 15 நாள்களுக்குள் வரவு வைத்துக்கொள்ளவில்லை என்றால், அந்த பணம் எல்லாம் எங்கே போகும் என்றால், பிரதமர் நிதிக்கு போய்விடுமாம். இதில் அடுத்த பெரிய சூழ்ச்சி என்னவென்றால், பிரதமர் நிதி என்று ஒன்று இருக்கிறது. அதற்கு வரவு செலவே கிடையாது. யார் கொடுக்கிறார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

இப்படியாக ஜனநாயகப் போர்வையில் ஓர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
இந்த தேர்தல் பத்திரத் திட்டத்தை தேர்தல் ஆணையம் எதிர்த்துள்ளது. ரிசர்வ் வங்கி எதிர்த்துள்ளது. இவ்வளவுக்கும் மத்தியில்தான் தன்னை யார் என்ன செய்யமுடியும் என்று ஓர் அகங்கார, ஆணவமுள்ள ஆட்சி ஒன்றியத்திலே நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த ஆட்சி மீண்டும் வரக்கூடிய கெட்ட வாய்ப்பு வருமானால், ஒரே தேர்தல், ஒரே நாடு என்று அநேகமாக இதுதான் கடைசியாக ஒரே தேர்தல் ஆகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதை மக்களிடையே கொண்டு செல் வதற்கான கடமையை தேர்தலிலே நிற்காத, அரசியலில் நுழையாத திராவிடர் கழகம் மக்கள் மத்தியிலே முன்வைக் கிறது என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றா கும். மக்களை எந்த அளவிற்கு நாம் விழிப்புணர்ச்சியோடு ஒன்று திரட்டுகிறோமோ, அந்த அளவிற்குதான் நம் எதிரிகள் வீழ்ச்சிய அடைவார்கள். அதனால்தான் திராவிடர் கழகம் இதுபோன்ற கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என் றாலும்,

தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிடர் கழகம் எப் போதும் தேர்தல் நேரங்களில் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலில் சம்பந்தப்படாத திராவிடர் கழகம் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது.
ஆசிரியர் அவர்கள் ‘தெரு முழக்கம், பெருமுழக்கம்’ என்கிற தலைப்பில் முழக்கத்தை அறிவித்திருக்கிறார்.
தெருவில் வைக்கின்ற முழக்கம் மக்கள் முழக்கமாக பெரு முழக்கமாக பட்டிதொட்டியெல்லாம் ஒவ்வொரு வாக்காளர் கதவையும் தட்டுகின்ற அளவிற்கு எந்த அளவில் பிரச்சாரம் போய்ச் சேருகின்றதோ, அந்த பாசிஸ்டுகள் வீழ்ச்சி அடைவதற்கான வழி ஏற்படும்.

எந்த ஆட்சி வரக்கூடாது, நாம் ஆதரிக்கிற ஆட்சி சாதனைகள் என்ன என்பது குறித்து தந்தை பெரியார் காலந் தொட்டு, காமராசரை ஆதரித்த காலத்திலிருந்து காமராசர் ஆட்சியின் சாதனைகள், ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் என்று தொடங்கி ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம். இன்னும் சில நாள்களில், அப்படி ஒரு வெளியீடும் விரைவில் வெளிவர இருக்கிறது என்ற மகிழ்ச்சியான தகவலையும் இந்த நேரத்தில் தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி.
புத்தக வெளியீடு

நீதிகெட்டது யாரால்? முதல், இரண்டாம் பாகம் இணைக் கப்பட்டு விரிவாக்கப்பட்டு ரூ.300 நன்கொடை மதிப்புள்ள புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார். சிறப்புக் கூட்டத்தில் ரூ.250க்கு வழங்கப்பட்டது.

ஆவடி எழில்வாணன், இரா.தமிழ்செல்வன், ஆ.வெங்க டேசன், செல்வ.மீனாட்சி சுந்தரம், தே.செ.கோபால், த.கு.திவா கரன், கவிஞர் கண்மதியன், தங்க.தனலட்சுமி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கோ.ஒளிவண்ணன், பொறியாளர் ச.இன்பக் கனி, வழக்குரைஞர் துரை அருண், கல்பாக்கம் இராமச்சந்திரன், சைதை மு.ந.மதியழகன், மு.இரா.மாணிக்கம், விடுதலை சிறுத் தைகள் கட்சி பொறுப்பாளர் செல்வம், செ.பெ.தொண்டறம், உள்ளிட்ட பலரும் புத்தகத்தை வரிசையில் சென்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
அம்பத்தூர் கழகப்பொறுப்பாளர் இராமலிங்கம் “இந்தியா” கூட்டணியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சின்னமான பானைச்சின்னத்தை வெற்றிச்சின்னமாக அறிவித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் எழுச்சித்தமிழரிடம் பானையை வழங்கினார்.
கழகத்துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
தி.மு.க. சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை திமுக. சட்டத்துறை தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை பல்வேறு சட்ட விளக்கங்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார். அவரது உரையில்:

அமெரிக்காவில் 1863ஆம் ஆண்டு கெட்டிஸ்பர்க் தேசிய கல்லறைக் கூட்டத்தில் அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் உரையில், மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்தி வருகின்ற, மக்களாட்சி மண்ணிலே மறைந்துவிடக்கூடாது என்று சூளுரைத்தார். 1865ஆம் ஆண்டில் அவர் கொல்லப்பட்டு உயிரிழந்தார். மக்களாட் சிக்காக தன் உயிரையே கொடுத்தவர் லிங்கன்.

கிட்டதட்ட 250ஆண்டுகளுக்கும் மேலாகி, பல்வேறு இனத்தவர், பல்வேறு நாட்டவர், பல்வேறு மொழியினர் இருந் தால்கூட, அமெரிக்காவில் இன்றும் ஜனநாயகம் தழைத் தோங்குகிறது.
‘மக்கள் குரல் மகேசன் குரல்’ என்று சொன்னார் அறிஞர் அண்ணா. ஆனால் இப்போது இருக்கின்ற நமது பிரதமர் மோ, மனதின் குரல் (மன் கி பாத்) என்ற உரையை அடிக்கடி நிகழ்த்தி வந்துள்ளார். மக்களின் குரல் அவர் காதுகளுக்கு கேட்பதில்லை. அவர் குரல் மட்டுமே அவருக்கு கேட்கிறது. மனதின் குரல் என்றால் என்ன? அவர் மனதில் இருப்பது கார்ப்பரேட்டு நிறுவனங்களும், முதலாளிகளும் பணத்தை பாஜகவுக்கு கொடுப்பதுதான் என்பதை எடுத்துக்காட்டும் முகத்தான் இந்த தேசிய தேர்தல் பத்திரத்திட்டம் அறிவிக்கப் பட்டது.
இந்திய பொருளாதாரம் 2004லிருந்து 2014 வரை 8 விழுக்காட்டுக்கும் மேல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்திலே நாடுவெகுவாக பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி சென்றது.

2014இல் மோடி வந்து கிட்டதட்ட 10ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காட்டுக்கும் குறைந்துவிட்டது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது.
2013 முதல் 2016 வரை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் அனைத்து உலகமே பாராட்டக்கூடிய ரகுராம் ராஜன். அவர் பணமதிப்பிழப்பு கூடாது என்று எதிர்த்தார். அன்றைய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லியும், பிரதமரான மோடியும் கேட்கவில்லை.

பணமதிப்பு செய்யப்பட்டதுகுறித்து மன்மோகன்சிங் கூறும்போது பெரிய பொருளாதார பிழை என்றார். அந்த பணமதிப்பிழப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியைக் கண்டது என்பது உண்மை. பணமதிப்பிழப்புக்கு எதிராக இருந்தார் என்பதால் ரகுராம் ராஜன் இரண்டாவது முறை புதுப்பிக்கப்படாமல், உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றார். அவர் வந்தவுடன், செப்டம்பர் 2016இல் ஒன்றிய அரசு சொல்கிறது தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டவருவோம் என்று.
தேர்தல் பத்திர திட்டம் என்றால் என்ன? அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் பாரத ஸ்டேட்வங்கியை அணுகி பத்திரத்தை வாங்கலாம்.
அரசின் ரிசர்வ் வங்கியிடமிருந்து பத்திரம் வழங்கும் உரிமை பாரத ஸ்டேட் வங்கியிடம் அளிக்கப்படுகிறது.
தேர்தல் பத்திரத் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொடுப்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இத்திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்.பத்திரம் என்பது கரன்சி நோட்டைப் போன்றது – அதை வெளியிடும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே உண்டு என்று முதல் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம், பத்து லட்சம், ஒரு கோடி என்ற மதிப்புகளில் பத்திரம் வெளியிடப்படும். பத்திரத்தை யார் வாங்குகிறார்கள், யாரிடம் கொடுக்கப்போகிறார்கள் என்பதும் தெரியாது. இத்திட்டம் கருப்புப்பணப் புழக்கத்தை அதிகரித்துவிடுகிறது தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனாலும் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் வருகிறது. தேர்தல் பத்திரம் எப்படி வரவு செலவு அறிக்கையில் வருகிறது? மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் நிதி மசோதாவாக இத்திட்டம் அரசமைப்புச்சட்டம் 110க்கு முரணாக வருகிறது என்று 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் கூறப்பட்ட நிலையில், 4 சட்டங்களின் திருத்தம் மூலம் தேர்தல் பத்திரத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா உரையில் ஒன்றிய பாஜக அரசின் மோசடிகளை, பல்வேறு நிலைகளிலும் நாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை எடுத்துக்காட்டி பேசுகையில்:

10 ஆண்டுகளில் ஜனநாயக பண்புகள் மாண்புகள் சிதைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பத்திரத்திட்டம் என்பது அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது. ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் உள்பட மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின்படி, சொத்து விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் பத்திரத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை.
மோடியின் ஒன்றிய பாஜக அரசில் தேர்தல், ஆணையம், சிபிஅய், அமலாக்கத்துறை மூன்றும் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளன. தேர்தல் பத்திரங்கள்குறித்து தகவல் வெளியிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், பாரத ஸ்டேட் வங்கி பாஜகவைக் காப்பாற்றுவதற்காக ஜூன் 30 வரை கால அவகாசம் கோரி உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக நாட்டில் ஊழலில் திளைக்கின்ற கட்சியாக பாஜக உள்ளது.
டில்லியில் கூடிய ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக்கூட்டத்தில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சிட்டு 100 விழுக்காடு எண்ணப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வாக்குப்பதிவு எந்திரம் தயாரிக்கின்ற ஙிபிணிலி நிறுவனத்தின் இயக்குநர்களாக பாஜகவினர் உள்ளனர். எப்படி வாக்குப்பதிவு எந்திரத்தை நம்ப முடியும்? உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டில்லி, பஞ்சாப் என வடமாநிலங்களிலும், நாடு முழுவதும் “இந்தியா” கூட்டணி வலிமையாக உள்ளது.
மக்களவை உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்குகளை எடுத்துக்காட்டி சிறப்புரை ஆற்றுகையில்:

பாஜக ஒரு ராஜதந்திர, மாய்மால அரசியல் கட்சி. அதிகார வர்க்கத்தினை வளைத்து தேர்தல் ஆணையம் உள்பட தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கிறது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிக்கொண்டுள்ளது. அதற்காக கூச்சப்படுவதில்லை, வெட்கப்படுவதில்லை. political ethics என்று எதுவும் பிஜேபிக்கு கிடையாது. அதன் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளையே சிதைத்துவிடும். அப்படித்தான் அதிமுக, பாமக கட்சிகள் சிக்கிக்கொண்டன. தேர்தல் பத்திரம்மூலம் சட்டப்பூர்வமாக ஊழலை செய்துள்ள சாதுர்யம். ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக்கி கட்சிக்குள் சேர்த்துவிட்டனர்.

கருப்புப்பணத்தை வெள்ளையாக்கி பிஜேபி தங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதற்குத்தான் இந்த தேர்தல் பத்திரத்திட்டம்.

நாட்டில் அறியப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் அந்தக்கட்சியில்தான் இருக்கிறார்கள். காவல்துறையால் தேடப்படுகின்ற குற்றவாளிகள் அந்தக்கட்சியில்தான் இருக்கிறார்கள். நாம் டெமாக்கரசி என்கிறோம் என்றால் அவர்கள் அரசியலை கிரிமினல்மயமாக்கி வருகிறார்கள்.

பெல் நிறுவனம் வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரிக்கிறது என்றால், அந்நிறுவனத்தில் பிஜேபியை, ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்தவர்கள் ஏழுபேர் இருக்கிறார்கள்.
மக்களாட்சிக்கு எதிரான கும்பல் ஆட்சி அவர்களுடையது. அதானி, அம்பானி, மோடி, அமித்ஷா என்ற கும்பல் ஆட்சி.

பணமதிப்பிழப்பு என்பதை அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. தொலைக்காட்சியில் பிரதமரே அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பால் மக்கள் பாதிக்கப்பட்டனர். சிறு,குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஒன்றிய அரசு திருடப்பட்ட அரசு. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. வடமாநிலங்களில் பிரதமரை இவிஎம் பிரதமர் என்கிறார்கள். தந்தைபெரியாரின் மண் சமூக நீதிமண். இங்கே அதற்கு இடம் கிடையாது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நமக்கெல்லாம் வழிகாட்டுகிறார்.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

பொருளாளர் வீ.குமரேசன், புலவர் பா.வீரமணி, இரா.வில்வநாதன், தளபதி பாண்டியன், புரசை அன்புசெல்வன், ஆவடி கார்வேந்தன், சி.வெற்றிசெல்வி, நல்லினிஒளிவண்ணன், பூவை செல்வி, பெரியார் மாணாக்கன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
——————–

No comments:

Post a Comment