திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

featured image

எதைச் சொன்னாலும், அதை நிறைவேற்றுபவர்கள்தான் அமைச்சர்கள்
பெரியாரின் செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்ட
அன்பில் பெயரில் கட்டடம் கட்டித் தாருங்கள்!
உங்களிடத்தில் உரிமையோடும், உறவோடும், கொள்கை உறவோடும் இதை வேண்டுகோளாக வைக்கின்றோம்!

திருச்சி, மார்ச் 1 எதைச் சொன்னாலும், அதை நிறை வேற்றுபவர்கள்தான் அமைச்சர்கள்; பெரியாரின் செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்ட அன்பில் பெயரில் கட்டடம் கட்டித் தாருங்கள்! உங்களிடத்தில் உரிமை யோடும், உறவோடும், கொள்கை உறவோடும் இதை வேண்டுகோளாக வைக்கின்றோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவர்கள்.

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்விழா ஆண்டு!
கடந்த 8-2-2024 அன்று மாலை நடைபெற்ற திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவருடைய சிறப்புரை வருமாறு:
‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய பெருமை!
பெரியார் மணியம்மை மேல்நிலைப்பள்ளி என்ற மகளிருக்கான பள்ளியினுடைய பொன்விழா – 50 ஆம் ஆண்டு விழா என்கிற பெருமைமிகு -வரலாற்றில் பதிவாகக் கூடிய இவ்விழாவிற்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடிய அளவிற்கு, தமிழ்நாட்டினுடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய பெருமை உலகெலாம் இன்றைக்குப் பரந்து விரிந்து பேசப்படுகின்றது.

பதவிக்கெல்லாம் அப்பாற்பட்ட உறவுகள் என்ற அடிப்படையில் கொள்கை உறவுகள்!
அப்படிப்பட்ட ஆட்சியினுடைய அங்கங்களாக, கொள்கைத் தங்கங்களாக இருக்கக்கூடிய இந்தப் பகுதி யைச் சார்ந்த, உரிமையோடும், பாசத்தோடும், நம் முடைய குடும்பத்தில் ஒருவர் என்ற அளவில், பதவிக் கெல்லாம் அப்பாற்பட்ட உறவுகள் என்ற அடிப்படையில் கொள்கை உறவுகளாக இருக்கக்கூடிய நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்களே,

கொள்கைக் குடும்பத்து உறவு வழி வந்த அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
அதேபோல, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து துடிப்போடு, வேகமாக எல்லா இடங்களிலும் ஒரு புதிய கருத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கக் கூடிய, அவரும் நம்முடைய கொள்கைக் குடும்பத்து உறவு வழி வந்தவர் என்ற பெருமைக்குரிய அருமைச் சகோதரர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களே,
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்ற வணக்கத்திற் குரிய திருச்சி மேயர் அவர்களே,
அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அருமைச் சகோதரர் மதிவாணன் அவர்களே,

ஒவ்வொன்றிலும் தனி கவனம் செலுத்துகின்ற பள்ளியின் செயலாளர் அன்புராஜ்!
இந்தப் பள்ளியில் தொடக்கத்தில் நான் பல பணிகளை மேற்கொண்டாலும், இப்பொழுது இந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றிலும் தனி கவனம் செலுத் துகின்ற இந்தப் பள்ளியின் செயலாளராக இருக்கக் கூடிய தோழர் வீ.அன்புராஜ் அவர்களே,
தலைமை ஆசிரியை அவர்களே, மற்றும் ஆசிரியப் பெருமக்களே, அன்பு கனிந்த பெற்றோர்களே, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் இராமச்சந்திரன் அவர்களே, பதிவாளர் அவர்களே, மற்றும் பெரியோர்களே, நண் பர்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொன்விழா வாழ்த்துகள்!

ஒரு தனித்தன்மையோடு
நடந்திருக்கின்றது இவ்விழா!
நான் நிறைய பேசவேண்டிய அவசியமும் இல்லை. பேசப் போவதும் இல்லை. இந்த விழா ஒரு தனித் தன்மையோடு நடந்திருக்கிறது. அமைச்சர்கள் இவ்வ ளவு நேரம் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு உற்சாகத்தை நமக்குத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.
நம்முடைய பேட்டரி எப்பொழுதெல்லாம் சார்ஜ் குறைகிறதோ, இவர்களைப் பார்த்தவுடன், ரீ-சார்ஜ் ஆகிவிடும். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பான நிகழ்ச்சிகளாக எத்தனையோ சொல்லலாம். நேரத்தின் நெருக்கடியின் காரணமாக சிலவற்றைச் சொல்லுகிறேன் – நம்முடைய மேனாள் தலைமை ஆசிரியர்கள் எல்லாம் இங்கே வந் திருக்கின்றார்கள். அவர்களைப் பாராட்டுவது, நெஞ்சம் நிறைந்த பாராட்டுதலாக இருக்கிறது.
அவர்கள்தான் இதை உருவாக்கியிருக்கிறார்கள். நாம் எதைச் செய்தாலும் அவர்கள் நமக்கு உறுதுணை யாக இருக்கக்கூடியவர்கள். அமைச்சர்களாக இருந்தா லும், மேயராக இருந்தாலும், பெற்றோர்களாக இருந் தாலும் ஏராள மகிழ்ச்சியைத் தருபவர்களாக உள்ளார்கள்.

அன்னை மணியம்மையார்!
எங்களுடைய பணி என்பது சாதாரணம். நாங்கள் தொடங்கினோம் அவ்வளவுதான் – வெறும் 67 மாணாக் கர்கள் என்று நம்முடைய தலைமை ஆசிரியை சொன் னார்கள். அதில் ஒரு சிறிய திருத்தம். 67 அல்ல, 57 தான்.
ஏனென்றால், எங்களிடம் வீட்டிற்கு வீடு சென்று பிள்ளைகளைச் சேர்க்கச் சொன்னார்கள் அன்னை மணியம்மையார் அவர்கள்.
பள்ளிக்கூடத்தில் சேருங்கள் என்பதற்காக, துண்டறிக் கையை அச்சடித்து, சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று கொடுங்கள் என்று சொன்னார்கள்.
இங்கே படிக்கப்பட்ட அறிக்கையில் ஒன்றைச் சொன் னார்கள் – ஆசிரியர் என்ற முறையில் சில விஷயங் களைத் திருத்துவது என்னுடைய கடமை.
அந்த அறிக்கையில், கே.கே.நகர், கே.கே.நகர் என்று சொல்லும்பொழுது, எனக்கு மிகவும் உறுத்தலாக இருந் தது. பைத்தியக்காரர்கள்தான் கே.கே.நகர் என்று சொல் கிறார்கள் என்றால், நாம் சொல்லும்பொழுது, கலைஞர் கருணாநிதி நகர் என்று முழுமையாகச் சொல்ல வேண்டும்.

நீளமான பெயரை வைக்காதீர்கள்!
ஏனென்றால், அவருக்கு நன்றியோடு நாம் இருக்கவேண்டும். இங்கே நம்முடைய அமைச் சர்கள் எல்லாம் இருக்கிறார்கள் – எந்தப் பெயர் வைத்தாலும் தயவு செய்து நீளமான பெயரை வைக்காதீர்கள். அப்படி வைத்தால், இதுபோன்ற ஆபத்து அதில் இருக்கிறது.
டி.நகர், டி.நகர் என்று சொல்வார்கள்; டி.நகர் என்று யாராவது சொன்னால், எனக்குக் கோபம் வரும். தியாகராயர் நகர் என்று சொன்னால், என்ன கெட்டுப் போய்விட்டது!
டி.நகர் என்று சுருக்கமாகச் சொல்கிறோம் என்று சொல்வார்கள். அதில் ஒரு விஷமம் இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம். தியாகராயர் பெயர் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதுபோன்றுதான் கலைஞர் கருணாநிதி பெயர் வரக்கூடாது என்பதற்காக ‘கே.கே.நகர்’ என்றாக்கினார்கள்.
அப்பொழுது க.ராசாராம் அவர்கள் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபொழுது அவரிடம் நான் சொன்னேன், ‘‘கலைஞர் நகர்” என்று பெயர் வையுங்கள்; அல்லது கருணாநிதி நகர் என்று பெயர் வையுங்கள். கலைஞர் கருணாநிதி நகர் என்று பெயர் வைக்காதீர்கள். ஏனென்றால், அதைச் சுருக்கி விடுவார்கள்” என்றேன்.

தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம் என்பதை ‘‘டி.பி.டி.சி.” (TPTC) என்று சுருக்கிப் போட்டார்கள்.
‘‘பேரறிஞர் அண்ணா பொறியியல் பல்கலைக் கழகம்” என்பதை PAEUC சுருக்கிச் சொல்ல ஆரம்பித் தார்கள். அதற்காக ஒரு திருத்தச் சட்டம் கொண்டுவந்து, ‘‘அண்ணா பல்கலைக் கழகம்” என்று வைத்தார்கள். இதற்குக் கெட்டிக்காரத்தனமாக வழிகாட்டியவர் கலைஞர்தான்.
கலைஞர் அவர்கள் முதன்முதலாக வீட்டு வசதி, போக்குவரத்துத் துறை அமைச்சராக வந்தபொழுது, அறிஞர் அண்ணா பெயரில், சென்னையில் அண்ணா நகர் என்று உருவாக்கவேண்டும் என்று நினைத்தார்.

‘அண்ணா நகர்’ என்று பளிச்சென்று பெயர் வைத்தார் கலைஞர்!
அறிஞர் அண்ணா நகர் என்று அவர் வைக்கவில்லை. ஏனென்றால், AA Nagar என்று சுருக்கிவிடுவார்கள் என்பதற்காக அண்ணா நகர் என்று பளிச்சென்று பெயர் வைத்தார்.
ஆகவேதான், இனிமேல் கே.கே.நகர் என்று சொல் லாதீர்கள்; கலைஞர் கருணாநிதி என்று சொல்லுங்கள். அல்லது கலைஞர் நகர் என்றாவது சொல்லுங்கள்.
டி.நகர் என்று சொல்பவரிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டால், தியாகராயர் நகர் என்று நீளமாகச் சொல்வது கஷ்டமாக இருக்கிறது என்றார்.

‘‘திருவல்லிக்கேணி என்பதை
‘தி.கேணி’ என்று சுருக்கி அழைப்பீர்களா?
நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன், ‘‘திரு வல்லிக்கேணி என்பதை ‘தி.கேணி’ என்றா சொல்கிறீர்கள். அதுவும்தானே நீளமாகத்தானே இருக்கிறது. ஆனால், அதை திருவல்லிக்கேணி என்றுதானே சொல்கிறீர்கள்” என்றேன்.
ஆக, ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்கவேண்டும். அது மிகவும் முக்கியம்.
இந்த நேரத்தில் எல்லோரும் நன்றி சொன்னார்கள் – நம்முடைய நினைவில் இருக்கின்ற மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மனமுவந்த நன்றியை இந்த நேரத்தில் அவருக்குச் சொல்லவேண்டும். ஏனென்றால், திருச்சி மாளிகையில், சில அமைப்புகள் இருந்ததை மாற்றி, தந்தை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தை இங்கே கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் முயற்சித்தோம். அப்பொழுது, அதிகாரிகள் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘சட்டத்தில் அதற்கு இடம் இல்லீங்க – அது அபிஷேகபுரம் பஞ்சாயத்து; இது திருச்சி நகராட்சி – ஆகவே இரண்டையும் இணைக்க முடியாது” என்று சொன்னார்கள்.
ஒரு மாதம் அந்தக் கோப்புகள் அங்கேயும், இங்கே யும் அலைகழிக்கப்பட்டு இருந்தன.
ஆனால், இன்றைக்கு நம்முடைய அமைச்சர்கள் பிராக்டீலாக இருப்பார்கள். நம்முடைய அமைச்சர் நேரு அவர்களானாலும், அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களானாலும் மிகத் தீவிரமாக இருப்பார்கள்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, பாராட்டு!
நூற்றாண்டு விழாவினை அரசாங்கம் கொண்டாடு கிறது. நூற்றாண்டு வளாகம் என்று நாங்கள் பெயர் வைத்து, எல்லா நிறுவனங்களையும் நாங்கள் அங்கே கொண்டு போவதற்கு வசதியாக, தனியே ஒரு சிறப்பு அரசாணையை போடுங்கள் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தோம்.
தனியே ஓர் அரசு ஆணைப் போட்டுத்தான் இங்கே எல்லா நிறுவனங்களும் வந்தன. இந்தப் பொன்விழா நேரத்தில், அவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கவேண்டியது மிகமிக முக்கியமாகும்.
அந்த வகையில், பெற்றோர்கள் ஒத்துழைக்கின் றார்கள். ஆசிரியர்கள் மணிமணியான ஆசிரியர்கள். உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் பெற்றோர் பெயரில் புதிய கட்டடம் கட்டிக் கொடுத்தார்!
இங்கே இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கின்ற நேரத் தில், அமைச்சர்களை நாங்கள் வித்தியாசப்படுத்தவில்லை. இங்கே அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், அவர் களுடைய பெற்றோர் பெயரில் ஒரு புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்து உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் உரை யாற்றும்பொழுது கடைசியாக ஒரு வரியைச் சொன்னார். என்னால் என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றை செய்கிறேன் என்று சொன்னார்.

பெரியாரின் செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்ட அன்பில் பெயரில்
கட்டடம் கட்டித் தாருங்கள்!
உங்களாலும் செய்ய முடியும். பெரியாருக்குச் செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்ட, பேசப்பட்ட உங்கள் தாத்தா அன்பில் அவர்களின் பெயரால், இந்த வளாகத்தில் சிறப்பான ஒரு கட்டடத்தை எங்களுக்கு அமைத்துத் தருவீர்கள் என்று நம்புகிறோம்.
திருச்சி நீதிமன்றத்தில் தந்தை பெரியார் அவர்களைத் தண்டிக்கிறார்கள். அப்போது தி.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் நல்ல உறவுகூட கிடையாது. அந்த நேரத்தில்கூட அன்பில் அவர்கள் செல்லப் பிள்ளை போன்று வந்து அமர்ந்தார். அய்யாவை வழியனுப்பினார்.

எதைச் சொன்னாலும், அதை நிறைவேற்றுபவர்தான் அமைச்சர்
கே.என்.நேரு!
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு உறவு உண்டு. எனவேதான், இந்த வளாகத்தில், அமைச்சர் நேரு அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். மற்ற அமைச் சர்கள் எல்லாம் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், இவர் அப்படியில்லை. எதைச் சொன் னாலும், அதை நிறைவேற்றுவதுதான் மறுவேலை என்று சொல்லி, அவருடைய பெற்றோர் பெயரில் அமைத்துக் கொடுத்து இருப்பதுதான் இந்த மேனிலைப்பள்ளிக்கு இருக்கின்ற ஒரு பெரிய சிறப்பாகும்.
ஆகவேதான், உங்களிடத்தல் உரிமையோடும், உற வோடும், கொள்கை உறவோடும் இதை வேண்டுகோளாக வைக்கின்றோம்.
எப்பொழுதும் அரசாங்கத்தில் ஒரு கேள்வி கேட் பார்கள் – முன்மாதிரி இருக்கிறதா? என்று. முன்மாதிரி தான், அமைச்சர் நேரு அமர்ந்திருக்கின்றார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியாகிய நீங்களும் ஒத்துழைத்து, இதை உங்களுடைய நிறுவனமாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

நூற்றாண்டு விழாவில், இது ஒரு தனி அமைப்பாக உயர்ந்து வளரவேண்டும்!
இதை இந்தப் பொன்விழா ஆண்டில் சொல்லுகிறோம். இதுவரை இது எங்களுடைய நிறுவனமாக இருந்தது. இனி உங்களைப் போன்றவர்களின் பொறுப்பில், பெற்றோர்களின் பொறுப்பில் நடக்கவேண்டிய நிறுவனமாக ஆகி, நூற்றாண்டு விழாவில், இது ஒரு தனி அமைப்பாக உயர்ந்து வளரவேண்டும்.

அதைவிட எங்களுக்குப் பெருமை
வேறு கிடையவே கிடையாது!
இங்கே இருக்கின்ற இளம் தளிர்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வழிகாட்டக்கூடியவர்களாக இருக்கவேண்டும். இப்பொழுதுகூட உலகெங்கும் நாங்கள் சுற்றுப்பயணம் செய்கின்ற நேரத்தில், ‘‘அருகில் வந்து கும்பிட்டு, அய்யா நான் இங்கே அதிகாரியாக இருக்கிறேன்; நான் பெரியார் மணியம்மை பள்ளிக் கூடத்தில் படித்தேன்” என்று சொல்லும்பொழுது, அதை விட எங்களுக்குப் பெருமை வேறு கிடையவே கிடையாது. இந்த சிறப்பான வரலாறு இந்த கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.
இந்த 50 ஆண்டுகால வரலாற்றில், மிகவும் குறிப் பிட்டுச் சொல்லவேண்டிய இடம், மிக முக்கியமானது என்னவென்றால், மாறுபட்ட கருத்தாக இருந்தாலும், எல்லோரையும் இங்கே அழைத்து வந்திருக்கின்றோம்.
வி.பி.சிங் வந்திருக்கிறார், கலைஞர் வந்திருக்கிறார் இன்னும் பிற தலைவர்கள் எல்லாம் வந்திருக்கின்றார்கள்.

1984 ஆம் ஆண்டு தந்தை பெரியார் சிலையை கலைஞர் திறந்து வைத்தார்!
இங்கே இருக்கின்ற தந்தை பெரியார் சிலை 27.4.1984 ஆம் ஆண்டு, மலேசிய திராவிடர் கழகத் தோழர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் தலைமை யில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் இங்கே வந்து, அய்யாவின் சிலையைத் திறந்து வைத்தார். நம் கனிமொழி அவர்கள் சிறிய பிள்ளை அப்பொழுது.
இப்படியெல்லாம் இந்தப் பள்ளி வளர்ந்திருக்கிறது என்றால், எங்களுடைய முயற்சியால் மட்டும் அல்ல; உங்களுடைய ஒத்துழைப்பால். எல்லாவற்றையும்விட, ஆசிரியர்களுடைய சிறப்பால். எல்லாவற்றையும்விட, எங்கள் மாணவச் செல்வங்களுடைய அற்புதமான, சிறப்பான ஒத்துழைப்பும் பெருமையானது.

50 ஆண்டுகால வரலாற்றில் – இந்தப் பள்ளியில் வேலை நிறுத்தம் என்பதே கிடையாது!
இவ்வளவு மதிப்பெண் வாங்கினார்கள், அவ் வளவு மதிப்பெண் வாங்கினார்கள் மாணவர்கள் என்பது சாதனையல்ல – அதைவிட, வரலாற்றுச் சாதனை என்னவென்றால், இந்தப் பொன்விழா ஆண்டில் பதிவு செய்யவேண்டிய உண்மை என்னவென்றால், இந்த 50 ஆண்டுகால வர லாற்றில், ஒரு நாள்கூட மாணவர்களோ, ஆசிரி யர்களோ ‘‘வேலை நிறுத்தம்” செய்ததே கிடையாது. அந்த வரலாறு என்பது மிகவும் முக்கியமானதாகும். அதுதான் எங்களுக்குப் பெருமை.
இது எங்களுடைய நிறுவனமல்ல- உங்களுடைய நிறுவனம் – நம்முடைய நிறுவனம் என்கிற உணர்வோடு நடக்கவேண்டும்.
இன்னொன்றைச் சொல்லி என்னுரையை முடிக்கின் றேன். இந்த நிறுவனம் எப்படி பாரபட்சமின்றி நடை பெறுகிறது என்றால், இங்கே ஜாதி, மதம், பேதம் எதையும் பார்க்காமல், ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்ற கொள்கையில் நடைபெறுகின்ற நிறுவனமாகும்.

‘‘பெரியார் பிறந்த நாளை, சமூகநீதி நாளாக’’ அறிவித்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நம்முடைய ஆற்றல்மிகு இன்றைய முதலமைச்சர், உழைப்பின் உருவமாக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘பெரியார் பிறந்த நாளை, சமூகநீதி நாளாக” ஆக்கினார். அதில் அவர் தேர்ந் தெடுத்த வாசகம் – உறுதிமொழி வாசகம் என்ன வென்றால், தந்தை பெரியார் என்ன வாசகத்தைச் சொன்னாரோ, அதையே உறுதிமொழியாக எடுத்தார்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான் அது. திருக்குறளில்கூட ஏழு அடி இருக்கிறது. ஆனால், இது இரண்டே வார்த்தைதான். அதுதான் சமூகநீதி. ‘‘அனை வருக்கும் அனைத்தும்” என்கிறபொழுது, யாரிடமும் பேதம் கிடையாது. உயர்ஜாதிக்காரர்களைகூட ஒதுக்கி வைப்பதில்லை. அவர்களுக்குரிய பங்கை அவர்கள் அனுபவிக்கட்டும். மற்றவர்களின் பங்கை அவரவர் அனுபவிக்கட்டும். அதுபோன்று இங்கே எல்லோரையும் அழைத்திருக்கின்றோம்.

‘துக்ளக்’ சோவின் வியப்பு!
ஒருமுறை சோ அவர்கள், என்னிடம் பேட்டி கண்ட பொழுது, ‘‘என்ன சார், நீங்கள் எல்லாம்கூட பள்ளிக்கூடம் நடத்துகிறீர்கள் போலிருக்கிறதே, வியாபாரமா?” என்றார்.
உடனே நான், ‘‘வியாபாரமா, இல்லையா என்பதை, சோ அவர்களே உங்களை நான் அங்கே அழைக்கிறேன், வந்து பாருங்கள்” என்றேன்.
‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களை இங்கே அழைத்து வந்தேன். இங்கேயும் அழைத்துவந்தேன், தஞ்சாவூருக்கும் அழைத்துச் சென்றேன்.
இங்கே வந்து பார்த்த சோ அவர்கள், ‘‘நான் போய் சங்கராச்சாரியாரிடம் சொல்கிறேன். எவ்வளவு சிறப்பாக நடத்துகின்றீர்கள் என்பதை நேரில் போய்ச் சொல்கி றேன்” என்றார்.
இங்கே அவருக்கு மதிய உணவிற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தோம். அவர் சாப்பிடுகிறாரா, இல்லையா? என்பதைப் பார்க்கலாம் என்று.
அவர் மிகவும் கெட்டிக்காரர், சாப்பிட்டார்; அதற்கிடையில் சொன்னார், ‘‘பக்கத்தில் என்னுடைய உறவுக்காரர்கள் இருக்கிறார்கள்; அவர்களுடைய வீட்டிற்குச் சென்று வருகிறேன்” என்றார்.
அவருடைய உறவுக்காரர் வீட்டிற்குச் சென்ற அவர், ‘‘உங்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் எங்கே படிக்கிறார்கள்?” என்று கேட்டிருக்கிறார்.

எந்தவிதமான வேறுபாடுமின்றி
பள்ளிக் கூடத்தை நடத்துகிறார்கள்!
‘‘பெரியார் மணியம்மை பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
‘‘அப்படியா? அதனால் உங்களுக்குப் பாதிப்பு இல் லையா? நம் குழந்தைகள் பிராமணக் குழந்தைகளா யிற்றே, வித்தியாசம் காட்டுகிறார்களா?” என்று கேட்டிருக்கிறார்.
‘‘அப்படி ஒன்றும் இல்லை. அங்கே போனால், பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லிக் கொடுப்பார்களோ, அதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். எந்த வேறுபாடு களும் அங்கே கிடையாது” என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதைச் சொல்வதற்கு முன்பு, என்ன நடந்தது என்றால், சங்கராச்சாரியாரை, இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
‘‘நம்மவா எங்கெங்கே பள்ளிக்கூடம் நடத்து கிறார்களோ, அங்கே கொண்டு போய்ச் சேருங்கள்; இவாள் மாதிரி நடத்துகின்ற பள்ளிக்கூடத்தில் சேர்க் காதீர்கள். அப்படி சேர்த்திருந்தீர்கள் என்றால், உடனே டி.சி. வாங்குங்கள்” என்று சொன்னாராம்.
அப்பொழுது, இங்கே படிக்கக் கூடிய பிள்ளை களுடைய பெற்றோர்கள், ‘‘டி.சி. வாங்கமாட்டோம்; ஏனென்றால், அங்கே எந்தப் பிரச்சினையுமின்றி, நன்றாகவும், சிறப்பாகவும் பள்ளிக்கூடத்தை அவர்கள் நடத்துகிறார்கள். எங்கள் பிள்ளைகளையும் எந்தவித மான வேறுபாடுமின்றி நடத்துகிறார்கள்” என்றார்களாம்.
எனவே, பேதமிலா பெருவாழ்வு – சமத்துவ வாழ்வு – சம வாய்ப்பு வாழ்வு – எல்லோருக்கும் எல்லாமும் – அனைவருக்கும் அனைத்தும் என்கிற கொள்கையை வைத்து நடத்தப்படுகின்ற நிறுவனம் – இந்த நிறுவனம் – அனைவருக்கும் அனைத்தும் உரியது.

எங்கள் நிறுவனம் என்று சொல்வதைவிட, உங்கள் நிறுவனம் – மக்கள் நிறுவனம்!
ஆகவேதான், இது ஒரு குறிப்பிட்ட அமைப் பிற்குரியது என்று நீங்கள் நினைக்காதீர்கள். இது நம் நிறுவனம்- எங்கள் நிறுவனம் என்று சொல் வதைவிட, உங்கள் நிறுவனம் – மக்கள் நிறுவனம் – இந்த நிறுவனம் நூறாண்டு காணுகின்ற நேரத்தில், நாங்கள் இருக்கமாட்டோம்; ஆனால், உங்களு டைய வழிவழி பரம்பரை இருக்கும்; அந்த நேரத்தில், இதைவிட இந்த நிறுவனம் பல மடங்கு வளர்ந்திருக்கும்.
அந்த வளர்ச்சிக்குத்தான், எங்களுக்கு சிறப்பாக உதவுவதற்கு இத்தகைய அமைச்சர் பெருமக்கள், ஊர்ப் பெருமக்கள், நகரப் பெருமக்கள், வணக் கத்திற்குரிய மேயர் போன்றவர்கள், பெற்றோர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருப்பவர்கள், அருமை ஆசிரியப் பெருமக்கள் அத்துணை பேரும் ஒத்துழைக்கின்றீர்கள்.
திராவிடம் வெல்லும் – அதை என்றைக்கும் வரலாறு சொல்லும்!
உங்களுக்கு எங்களுடைய தலைதாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!
திராவிடம் வெல்லும் – அதை என்றைக்கும் வரலாறு சொல்லும், சொல்லும்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment