தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் 245 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேர்காணல் தேர்வாளர்களான உயர்நீதிமன்றக் குழுவில் உள்ள நான்கு பேரில், இருவர் ‘அவாளாக’ இருப்பது என்ன நியாயம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 1, 2024

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் 245 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேர்காணல் தேர்வாளர்களான உயர்நீதிமன்றக் குழுவில் உள்ள நான்கு பேரில், இருவர் ‘அவாளாக’ இருப்பது என்ன நியாயம்?

featured image

12 நாள்கள் நடைபெறும் நேர்காணலில், சுழற்சி முறையில்
நீதிபதிகளை நியமிக்கலாமே- எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்குமே!
ஆசிரியர் அய்யா 91 வயதில், நம்மைவிட கூடுதலாக, சரியாகச் சிந்தித்து இந்தக் கருத்தைச் சொன்னார்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் வியப்பு!!

சென்னை, பிப்.1 ‘‘தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் 245 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேர்காணல் தேர்வாளர்கள் உயர்நீதிமன்றக் குழுவில் உள்ள நான்கு பேரில், இருவர் ‘அவாளாக’ இருப்பது என்ன நியாயம்?” என்று கேட்டு, ‘‘12 நாள்கள் நடைபெறும் நேர்காணலில், சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமிக்கலாமே- எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்குமே!” என்றார் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள். ‘‘நான்கூட இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. 91 வயதில், அவர் நம்மைவிட கூடுதலாக, சரியாகச் சிந்தித்து இந்தக் கருத் தைச் சொன்னார். எனக்குக் கூட சரியென்றுதான் தோன்றுகிறது நீங்கள் சொல்லும் யோசனை என்றேன்’’ என்றார் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்.

“தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!”
கடந்த 27.1.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் “தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!” என்ற தலைப்பில் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

முன்சீப், மாஜிஸ்ட்ரேட்
இரண்டும் ஒரே பதவி!
சிறப்புக் கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனை வருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று ஆசிரியர் அய்யா அவர்கள், என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபொழுது, கீழமை நீதிமன்றங்களில் உள்ள 245 காலியிடங்களுக்கான நேர்காணல் தேர்வுபற்றி குறிப்பிட்டார். முன்சீப், மாஜிஸ்ட்ரேட் இரண்டும் ஒரே பதவி. சிவில் வழக்கைப் பார்க்கின்றவர்கள் முன்சீப்; கிரிமினல் வழக்கைப் பார்க்கின்றவர்கள் மாஜிஸ்ட்ரேட். இரண்டும் ‘கம்’ (நீuனீ) என்றுதான் இருக்கிறது. சில நேரங்களில், மாஜிஸ்ட்ரேட் கம் முன்சீப்பாகவும் இருப்பார்கள். மாஜிஸ்ட்ரேட்டாக இருப்பவர்களை முன்சீப்பாகவும், முன்சீப்பாக இருப்ப வர்களை மாஜிஸ்ட்ரேட்டாகவும் மாற்றிப் போடுவார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின்படி, உயர்நீதிமன்றத்திற்கு அதில் ஒரு பங்கு இருக்கிறது!
இந்தப் பதவிக்கான 245 காலி இடங்களுக்கு, எழுத்துத் தேர்வு நடைபெற்று, இப்பொழுது நேர்காணல் நடைபெறவிருக்கிறது. இந்தப் பதவிகளுக்கு உரியவர் களை தமிழ்நாடு அரசாங்கம்தான் நியமிக்கவிருக்கிறது. ஆனால், நீதித்துறை நியமனம் என்பதால், அரசமைப்புச் சட்டத்தின்படி, உயர்நீதிமன்றத்திற்கு அதில் ஒரு பங்கு இருக்கிறது.
நேர்காணல் தேர்வினை, நான்கு குழு நடத்தும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பார்கள். நான் கூட, 2015 ஆம் ஆண்டில் ஒரு குழுவின் தலைவராக இருந்தேன். அந்தக் குழுவில் இருந்த மற்ற இரண்டு பேர் டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள்.
அப்பொழுது இப்பொழுது இருப்பதுபோன்று 245 காலி இடங்கள் இருந்ததாக என்று எனக்கு நினைவில்லை. ஆனால், இப்பொழுது 245 இடங்களுக்கு நேர்காணல் தேர்வு நடைபெறவிருக்கிறது என்று ஆசிரியர் அய்யா அவர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
அந்தப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறப் போகிறது என்றுதான் எனக்குத் தெரியுமே தவிர, மற்ற விவரங்களைப்பற்றி நான் தெரிந்துகொள்ளவில்லை.

உச்சநீதிமன்றத்தில் இன்றுவரையில் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை!
‘‘29 ஆம் தேதி நேர்காணல் நடைபெறவிருக் கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ள குழுவில் யாருமே பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. நம்மூரில் பழங்குடியினத் தைச் சேர்ந்த நீதிபதிகளே இல்லை” என்று ஆசிரியர் அய்யா தெரிவித்தார். உச்சநீதிமன்றத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரையில் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை என்பதுதான் இன்றுள்ள நிலைமை.
‘‘அந்தக் குழுவில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மட்டுமின்றி, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவரோ, பெண்களோகூட இல்லை” என்றும் சொன்னார்.
‘‘இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்; இது சரியா?” என்று கேட்டார்.
‘‘தவறு என்றுதான் நினைக்கிறேன்” என்று சொன் னேன்.
அந்தக் குழுவில் உள்ள நான்கு பேரில், இரண்டு பேர் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.
நாமெல்லாம், தமிழ்நாட்டை ‘‘பெரியார் மண், பெரியார் மண்” என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், தமிழ்நாட்டில் இதுதான் நிலைமை!
அவர்களையெல்லாம் நீக்கவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அவர்கள்தான் நீக்கியிருக்கிறார்கள், யாரை?
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை நீக்கியிருக்கிறார்கள், சிறுபான்மை சமுதாயத்தினரை நீக்கியிருக்கிறார்கள்; பெண்களை நீக்கியிருக்கிறார்கள்.
ஆனால், நாம் அப்படி சொல்லவில்லை.

91 வயதில், ஆசிரியர் அய்யா அவர்கள் நம்மைவிட கூடுதலாக, சரியாக சிந்தித்திருக்கிறார்!
நான்கு பேரில், இருவர் ‘அவாளாக’ இருப்பது என்ன நியாயம்? என்று கேட்டுவிட்டு, 12 நாள்கள் நடைபெறும் நேர்காணலில், சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமிக்கலாமே- எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்குமே? என்றார் ஆசிரியர் அய்யா அவர்கள்.
நான்கூட இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. 91 வயதில், அவர் நம்மைவிட கூடுதலாக, சரியாகச் சிந்தித்து இந்தக் கருத்தைச் சொன்னார்.
‘‘எனக்குக் கூட சரியென்றுதான் தோன்றுகிறது நீங்கள் சொல்லும் யோசனை” என்றேன்.
‘‘சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறோம், நீங்கள் வருகிறீர்களா?” என்று ஆசிரியர் அய்யா கேட்டார்.
‘‘அய்யா, எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், நான் நான்கு மாதங்களாக எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இந்தக் கூட்டத்திற்குக் கண்டிப்பாக நான் வருகி றேன்” என்றேன்.

தமிழ்நாட்டிலேயே இதைக் கேட்கவில்லை என்றால், வேறு எங்கே கேட்பார்கள்?
ஏனென்றால், சமூகநீதி என்பது இதுதான். தமிழ்நாட் டிலேயே இதைக் கேட்கவில்லை என்றால், வேறு எங்கே கேட்பார்கள்?
நம்முடைய கேள்வி இதுதான்!
பட்டியலினத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இருக்கிறார்கள்; சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகளும் இருக்கிறார்கள். பெண் நீதிபதிகள்கூட இருக்கிறார்கள் ஆனால், இரு பார்ப்பன நீதிபதிகளை அந்தக் குழுவில் நியமித்திருக்கிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதி சொல்கிறார்,
ஸநாதனம் நல்லது என்று!
ஸநாதனம் என்றால் என்னவென்று தெரிகிறதா?
இதுதான் ஸநாதனம். இதுதான் வருணாசிரமம்!
உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய பார்ப்பன நீதிபதி ஷேசாயி ‘‘ஸநாதனம் என்றால், நல்லதப்பா!” என்கிறார்.
பார்ப்பனரல்லாத நீதிபதிகள் எல்லாம் சொல்கிறார்கள், ‘‘ஸநாதனம், தவறு என்றும், பெரியார் அப்படித்தான் சொன்னார் என்றும்” சொல்கிறார்கள்.
நமக்கும், பார்ப்பனர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நீதிபதி ஷேசாயி நேர்மையானவர். அவர் மீது நான் புகார் சொல்லவில்லை. ஆனால், அவருடைய மனதில், ‘‘ஸநாதனம், வருணாசிரமம் போன்றவை நல்லவை; அவை என்றைக்கும் அழியாதவை; அவற்றை நாம் காப்பாற்றவேண்டும்” என்று ஒரு தீர்ப்பில்கூட சொல்லியிருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்மீது, ஒரு அம்மையார் வழக்குப் போட்டிருக்கிறார். என்றைக்கு விசாரணைக்கு வரும் என்று தெரியாது.
அவர்கள் என்ன சொன்னாலும், அதை அரசியலில் எதிர்கொள்ளவேண்டும்.
ஸநாதனம் சம்பந்தமாக தமிழ்நாட்டில் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய, பெரியாரியஸ்டுகள், அம்பேத் கரிஸ்டுகள், பொதுவுடைமைவாதிகள் சொல்கின்ற கருத்து வேறு; வட இந்தியாவில் உள்ளவர்கள் சொல் கின்ற கருத்து வேறு.
அவர்களைப் பொறுத்தவரையில், ஸநாதனம் என்றால், அதற்கு அவர்கள் வேறு கதை சொல்கிறார்கள். அதற்குள் நாம் இப்பொழுது செல்லவேண்டாம்.
‘‘தலையை வெட்டிக் கொண்டு வந்தால், 10 கோடி ரூபாய் தருகிறேன்” என்று வடக்கே இருக்கும் சாமியார் ஒருவர் சொல்கிறார்.

திராவிட இயக்கம் அல்ல; ஏற்பாடு செய்திருந்தது கம்யூனிஸ்ட் இயக்கம்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில், நெற்றியில் பட்டைப் போட்டுக் கொண்டிருக்கும் சத்திய வேல் முருகனார் அவர்கள், ‘‘ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இன்னும் பலர் அந்தக் கூட்டத்தில் பேசினார்கள்.
அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது திராவிட இயக்கம் அல்ல; ஏற்பாடு செய்திருந்தது கம்யூனிஸ்ட் இயக்கம்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள இதே கம்யூனிஸ்ட் கட்சி வட மாநிலங்களில் இதுபோன்ற கூட்டத்தில் இந்தக் கருத்தைச் சொல்லுமா? என்றால், சொல்லாது. ஏனென் றால், இங்கே தமிழ்நாட்டில் சொல்லுகின்ற பொது வுடைமை வேறு; வடநாட்டில் சொல்லுகின்ற பொது வுடைமை வேறு. எப்படி என்றால், மண்டல் ஆணைய பரிந்துரை என்று வரும்பொழுது, வடநாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எதிர்த்தன.

உயர்நீதிமன்றம் பரிந்துரைகளை அனுப்பும் – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
அதனை இறுதி செய்வார்!
மாஜிஸ்ட்ரேட், முன்சீப் பதவிகளை, சபாடினேட் ஜூடிசியரி என்பார்கள். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன் றத்தில், 1985 ஆம் ஆண்டு – அப்பொழுது கொலிஜியம் முறை வரவில்லை. அப்பொழுது ஒன்றிய அரசுதான் நியமனம் செய்யும். உயர்நீதிமன்றம் பரிந்துரைகளை அனுப்பும் – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அதனை இறுதி செய்வார். அப்படித்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்துரு ஜாட் பரிந்துரைத்த பட்டியலும் – நிராகரிப்பும்!
தமிழ்நாட்டில் முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபொழுது, மகாராட்டிரத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனரான உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்துரு ஜாட் என்பவர், ஆறு பேரை பரிந் துரைத்தார். அந்த ஆறு பேரும் பார்ப்பனர்கள்.
அதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கடுமையாக எதிர்த்தார். எதிர்த்தது மட்டுமல்ல, ஆசிரியர் அய்யா அவர்களிடமும் சொல்லி, ‘‘நீங்களும் எதிர்ப் பினைத் தெரிவியுங்கள்” என்று சொன்னதோடு மட்டு மல்லாமல், ‘‘அதனைக் கண்டித்துப் போராட்டம் நடத் துங்கள்” என்றும் சொன்னார்.

‘‘தமிழ்நாட்டு மண்ணின் தன்மை” என்றார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
அந்த ஆறு பார்ப்பனர்களில் ஓரிருவர் மிகச் சிறப்பானவர்கள். அதில் கே.வி.வரதன் என்பவரும் ஒருவர். அவர் இறந்துபோய்விட்டார். இண்டஸ்ட்ரி டிரிபியூனலில் இருந்தார். அவரை, மூன்று லட்சம் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நீதிபதியாக நியமிக்கச் சொல்லி நாங்கள் எல்லாம் கேட்டோம்.
கடும் எதிர்ப்பினால், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்த ஆறு பார்ப்பனர்களின் பெயர்களும் நிராகரிக்கப்பட்டன அப்பொழுது முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார், இது எங்கள் ஊரின் ‘Soil Psychology’ என்றார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து
நாம் தோற்றுவிட்டோம்!
அன்றைக்கு நாம் வெற்றி பெற்றோம். ஆனால், 2014 ஆம் ஆண்டிலிருந்து நாம் தோற்றுவிட்டோம்.
எப்படி தோற்றோம் என்றால், அன்றைக்கு ஆறு பேரையும் ஒரே பட்டியலில் சேர்த்து அனுப்பும்பொழுது எதிர்த்தோம். 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சஞ்சய் கிஷன் கவுல் என்பவர் வந்தார்.
கொலிஜியம் என்றால், தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு.
ஆனால், உச்சநீதிமன்றத்தை மீறி எதுவும் செய்ய முடியாது. உச்சநீதிமன்ற கொலிஜியத்தில், மூன்று பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்காக, அய்ந்து பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்காக இருப்பார்கள்.

சந்திர ஜாட் பார்மூலாவை நடைமுறைப்படுத்திய சஞ்சய் கிஷன் கவுல்!
அதில், சஞ்சய் கிஷன் கவுல் அவர்களின் பணி, 31.12.2024 ஆம் நாளோடு முடிந்தது. அதுவரையில், தமிழ்நாட்டில் நீதிபதிகள் நியமனத்தில் அவருடைய பங்கு மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதாகத்தான் நான் கருதுகிறேன்.
அவர் என்ன செய்தார் என்றால், சந்திர ஜாட் பார்மூலாவை நடைமுறைப்படுத்திவிட்டார்.
எப்படி நடைமுறைப்படுத்தினார் என்றால், 25 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்றால், ஆறு, ஆறு பேராக அனுப்புவார். அந்த ஆறு, ஆறு, ஏழு என்று தனித்தனியாகப் பட்டியலை அனுப்புவார். ஒவ்வொரு பட்டியலிலும், ஒரு பார்ப்பனர் இருப்பார்.

சூத்திரன் இருக்கக்கூடாது, பஞ்சமன் இருக்கக்கூடாது என்று சொல்வது மனுதர்மம்!
பார்ப்பனர்கள் இருக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அப்படி யாரையாவது இருக்கக்கூடாது என்று சொன்னால், நான் மீண்டும் சொல்கிறேன், அது மனுதர்மம். சூத்திரன் இருக்கக்கூடாது, பஞ்சமன் இருக்கக்கூடாது என்று சொல்வதுதான் மனுதர்மம். ஆனால், நாம் அப்படி சொல்லவில்லை.
சஞ்சய் கிஷன் கவுல் என்ன செய்தார் என்றால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், ஆறு பேரில் மூன்று பேர் வழக்குரைஞர்; ஒருவர் மாவட்ட நீதிபதி களிலிருந்து வருவார்கள்.
உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகளில், 50 பேர் வழக் குரைஞர்களாக இருந்து வந்தவர்கள்; 25 பேர் மாவட்ட நீதிபதியாக இருந்து வந்தவர்கள். மாவட்ட நீதிபதிக்குள் நாம் போகவில்லை.
உயர்நீதிமன்றத்தில் இன்றைக்கு உள்ள 75 பணி யிடங்களில், 10 பணியிடங்கள் காலியாகத்தான் இருக்கும்.

வழக்குரைஞர்களாக இருந்த
9 பார்ப்பனர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கிறார்கள்!
அதில், வழக்குரைஞர்களாக இருந்த 9 பார்ப் பனர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக் கிறார்கள். 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு காலகட்டம் வரையில். அதுபோன்று இதற்குமுன் இப்படி இருந்ததில்லை.
தமிழ்நாட்டில் யார் அதிகப் பெரும்பான்மை யுள்ள சமூகத்தினர் என்றால், வடதமிழ்நாட்டில் வன்னியர்; தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிகப் பெரும்பான் மையுள்ள சமூகத்தினர் பட்டியலினத்தவர்கள்.
இந்த மூன்று பெரும்பான்மை சமூகத்தையும் சேர்ந்த வழக்குரைஞர்கள் 9 பேர்தான். பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்களும் 9 பேர்.
(தொடரும்)

No comments:

Post a Comment