இன்னொரு "இலங்கை" ஆகப் போகிறதா இந்தியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 30, 2023

இன்னொரு "இலங்கை" ஆகப் போகிறதா இந்தியா?

2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா கடன் வலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அய்.எம்.எப். அறிக்கையைச் சுட்டிக்காட்டி பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆண்டு தோறும் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதைச் சரியாகக் கணிக்காமல் மேலும் மேலும் ஒன்றிய அரசு தவறான வழிகளில் சென்றே தீருவது என்ற நிலை தான் தொடர்கிறது.
குறிப்பாக பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரமே வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதற்கிடையில் கரோனா தொற்று வேறு – இதனால் இளைஞர்கள் ஏராளமான எண்ணிக் கையில் வேலையை இழக்க நேரிட்டது. தற்போது லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.
அதேபோல் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றியமையாத பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இந்நிலையில் 2027க்குள் இந்திய அரசின் கடன் சுமை 100 விழுக்காடு அதிகரிக்கும் என பன்னாட்டு நாணய நிதியம் (மிவிதி) சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி தேவைப்படும் என்பதால், நீண்டகால கடன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்த பன்னாட்டு நாணய நிதியம், ஒன்றிய நிதி அமைச்சகம் புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் எனவும், தனியார் முதலீடுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால் அய்.எம்.எப்.இன் அறிக்கைக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.“இந்தியாவின் கடன் குறித்துப் பேசியிருக்கும் அய்.எம்.எப்., சிலவற்றையாவது கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் மேம்பட்டால், கடன் 70 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என அய்.எம்.எப். குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல உள்நாட்டுக் கடன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதனால் பெரும் ஆபத்து ஏற்படாது. 2020-2021ஆம் நிதியாண்டில் 88 சதவிகிதமாக இருந்த கடன், 2022-2023ஆம் நிதியாண்டில் 81 சத விகிதமாகக் குறைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கடன் குறித்த அச்சம் தேவையற்றது” என்று கூறியிருந்தது. ஆனால், உண்மையில் இந்திய மக்களின் வாங்கும் திறன் கடந்த சில ஆண்டுகளாக சரிந்துள்ளது. அல்லது, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகரிக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் தங்கம், வைரம், நிலங்கள், விலையுயர்ந்த கார்கள், கட்டடங்கள், ஆடம்பர சொகுசு வீடுகள் என அனைத்து சொத்துக்களிலும் 40 சதவிகிதம், நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே உள்ள பெரும் பணக்காரர்களிடமே குவிந்து கிடக்கிறது.

மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காடு மட்டுமே நாட்டின் பெரும் பணக்காரர்கள். மறு புறமோ, நாட்டு மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள- அதாவது 50 சதவிகித மக்களிடம் வெறும் 3 சதவிகித செல்வம்தான் இருக்கிறது. எனவே, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்று கூறித்தான் அரசுகள் தொடர்ச்சியாகக் கடனை வாங்கிக் குவித்து வருகின்றன. இது ஒரு கட்டத்தில் அபாயக் கட்டத்தை எட்டும் போது, இந்தியாவும், இலங்கையைப் போல பொருளாதார பிரச்சினையில் சிக்கும் என்பதைத்தான் அய்.எம்.எப். எச்சரித்திருக்கிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பிரதமர் மோடி உரத்துப் பேசுவதால் நாடு பொருளாதாரத் துறையில் வளர்ந்து விட்டது என்று நம்பி மக்கள் ஏமாந்து விடப் போவதில்லை. அன்றாட வாழ்வில் யதார்த்தமாக என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு மற்றவர்கள் சொல்லியா தெரிய வேண்டும்?
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று நீட்டி முழங்கினாரே மோடி – அது என்னாயிற்று?
வேலையில்லாத் திண்டாட்டம் பெருகப் பெருக நாட்டில் பெரும் பூகம்பம் வெடிக்கும் என்ற வரலாறு கூடத் தெரியாமல் நாடகப் பாணி ஆட்சியை நீண்ட காலத்திற்கு நடத்திட முடியாது.
பொருளாதார அடிப்படையே தெரியாத ஒரு நிதி அமைச்சர், வெங்காய விலை உயர்வு பற்றிக் கேட்டால் நான் வெங்காயம் சாப்பிடாத பரம்பரையைச் சேர்ந்தவர் என்று நாடாளுமன்றத்திலேயே சொல்லுகிறார் என்றால், அவரின் உள்ளுணர்வு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் சேர்த்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்கள் வட்டியும், முதலுமாகக் கொடுப்பார்கள் என்பதில் அய்யமில்லை!

No comments:

Post a Comment