இவர்தாம் தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 30, 2023

இவர்தாம் தந்தை பெரியார்

featured image

கவிஞர் கருணானந்தம்

புத்தகம் வாங்குவதில் அவர் சிக்கனம் கூடப் பார்ப்பதில்லை, “ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக் கிறது. 50 ரூபாய் விலை, ஆனால் நமக்கு உதவக்கூடியது!” என்று தயக்கத் துடன் தலையைச் சொரியும் வீரமணியை விளித்து, ‘இந்தாப்பா! இரண்டு புத்தமாக வாங்கிவா!” என்று பளிச் சென்று கூறி, உள்சட்டைப் பையிலுள்ள பர்சை எடுத்து, மெல்லத் திறந்து, மெல்ல ஒரு ஒரு நூறு ரூபாய்த்தாளை வெளியில் எடுத்து, மீதியை மெல்ல ஒருமுறை எண்ணிப் பார்த்து, மீண்டும் பர்சை உள் சட்டைப்பையில் மெதுவாகத் திணித்து, வாய்ப் புறத்தில் ஓர் ஊக்கை மாட்டி பின்பு, டயரியை வெளியில் எடுத்து, தேதியுடன், 100 ரூபாய் செல வுக்கான விவரத்தை மறக்காமல் அதில் குறித்துக் கொள்வார் பெரியார்.

இரயில் பயணம் செய்யும் காலத்தில் – சந்திப்புகளில் வண்டி மாறும்போதும், ஏறும்போதும், இறங்கும்போதும் கையிலுள்ள பெட்டி, ஹோல்டால் போன்ற தமது லக்கேஜ்களை எடுப்பதற்குக் கூலி போர்ட்டர்களை அழைக்க மாட்டார். இருக்கின்ற சாமான்களில் தாமே ஒன்றை முந்திக் கையில் எடுத்துக்கொள்வார். உடன் வருகின்ற மற்றவர்கள் ஆளுக்கு ஒரு சாமான் சுமந்துதானே தீர வேண்டும்? மிகுந்த கனமான 3, 4 புத்தகச் சிப்பங்களை அப்போ தெல்லாம் மணியம்மையார் பொறுமையுடன் தூக்கிச் செல்வதுண்டு. “நானே ஒரு மூட்டையைச் சுமக்கும் போது, அதன் பாரத்தினால் கஷ்டப்பட்டி ருப்பேனே தவிர, அது ஓர் அவமானம் தரக்கூடிய இழிவான செயல் என்று நான் கருதியதில்லை -” என்று பெரியாரே சொல்கிறாரே!
தந்தையார் வெங்கட்ட நாயக்கர் தம் சொத்துகளை ஒரு டிரஸ்டாக ஏற்படுத்திடக் காரணமே, பெரியாரல்ல; பெரியவர் ஈ.வெ.கி. தான். அவர் மிகுந்த செலவாளி. ஈ.வெ.கிருஷ்ணசாமியாரின் முதல் மனைவி நாகம்மாள், சேலம் தாதம்பட்டி எம். ராஜுவின் அத்தை. இவருக்குப் பிறந்த ரங்கராம், தாயாரம்மாள் ஆகிய இரு குழந்தை களும் மதனப்பள்ளி சானடோரியத்தில் இறந்து விட்டனர். இங்கிலாந்தில் பயின்று வந்தவரான ரங்க ராமுக்கு, ஆனைமலையில் ரங்கநாயகி அம்மையாரைப் பெண்பார்த்து வைத்திருந்த போது, அவர் இறந்து போன தால், ஈ.வெ.கி. தமது முதல் மனைவி உயிருடன் இருந்த போதே, இந்த ரங்கநாயகி அம்மாளை இரண்டாந்தார மாக மணந்து கொண்டார்.

இவருக்கு மிராண்டா (தீன தயாளு) சம்பத் (சம்பத் குமார வேங்கடவரதன்) இரு குழந்தைகள் பிறந்த பின்னரே, 1927-ஆம் ஆண்டில் முதல் மனைவி நாகம்மாள் மறைந்து போய்விட்டார். சிக்கன மில்லாத ஈ.வெ.கி. ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் கடன்பட்டு விட்டார். வெங்கட்டநாயக்கர் அறிந்து வருந்தி, பத்தாயிரம் ஒரு ரூபாய் வெள்ளிப் பண நாணயங்களை ஒரு விசுப்பலகை மீது வரிசையாக அடுக்கி வைத்து, “இந்தப்பா கிருஷ்ணா! உன்னை இன்றைக்கு நான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறேன்! இனி மேலாவது, இதோ உன் தம்பி ராமனைப் போலச் சிக்கனமாக நடந்து கொள்!” என்று கூறினார். தந்தையார் பார்வையில் பெரியார் எப் படிக் கருதப் பட்டார் என்பதை விளக்கும் நிகழ்ச்சியன்றோ இது!
தனிப்பட்டவர் யாருக்காகவும் எவரிடத்திலும் எப் போதும் பெரியார் சிபாரிசு செய்ததில்லை; ஒரே ஒருவருக்காக மட்டும் மூன்று முதலமைச்சர்களி டத்தில் பரிந்துரை புரிந்துள்ளார். கல்வித்துறை இயக்குநராக்குமாறு காமராசரிடமும், கல்வி ஆலோசகராகப் போடுமாறு அண்ணாவிடத் திலும், துணைவேந்தராக்குமாறு இரண்டு தடவை கலைஞரிடமும், பெரியார் தாமே தமது இயல்புக்கு மாறாகச் சிபாரிசு செய்திருக்கிறார்.
பல மருத்துவ மனைகளுக்கும் சென்று, அங்கு கோரிக்கை யில்லாமல், பெற்றோர் யாரென்றும் தெரியாமல், கை விடப்பட்டுக் கிடக்கும் குழந் தைகளைக் (Foundlings) கேட்டு வாங்கி வந்து, வைக்கம், வளர்மதி, பாப்பு, அமலா என்றெல்லாம் பெயர் சூட்டி, அவற்றை அன்போடு செல்ல மாகப் பெரியார் வளர்த்து வந்த பாங்கு, பார்த்தவரைப் பரவசமாக்கும்! இந்தக் குழந்தைகளில் ஒன்று வளர்ந்து, மங்கைப் பருவம் எய்தி, ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பட்டபோது, பிரிவாற் றாமையால் பெரியாரே கண்ணீர் சிந்தி விட்டார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?
சட்டத்தை மதிப்பவர் பெரியார்; சட்டத்துக்கு உட் பட்டு நடப்பதையே எப்போதும் அவர் விரும்புவார். சட்டத் துக்குப் புறம்பாகத் தாம் எப்போதாவது தவறி நடக்க நேர்ந்துவிட்டால், தக்க தண் டனையை ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டார்.

“என் மனைவி முடிவெய்திய போதும், நான் சிறிதும் மனங் கலங்கவில்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்க வில்லை! என் தாயார் இறந்தபோதும், இயற்கை தானே? 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருத லாமா! இது பேராசை அல்லவா? என்று கருதினேன்! என் அண்ணன் மகன் ரங்கராமைப் பத்து வயதில் வண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்தோம். 20 வயதில் ஊர் திரும்பிய அவன் இறந்து போனதற் காகவும் பதறவில்லை; சிதறவில்லை!” – என்று பெரியார் எழுதியுள்ள அனுதாப உரை களைப் படிக்கும்போது, இவருக்கு எவ்வளவு கல்மனது இறுகிய நெஞ்சம் – இளகாதபாறை உள்ளம் – என்றெல்லாம் எண்ணத் தோன்றும்! ஆனால், அவரது கட்டுரை இத்தோடு நின்றுவிடவில்லை; நீள்கிறது! – “பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. காரணம் – மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது, தன்னலம் மறையும்போது, அவர்களது நினை வும் மறந்துபோகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொது நலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத் தது. எனவே, தமிழர்களைக் காணுந்தொறும், நினைக்குந் தொறும் நெஞ்சம் பகீரென்கிறது.”
செல்வம் நினைவு பெரியாரை எவ்வளவு தூரம், எதற் காக வாட்டியது என்பது புரியும்போது, பொது நல ஊழியர்கள்பால் அவருக்கிருந்த பற்று, பாசத்தின் உயர்வு, வெளிப்படுகின்றதல்லவா?

பெரியாருக்கு இசையில் ஈடுபாடும்,ஞானமும் உண்டு. நகைச்சுவை உணர்ச்சியும், நையாண்டியும் நளினமாக இழையோட, அவர் சில நேரங்களில் பேசுவதுண்டு. தெற்குச் சீமையிலிருந்து தொண்டர் ஒருவர் குடும்பத்துடன் பெரியாரைக் காணவந் திருந்தார். அடுக்கடுக்காகப் பத்துப் பன்னிரண்டு பிள்ளைகள் அவருக்கு. அவர் சென்றதும், அருகிலிருந்த தமது தோழர்களிடம் பெரியார், “அய்யா வுக்கு ஊரில் தொழில் எப்படி?” என்று கேட்டார்; ‘பிள்ளை பெறுவது தவிர வேறு வேலை இல்லையோ?’ என்பதையே நாசுக்காகக் கேட்டார்!
1970-இல் பம்பாய்ப் பயணத்தின் போது தஞ்சை கா.மா. குப்புசாமியின் கார் ஒன்றும் பெரியாரின் வேனைத் தொடர்ந்து வந்தது. ஆண்கள் காரிலும், மகளிர் வேனிலும் பயணம் செய்தனர். எங்கேயாவது வேன் நின்றால், காரிலிருக்கும் ஆண்கள் இறங்கி ஓடி, அய்யா என்ன?” என்று வேனுக்குள் ஏறு வார்கள். “அவர்கள் உண்மையில் என்னைப் பார்க்கவா இப்படி ஓடிவருகிறார்கள்? ஏன் அம்மா?’ என்பார் பெரியார். தத்தம் மனைவிமார் களைக் காணும் ஆவலில் வருவதாக, இலைமறைகாயாகப் பெரியார் எடுத்துக் காட்டினார்!

சீனாவில் ஆடவரும் மகளிரும் ஒரேமாதிரியான Unisex ஆடை அணிவது போல் நம் நாட்டிலும் இருக்க வேண்டும் என்பது பெரியார் கொள்கை. இதை முதலில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அமல் செய்யலாம் என்று ஒருவர் ஆலோசனை கூறினார். பெரியாரின் அருகிலிருந்த மணியம்மையார், “அப்படியானால் 110 செட் டிரஸ் வேண்டுமே” என்றார்கள் – “அம்மாவுக்கா?” என்று கேட்டு, நிறுத்திக் கொண்டார் பெரியார். அனைவரும் கொல்லென்று சிரித்ததும்,அம்மாவுக்கு லிஷயம் புரிந்து, வெட்கத்துடன் ஓடிவிட்டார்கள் உள்ளே!
பெரியாருக்கு அபாரமான எஞ்சினீயரிங் ஸ்கில் இருந்தது. பந்தல்கள், கட்டடங்களுக்கு அவரே கைத் தடியால் அளவெடுத்துக், கையினால் பிளான்கள் வரைந்துள்ளார். எஸ்டிமேட் தாமே போட்டு விடுவார்.
சர் சி.வி. ராமன் ஒரு நாத்திகர் என்பதும், பெரியாரிடம் ஈடுபாடு உள்ளவர் என்பதும் பலருக்குத் தெரியாது. அதனால் நமசிவாயம் லேப் என்று ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்காகப் பூண்டிக்கு அவரை அழைத்த நீரியல் விஞ்ஞானி பி. குமாரசாமியிடம் ‘நீங்களும் என்னைப்போல ஒரு நாத்திகர் என்பதால் வருகிறேன். இந்தச் சம்பிரதாய மெல்லாம் எனக்குப் பிடிக்காது” என்றார் சி.வி.ராமன்.

1955-ஆம் ஆண்டு தேசியக்கொடி எரிப்புப் போராட்டம் நடத்துவதாகப் பெரியார் அறிவித்திருந்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம், அவரது தலையீட்டிலும் உறுதிமொழியிலும் பெரியார் தமது போராட்டத்தை ஒத்தி வைத்தார். முதலமைச்சருடன் அரசியல் ரீதியாகச் சரியான, சுமுகமான சூழ்நிலை இல்லை பெரியாருக்கு! அப்போது தஞ்சைப் பகுதி யில் புயல், வெள்ளத்தால் பலத்த சேதம். பெரியார் தமது அரசியல் மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு, மனிதாபிமான உணர்வு உந்தியதால் முதலமைச்சரின் புயல் நிவாரண நிதிக்கு ஆயிரம் ரூபாய் 7-12-1955 அன்று அனுப்பி உதவினார்.
“எனக்குச் சுதந்தர நினைப்பு – சுதந்தர அனுபவம் – சுதந்தர உணர்ச்சி உண்டு. அதை உங்கள்முன் சமர்ப்பிக் கின்றேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்தர நினைப்பு, சுதந்தர அனுபவம், சுதந்தர உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்புக்கொள்ளக் கூடியவைகளை ஒப்பித், தள்ள வேண்டியவைகளைத் தள்ளி விடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரில்தான் நான் எதையும் தெரிவிக்கின்றேன்” என்கிறாரே; இவர்தாம் பெரியார்!
“சுயமரியாதை இயக்கம் என்கிற என்ஜினைப் பலப் படுத்தி, அது சரியாக ஓடத் தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்து விட்டால், பிறகு எந்த இயந் திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்துத், தோல்பட்டையை மாட்டி ட்டாலும், அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் (Government) இருக்க வேண்டும் என்கிற கவலை யாருக்கும் வேண்டியதில்லை!”

எவ்வளவு நம்பிக்கையோடு நவிலப்பெற்ற தெம்பூட்டும் மொழிகள் இவை! பெரியார் தவிர வேறு யாரால் சொல்ல இயலும்?
இந்தியாவில் இந்திரா ஆட்சி உள்நாட்டு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தபோது, பத்திரிகைத் தணிக்கை முறை அமலானபோது, மிசா சட்டத்தின் கீழ் பல கட்சித் தலைவர்கள் சிறையிடப்பட்டபோது, பச்சைத் தமிழர் காமராசர் மனம் வெதும்பி மறைந்த போது, தனித் தமிழராட்சியை டிஸ்மிஸ் செய்து – முதன் முறையாகத் தமிழ்நாட்டில் குடிஅரசுத் தலைவராட்சி அமலானபோது, அட் வைசர்கள் எனும் பார்ப்பன அதிகாரிகள் தந்தை பெரியாரின் 60 ஆண்டு உழைப்பின் பலனை அழித் தொழித்த போது, சர்க்காரியா கமிஷன் நியமிக் கப்பட்ட போது, தி.க., தி.மு.க. தலைவர்கள் பலரைச் சிறையிலிட்டு அடித்து உதைத்துச் சித்திரவதை செய்தபோது, ஓராண்டுக்கு மேலும் கொடிய அடக்கு முறை ராணுவ ஆட்சிபோல் தலை விரித்தாடியபோது, அனைத்துக்கும் முடிவுகட்டுவதுபோல் மத்திய ஆட்சியில் காங்கிரஸ் ஒழிந்து – சுதந்திரம் பெற்ற
30 ஆண்டுக் காலத்திலேயே முதன் முறையாக ஜனதாக்கட்சி அரசுக்கட்டிலில் அமர்ந்தபோது, மாநிலத்தில் அய்யா அண்ணா வழி வழி என்று சொல்லிக் கொள்ளும் திராவிட பாரம்பரிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியே ஆளவந்த போது, இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டிய மணியம்மையாரை இழிவுபடுத்தியபோது, இந்திரா காந்தி யைக் கொல்ல முயன்றதாக அரசு வழக்குத் தொடுத்த போது, மணியம்மையார் மறைந்தபோது, பிற்பட்டோ ராகிய சரண்சிங் பிரதமரான போது, வகுப்புரிமைக்கு மாநில அரசு குழி பறித்தபோது – அய்யோ, பெரியார் இல்லையே! – என்று தமிழ்நாடு விடுத்த ஏக்கப் பெருமூச்சு காதில் கேட்டிருக்குமே!
எங்கே அந்தப் பெரியார்?
எங்கே?
எங்கே தந்தை பெரியார்?

No comments:

Post a Comment