தனிமை 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

தனிமை 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க!

 தனிமை 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க!

சில பேர் தனிமையை இனிமை என்று கருதி, அதிக நேரத்தை தனிமையிலேயே கழிக்கப் பழகி விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களும், பதவி ஓய்வு பெற்ற முதுகுடி மக்களில் பலரும் தனிமையிலேயே கழித்து, நண்பர்களைத் தேடாமல், பழகாமல், 'எப்படியோ காலந்தள்ளுவது' என்ற ஒரு வகை சலிப்பு மனப்பான்மையுடன் வாழ்கிறார்கள்!

இன்னும் சிலருக்கு தனிமை "திணிக்கப் பட்ட"தாக குடும்பங்களில் ஆக்கப்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் கலகலப்புடன் பேசி, சிரித்து மகிழ்ந்து வாழும் வாழ்க்கை அறிவியல் தொழில் நுட்பத்தால் பறிக்கப்பட்டது ஒருவகை விசித் திரமான கொடுமையே!

தொலைக்காட்சிப் பெட்டிகள் அறைக்கு அறை, கைப்பேசி ஒவ்வொருவரிடமும் - குழந்தைகள், மாணவர்கள் உட்பட!

மூன்று பேர் கூடினால் நாலுவகை உரையாடல் சத்தமோ, பாட்டோ, சமூக வலைத் தளத்துள் அக்கப் போர் - காலட்சேபமோ - தனி ஆவர்த்தனமோ, அதை சுவைத்து கேட்டு, மகிழ்ந்து தங்களது செயலாக்கங்களை டைரி எழுதுவதுபோல் உடனே SMS அனுப்புவதும் மலிவடைந்த காட்சிகள்!

பாவம் - பரிதாபத்திற்குரிய 'பெரிசுகள்' யாரிடம் போய் பேசுவது? 

அதனால் வேறு வழியின்றி தமது கடந்த காலத்தை Rewind 'மீள் கேட்பு' செய்து அதிலே காலத்தைக் கழிப்பது, அல்லது எப்போதும் 'Mute' என்ற மவுன சாமிகளாகவே இருப்பது அத்தகையவர்களுக்கு வேறு வழியின்றி வாடிக்கையாகவே ஆகிவிட்டது!

ஆனால் அத்தகைய தனிமை என்பது அவர்களது வாழ்க்கையையே வெகுவாக சுருக்குப்போடும் கயிறுபோல் ஆக்குகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் மனிதர்களுக்கு நல்ல அறிவுரை கூறுகிறார்கள் என்பதை கவனிக்கத் தவறாதீர்!

அமெரிக்காவின் பிரபலமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆன் ஏஜிங், (National Institute on Aging) 'வயது முதுமையைப் பற்றிய தேசிய ஆய்வகம்' இதனை மக்களுக்குப் 'பளிச்'சென சுட்டிக் காட்டி எச்சரிக்கிறது!

தொடர்ந்து தனிமையாக ஒரு நபர் இருப்பது எவ்வளவு கெடுதியாக, அவரது நலத்துக்கு கேடாக அமையும் என்பதை ஓர் அருமையான உதாரணம் மூலம் விளக்கியுள்ளது!

15 சிகரெட்டுகளை ஒரு நாளில் புகைத்தால் உடலுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ அதே அளவுக்கு, தொடர்ந்த தனிமையும் பாதிப்பை ஏற்படுத்தி அவரது ஆயுளைக் குறைக்கும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளது!

2019ஆம் ஆண்டு அந்த பிரபல தேசிய ஆய்வகத்தின் அறிக்கை, தனிமையாலோ அல்லது திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்படுவதாலோ ஒருவரின் ஆயுள் 15 ஆண்டுகள் குறைந்து விடக் கூடிய பேராபத்து உண்டு என்று கண்டு பிடித்துள்ளார்கள்!

அது எப்படி தனது வேலையைக் காட்டும் தெரியுமா?

ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், உடல் பருமன் பெருத்தல், முதலியன மூலம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை (Immunity System) வெகுவாகக் குறைப்பதுடன் மறதி நோயான 'அல்சைமர்ஸ்' போன்றவற்றையும் உருவாக்கி மரணத்தின் எல்லைக்குக்கூட கொண்டு போய் அவர்களைச் சேர்த்து விடும் அபாயம் உண்டு!

அமெரிக்காவின் பிரபல மருத்துவர் - சர்ஜன்  ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி (இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்து படித்து பெரும் நிலைக்கு உயர்ந்தவர் - அவரது பூர்வீகம் ஆந்திரா எனத் தெரிகிறது) அவர் மூத்த குடிமக்களை  - இப்படிப்பட்ட தனிமை - மறைந்து நின்று கொல்லும் ஆபத்தான ஆயுதமாகவும் ஆகி விடுகிறது என்கிறார்.

ஒரு திரைப்படத்தில் அறிஞர் அண்ணா ஒரு பாத்திரத்தின் மூலம் 'அழகு ஒரு ஆபத்தான ஆயுதம்' என்று அக்கதைக்கேற்ப வசனம் எழுதியுள்ளார்; ஆனால், தொடர் தனிமையோ மிகப் பெரிய ஆபத்தான ஆயுதம் என்கிறது பி.பி.சி. செய்திகூட வலியுறுத்துகிறது)

தனித்திருத்தல் என்பது ஒரு மனநிலை; ஆனால் திட்டமிட்டு தனிமைப்படுத்தலோ அல்லது ஒதுக்கப்படுதலோ அது ஒரு விரும்பத் தகாத செயல் ஆகும்!

மனநிலையில் தனிமைப்படுதலும் (Loneliness and Isolation)  - திட்டமிட்டு ஒதுக்கப்படுதலும் - இரண்டும் ஒன்றல்ல; வெவ்வேறானவை என் கிறார்கள் மருத்துவ மனோ தத்துவ நிபுணர்கள்!

சிலர் தங்களைச் சுற்றியுள்ள கூட்டத்திற்கு நடுவில் கூட இருந்துகொண்டு கலகலப்பாகப் பேசாமல் 'ஊமைக்கோட்டானா இவர்' - என்று பிறர் மனதில் எண்ணும்படியாகக்கூட நடந்து கொள்ளுவதுண்டு!

அவர்களிடம் சிரிப்பைக்கூட எதிர்ப்பார்ப்பது "அமாவாசையன்று நிலவைத் தேடுவது போன்ற வீண் முயற்சி"யே யாகும்!

சிலருக்கு வாழ்விணையர் இழப்பு, தேர்வில் தோல்வி, வணிகத்தில் பெருநட்டம், பல நாள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் பதவி உயர்வு மறுக்கப்பட்டு, திடீரென தன் கீழ் இருந் தவர் மேலே உயர்த்தப்பட்டு  - ஆணையிடுவதை எளிதில் ஏற்க இயலாத மனநிலை - இப்படி பல காரணங்களால் சிலர் தங்களைத் தாங்களே தனிமைச் சிறையில் வைத்துப் பூட்டிக் கொள்ளு கிறார்கள்!

இதிலிருந்து விடுபட என்ன செய்வது? என்பதுதானே உங்கள் அவசரக் கேள்வி. அதுபற்றியும், மருத்துவ வல்லுநர்கள் கூறாமலா இருப்பர்! 

நாளை பார்க்கலாமா?

(தொடரும்)


No comments:

Post a Comment