சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் ஆட்சியில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் ஆட்சியில்...

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து  இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு 10 ஆண்டுகள் இருண்டு கிடந்தது. இதையடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் தி.மு.க - மட்டும் 133 தொகுதிகளில் வரலாற்று வெற்றியைச் சூட்டியது.

இதையடுத்து 2021 மே 7ஆம் தேதி  தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். 

பதவி ஏற்ற முதல் நாளே  "மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம்" கோப்பில் கையெழுத்திட்டார். 

இந்நிலையில் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, சாதனை சிகரத்தில் ஒளிர்கிறது -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

1. ரூ.4,426 கோடியில் 276 கோடி முறை மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்துள்ளனர். மேலும் ரூ.254 கோடியில் 15.87 லட்சம் முறை திருநங்கைகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ஒருவருக்கு ரூ.888 சேமிப்பு.

2. புதுமைப் பெண் திட்டம்: புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் ரூ.350 கோடியில் 2.09 லட்சம் மாணவியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

3. மகளிர் மேம்பாடு: செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட உள்ளது. அதேபோல் 8,57,979 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.47,034 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

4. நான் முதல்வன் திட்டம்: முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 8,11,879 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் 4,60,734 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

5. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ‘கீழடி அருங் காட்சியகம்’அமைக்கப்பட்டுள்ளது.

6. தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்: 222 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2,72,322 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 4,09,651 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

7. வேலைவாய்ப்பு முகாம்கள்: 1241 வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம்1,44,961 பணி நியமனங்கள் வழங்கப்பட் டுள்ளன.

8. விவசாயிகள் நலன்: 31.53 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.23,127 கோடி பயிர்க்கடன், 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

9. மக்கள் நல்வாழ்வு: ரூ.3,185 கோடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் - 58.27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் 1.51 லட்சம் நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

10. விளையாட்டு மேம்பாடு: ரூ.114 கோடியில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி உலகத்தையே ஆச்சரியப்பட வைத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

தந்தை பெரியார் (சமூகநீதி நாள்), அண்ணல்  அம்பேத்கர் (சமத்துவ நாள்), வடலூர் இராமலிங்க அடிகளார் (தனிப் பெரும் கருணை நாள்), நினைவு  கூர்ந்து போற்றும் - உறுதிமொழி எடுக்கும் சமூகநீதிப் பார்வை எந்த மாநிலத்தில் உண்டு? தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில் அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்கள் 28 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 4 பேர் பட்டியலின சகோதரர்கள்.

மக்களுக்கான திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும்  சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தைத் தொடங்கி இதுவரை நான்கு கட்டங்களில், 16 மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப் பட்டுள்ளது. 

இன்னும் எத்தனை எத்தனையோ "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" என்று நமது முதலமைச்சரை தமிழர் தலைவர் ஆசிரியர் கூறியது எத்தனைத் தொலைநோக்கு!

No comments:

Post a Comment