வேலையின்மை என்பது பாயும் வேங்கையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

வேலையின்மை என்பது பாயும் வேங்கையே!

இளைஞர்களுக்கு ஒரு நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை; வேலை வாய்ப்புக் கிட்டாத இளைஞர்கள் நாளும் பெருகி வருகிறார்கள் என்றால் வெகு விரைவில் வெடி குண்டு வீச்சு என்பது போன்று எடுத்துக்காட்டுக்குக் கூறும் பேரபாயம் அந்த நாட்டின் தலைக்குமேல் சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று பொருள்படும்.

அந்த வகையில் இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்த வரையில்  - மக்கள் தொகை 130 கோடியைத் தாண்டும் நிலையில் வேலை கிட்டாத இளைஞர்கள் எண்ணிக்கையும் வேகமாகப் பெருகி வருகிறது.

ஆண்டுக்கு இரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் படும் என்று 56 அங்குல மார்பளவு உள்ள நரேந்திரமோடி மார் தட்டினார் - தோள் புடைத்தார் - குரலை மேலே உயர்த்தியும், தாழ்த்தியும், மக்களைக் கவரும் வண்ணங்களோடு நாவைச் சுழற்றினார்.

அவர் வாக்குறுதி அளித்தபடி 20 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் நாட்டின் நிலைமை என்ன? வெளிவரும் புள்ளி விவரங்கள் விலாவில் வேல் பாய்ச்சுவதுபோல் அமைந்துள்ளன. 

2022 ஜூன் திங்கள் 'ரோஜ்கர்மேளா' - வேலை வாய்ப்பு முகாம் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தாரா இல்லையா?

ஆனால் கடந்த 2022 டிசம்பரின் நிலைமை என்ன? கடந்த 16 மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை வானத்தைத் துழாவியதே!

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மய்யம் வேலை வாய்ப்பின்மை நாளும் அதிகரித்துப் போய்க் கொண்டு இருப் பதைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. செப்டம்பர் 2022இல் நிலவரம் என்ன? ஒட்டு மொத்த இந்தியாவில் வேலை வாய்ப்பு இன்மை 6.43%, கிராமப்புறங்களில் 5.64%, நகர்ப்புறத்தில் 7.70%, அக்டோபர் 2022இல் இந்திய ஒன்றியத்தில் வேலை வாய்ப்பு இன்மை 7.77%, கிராமப்புறங்களில் 8.04%, நகர்ப்புறங்களில் 7.21%

நவம்பர் 2022இல் ஒட்டு மொத்த இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை 8%, கிராமப்புறங்களில் 7.55%, நகரப்புறங்களில் 8.96%,

டிசம்பர் 2022இல் இந்தியா முழுமையும் வேலை வாய்ப்பின்மை 8.30%, கிராமங்களில் 7.44%, நகரங்களில் 10.09%, 

தமிழ்நாட்டில் 2022 டிசம்பரில் வேலை வாய்ப்பின்மை 4.1%, வேலை வாய்ப்பின்மை குறைந்த மாநிலம் என்ற வகையில் தமிழ்நாடு இந்தியாவில் 8ஆம் இடத்தில் இருக்கிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்த குறுகிய காலத்தில் வேலை வாய்ப்பின்மை குறைய ஆரம்பித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே கண்டு கொள்ளவில்லை.

நூறு நாள் வேலைத் திட்டம் என்று அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு மகத்தான மறுவாழ்வுத் திட்டமாகும்.

ஒன்றிய பிஜேபி அரசோ அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையின் கழுத்தில் கத்தியை வைத்ததுதான் மிச்சம்!

ஒன்றிய அரசின் கொள்கையின்படி பொதுத் துறைகளைத் தனியார்க்குத் தாரை வார்ப்பதால் ஏற்படும் பாரதூர விளைவு என்ன?

தனியார்த்துறையில் மேலாண்மைப் பதவிகளில் வீற்றிருப்போர் யார்? தனியார்த்துறையில் இடஒதுக்கீடும் இல்லாத நிலையில், வேலை வாய்ப்புகள் யாரை நோக்கி சவாரி செய்யும்?

எல்லாம் பார்ப்பனமயமாகத்தான் நீக்கமற காட்சியளிக்கும் இந்த நிலையில் தனியார்த்துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்ற கருத்து மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லையா?

அரசுத் துறைகளில்கூட சில குறிப்பிட்ட மேல் தட்டுக் கல்வியிலும், துறைகளிலும் இடஒதுக்கீடு இல்லை என்பது தானே நிதர்சனம்.

சமூகநீதியை ஒழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை - அதன் அரசியல் வடிவமான பிஜேபி ஆட்சியில் இடஒதுக்கீட்டை நேர்முகமாக ஒழிக்க முடியாத நிலையில், அரசமைப்புச் சட்டத் திற்கு முரணாக இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதன் சூட்சமம் என்ன?

கல்வியிலும், சமூகநிலையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீடு என்ற அரசமைப்புச் சட்டத்தின் ஆணி மூல வேரையே வெட்டி வீழ்த்தும் விபரீத வேலையல்லவா!

வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு பக்கம்; அப்படியே வேலைகளைக் கொடுக்கும் ஒரு நிலை ஏற்பட்டாலும் அது உயர்ஜாதியினரின் வயிற்றில்தான் அறுத்துக் கட்டப்படும்.

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்துப் புரள வேண்டியதுதான்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு ஒன்றிய அரசில் வேலை - பணி நியமன ஆணையை  வழங்குகிறார் என்று ஏடுகளில் எல்லாம் கொட்டை எழுத்துகளில் பளிச்சென்று வெளி யிடப்பட்டுள்ளது.

உலக மகா ஒப்பனைக் கலைஞர்கள் எல்லாம் நமது பிரதமர் மோடியிடம் பிச்சை வாங்க வேண்டும்.

பிரதமர் மோடி அணியும் உடையின்  மதிப்பு ரூ.10 லட்சம் அல்லவா! என்னதான் நடக்காது இந்த பிஜேபி ஆட்சியில்?  

No comments:

Post a Comment