மறக்க முடியாத மாமனிதர் வி.பி. சிங்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

மறக்க முடியாத மாமனிதர் வி.பி. சிங்!

இந்தியத் துணைக் கண்ட அரசியல் வரலாற்றில் சமூகநீதி சரித்திரத் தில் என்றென்றைக்குமே மறக்கப்படவே முடியாத மாமனிதர் - சமூக நீதிக் காவலர் மறைந்த பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்).

அவர் ஆட்சி செய்த காலம் சிறிதே! ஆனால் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற்றில் சமூகநீதிப்பால் வார்த்த அந்தப் பெரு மகனாரின் புகழோ கால வரையறையின்றி நீடு புகழுடன் வாழும்-

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடங்களை வேலை வாய்ப்புகளில் வழங்கிய ஆணையை அவர் பிரகடனப்படுத்தியபோது (7.8.1990) அவர் மறக்காமல் உச்சரித்த பெயர்கள் மூன்று.

தந்தை பெரியார், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகிய பெரு மக்கள்தான் அவர்கள்.

வி.பி. சிங் தலைமையிலான ஜனதா தள ஆட்சியை வெளியிலிருந்து ஆதரித்த பாரதிய ஜனதா கட்சி, மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்தினார் என்பதற்காக தனது ஆதரவை விலக்கிக் கொண்டு, வி.பி.சிங் தலைமையிலான சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்தது.

அவர் ஆண்ட காலம் 11 மாதம்தான் என்றாலும், அது ஒரு யுகப் புரட்சிக்குச் சமமானது.

தன் ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிந்திருந்தும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒற்றை வரியில் கோரினார். 

'என் ஆட்சி கவிழ்க்கப்படும்' என்று எனக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், சமூகநீதியில் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நாடு தெரிந்து கொள்ளவே இதனைச் செய்கிறேன்' என்றாரே!

ஆம் நன்றாகவே தெரிந்தது. அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் சமூகநீதிக்கு எதிராகவே வாக்களித்தனர் என்பது நினைவிருக்கட்டும்!

'சமூக நீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்!" என்றாரே - இப்படி சொல்லும் கொள்கை வைரத்தை நாம் எங்கே சென்று தேடுவோம்?

'ஒன்றைச் சொல்ல வேண்டும். கடவுள் சிலையை வடித்த சிற்பி அந்தக் கோயில் கருவறைக்குள் செல்ல முடியாது என்பதுபோல, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி அண்ணல் அம்பேத்கர் படத்தைக்கூட நாடாளுமன்றத்தில் திறக்க முடியவில்லையே!' என்று வேதனைப்பட்டதுடன் அண்ணல் அம்பேத்கர் படத்தினைத் திறந்து வைத்ததோடு அமைதி காக்கவில்லை -  "பாரத ரத்னா" பட்டத்தையும் அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கி, பட்டத்திற்குப் பெருமை சேர்த்த பெரு மகனார் நமது வி.பி. சிங்.

குடியரசு துணைத் தலைவராக கே.ஆர். நாராயணன் அவர்களை முன்மொழிந்தவரும் அவரே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை  குறிப்பிடத்தக்க அவர் அளித்த சன்மானம் முக்கியமான ஒன்று - காவிரி நடுவர் நீதிமன்றத்தை அமைத்ததாகும்.

இவ்வளவுக்கும் வி.பி.சிங் கட்சியான ஜனதா தளம் கருநாடகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும்கூட அவர்களின் எதிர்ப்பையும் கடந்து நடுவர் மன்றம் அமைத்தார்.

திராவிடர் கழகம் அழைத்த போதெல்லாம் புன்முறுவலோடு   வருகை தந்து பெருமை சேர்த்தார். அவர் பிரதமராகப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கழித்து (3.2.1990) சென்னை பெரியார் திடலுக்கு வந்தபோது நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவரைச் சந்தித்து, மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தார்.

மண்டல் குழுப் பரிந்துரை செயல்படுத்தப்படும் என்று பெரியார் திடலில் அந்த மேடையிலேயே அறிவித்தார்.

வரலாற்று ரீதியாக சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை ஆழமாக உணர்ந்தவர் அவர்.

"நாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற்றுக்குச் செல்வோம். 4000 ஆண்டுகளுக்கு முன்பு  கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டுக்குள் படையெடுத்து வந்தவர்கள், இங்கே உருவாக்கி வைத்த அடிமைத்தனம் ஒழிந்தாலொழிய பிரச்சினைக்குத் தீர்வே இல்லை" என்றாரே! எத்தகைய ஆழமான சிந்தனை - அரசியலில் இருந்து கொண்டு இவ்வளவுத் துல்லியமாக, துணிவாகச் சொன்னவரை எங்கே தேடுவோம்? (திருச்சியில் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத்தைத் திறந்து வைத்து (23.2.1992) உரையாற்றுகையில்தான் இதனைக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை நாங்கள் எல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை வீரமணி அவர்களே, நீங்கள் செய்துகொண்டு இருக்கிறீர்கள், எனவே உங்களைப் பாராட்டுகிறேன். சமுதாயப் பணியிலே வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்" என்று அதே  நிகழ்ச்சியில் தான் குறிப்பிட்டார் சமூகநீதி காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள்.

தந்தை பெரியார் பற்றி சமூகநீதிக் காவலரின் கணிப்பு என்ன?

"Minds are changed by Social Reformers, like late Periyar E.V.R. who have rendered Great service for Social Justice than did Prime Ministers, Legislaters or parliamentarians" ('The Hindu' 29.12.1992)

"சமூகநீதிக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் பெரியார் அளித்த உழைப்பும், பங்களிப்பும் - பிரதமர்கள் மற்றும் நாடாளுமன்றவாதிகள் சாதித்ததைவிட அதிகம். மக்கள் மனமாற்றத்திற்கு முக்கிய காரண மானவர்கள் பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளே!" என்று தந்தை பெரியாரின் தொண்டினை உச்சி மோந்து பாராட்டினார்.

அவர் சிறுநீரகப் பாதிப்பால் அல்லல்பட்டபோது 'நான் நீ' என்று தங்கள் சிறு நீரகத்தைக் கொடையாக அளிக்க முன்வந்த திராவிடர் கழக இளைஞர்களைப் பார்த்து நெகிழ்ந்தே போனார்.

ஹிந்தியில் அவர் எழுதிய கவிதை நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியீட்டு விழா திருச்சியில் நடத்தப்பட்டது.

அந்நூலின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அர்ப்பணித்தார்.

சென்னையில் 1.10.1994 அன்று அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சிலையை திறந்து வைத்தார்.

ஆம், வி.பி.சிங் அவர்கள் நம் உதிரத்தோடு கலந்த உத்தமர்.

நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வி.பி. சிங் அவர்களுக்குச் சிலை எழுப்பும் நாளை ஆர்வப் பெருக்குடன் எதிர்பார்க்கிறோம்.


No comments:

Post a Comment