தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி இந்தியா முழுவதும் பரவும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 1, 2023

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி இந்தியா முழுவதும் பரவும்

தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கு வழி காட்டுகிறார்

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சென்னை, மார்ச் 1- தமிழ்நாட்டில் தி.மு.க. தலை மையிலான கூட்டணி கொள்கைக் கூட்டணி - அதனை அகில இந்திய அளவில் நமது தி.மு.க. தலைவர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் எடுத்துச் செல்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சராக திகழ்கின்ற நம்முடைய சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுடைய 70 ஆம் பிறந்த நாளாகிய இன்றைக்கு நாடே குதூ கலத்தில் இருக்கக்கூடிய அளவுக்கு அவரை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அரசியல் வட்டாரங் களையும் கடந்துமக்கள்  பார்க்கின்றனர். 

தமிழ்நாட்டில் 'திராவிட மாடல்' ஆட்சியில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சியை ஏற்பாடு செய்து, இதுவரை இல்லாத ஓர் அமைதிப் புரட்சியை மகளிர் கல்வித்துறையிலும் சரி, மருத்துவக் கல்வித் துறையிலும் சரி மற்ற மற்ற துறைகளிலும் முத்திரை பதித்த ஆட்சியாக இந்த ஆட்சி, இரண்டாண்டுகள் முடிவதற்குள்ளாகவே சாதனை செய்து சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதன் காரணமாகத்தான் "திராவிட மாடல்" தமிழ்நாட்டோடு நின்றுவிடக் கூடாது. 

தமிழ்நாட்டில் இருப்பது 

கொள்கைக் கூட்டணி!

அது அனைத்து இந்தியாவுக்கும், பல்வேறு  மாநிலங்களுக்கும் பரவினால்தான் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், பாசிசத்தை நிலைநாட்டக் கூடிய வகையிலும், அரசியல் சட்டத்தை மதிக்காமல் அதை அலட்சியப்படுத்தி நடக்கக்கூடிய இன்றைய ஒன்றிய ஆட்சிக்கு, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சிக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் வருகின்ற நிலையிலே, அந்தத் தேர்தலிலேயே மக்கள் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும் என்றால், அது தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி அரசி யலைத் தான் தங்களுக்குத் தேவை என்று எதிர் பார்த்துதான் இன்று மாலை (1.3.2023) அவருடைய பிறந்தநாள் விழாவில் அகில இந்தியத் தலைவர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வருகிறார்கள். 

காரணம் இந்த கூட்டணியை அமைத்ததில் கூட அவருடைய அரசியல் அனுபவமும், சிறந்த சிந்தனையும், செயலாக்கமும் மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. வட புலத்தில் எதிர்க் கட்சிகள், மற்றவர்கள் கூட்டணி சேர்வதற்கும், தமிழ் நாட்டில் ஜனநாயக, மதச்சார்பற்ற கூட்டணினுடைய தத்துவத்திற்கும் அடிப்படையிலேயே சற்று மாறு பட்டது. 

மற்ற இடத்திலேயெல்லாம் தேர்தல் நேரத்தில் வெறும் அரசியல் கூட்டணிக்காக சேர்கிறார்கள்.  ஆனால் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கிய இந்த கூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கிற கூட்டணி என்பது, அது வெறும் அரசியல் கூட்டணியாக இல்லாமல், தேர்தலுக்காக சேருகிற கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக, இலட்சியங்களை முன்னிறுத்தி, அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு வந்த காரணத்தால்தான் இந்த கூட்டணி உறுதி மிக்க கூட்டணியாக இருக்கிறது. 

மாற்று மாமருந்துதான் 

திராவிடத் தத்துவம்!

யாருக்கு எத்தனை இடங்கள் என்பதைவிட, இந்தியாவின் அரசியல் சட்டமும், ஜனநாயக குடியரசுத் தன்மையும் காப்பாற்றப்படுவது எப்படி? ஜாதி வெறியும், பதவி வெறியும் படமெடுத்தாடக்கூடிய சூழ்நிலையில், அதற்கு மாற்று மருந்து திராவிடத் தத்துவங்கள்தான் என்பதை கடந்து 100 ஆண்டுகள் வரலாற்றிலே தென்னாடு குறிப்பாக தமிழ்நாடு காட்டியிருக்கிறது. 

இதைத்தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும். சமூக நீதி என்றாலும், சுயமரியாதையாக இருந்தாலும், மதச்சார்பின்மையாக இருந்தாலும் அதற்கு வழி காட்டக்கூடிய இந்த ஆட்சியைப் பொறுத்தவரையிலே, அதுதான் இந்த 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிலே, தமிழ்நாட்டைத் தாண்டி, அவரது ஆளுமையும், அரசியல் கூர்மையும், கூர்த்த மதியும், அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட்டு, ஒரு வியூகமாக அது மாற்றப்பட்டு, 2024ஆம் ஆண்டில் வரும் தேர்தலிலே யாரை அனுப்ப வேண்டுமோ அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, யாரை அழைத்துக் கொண்டுவரவேண்டுமோ அவர்களை அழைத்து வரக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் அவருடைய பிறந்தநாள் செய்தியாகும்.

 பிறந்தநாள் விழா என்பதைவிட, ஜனநாயகத்தை காப்பாற்றுகிற நாள் என்பதை அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதுதான் இந்திய நாட்டிற்கு திருப் பத்தைத் தரக்கூடிய மிக முக்கியமான காலகட்டம். அந்தக் காலகட்டத்தினுடைய தொடர்ச்சி, இந்த ஆண்டில் இருந்து மார்ச் 1ஆம் தேதியிலிருந்து வருகிறது. மார்ச் என்றாலே வேகமாக நட என்று பொருள். ஆகவேதான் ஜனநாயக சக்திகளை எதிர்க்கும் சக்திகளை எதிர்த்து 'மார்ச்' என்பது தமிழ்நாட்டில் இருந்து திராவிட மாடலில் இருந்து தொடங்குகிறது.

கூட்டணியில் வேறு கட்சிகள் இணையுமா?

கேள்வி: 2024 கூட்டணியில் வேறு கட்சிகள் இணைவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

பதில்: நாங்கள் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சிகள்தான் நினைக்க வேண்டும். மற்ற கூட்டணி மாதிரி இல்லை. இது கூட்டணி! மற்றதுகள் கூத்தணி! ஒரு கட்சிக்குள்ளேயே பல அமைப்புகள் இருக்கும். இவரை அவர் நம்பமாட்டார். அவரை இவர் விமர்சிப்பார். அதெல்லாம் இங்க இருக்காது. கொள்கையால் இணைக்கப்பட்டது. பதவி பெறும் நோக்கால் இணைக்கப்பட்டிருப்பது அல்ல. ஆகவே இந்த இலட்சியத்தில் யார் யாருக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, திராவிடர் இயக்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறவர்கள், குறிப்பாக நம் முடைய முதலமைச்சர் மீது நம்பிக்கை இருப்பவர்கள் தாராளமாக வந்து சேருவார்கள். எனவே இந்த கூட்டணி பெருகுமே தவிர, குறையாது. அதே நேரத்தில் மற்ற கூட்டணியில் சில கட்சிகள் காணாமல் போகிற வாய்ப்பும் உண்டு. வணக்கம்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறினார்.

No comments:

Post a Comment