"மோடி ஆட்சியின் ஆடுநர்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

"மோடி ஆட்சியின் ஆடுநர்"

'விடுதலை' நாளிதழில் மார்ச் 2 அன்று வெளியான 'ஆளுநர்கள் மீது உச்ச நீதிமன்றம் வைத்த ஆழமான குட்டு ' தலையங்கம் வாசித்தேன். ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு உட்பட்டவர் என்ற உச்ச நீதிமன்ற அறிக்கை போற்றி வரவேற்கத்தக்கது.

மக்களாட்சியின் மாண்பில் சிறந்தது என உலகம் வியக்கும் இந்தியாவில்தான் சர்வாதிகார ஆட்சியை மிஞ்சும் மோடி அரசு தனது அதிகார பலத்தினால் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கும் வகையில் ஹிந்து மதத்திற்கு மட்டும் ஆதரவாகவும், மற்ற மதத்தினரைஇழிவுபடுத்தியும், அழித்து ஒழிக்கவும்  தொடர்ந்து ஈடுபாடு கொண்டுசெயலாற்றுகிறது. 

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து மாநில அரசுக் கெதிராகவே ஒரு சிற்றரசாக செயல்படத் தூண்டி வருகிறது. 

இப்படி ஆளுநர்களின் சர்வாதிகார செயல்பாடு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்படுவது வாக்காளர் எனும் குடிமக்களை அவமதிக்கும் செயலாகும். 

உச்ச நீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவர், ஆளுநர், சட்டப் பேரவைத் தலைவர் ஆகிய பொறுப்புகள் என்பது வெறும் பதவியல்ல , மக்களின் மாண்பையும், அரசின் நெறிமுறைகளையும் காக்கும் பணி என்பதே முற்றிலும் உண்மை. 

தனிப்பட்ட எவருக்கும் சார்ந்திடாமல் மதங்கள், இனங்கள் கடந்து செயலாற்றுவது தான் இப் பணிகளின் தலையாய கடமை. 

தமிழ்நாடு ஆளுநர்    மோடி ஆட்சியின் ஆடுநராக இருந்து கொண்டு மக்கள் தேர்வு செய்த ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 

தமிழ்நாடு அரசின் சட்டமன்றத் தீர்மானங்களை செயல்படுத்த காலதாமதம் செய்வது, ஹிந்து மதத்திற்கு மட்டும் குடை பிடிப்பது என இன்னல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பேரறிவாளன் விடுதலையில் நீதிமன்றம் அவருக்கு குட்டு வைத்தது அப்போதும் அவர் உணரவில்லை. தமிழ்நாடு என எழுத மறுத்து பிறகு தமிழ்நாடு என அவரே எழுதி பேசியது என தொடர்ந்து குட்டுப்பட்டுவருகிறார் ஆளுநர். 

மோடி ஆட்சியின் எடுபிடியாக இருக்க நினைப்பவர் தமது பதவியை விட்டு விட்டு உண்மை ஊழியராக செயல்படுவது அவருக்கு நல்லது. 

ஆளுநர் என்பதை மறந்து மோடி ஆட்சியின் ஆடுநராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநருக்கு , நெற்றியடியாக உச்ச நீதிமன்றத்தின் - ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு உட்பட்டவர் என்ற அறிக்கை அமைந்துள்ளது போற்றத்தக்கதாகும்.

மக்களாட்சியின் மாண்பைத் தொடர்ந்து சீர்குலைக்கும் மோடி அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் நெற்றியடி. 

ஒன்றிய அரசு, ஆளுநர் ஆகிய பொறுப்பிலுள்ளவர்கள் சர்வாதிகார போக்கில் செயல்படுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் அறிக்கை குட்டு வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

இனியாவது மோடி அரசும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து எதிர்ப்பு செயலில் ஈடுபாடு காட்டாமல் மக்களாட்சி மாண்பு என்பதையும், பதவியேற்புஉறுதிமொழியையும் எண்ணி செயல்படுவதே சிறந்தது. 

சர்வாதிகாரப் போக்கு தொடர்ந்தால் தேர்தலின் போது மக்கள்  உங்களுக்கு பேரழிவு என்னும் அதிர்ச்சியை தருவார்கள் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது. 

சர்வாதிகாரப் போக்கில் தொடர்ந்து ஈடுபடும் தமிழ்நாடுஆளுநர் அவர்களை நாம் ஆளுநர் என்று அழைக்காமல்  (மோடி ஆட்சியின்) ஆடுநர் என்றே அழைப்போம். 

- மு. சு. அன்புமணி, 

மதிச்சியம் 


No comments:

Post a Comment