உத்தியோகத்திற்கு ஹிந்தி தமிழனுக்கு மானக்கேடல்லவா? - தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

உத்தியோகத்திற்கு ஹிந்தி தமிழனுக்கு மானக்கேடல்லவா? - தந்தை பெரியார்


திராவிடர் கழகத்தையும், கருப்புச் சட்டையையும் பற்றி இந்த ஓர் ஆண்டுகாலமாக மந்திரிகள் பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும், சட்டசபை அங்கத்தினர்கள் பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும், சட்டசபை கூடும் ஒவ்வொரு கூட்ட சமயத்திலும் ஏதாவது ஒரு வகையில் குறை கூறியும், தாக்கியும் பேசிக்கொண்டே வருகிறார்கள்.

திராவிடர் கழகத்தார் இந்தியை எதிர்த்துப் பிரசாரம் செய்வதும், இந்துஸ்தான் அரசாங்க ஆதிக்கத்திலிருந்து திராவிடநாடு தனிச் சுதந்திர நாடாகப் பிரிந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்வதும், மத, சமுதாயத்துறைகளில் மூடநம்பிக்கைகளும் வருணாசிரம முறைப்படியான ஜாதிப்பிரிவுகளும் பேத வகைகளும் ஒழிய வேண்டும் என்றும், இவை ஒழியும்வரை, மக்கள் எண்ணிக்கை வீதம் வகுப்புவாரி பிரதிநிதித்துமும், உரிமையும் இருக்கவேண்டும் என்றும், பிரசாரம் செய்துவருவதும் யாவரும் அறிந்தேயாகும். இதில் திராவிடர் கழகத்தார் சிறிதும் ஒளிவு, மறைவு இல்லாமல் பிரசாரம் செய்து வருவதோடு, தம் பிரசாரங்களில் சிறிதும் பலாத்காரமோ, பலாத்கார உணர்ச்சியோ ஏற்படுவதற்கு இடம் இல்லாமல் சாந்தமும், சமாதானமும் ஆன தன்மையிலேயே பிரசாரம் செய்து வருகிறார்கள். 

அன்றியும், திராவிடர் கழகத்தார் திராவிட நாட்டில் உள்ள எந்த வகுப்பார் மீதும் துவேஷம் உண்டாகும்படியோ, பலாத்காரத்துக்கு யாரையாவது ஏவிவிடும் படியாகவோ பிரசாரம் செய்வதும் இல்லை. இவைகளுக்கு ஆதாரம் சர்க்கார் சி.அய்.டி. ரிப்போர்ட்டுகளே சாட்சி கூறும். மற்றும் இன்று இந்துஸ்தானத்தில் நடைபெறும் சுயராஜ்ய சர்க்காரைக் கவிழ்க்கவோ, பலாத்கார முறையில் மாற்றவோ திராவிடர் கழகம் ஒரு சிறிதும் முயலவோ, கருதவோ இல்லை.

பலாத்காரம் இல்லாமலும், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் இல்லாமலும், உண்மையான விஷயங்களைப் புள்ளி விவரங்களுடனும், அனுபவபூர்வமாகவும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களுக்கு மனமாற்றம் உண்டாக்கித் தம் நியாயமான திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயன்று வருகிறார்கள்.

இந்தப்படியான முயற்சியையும் பிரசாரத் தையும் பெரும்பாலும் பிரிட்டிஷ் அரசாட்சி அனுமதித்துப் பரிகாரம் செய்து வந்திருப்பதை இன்றைய அரசாங்கமும், மற்றும் எந்த வகுப்பாரும், எந்தக் காங்கிரசுக்காரரும் மறுக்கவே முடியாது. அப்படியிருக்க இன்றைய சுயராஜ்ய - சுதந்திர - ஜனநாயக ஆட்சி என்று பறைசாற்றப்படுகிற இந்துஸ்தான் அரசாங்கத்தில் இதை அனுமதிக்க முடியாதென்றாவது, யாரும் பிரசாரம் செய்யக்கூடாதென்றாவது சொல்ல முன்வந்தால் அதைச் சுதந்திர - ஜனநாயகத் தன்மை கொண்டது என்று யார்தான் சொல்ல முடியும்?

திராவிடர் கழகத்தார் திராவிட நாட்டில் திராவிட மக்களுக்கு வடநாட்டு ஆரியமொழியாகிய இந்திமொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கக்கூடாது என்றால், அதைச் சர்க்கார், இது திராவிடப் பொது மக்கள் கருத்தா, அல்லது யாரோ ஒரு சிலருடைய சுயநலக்கருத்தா, அல்லது விஷமத்தனமாகத் தொல்லை கொடுக்கும் கருத்தா என்பதாகப் பரிசீலனை செய்துபார்த்து, அதன் மீது வேண்டுமானால் பிரசாரக்காரரைக் குறை கூறலாம். அந்தப்படி பரிசீலனை செய்யாமல், “சர்க்கார் திட்டத்தை யாரும் எதிர்க்கக்கூடாது, சர்க்கார் சொன்னபடிதான் மக்கள் நடக்க வேண்டும் தடை சொல்லக்கூடாது” என்றால், சர்க்கார் மீது மக்களுக்கு அதிருப்தியும் வெறுப்பும் ஏற்படாமல் எப்படி இருக்கமுடியும்?

இந்தி சர்க்காரால் தமிழ்நாட்டில் கட்டாயமாய்ப் புகுத்தப்பட்டிருப்பதற்குச் சர்க்கார் சார்பில் கல்வி மந்திரியார் இப்போது எவ்விதச் சமாதானமும் சொல்ல வருவதில்லை. ஆனால், அவருக்குப் பதிலாக முதல் மந்திரியார் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சமாதானம் கூற முன் வருகிறார். 

அப்படிச் சொல்லும் சமாதானங்களில், தலை சிறந்த சமாதானம் என்னவென்றால் “இந்தி தேசிய மொழியாக ஆக்கப்படப் போவதால், யாவரும் இந்தி படிக்கவேண்டும்” என்பதாகும். அப்படியானால் ஒரு மொழி தேசிய மொழியாக ஆக்கப்பட வேண்டுமென்றால், அந்நாட்டு மக்களின் சம்மதம் அதற்குத் தேவையில்லையா? 

இந்தியை தேசிய மொழியாகத் தமிழ் நாட்டில் ஆக்கக் கூடாது என்கின்ற எதிர்ப்பு 1938 லேயே ஏற்பட்டு, தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது மறுபடியும் அப் பிரச்சினை கிளம்பவேண்டிய அவசியம் ஏற்படவே இல்லை. அப்படி இருக்க, இப்போது சிறு குழந்தைகள் இந்தியைக் கட்டாயமாகப் படித்து ஆகவேண்டும் என்று செய்யப்பட்டிருப்பது எப்படி ஜனநாயகமாகும்?

இந்தி தேசிய மொழி ஆவதை திராவிட மக்கள் தடுப்பதற்குக் காரணம், இந்துஸ்தான் ஆட்சியிலிருந்து திராவிட நாடு பிரியவேண்டுமென்கின்ற போராட்டம் இருக்கும்போது, அப்போராட்டக்காரர்கள் இந்தியை தேசிய மொழியாக எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? திராவிட நாட்டைப் பிரித்துக் கேட்பது குற்றமான காரியம் என்று சட்டம் செய்துகொண்டு, பிறகு வேண்டுமானால் அப்பிரச்சினையைச் சட்டவிரோதமாக ஆக்கிவிட்டு, அப்புறம் வேண்டுமானால் இந்தியை நுழைக்கலாம். 

அதுவும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அந்தப் பிரச்சினை தீராமல் கட்டாயப் படுத்துவது, ஒரு நாளும் பொதுமக்களால் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. அடுத்தபடியாக “திராவிட நாட்டைத் தனியாகப் பிரிப்பதற்குத் திராவிட நாடு தகுதியற்றது” என்பதாக முதன் மந்திரியார் கூறுகிறார்.

திராவிட நாடு 5 கோடி மக்களைக் கொண்டதென்றும், பாகிஸ்தான் நாட்டுக்கு இருக்கிற தகுதியைவிடப் பலமடங்கு அதிக வசதியும் தகுதியும் உடையது என்றும் பலதடவை எடுத்துக் காட்டியிருக்கிறோம். அடுத்தபடியாகத் “திராவிட நாடு கடல் சூழ்ந்தநாடு. ஆதலால் அதற்குக் கடற்படை வேண்டாமா?” என்கிறார் முதன் மந்திரியார். இதற்கு நாம் “எதிர்கால  ஒப்பந்த முறைப்படி திராவிட நாட்டில் கடற்படை வைக்கவேண்டிய அவசியமே இருக்காது” என்னலாம். 

அப்படி அவசியம் ஏற்பட்டாலும் சுமார் 1500 மைல் கடற்கரையுள்ள திராவிட நாட்டுக்குப் பாதுகாப்புக் கடற்படையை ஏற்படுத்திக்கொள்ள திராவிடர்களுக்கு ஏன் முடியாமல் போகும்? திராவிட நாடு மற்றத் துறைகளிலும் தனித்திருக்க முடியாத அளவுக்கு என்ன குறைக்கு ஆளாக இருக்கிறது? 

கடல் வியாபாரம், உள்நாட்டு வியாபாரம், யந்திர சாதனம், விவசாயம், விளைபொருள், ஆறு, மலை, தண்ணீர்த் தேக்கம், பொருளாதாரம், தொழில் திறம் முதலாகிய எதில் திராவிடநாடு, மற்ற எந்த நாட்டிற்காகிலும் குறைவானதென்று, யாராலாவது சொல்ல முடியுமா? திராவிட நாட்டுக்கு தனிச் சுதந்திரம் பெறத் தகுதி இல்லை என்று முதல் மந்திரியார் எந்த அனுபவத்தின் மீது, ஆராய்ச்சியின் மீது சொல்லுகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.

திராவிடர் குழந்தைகளுக்கு இந்தி எளிதாகப் படிக்க முடியுமா? திராவிடக் குழந்தைகள் 100க்கு 90 குழந்தைகள் தமிழ்படிக்க இன்றைக்கும் சென்னை அரசாங்கத்தில் எவ்வித வசதியுமே செய்யப் படவில்லை. வருஷம் 1க்குப் பத்துக்கோடி ரூபாய் கல்விக்கு என்று நமது மாகாணத்தில் திராவிட மக்கள் பணம் செலவாகி வந்ததும், வரி கொடுப்போரின் பிள்ளைகள் எல்லாம் படிக்க வசதி செய்யாமல் ஒரு சில பிள்ளைகளுக்குகே கல்வி வசதி செய்து கொடுத்துவிட்டு அந்தப் பிள்ளைகளையும் வடமொழியை கட்டாயமாகப் படி என்றால், இந்தக் கல்வி முறை ஜனநாயகத்துக்கு ஏற்றதா? அல்லது ஒரு வகுப்பு நாயகத்துக்கு மாத்திரம் ஏற்றதா? என்பதை முதல் மந்திரியார் நடு நிலைமையிலிருந்து சிந்தித்தால் விளங்காமல் போகாது.

இவை தவிர, இந்தியின் அவசியத்துக்கு மந்திரியார் மற்றொரு காரணமும் கூறுகிறார். அதாவது திராவிட மக்கள் திராவிட நாட்டில் உத்தியோகம் பெற வேண்டுமானால் இந்தியைப் படித்தே ஆகவேண்டும். ஆதலால் இந்தியை கட்டாயமாகப் படிக்க வேண்டும் வேண்டுமென்கிறார்.

இது வெள்ளையர் காலத்தில் திராவிடர்களுக்கு உத்தியோகத் தகுதி இல்லாமல் செய்வதற்கு, “உத்தியோகத்துக்கு இங்கிலீஷ் படிக்க வேண்டும்” என்று காங்கிரசின் மூலம் பார்ப்பனர் செய்த சூழ்ச்சி போலவே, இப்போதும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் வசதியும், வாய்ப்பும் உள்ள இந்தியைப் படித்தாக வேண்டுமென்று செய்யும் சூழ்ச்சியே தவிர, மற்றப்படி உத்தியோகத்திற்கும், இந்திக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறோம். தமிழ் நாட்டில் தமிழர்கள் உத்தியோகம் பார்க்க, இந்தி படிக்க வேண்டுமென்பது தமிழனுக்கு இழிவும் மானக்கேடும் ஆன காரியமல்லவா? என்று கேட்கிறோம். இந்திமொழியில் உத்தியோகக் காரியத்துக்கு வேண்டிய அறிவோ, அனுபவமோ பெற என்ன இருக்கிறது? என்று  கேட்கிறோம்.

இன்றைய நிலையில் இன்னும் 20 ஆண்டுகளுக்குச் சட்டம், வைத்தியம், இஞ்சினீயரிங், விஞ்ஞானம் முதலிய காரியங்களுக்கு இங்கிலீஷ் இல்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியாது என்பதாக அந்தந்தத் துறை நிபுணர்கள் கூறிவிட்டார்கள். ஏனெனில், இந்த நாட்டில் இந்த தத்துவங்கள் ஆங்கில தத்துவத்தை அடிப்படையாகொண்டு நடந்துவந்து அதே பழக்கத்தையும், உணர்ச்சியையும், அநுபவத்தையும் உண்டாக்கிவிட்டதால் அதைப் புறக்கணிக்கவோ, அதற்குப் பதிலாக இந்தியை ஏற்கவோ முடியாத நிலையில் இருக்கிறோம். அன்றியும் இந்தி மனிதனின் பகுத்தறிவைப் பாழாக்கி மந்தத் தன்மையைப் புகுத்திவிடுவதோடு காட்டு மிராண்டிக் காலத்துக்குச் செல்லவே வழிகாட்டும்.

ஆங்கிலம் படித்த ஒரு தமிழ் நாட்டானுக்கு இருக்கும் அறிவில், திறமையில் 4இல் ஒரு பங்கு உள்ள மனிதனை வடநாட்டில் காண்பது அரிது. இதை கவர்னர் ஜெனரல் சி.ஆர். அவர்களே சொல்லி இருக்கிறார். எனவே, தமிழ் நாட்டுக்கு அல்லது திராவிடத்துக்கு ஆங்கிலமும், பிரதேச மொழியுமே போதுமானவையாகும். தேவைப்பட்டால் தேவைப்பட்டவர்கள் தேவையான காரியங்களுக்குத் தனியாகக் கற்றுக்கொள்ளுவதை நாம் தடுக்கவில்லை.

நமது வரியில் வருஷம் 1க்கு 10 கோடி ரூபாய் ஒரு பயனற்ற அன்னிய மொழிக்கு எதற்காகச் செலவு செய்ய வேண்டும்? எஸ்.எஸ்.எல்.சி.வகுப்பிலிருந்து துவக்குவதில் நமக்கு ஆட்சேபணையே கிடையாது. நம் பிள்ளைகளில் 100க்கு 75பேர் எஸ்.எஸ்.எல்.சி.க்கு முன்பதாகவே பள்ளியை விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு வெளிமாகாணத் தொடர்பு தேவையே இருக்காது. 

குறைந்தது உத்தியோகத்துக்கு எஸ்.எஸ்.எல்.சி.யாவது தேவையிருக்கும் ஆதலால் அந்த வகுப்புக்கு வைத்துக்கொள்வதுதான், உத்தியோகத்தைக் கருதி என்றாலும் அறிவுடைமையாகும். தவிர, இந்தி எதிர்ப்புப் பிரசாரத்தின் மூலம் வகுப்புத்துவேஷம் வளர்க்கப்படுகிறது என்கிற அவருடைய பேச்சும் எந்த வகையில் நியாயமானது? வகுப்புத் துவேஷம், வருணாசிரம தர்மம், ஜாதி உயர்வு தாழ்வு, மூட நம்பிக்கை முதலிய பிற்போக்கான நிலையை ஸ்திரப்படுத்தி வைக்கும் இந்தி மொழியை -  சமஸ்கிருதத்தின் மறு பதிப்பைப் பார்ப்பனர்கள் எப்படியாவது திராவிட நாட்டில் புகுத்திவிட வேண்டுமென்று திட்டமிட்டு, அதற்கு ஆன வேலைகளைச் செய்து கொண்டுவருவது வகுப்புத் துவேஷமா? வகுப்புத் துவேஷம் முதலிய பிற்போக்கான நிலையை, நிலைக்கவிடக்கூடாது - அதற்கு ஆதாரமான இந்தி மொழியை இந்த நாட்டில் கட்டாயமாகப் புகுத்தக்கூடாது என்று இந்த நாட்டு மக்கள் கூறுவது வகுப்புத் துவேஷமா? என்பதையும் மந்திரியார் நடுநிலைமையோடு நின்று பார்த்தால் விளங்காமல் போகாது.

மேலும், வகுப்புத் துவேஷம் என்பதை இந்த நாட்டில் யார் புகுத்தியது? யார் கையாண்டு வருவது? அதனால் யாருக்கு லாபம் வந்து கொண்டிருக்கிறது? என்பவைகளையெல்லாம் அனுபவசாலியான முதல் மந்திரியார் மறந்து விட்டு; எதிர்ப்புக்காரர்களால் வகுப்புத் துவேஷம் வளர்க்கப்படுகிறது என்று கூறினால் அது எப்படிப் பொருத்தமும் நாணயமுமான பேச்சாக இருக்கமுடியும்? இந்த வகுப்புத்துவேஷ வளர்ச்சியைப் பற்றி, இவரின் சகமந்திரியான  நிதிமந்திரியார் இந்த மாதம் 16ஆம் தேதிதான் சட்ட சபையில் தன்னுடைய தீர்ப்பு இது என்று கீழ்க்கண்டபடி கூறியிருக்கிறார்.

“வகுப்புத்துவேஷம் உண்டாக்கப் போவது வகுப்புத் துவேஷத்தையே தான். இது துர்மார்க்கமானதாகும். இந்த வகுப்புத் துவேஷத்துக்கு யார் பொறுப்பு? பிராமணரல்லாதவரா? பிராமணர்களா? என்று கேட்கலாம். என்னுடைய தீர்ப்பு இந்த வகுப்புத் துவேஷத்தை உண்டாக்கியவர்கள் பிராமணர்கள்தான்.”

இந்தப்படி, வகுப்பு துவேஷத்துக்குக் காரணஸ்தர்களாயிருப்பவர்கள் யார்? என்பதை மற்றொரு மந்திரியாரே வற்புறுத்திக் கூறுகிறபோது, இந்தி எதிர்ப்புக்காரர்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நியாயமானதா? பொருந்துமா? உண்மையா? என்று அவரையே யோசித்துப் பார்க்கும்படி விட்டுவிடுகிறோம். உச்சிக் குடுமியும், பூணூலும், தனிச்சலுகை கேட்பதுமே வகுப்புத் துவேஷத்துக்கு மாறாத சின்னங்களாக இருக்கும்போது, நம்மீது முதல் மந்திரியார் இப்படிக் கண்ணை மூடிக் கொண்டு பழி தூற்றுவாரென்றால் அது யாருடைய கோளாறு? முதல் மந்திரியார் கூற வேண்டிய இந்தத் தீர்ப்பை நிதி மந்திரியார் வாயிலிருந்து கேட்கும் போது - முதல் மந்திரியார் மற்றொரு புறம் இதற்கு மாறுபாடாகப் பேசுவதைக் கேட்கும் போது, பரிதாபத்துக்குரிய அவர் நிலைமையைக் கண்டு நாம் உண்மையிலேயே வெட்கப்படுகிறோம்.

 'குடிஅரசு' - தலையங்கம் - 26.03.1949



No comments:

Post a Comment