தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!

👉  2021 மே 7 ஆம் தேதிமுதல் இதுவரை ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் மேலான புதிய திட்டங்கள்

👉   கடந்த ஆட்சியில் நிதிப்பற்றாக்குறை 4.61 விழுக்காடு; கடந்த 2 ஆண்டுகளில் 3 விழுக்காடாக குறைப்பு!

👉   பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, சமூகநீதி, பெண்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விளிம்பு நிலை மக்களுக்கு  சமூக, பொருளாதார வளர்ச்சி, தொழில்துறையில் முதலீடுகள் ஈர்ப்பு, அரசுப் பணியாளர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 அளிப்பு

சென்னை, மார்ச் 20 குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் அளிப்பு உள்பட அடுக்கடுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய 2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (20.3.2023) தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் அளிக்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

சமூகநீதி - பெண்களுக்குச் சம உரிமை

சமூகநீதி, பெண்களுக்கு சமஉரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய நான்கு அடிப்படைத் தத்துவங்களை கொண்டு, நம் நாட்டிற்கே ஒரு கலங்கரை விளக்கமாக நமது மாநிலம் திகழ்ந்து வருகிறது.

சுயமரியாதைச் சிந்தனைகள்!

ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே, சமூக மாற்றத்திற்கு வித்திட்ட நீதிக்கட்சியின் அடிச்சுவடிகளைப் பின்பற்றி, நாம் இன்றும் நடந்து வருவதே இதற்கு காரணமாகும். முப்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட திராவிட இயக்கம், சுயமரியாதைச் சிந்தனையை தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் அங்கமாக பதித்துள்ளது. இந்த சுயமரியாதைச் சிந்தனைதான், மாநில சுயாட்சி, மொழி உரிமைகள், உண்மையான கூட்டாட்சி ஆகிய மாநில உரிமைக் கொள்கைகளுக்குக் குரல் கொடுக்கும் ஒரு முன் னோடியாக நம்மைத் திகழச்செய்துள்ளது. இச்சிந்தனை வழிவந்த நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரான இந்தக் கொள்கைகளின் அரணாகவும் உயிர் மூச்சாகவும் திகழ்கிறார்.

திட்டத்தின் நோக்கங்கள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொடர் வழி காட்டுதலுக்கும் கனிவான ஆதரவிற்கும் முதற்கண் நன்றி கூறுகிறேன். அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், அவர் தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஊக்கத்தின் காரணமாகவே நிர்வாகத்தில் சிறப்பான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மக்களின் நலன் காத்திட இயன்றது. இந்த அடிப்படையில், கடந்த வரவு-செலவுத் திட்டத்தில், கீழ்வரும் பொருண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

(1) பொருளாதார வளர்ச்சியை உ யர்த்துதல்;

(2) சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்;

(3) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உரு வாக்குதல்;

(4) கல்வியின் மூலம் பெண்களின் வாழ்வாதார மேம்பாடு;

(5) விளிம்பு நிலை மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி;

(6) அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலமாக வறுமை ஒழிப்பு:

(7) தரவுகள் அடிப்படையிலான நிருவாகத்தின் மூலம் அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாகச் சென் றடைவதை உறுதி செய்தல்;

(8) சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதி செய்தல்;

இவை அனைத்திலும் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கண்டுள்ளோம்.

வரலாறு காணாத பணவீக்கம்

இந்த சாதனைகளை நாம் கொண்டாடும் அதேவேளை யில், வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலகப் பொருளாதாரத்திலும் நிதிச் சந்தைகளிலும் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற பல சவால்களையும் வரும் நிதியாண்டில் நாம் எதிர்நோக்கியுள்ளோம். தேசிய அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நம் மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிகப் பொருளாதார வளர்ச்சியை எய்தியுள்ளதோடு, வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறையையும் ஒன்றிய அர சைவிடக் கணிசமாகக் குறைத்துள்ளோம். இது நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமைப் பண்பிற்கும் திறன்மிக்க நிதிமேலாண்மைக்கும் சான்றாகும்.

வருவாய்ப் பற்றாக்குறை

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகச் செலவுள்ள பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போதிலும், முன்னெப்போதுமில்லாத அளவில் பல கடினமான சீர் திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவியேற்கும் போது சுமார் 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக் குறையை, நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளோம். இது, கோவிட் பெருந்தொற்றிற்கு முந்தைய 2019-2020 ஆம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டாலும், ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டுமென்ற நிதிப் பொறுப்புடைமைச் சட்டத்தின் இலக்கை எட்டிட, அரசின் சமூக நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சி முன்னுரி மைகளுக்கும் எவ்வித  பாதிப்புமின்றி, வரும் ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைக்கப்படும்.தமிழ் வளர்ச்சி, பண்பாடு

தாய் தமிழைக் காக்க, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் அய்ந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

இலங்கைத் தமிழர் நலன்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி செய்வதற்கான ஒப்புதலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிடம் பெற்று, மூன்று கப்பல்களில், 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் 102 டன் மருந்துப் பொருட்கள் ஆகியன, 197 கோடி ரூபாய் செலவில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையிலும் அவர்களுக்கு, பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய வீடுகள் கட்டப்படும் என் இந்த அரசு அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகளைக் கட்ட, வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

மேனாள் படை வீரர்கள் நலன்

தம் இன்னுயிர் ஈந்து நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் படை வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில், போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளின் போது உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 இலட்சம் ரூபாயிலிருந்து, இருமடங்காக உயர்த்தி 40 இலட்சம் ரூபாயாக வழங்கப்படும். மேலும், வீரதீரச் செயல்களுக்கான உயர் விருதுகளைப் பெறும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினருக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத்தொகையும் நான்கு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு

தரமான கல்வியும், மருத்துவ வசதிகளும் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடச் செய்வதே இந்த அரசின் அடிப்படை நோக்கம். இதனைக் கருத்தில் கொண்டே, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற பல முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு, தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு பணிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த அரசின் முன்னோடித் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில், தொற்றா நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, குணப் படுத்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழி லாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்க உள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 இலட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.

கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1,000 படுக்கைவசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை' இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும். 1,020 கோடி ரூபாய் செலவில் மதுரை, கோயம்புத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி வளா கங்களில் கட்டப்பட்டு வரும் புதிய உயர்மருத்துவக் கட்ட டங்களும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

பள்ளிக் கல்வி

இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் கட்டிடவும் 7,000 கோடி ரூபாய் செலவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை’ அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், 2,000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

'எண்ணும் எழுத்தும் திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண் கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் நான்காம் அய்ந்தாம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்காக 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை: வரவு - செலவு

வரும் நிதியாண்டில் வருவாய் ரூ.2.70 லட்சம் கோடி.

வரும் நிதி ஆண்டில் மொத்த செலவு ரூ. 3.08 லட்சம் கோடி

தமிழ்நாட்டுக்கு வரும்

மொத்த வருவாயில்,

சொந்த வரி வருவாய் 44%

பொது கடன் 33%, மத்திய வரிகளின் பங்கு 10%

ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் மானியங்கள் 7%

சொந்த வரி அல்லாத வருவாய் 5%

கடன்களின் வசூல் 1%

தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 24

தமிழக அரசின் செலவுகளில்

உதவித் தொகையும், மானியங்களும் - 30%

வட்டி செலுத்துதல் - 13%

மூலதன செலவு - 11%

கடன் வழங்குதல் - 3%

கடன்களை திருப்பி செலுத்துதல் - 11%

சம்பளங்கள் - 19%

ஓய்வூதியம் - 9%

பராமரிப்பு செலவுகள் - 4%

பன்னாட்டு புத்கக் கண்காட்சி!

அறிவைப் பரவலாக்கிக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சமூக நீதித் தத்துவம் முழுமை அடைகிறது. அந்த அடிப்படையில் தலைநகர் சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் அய்ந்து இலக்கியத் திரு விழாக்களும் வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்ப மிடப்பட்டுள்ளன. இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

பொது வாழ்வில் அனைத்துத் தளங்களிலும் சமூக நீதியையும் சமத்துவத்தையும் சமஉரிமையையும் நிலை நாட்டிட கல்வி நிலையங்களின் பங்கு மிகவும் இன்றிய மையாதது. இதன் அடிப்படையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு பள்ளிகள், உயர்தர ஆய்வகங்கள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டங்களின் பயன்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டியது அவசியமாகும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 19.08.2021 மற்றும் 12.04.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறை மூலம் நடத்தவும், பராமரிக்கவும், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

தந்தைபெரியார் பெயரில் ஈரோட்டில் வன விலங்கு சரணாலயம்

நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், தமிழ்நாட்டில் 18 ஆவது வனவிலங்கு சரணாலயமாக ஈரோட்டில் தந்தைபெரியார் பெயரில் அமைக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மதுரையில் மாபெரும் நூலகம்!

சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள். இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், இந்த நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான நூலகச் சூழல், போட்டித் தேர்வு மாணவர் களுக்கான இணையவசதியுடன் கூடிய சிறப்புப் பிரிவு, பார்வைத் திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள், தென்தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் கலை அரங்கம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படைப்புகள், பேச்சுகள் இடம் பெறும் வகையில் எழிலார்ந்த கூடம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்மாபெரும் நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

முதற்கட்டமாக, இந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 இலட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும். தென்தமிழ் நாட்டின் அறிவாலயமாகத் திகழப்போகும் இந்நூலகம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில், கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என்ற பெயரைத் தாங்கி, வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்.

உயர்கல்வியும் - திறன்மேம்பாடும்

மனிதவளமே மாநிலத்தின் மாபெரும் செல்வம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, அதனை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள, திறன்மிக்க பணியாளர்களே பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒரு முக்கியக் காரணி என்பதை நன்கு அறிந்துள்ளோம். ஆகவே, மின்னல் வேகத்தில் மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உரு வாக்குவதற்கு, 2,877 கோடி ரூபாய் செலவில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மய்யங் களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டிலேயே, இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதன் அடுத்தகட்டமாக, தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்திற்கு ஏற்ப அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மய்யங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும்.

இத்திட்டத்தில், 54 அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு மய்யங்களாக தரம் உயர்த்தப்படும்.

தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மய்யம்

தொழிற் பயிற்சி  நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணி யாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன், 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மய்யம்' (TN-WISH) அமைக்கப்படும். இந்த மய்யத்தில், இயந்திர மின்னணுவியல் (Mechatronics), இணைய வழிச் செயல்பாடு (Internet of things),  அதிநவீன வாகனத் தொழில்நுட்பம் Advanced Automobile Technology), துல் லியப் பொறியியல் (Precision Engineering) மற்றும் உயர்தர வெல்டிங் (Advanced Welding) போன்ற  தொழில்நுட்பங் களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங் களாகப் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலை களிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மய்யம் நிறுவப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய குடிமைப் பணித்  தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க, குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும். ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயா ராகுவதற்காக மாதத்திற்கு7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 2023-2024 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர்,

பழங்குடியினர்நலன்

சமூக நீதியையும்,  சமத்துவம் நோக்கிய வளர்ச்சி யையும் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ள இந்த அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகின்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும், மதுரை, கோயம்புத்தூர், திருச் சிராப்பள்ளி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலன்

மாற்றுத் திறனாளிகள் என்ற பெயரையே முத்தமிழறிஞர் கலைஞர்தான் சூட்டினார் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இந்தத் துறை மிக முக்கியமானது என்பதால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, பணிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். உலக வங்கி நிதியுதவியுடன் 1,763 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் (ஸிமிநிபிஜிஷி றிக்ஷீஷீழீமீநீt) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து, தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம், 2023-2024 ஆம் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீட்டுச் சான்றளித்தல், ஆரம்ப நிலை சிகிச்சை போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் அமைக் கப்படும். மேலும், வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களில் சலுகைகளைப் பெற உதவுவதற்காகவும் தன்னார்வலர்களைக் கொண்ட 150 அண்மை மய்யங்கள் உருவாக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 

சீர்மரபினர் நலன்

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தரமான உணவினை வழங்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளின் செயல்பாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 36.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது விடுதிகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப பதினைந்து பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப் பட்டுள்ளன.

காலை உணவுத் திட்டம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,937 பள்ளி களில் ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் 1,48,315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முதலமைச் சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 தொடக்கப் பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதில், 624 பள்ளிகளில் 10 சதவீதமும், 462 பள்ளிகளில் 20 சதவீதமும்,193 பள்ளிகளில் 30 சதவீதமும் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 'பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்' என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்புவரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறை

தமிழ்நாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழில் துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை  3,89,651 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய  221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இவற்றின் மூலம்,  2,70,020 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும்.

சிறுபான்மையினர் நலன்

பள்ளிவாசல்களையும் தர்காக்களையும் பழுது பார்ப்பதற்கும் சீரமைப்பதற்கும் வழங்கப்படும் ஆண்டு மானியம் நடப்பு ஆண்டில் ஆறு கோடி ரூபாயிலிருந்து  10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற  நாகூர் தர்காவை சீரமைக்க இவ்வாண்டில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, தேவாலயங்களைப் பழுதுபார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் வழங்கப்படும் மானியமும், ஆறு கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப் படும்.  தொன்மையான மதுரை புனித ஜார்ஜ் தேவால யம், தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் தேவாலயம், சேலம் கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படும்.

அரசுப் பணியாளர் நலன்

அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது.  பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம்  40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு 

மாதம் ரூ.1000

சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை - சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. கல்வியில், நிர்வாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய  புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர் களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான 

இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத் தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் - இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஏப்.21ஆம் தேதி வரை நடைபெறும்

சட்டப் பேரவைத் தலைவர் அறிவிப்பு

சென்னை,மார்ச் 20- இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சிக்கு பின்னர் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது. 

இறுதியில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21ஆம் தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 23,24,27,28ஆம் தேதிகளில் நடைபெறும். காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்.

No comments:

Post a Comment