"கவுரவ டாக்டர்களும் '420' மலைகளும்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

"கவுரவ டாக்டர்களும் '420' மலைகளும்"

 "கவுரவ டாக்டர்களும் '420' மலைகளும்"

நாட்டில் ஏமாறுகிறவர்கள், - பேராசை காரண மாக அதிகமாகிற படியால், ஏமாற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் 'ஜெட்' வேகத்தில் அதிகமாகிக் கொண்டே வருவது வேதனையான நிலையாகும்!

மனிதர்கள் தங்களது பகுத்தறிவை நன்கு பயன்படுத்தி தற்காத்துத் தற்பேணிக் கொள்ளலே இதைத் தவிர்க்கத்தக்கதோர் வழியாகும்!

நாளும் 'சைபர்  கிரைம்'கள்  என்பதில் எத்தனை எத்தனை புதுப்புது ஏமாற்றுதல்களும், ஏமாறுதல்களும்.

நமக்கு மிக நன்றாக அறிமுகமானவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல், 'நண்பரே நான் லண்டனில் ஒரு மாநாட்டிற்கு வந்தபோது எனது பர்ஸ், பாஸ் போர்ட், கிரெடிட்டு கார்டு எல்லாம் திருடப்பட்டு பறிபோய் விட்டன. எனக்கு அவசரமாக ஊர் திரும்ப 1000 டாலர் தேவை. உடனே அனுப்பி என்னை ஊருக்குத் திரும்ப உதவிடுங்கள். ஊருக்குச் சென்றவுடன் உடனே அனுப்பி விடுகிறேன்" இப்படி ஓர் அதிர்ச்சியான தகவல் பரிமாற்றம்!

யாருடைய பர்சும், பாஸ்போர்ட்டும் காணாமற் போனதாக மின்னஞ்சல் செய்தியில் உள்ளதோ அவரே - எதிர்பாராத வகையில் எனது அருகில் அப்போதுதான் உரையாடிபடி அமர்ந்திருக்கிறார்!

இது ஒரு '420' வேலை என்பது 'சட்'டென்று புரிந்து விட்டது!

இதுபோல மோசடி மன்னர்களின் கைவரிசை நாளும் செழிப்புற்று ஓங்குகிறது; குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் - தங்களது "மாமியார் வீட்டிற்கு" விருந்தாளிகளாகச் சென்று, விடுதலை யாகி வரும்போது ஏதோ சாதனை வீரர்களைப் போல சகல வகை வரவேற்பு பந்தாக்களுடன் வெளியே வந்து, மீண்டும் தங்களது '420' வேலையை புதுத்துறையில் செய்து, தீவிர விளம்பரத்தை ஊடகங்களின் வெளிச்சத்துடன் பெறுகிறார்கள்!

என்ன வினோதம் பாரு! எவ்வளவு ஜோரு பாரு!! 

புகழ் வாய்ந்த அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டத்தை சில பிரபலங்களுக்கும், நடிகர்களுக்கும், பிரபலமாகத் துடிக்கும் பட்ட முதலீடு தேடுவோருக்கும் தந்து அண்ணா பல்கலைக் கழகப் பெயரில் சிலர் திட்டமிட்டு "டாக்டர் வியாபாரத்தை" செழிப்புடன் நடத்தியுள்ளார்கள்!

இந்த லட்சணத்தில் இதற்குத் தலைமை தாங்கியவர்  ஓர் 'ஆஸ்தான' ஓய்வு பெற்ற நீதிபதி; அவர் பாவம், எந்த நிகழ்ச்சிக்கு யார் அழைத்தாலும் சென்று விடுவார்  - அவரையும் ஏமாற்றினார்கள் ஸ்ரீமான்களான "420கள்" -

டாக்டர் பட்டமெல்லாம் அல்லோல கல் லோலப்பட்ட அமர்க்கள வழங்கு விழா!

சில நடிகர்களும் இதனால் பாதிக்கப்பட்டவர் களானார்கள். அவர்களிடமும் டாக்டர் பட்டங்களை "நல்ல விலைக்கு" அதனை விற்று புதுவகை பிசினஸ் - முதலீடு இல்லாமலேயே செய்துள்ளனர் கூறுகெட்ட அந்த "420".

பிறகுதான் கண்டுபிடித்தனர் - எல்லாம் போலிகள் - ஏமாற்று வித்தைகள் என்று?

காவல்துறை வழக்குகள்; அண்ணா பல்கலைக் கழகப் பொறுப்பாளர்கள் இதில் எப்படி இவ்வளவு மெத்தனமாக இருந்து -  அழைப்பிதழ் போட்டு டுபாக்கூர் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது என்பதை எவ்வாறு கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் - என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்!

இதிலிருந்து பலரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சில பேருக்கு இம்மாதிரி 'பட்டதாரிகளாகிட' 'டாக்டர்களாகிட' பேராசை!

முன்பு 200, 300 அமெரிக்க டாலர்களைச் செலவழித்தாலே போதும்!  அமெரிக்காவில் இதற்கென்று சில மலிவு விலை 'லெட்டர் பேட்' போகஸ் - பல்கலைக் கழகங்கள் உண்டு. அதில் வாங்கி - அதை பன்மடங்கு விளம்பரப்படுத்தி அக மகிழ்ந்து அனைத்துலகினரின் கண்களிலும் மண்ணைப் போட்டு தற்காலிக மகிழ்ச்சி அடைவார்கள்!

அட அறிவுக் கொழுந்துகளா, இந்தப்பட்டம் பதவிகள் மோசடி முத்திரையுடன் உலா வருவது ஒரு கேவலமான ஈனப் பிழைப்பு என்ற புத்தி வர வேண்டாமா!

பல பல்கலைக் கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் ஓர் அரசியல் தூண்டிலாகி - பெரிய மீன்கள் சிக்கிட ஒரு வாய்ப்பாக இருக்கும்போது - அதற்கே மதிப்பில்லாதபோது, இந்த '420' ஆசாமிகள் வேலை எதற்கய்யா? 

'மாமியார் வீட்டு' மருமகனாகப் பட்டம் வாங்குவோர் சிந்திக்கட்டும்.

No comments:

Post a Comment