செய்திச் சிதறல்கள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

செய்திச் சிதறல்கள்....

பெரியகோட்டையில் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் நாளில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

பெரியகோட்டை, மார்ச் 10- மகளிர் தினத்தில் கிளை நூலகம் பெரிய கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டி நடைபெற்றது. அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாசகர் வட்டத்தின் தலைவர்  மா.சந்திரன் கிளை நூலகர் வீ.சூரசங்கரன், எழுத்தாளர் குரு.மயில்வாகனன் மற்றும் பெரிய கோட்டை கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு விளையாட்டு, பேச்சு, ஓவியப் போட்டி: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தகவல்

சென்னை, மார்ச் 10-  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வீடு ஒதுக்கீட்டு ஆணைகள், விற்பனை பத்திரங்கள் பெண்களின் பெயரில் வழங்கப்பட்டு அவர்களை ஆற்றல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகத்தில் பாலின பாகுபாடுகளை களையவும், பெண்களை ஆற்றல்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை  உறுதிசெய்யவும்  தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும், வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் பெண்களின் திறன் வளர்க்கும் விதமாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி, கணினி பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் வகையில் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பன்னாட்டு மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்து திட்டப்பகுதிகளிலும் பெண்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள், பேச்சு போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் மகளிரின் தனித் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு!...

சென்னை, மார்ச் 10 கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று (10.3.2023) ஆய்வு செய்தார்.

விழாக் காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.

சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019ஆஆம் தேதி பணி துவங்கப்பட்ட நிலையில், 95 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், விரைவில் திறக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதிக் கட்டப் பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உயர்நீதிமன்ற கிளையில் 

33,000 வழக்குகள் தீர்வு

மதுரை, மார்ச் 10- உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்வாக நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் 2022 டிசம்பர் 5 ஆம் தேதிமுதல் 2023 மார்ச் 3 ஆம் தேதிவரை இருந்தார்.

இக்காலகட்டத்தில் அவரது தலைமையிலான அமர்வு பொது நல வழக்குகள் உட்பட 2804 வழக்குகளில் குறிப்பிடத்தக்க உத்தரவுகளை பிறப்பித்து பைசல் செய்தது. அதே காலகட்டத்தில் இதர நீதிபதிகள் ரிட், சிவில், கிரிமினல் உட்பட 30 ஆயிரத்து 528 வழக்குகளை பைசல் செய்தனர். மொத்தம் 33 ஆயிரத்து 332 வழக்குகள் 3 மாதங்களில் பைசலாகியுள்ளன.

தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு 

ஜெர்மனியில் விருது

பெர்லின், மார்ச் 10- ஜெர்மனி தலைநகர், பெர்லின் பன்னாட்டு சுற்றுலா சந்தையில், பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான, 'பட்வா' பன்னாட்டு பயண விருது, தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்டது.

பெர்லின் பன்னாட்டு சுற்றுலா சந்தையில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா சிறப்புகள், காட்சிப்பதிவு மற்றும் குறும்படங்கள் வாயிலாக விளக்கப்படுகின்றன. ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் ஒளிப்படங்கள் அடங்கிய நூலையும், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டார்.

8.3.2023 அன்று பசிபிக் பகுதி பயண எழுத்தாளர் சங்க விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

இதில், பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான, 'பட்வா' பன்னாட்டு பயண விருது, தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கும்; இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான, 'பட்வா' விருது, அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுலாத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment