பன்னாட்டு மகளிர் உரிமை நாள் சூளுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

பன்னாட்டு மகளிர் உரிமை நாள் சூளுரை

1800 களின் துவக்கத்தில் தனது மானத்தை மறைக்க நங்கேலி தென் இந்தியாவில் மூட்டிய தீயைப் போன்றே  18-ஆம் நூற்றாண்டில் அடிப்படை உரிமைகள் உட்பட பல உரிமைகளும் மறுக்கப்பட்ட அடிமைகளாக இருந்த பெண்களின் நிலை மெல்ல மாறி, 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் கால்பதிக்கத் தொடங்கினர். ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பணியில் கால்பதித்தாலும் அவர்களுக்கான ஊதியத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த பெண்கள் 1910-ஆம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தங்கள் உரிமைகளுக்காகப் பெண்கள் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். 

அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின். பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கிளாரா, பெண்களின் உரிமைகளைப் பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை மகளிர் உரிமைகளை வற்புறுத்தும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கருதினார். அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாளில் மகளிர் உரிமை நாள் எனக் கொண்டாடி வந்தன.  அதற்குப் பின் உலகை திரும்பிப் பார்க்க வைத்த புரட்சி என்றால், 1917-இல் ருசியாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சியாகும். இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ருசிய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது என்பது வரலாறு. இதனையடுத்து 1920-ஆம் ஆண்டு சோவியத் ருசியாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ருசியாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். ருசியப் பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூரும் வகையில் புரட்சி நடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் நாளாகக் கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். க்ரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ஆம் தேதியாக இருந்தது. அதனை அடுத்து உலக மகளிர் உரிமை நாளை ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதியில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ஆம் நாள் உலக மகளிர் உரிமை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்த வரையில் சென்னை மாகாணம் என்று சொல்லப்பட்ட தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள் தான் பெண்ணுரிமைக் களத்தில் தீர்க்கமாக நின்று பாடுபட்டவர்.

1929ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயரியாதை மாகாண மாநாட்டில் தீப்பொறி பறக்கும் பெண்ணுரிமைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் அவரின் இரு கண்கள் என்று சொல்லத்தக்க வண்ணம் பிரச்சாரம் ஒரு பக்கம் - போராட்டக் களங்கள் இன்னாருபுறம்.

அதன் காரணமாகத் தான் 1938 நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் "பெரியார்" என்ற பட்டத்தை மகளிர் சூட்டினர் என்பது பெருமை பூத்த வரலாற்று நிகழ்வாகும்.

காங்கிரசில் இருந்தபோதே தம் வீட்டுப் பெண்களைப் போராட்டக் களத்தில் நிறுத்திய வரும் தந்தை பெரியாரே!

தனக்குப் பின் இயக்கத்தின் தலைமையிடத்துக்குக் பெண்ணைக் கொண்டு வந்தவரும் அவரே! உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் அன்னை மணியம்மையார்!

இந்தக் கால கட்டத்தில் மலர்ந்துமணம் வீசும் 'திராவிட மாடல்' அரசின் நாயகராம் மாண்புமிகு மானமிகு  மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில்  மகளிருக்கான திட்டங்கள்  பூத்துக் குலுங்குகின்றன. 

« நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்

« அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு

« 16.519 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம்.

« ரூ.32.39 கோடியில் 21,598 குழுக்களுக்கு சுழல்நிதி

 « ரூ.1.17.812 கோடியில் மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்

«அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பதவிகளில் 25% கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை

« ரூ.55.43 கோடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 22,164 பெண் குழந்தைகள் பயன்

« குடும்பத் தலைவி பெயரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாடு

மேகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்டுறவு வங்கிக் கடன் ரூ.2.755.99 கோடி தள்ளுபடி.

«  நகைக் கடன் தள்ளுபடி

மேகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகை 2755 கோடி தள்ளுபடி

« முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு

« உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கிய புதுமைப்பெண் திட்டம். (முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தின் காரணமாக சுமார் 3 இலட்சம் கல்லூரி மாணவிகள் பயன டைந்து வருகின்றனர்).

இந்தியாவைப் பொருத்தவரையில் சட்டமன்றங்களிலும், நாடாளு மன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் கிடப்பில் போடப்பட்டு இருப்பது வெட்கக் கேடே! 

இந்தவுரிமையை ஈட்டிடப் பயணிக்க இவ்வாண்டு மகளிர் உரிமை நாளில் உறுதி ஏற்போம்!

No comments:

Post a Comment