அனைவரும் ஒன்றுபட்டு 2024 மக்களவைத் தேர்தலில் மதவாத - சமூகநீதிக்கு எதிரான ஆட்சியை வீழ்த்திடுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

அனைவரும் ஒன்றுபட்டு 2024 மக்களவைத் தேர்தலில் மதவாத - சமூகநீதிக்கு எதிரான ஆட்சியை வீழ்த்திடுக!

*மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய வினாக்களுக்கு விடை எங்கே? எங்கே?

* மவுன சாமியார்களாகப் போனது ஏன்? ஏன்?

* நாட்டில் நடப்பது கார்ப்பரேட்டுகளின் ஆட்சியே!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய வினாக்களுக்கு விடை எங்கே? எங்கே? மவுன சாமியார்களாகப் போனது ஏன்? ஏன்? நாட்டில் நடப்பது கார்ப்பரேட்டுகளின் ஆட்சியே! அனை வரும் ஒன்றுபட்டு 2024 மக்களவைத் தேர்தலில் மதவாத - சமூகநீதிக்கு எதிரான ஆட்சியை வீழ்த் திடுக! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் நாட்டில் பிரதமராக பெரும் அரசு பதவிகள்முதல், பஞ்சாயத்து உறுப்பினர் வரை யார் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பிர மாணம் (Oath) எடுத்துத்தான் பதவியை ஏற்கவேண் டியது கட்டாயமாகும்.

அவர்கள் மட்டுமல்ல; உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக, ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்கள், குடியரசு துணைத் தலைவர்கள் எல் லோரும்கூட பதவியேற்குமுன் பிரமாணம் - உறுதி மொழி ஏற்ற பிறகே அதிகாரம் செய்ய முடியும்.

அதன்பூர்வ பீடிகை என்ற (Preamble) முகப்புரையில் நமது நாட்டு அரசு ஓர் இறையாண்மை மிக்க ‘சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு' (Sovereign, Socialist, Secular, Democratic Republic)  என்ற தத்துவக் கோட்பாட்டினையொட்டியே அமைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!

ஆனால், நடைமுறையில் இந்த அம்சங்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக, அரசமைப்புச் சட்டத்திலிருந்து காணாமற்போய் - புத்தகங்களை ஆரவாரமின்றி செல்லரித்துக் கொண்டு - பக்கங்கள் காணப்பட முடியாத நிலை உள்ளது.

அரசின் பொதுச்சொத்துகள் பெருமுதலாளிகளுக்கு ‘தாரை' வார்க்கப்படுகின்றன!

‘சோஷியலிசம்' என்பதற்கு எதிராக அரசின் பொதுச் சொத்துகள் தனியாருக்கு - கார்ப்பரேட் பெருமுதலாளி களான அதானி, அம்பானி, டாடா, பிர்லாக்களுக்கு விற்பனை அல்லது நீண்ட கால குத்தகை என்ற பெயரால் ‘தாரை' வார்க்கப்படுகின்றன!

அரசமைப்புச் சட்ட முகப்பில் உள்ள மூவகை நீதிகளும் இந்த பெருமுதலாளித்துவ திமிங்கலங்களால் பெரிதும் பறிக்கப்படுவதற்கு ஒன்றிய அரசு துணை போகிறது என்ற வேதனை மக்களிடையே பரவலாகப் பேசு பொருளாகி வருகிறது.

அரசமைப்புச் சட்டம் அளித்த மூன்று வகை நீதிகள்: 1. சமூகநீதி 2. பொருளாதார நீதி 3. அரசியல் நீதி.

‘அனைவருக்கும் அனைத்தும்' என்பது சமூகநீதி, தனியார்க்கான பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசுடைமைகள் மாற்றப்படுகின்றன - மக்கள் சொத்து தனியார் வசமாகி பொருளாதார நீதி அடிபடுகிறது.

தனியார்த் துறைக்கு மாற்றப்படும்போது, சமூகநீதி இட ஒதுக்கீடு அதில் இல்லாது, நாட்டின் மிகப்பெரும் பான்மையான மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏற்கெனவே வேலையில் சேர்ந்துள்ள பதவி, பணியில் இருக்கும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டியினர் எல்லாம் வெளியே அனுப்பப்பட்டு, முதலாளிகளின் விருப்பம்போல அவர்களது ‘சாம்ராஜ்யம்' நடைபெறும் - ஒரு சார்பு நிலையே நிலைத்துவிடும் அபாயம் கண்கூடு.

தோற்றத்தில் ஜனநாயகம் - 

உள்ளே அது பண நாயகம்

மூன்றாவது, பெரும்பாலான மக்களான 85 சதவிகிதம் மக்களை வெறும் வறுமைக்கோட்டுக்கும்கீழே தள்ளி,  வாக்களிப்பது, ‘ஒரு நபர், ஒரு ஓட்டு!' அரசியல் சமத்துவம் என்பதுகூட, அரசியலில் மேலெழுந்த சமத்துவமாக காணப்பட்டாலும், அங்கே பெருமுதலாளிகளின் தேர் தல் நிதி உதவிகள்மூலம் அவர்கள் விரும்பும் ஆட்சி யாளரை, கட்சியாளரை பணத்தாலடித்தும் ஆட்சிகளை அமைக்கும் ஒரு நிலையை உண்டாக்குகிறார்கள். தோற்றத்தில் ஜனநாயகம் - உள்ளே அது பண நாயகம் - அதனை திரைமறைவில் நடத்துவோர் பெரும் பெரும் கார்ப்பரேட் திமிங்கலங்கள் என்பதே!

அரசியல் நீதியும் நீர்மேல் எழுத்துகளாகி வருகிறது -  இந்தியத் திருநாட்டில்!

நம் நாட்டில் பெரும் பெரும் கப்பல் துறைமுகங்கள் - அதானிகள் கையில்!

பல தொழில்களும் அவர்களிடத்தில். அதற்காக - தனி முதலாளிகள் சட்டம் திருத்தப்பட்டு, அவர்களுக்குத் தனிச் சலுகைகள்.

ராகுல் காந்தியின் ஆணித்தரமான கேள்விகளுக்குப் பதில் இல்லை!

இதனை இரண்டு நாள்களுக்குமுன் ராகுல் காந்தி ஆணித்தரமாக மக்களின் கேள்விகளை நாடாளு மன்றத்தில் அடுக்கடுக்காக எடுத்து வைத்தார்.

அந்தக் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை!

(ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையினை இன்றைய ‘விடுதலை'யின்  3 ஆம் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டுள்ளோம்).

பிரதமர் அளித்த பதில் பொத்தாம் பொதுவில் ‘தத்துவ' உரைகளாகவே இருந்தன. மக்கள் - ராகுல் காந்தி போன்றவர்கள் - காங்கிரஸ் தலைவர் கார்கே போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசிய பேச்சுகளுக்குரிய, எழுப்பிய கேள்விகளுக்குரிய பதிலளித்து ‘‘அவர்கள் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை;  அதானிகளுக்கு ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியோ, பிரதமர் மோடியோ சலுகைகள் ஏதும் காட்டவில்லை'' என்று அடித்து ஆதாரப்பூர்வமாக மறுக்காமல், ‘‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொன்ன'' பழைய பழமொழியை நினைவூட்டுவதாகவே உள்ளது!

அதானி, உலகப் பணக்காரர்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு 609 ஆம் இடத்தில் இருந்தார்; திடீரென எப்படி இரண்டாம் இடத்திற்கு வந்தார் - ‘மாயவித்தை' எப்படி நடந்தது! என்ற கேள்விக்கான விடை கிடைத்ததா?

நம் நாட்டுப் பொருளாதாரமும் 

சுருண்டு போயிற்று!

சில ஆண்டுகளுக்குமுன் - கோவிட் 19 கொடுந் தொற்று காரணமாக நம் நாடே - கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்பட, தொழிற்சாலைகள், கடைகள், சிறுகுறு தொழில்கள் எல்லாம் முடங்கி, மடங்கி, அடங்கி மூடி வைக்கப்பட்ட வரலாறு காணாத சோகம் சூழ்ந்தது; கோடிக்கணக்கானோர் வேலையிழந்து நடந்தே சொந்த மாநிலத்திற்குத் திரும்பினர்; வேதனையால் தாக்குண் டனர்; நம் நாட்டுப் பொருளாதாரமும் சுருண்டு போயிற்ற!

அதில் ஓர் அதிசயம், அக்காலத்தில் அதானியின் ஒரு நாள் வருவாய் 1000 கோடி ரூபாய் - அம்பானிகளின் வருமானமும் பல மடங்கு உயர்வே!

தகவல் தொழில்நுட்பத்திலும்கூட (அரசு நிறுவனம் ஒப்புக்கு மட்டும்) அத்துணையும் ‘ஜியோ' மாதிரி - முதலில் இலவச அறிமுகத் தூண்டில், பிறகு படிப்படியாக அதன் சிறகுகள் விரிவாகி இன்று பல நூற்றுக்கணக்கான மக்களை வீழ்த்தும் மற்றொரு வித்தை!

அரசு விமான நிறுவனங்களான ஏர் இண்டியா, இண்டிகோ ரூ.17,000 கோடி குறைந்தவிலையில், அதுவும் தவணை முறையில் விற்கப்பட்டுவிட்டன - டாடாக் களுக்கு.

சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்குக்கூட அரசு விமான சேவை நடத்தாத ஒரே நாடு நம் நாடுதான் (பா.ஜ.க. அரசே). இதன்மூலம் பயன் யாருக்கு? 99 சதவிகித மக்களை, முடக்கிவிட்டு ஒரு சதவிகித கார்ப்பரேட் ஆதிக்கக் கொடி தலைதாழாது பறக்கிறது!

ஒன்றிய அரசு மவுன சாமியாராக உள்ளது!

மக்கள் கைபிசைந்து நிற்கும் நிலை; பதிலளிக்காமல் ஒன்றிய அரசு மவுன சாமியாராக உள்ளது!

இதனை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்; எதிர்க் கட்சித் தலைவர்கள் உணர்ந்து, ஒற்றுமையுடன் ஓரணியில் நின்றால், 2024 இல் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று காட்டி, ஜன நாயகத்தை, கார்ப்பரேட்டுகளின் பண நாயகம், ஜாதி, மத நாயகத்தை வீழ்த்திட முடியும்.

எவ்வளவுதான் ரப்பர் இழுக்க இழுக்க இலகு வானாலும், ஒரு குறிப்பிட்ட இழுப்பு எல்லை தாண்டி னால், அது அறும் - விரியாது என்பது இயற்கை நியதி!

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

என்ற திருவள்ளுவரின் குறளை சரியாகப் புரிந்து நடக்கவேண்டும்; இல்லையெனில், தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

மக்கள் கண்ணீர் கூர்வாளை ஒக்கும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

முகாம்: திருச்சி

9.2.2023

No comments:

Post a Comment