இராமாயணத்தை-ஏன் கொளுத்த வேண்டும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

இராமாயணத்தை-ஏன் கொளுத்த வேண்டும்?

அறிஞர் அண்ணா பேசுகிறார்

இக்கல்லூரியில் பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்தவரும், சட்ட நிபுணருமான மிஸ்டர் நெல்சன் என்பார், ‘இந்து சட்டம் என்பது ஆரியர்களின் மனு, பராசர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் நூற்களின் அடிப்படைகளின் மீது அமைக்கப்பட்டிருப்பதாலும்,

‘தென்னாட்டு மக்களில், பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் ஆரியரல்லாதார் ஆகையினாலும், அவர்கள் மீது இந்து சட்டத்தை திணிப்பது தவறு’ என்று எடுத்துக்காட்டினார். அவரது பேச்சு, காட்டுக் கூச்சலாக்கிவிட்டது. இந்து சட்டமே - ஆரிய நீதியே, இன்று நம்மை ஆள்கிறது. தமிழருக்குத் தேச வளமை போன்ற சட்டமோ அல்லது குறள் நீதியோ இன்று இல்லை, ஆரியமே சட்டத்தை ஆள்கிறது. கலையிலே, ஆரியத்தை ஆதிக்கம் செய்யவிட்டதனால், நாம் கண்ட பலன் இதுவென்றுரைக்க ஆசைப்படுகின்றேன்.

எனவேதான், தமிழருக்குத் தமிழ் நெறி, தமிழ்முறை, ஒழுக்கம், வீரம், கற்பு, காதல் எனும் பண்புகளைத் தரக்கூடியன கலையாக இருத்தல் வேண்டுமேயொழிய, வேறோர் இனத்தைப் புகழ்வதும் அதற்கு ஆதிக்கமளித்துத் தமிழ் மக்கள் மனதிலே தன்னம்பிக்கையற்றுப் போகும்படியும்; தமது இனத்தைப் பற்றியே தாழ்வாகக் கருதிக் கொள்ளும்படியான நிலைமை உண்டாக்கும் கதை, காவியம், இலக்கியமென்பவைகளைக் கொளுத்த வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம். தமிழர் என்று நான் கூறும்போது, தமிழ்மொழி பேசுவோர் என்பவரை மட்டுமல்ல நான் குறிப்பது, தமிழ் இனத்தை என்பதை நினைவூட்டுகிறேன்.

கலை, இலக்கியம், கற்பனை நூல் ஆகியவற்றின் மீதெல்லாமா எங்களுக்கு விரோதம்? இல்லை. தொல்காப்பியத்தைத் தொட்டோமில்லை; நற்றிணையை, நல்ல குறுந்தொகையை, கற்றறிந்தோர் ஏத்தும் கலியை, அகத்தைப் புறத்தை அழிக்கப் புறப்பட்டோமில்லை. ஆரியத்தை அழகுறப் புகுத்தித் தமிழரை அழிக்கும் நூற்களையே கண்டிக்கின்றோம்.

தொல்காப்பியமே, அதற்கு முன் இருந்த புலவர்களின் பொன்னுரைகளின் பெட்டகம் எனில், 700 ஆண்டுகட்கு முன் தோன்றிய கம்பராமாயணம் பழம் பெரும் புலவர்களின் இலக்கியங்களின் கூட்டாகவே இருக்கும் - பழைய மூல நூற்கள் இருக்கும்போது, இடையே ஆரியத்தைப் புகுத்த வந்த இராமாயணத்தை அழிப்பதனால் இலக்கியம் இறந்து படுமா? கலை கெடுமா? என்று கேட்கிறேன். இவ்விரு நூற்களைக் கொளுத்துவதால் கலை போகும் என்று கூறும் பண்டிதர்களை நான் கேட்கிறேன், இவை இரண்டொழியத் தமிழனிடம் இலக்கியமே இல்லையா? கலை கிடையாதா? என்று.

கலை விஷயமான கிளர்ச்சியை நாங்கள் எடுத்துக்கட்டிக் கொண்டு வர ஆசை கொள்ளவில்லை. முதலிலே ஆரியக் கலையின் சார்பாக ஜெர்மன் பேராசிரியர் மாக்ஸ் முல்லரும், திராவிடக் கலை சார்பாக சர். ஜான்மார்ஷலும் வாதிட்டனர். இந்தியக் கலை என்றால், ஆரியக் கலை என்று நம்பிய காலமும், ஆரிய தருமம், நாகரிகம் என்பது குறித்துத் திருவல்லிக்கேணியும், மயிலாப்பூரும் பூரித்த காலமும் உண்டு. நான் சிறு பிள்ளையில் படித்தது. ‘ஆரிய மத உபாக்கியானம்’ என்பதைத்தான். பிறகு ‘மனோன்மணிய’ ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும், சைவத் திருவாளர் வி.பி.சுப்பிரமணிய முதலியாரும், திராவிட நாகரிக மேம்பாட்டை எடுத்துரைத்தனர். மறைமலை அடிகளாரும், இதுகுறித்துக் கூறினார். நாங்கள் கூறுவதைக் காட்டிலும் கடுமையாகவே, ஆரிய மன்னன் மகன் இராமனைத் தெய்மாக்கித் தமிழரைச் சிறுதெய்வ வழிபாடாற்றும் சிறுமதியினராக்கிற்று ஆரியம் என்று கூறினார். அரசியலில் வேறுபாடான கருத்தைக் கொண்ட பண்டிதர் ஜவஹருங்கூட ஆரிய திராவிடப் பேராட் டக் கதையே, இராமாயணம் என்று உரைத்ததைக் கூற விழைகிறேன்.

எனவே, ஆராய்ச்சியாளர்களின் முடிவு, இராமாயணம் ஆரி யக் கதை என்பதும் ஆரிய திராவிடப் போராட்ட விவரம் என்பதுமாகும். அதனைக் கம்பர் எழுதியுள்ள முறை, தமிழர் ஆரியத்தை ஏற்றுக்கொள்ளும் தூண்டுகோலாகவும் தமிழ் இனம் ஆரிய இனத் தலைவனிடம் தோற்றுவிட்டது என்பதை ஒப்புக் கொள்ளச் செய்வதாகவுமிருப்பதனால், அந்நூலைப் படித்திடும் தமிழ் இனம், தன்னம்பிக்கை, தன்மானம் இழந்து கெடுகின்றது என்று கூறுகிறோம். தமிழ் இனம் புத்துயிர் பெற, இத்தகைய ஆரியக் கலையை அழிப்போம் என்றுரைக்கிறோம். இது, இன எழுச்சியின் விளைவு. முடியுமா? முடியாதா? என்பது, கேள்விக்குரியதுமல்ல: இலட்சியவாதிகளுக்கு அதைக் யோசிக்க அவசியமும் இல்லை என்பேன்.

(9.2.1943 அன்று சென்னை - சட்டக்கல்லூரி மண்டபத்தில் ரா.பி.சேதுப்பிள்ளையை எதிர்த்து அறிஞர் அண்ணா பேசியதிலிருந்து ஒரு பகுதி)


No comments:

Post a Comment