"புரட்சிப் பெண்....!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

"புரட்சிப் பெண்....!"

 அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்று அர்த்தமற்ற வினாக் களைத் தொடுத்து, பெண்களை வீட்டிற் குள்ளேயே பூட்டி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். அதனைக் கண்டு எரிமலையாய்க் கொதித்தெழுந்த தந்தை பெரியார் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு - வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழ்வது பெண் கல்வி என்பதை தொலைநோக்குப் பார்வை யோடு சிந்தித்ததின் பயனாய், நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே பெண் கல்வியின் அவசியத்தை, முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவர்களிடையே போதிய விழிப்புணர்வையும், புதிய எழுச்சியையும் ஏற்படுத்தினார். 

ஒரு குடும்பத்தில் ஆண் குழந் தையும், பெண் குழந்தையும் இருப்பின் அவ்விரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி படிக்கவைக்க வேண்டும் என்று வலியுறுத்திய பெரியார், அதற்கு வசதி வாய்ப்பு இல்லையெனில் பெண் குழந்தைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்து அவர்களுக்கு கல்வி அறிவைப் புகட்ட வேண்டும் என்று பெண்களுக்காக வாதாடியவர் - போரா டியவர் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார். 

அதன்பயனாய், பெற்றோர்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர். பல்வேறு இடர்ப் பாடுகளை உடைத்தெறிந்து பெண்கள் கல்வி கற்று, பட்டதாரிகளாகப் பட்டம் பெற்று தற்போது அனைத்துத் துறைகளிலும் உயர் அதிகாரிகளாக உயர்ந்து முத்திரை பதித்து வருகின் றனர் என்பது தந்தை பெரியாரின் ஈடு இணையற்ற உழைப்புக்குக் கிடைத்த இமாலய வெற்றியாகும். 

ஓர் ஆணாக இருந்து கொண்டு பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண் விடுதலை ஆகியவற்றிற்காக ஓயாது ஓங்கிக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். பெண்கள் நலனிற்காக, முன்னேற்றத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட அளப்பரிய அக்கறை, முயற்சி, தன்னலமற்ற உழைப்பு, அவரது தொலைநோக்குப் பார்வை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு சென்னையில் 1938 - ஆம் ஆண்டு நவம்பர் 13- அன்று  முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்பட்ட பெண்கள் மாநாட்டில், பெண்களாகவே முன்வந்து  'பெரியார்' என்ற பட்டத்தை எழுச்சி மிகுந்த, பெருந்திரளான பெண்கள் மத்தியில், ' பெரியார் வாழ்க! ' Ôபெரியார் வாழ்க! '  என்ற ஒலி முழக்கத்துடன் வழங்கி அகமகிழ்ந்தனர் என்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஓர் பொன் னாளாகும்.

தந்தை பெரியார் பெண் கல்வியையும் - வேலைவாய்ப்பையும் தொடர்ந்து ஊக்குவித்ததின் பயனாய், இன்று பெண்கள் பல்வேறு  துறைகளில் உயர்ந்து வீட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகவும் - உறுதுணையாகவும் திகழ்கின்றனர் என்பதை எண்ணி பெண்ணியவாதிகளும், சமூகநல ஆர்வலர்களும் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

தந்தை பெரியாரின் தன்னலமற்ற உழைப்பையும், அவர் பெற்றுத்தந்த உரிமைகளையும் தமிழ்நாட்டு மக்கள் நாளும் நன்றியுடன் நினைவு கூருகின்றனர். குறிப்பாக, தந்தை பெரியாரால் உயர்வும் - உரிமையும் பெற்ற பெண்ணினம் தனது சுய வருமானத்தில் சொந்தக்காலில் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். 

எனவேதான், தந்தை பெரியாரை வாழ்வியல் வழிகாட்டியாக, வாழ்வியல் நெறியாக, நல்வழிகாட்டும் கலங்கரை விளக்காக தமிழ்நாட்டு மக்கள் இன்ற ளவும் கொண்டாடி மகிழ்கின்றனர் என்பது தேனினும் இனிய செய்தி யாகும்.

கூனிக்குறுகி - கைகட்டி வாய் பொத்தி மவுனியாய் நின்ற பெண்களை, நெஞ்சுறுதியோடு தலைநிமிர வைத்தவர் தந்தை பெரியார். அதன் வெளிப்பாடாக; அண்மையில் (டிசம்பர் 28-30) வாரம் இருமுறை வெளிவரும் ஓர் இதழில் வெளியான செய்தி பெண் ணியவாதிகளையும், மாதர் சங்கங்களை யும் இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆம், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப் பாளையத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் தமிழ்ச்செல்வி. அவர் தந்தை பெரியாரின் துணிவை - நெஞ்சுறுதியை நெஞ்சில் நிலைநிறுத்தி ஓர் இனமானப் புரட்சியை, அறிவுப் புரட்சியை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக டிசம்பர் 14-ஆம் தேதி காலை கோபி பா.ஜ.க. தலைவர் அரவிந்த் பாலாஜி தலைமையில் சுமார் 30 பேர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து சார்பதிவாளர் தமிழ்ச்செல்வியிடம் Ôஎன்ன உங்க தலைக்கு மேலே ஈ.வெ.ரா. படம் வெச்சிருக்கீங்க? அதை எடுத்திட்டு இந்தாங்க பிரதமர் மோடி படத்தை மாட்டுங்க' என்று அதிகாரத் தோரணையில் சார்பதிவாளர் தமிழ்ச் செல்வியை மிரட்டியுள்ளனர்.

பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்வையும் கற்றுத் தந்த தந்தை பெரியாரின் படத்தை எடுக்கமாட்டேன் என்றும் எனது வேலையே போனாலும் பெருமையாக நினைப்பேன் என்றும் துணிவோடும் - நெஞ்சுறுதியோடும் தனது நிலைப்பாட்டை ஓங்கி ஒலித்துள்ளார் தமிழ்ச்செல்வி.

இச்செய்தியை வார இதழ் (டிசம்பர் 28-30,2022) வாயிலாக அறிந்த பெண் ணியவாதிகள், சமூகநீதிச் சிந்தனை யாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், முற்போக்காளர்கள் மற்றும் பகுத்தறி வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், மாதர் சங்கங்கள், மகளிர், இளைஞர்கள் - மாணவர்கள் உள்ளிட்டோர் சார்பதிவாளர் தமிழ்ச் செல்வி அவர்களின் கொள்கை உறு தியை நாளும் நினைத்து மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

மேலும், பெண்ணுரிமைப் போராளி தந்தை பெரியாரின் துணிவை, உறுதியை போர்க் குணத்தை ஒருங்கே பெற்றுள்ள சார்பதிவாளர் தமிழ்ச் செல்வி அவர்களை தந்தை பெரியார் காண விரும்பிய "புரட்சிப் பெண்"  என்று தமிழ்கூறும் நல்லுலகம் வாயார மனதாரப் பாராட்டி மகிழ்கிறது, போற்றிப் புகழ்கிறது. 

வாழ்க பெரியார்!

வெல்க பெண்ணினம்!

 - சீ. இலட்சுமிபதி,

தாம்பரம்.


No comments:

Post a Comment