மஞ்சு விரட்டில் பார்வையாளர் இறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

மஞ்சு விரட்டில் பார்வையாளர் இறப்பு

 திருச்சி, ஜன. 18- அரிமளம் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் மரண மடைந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி அய்யா கோவில் திடலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று (17.1.2023) மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, புதுவயல், கல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 247 காளைகள் கலந்து கொண்டன. மஞ்சுவிரட்டு திடலில் முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளி குதித்து பாய்ந்து ஓடியது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கைத்தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.


மஞ்சுவிரட்டில் ஒரு சிலர் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்து விட்டனர். மஞ்சுவிரட்டு திடல் முழுவதும் பொதுமக்கள் கூட்டமாக இருந்ததால் அவிழ்த்து விடப் பட்ட காளைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. அவ்வாறு ஓடிய காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தன. இதில் சிவகங்கை மாவட்டம், புதுவயலை சேர்ந்த உலகன் மகன் கணேசன் (வயது 50) என்பவரை நெஞ்சில் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காளைகள் முட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர் களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி, கே.புதுப்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment