காவிக் கும்பலின் வஞ்சகத்தை பெரியார் மண் வேரறுக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

காவிக் கும்பலின் வஞ்சகத்தை பெரியார் மண் வேரறுக்கும்!

கம்பம் - திறந்த வெளி மாநாட்டில் ஆ.வந்தியத்தேவன் முழக்கம்!

சென்னை, ஜன.9  காவிக் கும்பலின் வஞ்சகத்தை பெரியார் மண் வேரறுக்கும் என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன்.

கடந்த 24.12.2022  அன்று மாலை கம்பத்தில்  நடை பெற்ற முப்பெரும் விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத் தேவன் சிறப்புரையாற்றினார். அவரது உரை வருமாறு:

தந்தை பெரியார் நினைவு நாள் - சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை - ஜனநாயக முற்போக்குக் கொள்கை விளக்க திறந்தவெளி மாநாடாக, கம்பம் நகரில் திராவிடர் கழகம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டிருக்கிற அனைவருக்கும் நான் சார்ந்திருக்கிற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலும், திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ சார்பிலும் கனிவான வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வணக்கத்திற்குரிய நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களும், தோழமை கட்சிகளின் தலைவர்களும், சமூகநீதி - மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகள் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும், இங்கே உரையாற்றக்கூடிய சூழ்நிலையில், அறிவாசான் அய்யா பெரியார் அவர்கள் 48 ஆண்டுகளுக்கு முன்பு உடலால் நம்மை விட்டுப் பிரிந்தார்களே, 

"சரித்திரம் மறைந்த செய்தி

தலைவரின் மரணச் செய்தி!

விரித்ததோர் புத்தகத்தின்

வீழ்ச்சியைக் கூறும் செய்தி!

நரித்தனம் கலங்கச் செய்த

நாயகன் மறைவுச் செய்தி?

மரித்தது பெரியாரல்ல

மாபெரும் தமிழர் வாழ்க்கை!" என்று

தமிழர்தம் துயரநிலையை, கவிஞர் கண்ணதாசன் தன் கண்ணீர்க் கவிதையால் படம் பிடித்துக் காட்டினாரே அந்த நினைவுகளையெல்லாம், அன்புத் தோழர்களே, இந்த நாளில், உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்.

மாநாட்டில் தொடக்க உரையாற்றிய, தி.மு.கழகத்தின் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் என்.இராமகிருஷ்ணன் அவர்கள், கடந்த அக் டோபர் 2, காந்தியார் பிறந்த நாளில் நடைபெற இருந்த இந்த மாநாடு, பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப் பட்டு, பெரியார் நினைவு நாளில் இப்போது நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக உரையாற்றிய தியாகராயர் நகர் பொதுக்கூட்டமும் இதைப்போல ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிதானே என்ற நினைவு என் ªஞ்சில் மின்னலாய் பளிச்சிட்டது. தியாக ராயர் நகரில், பூமியைப் பிளந்துகொண்டு திடீர்ப் பிள்ளையார் தோன்றினார் என்ற கட்டுக் கதையை தோலுரித்துக் காட்ட, டிசம்பர் 12 அன்று அறிவாசான் பெரியார் உரையாற்றும் பொதுக்கூட்டத்தினை நமது தோழர்கள் ஏற்பாடு செய்தார்கள் - தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

"அந்தக் கூட்டத்தினை டிசம்பர் 19 அன்று நடத்திக் கொள்ளலாம்" என்று ஆசிரியரை அழைத்து அறிவுறுத் தினார் அய்யா பெரியார்! அதன்படி அமைந்ததுதான், அய்யாவின் மரண சாசனமாய் அமைந்துவிட்ட அந்தப் பொதுக்கூட்டம்!

மக்கள் திரள் 

கண்ணீர்க் கடலில் மூழ்கியது!

உலக நாடுகளின் அறிவியல் வளர்ச்சிகளையெல்லாம் அந்தக் கூட்டத்தில் பட்டியலிட்டுக் காட்டினார் அய்யா! ஆசிரியரின் உரையை மேற்கோள் காட்டியும், மனுதர்ம இழிவுகளையும், அதனைத் தாங்கி நிற்கும் இந்து சட்டத் தையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தினை சான்று காட்டியும் அப்போது முழக்கமிட்டார் அய்யா! மூப்பும் முதுமையும் ஒருசேர தாக்கியதை தாளமுடியாமல், "அய்யோ! அம்மா!" என்று அப்போது அய்யா துடி துடித்துப்போனதைக் கண்ட மக்கள் திரள் கண்ணீர்க் கடலில் மூழ்கியது! ஒருசில நொடிப்பொழுதில், தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அரிமாவாய் வீறுகொண்டு எழுந்தார் அய்யா! "உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உன் மொழி வேறு என் மொழி வேறு! உன் உடை வேறு என் உடை வேறு! உன் உணவு வேறு என் உணவு வேறு! உன் பழக்கவழக்கம் கலாச்சாரம் வேறு என் பழக்கவழக்கம் கலாச்சாரம் வேறு! இன்னும் எவ்வளவு காலத்திற்கு எங்கள் மீது ஆதிக்கம் செலுத்து வாய்? மரியாதையாக வெளியே போ! எங்களிடம்என்ன வளம் இல்லை?" என்றெல்லாம் சிங்கமாய் சிலிர்த் தெழுந்து உரிமைக்குரலை ஓங்கி எழுப்பினார் அய்யா பெரியார்!

பொதுக்கூட்டம் நிறைவு பெற்றதும், வழக்கம் போல அய்யா அவர்களை பெரியார் திடலில் தங்க வைத்து விட்டு தன் இல்லம் திரும்பினார் ஆசிரியர் அய்யா வீரமணி. அன்று இரவு முதலே அய்யாவுக்குக் கடுமை யான உடல் நலக் குறைவு; வெளியே சொல்லாமல் பொறுத்துக் கொண்டிருந்தார் அய்யா. விடியற்காலையில், அய்யாவின் உடல் நலக்குறைவை அறிந்த அன்னை மணியம்மையார், உடனடியாக டாக்டர் இராமச்சந்திரா அவர்களை தொலைப்பேசி மூலம் அழைத்தார். மருத் துவரும் விரைந்து வந்து சிகிச்சை அளித்தார். உடல்நிலை சீரானது.

ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே (20.12.1973) பிற்பகல் 3 மணிக்கு சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அய்யா.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மறுநாள் திருப் பத்தூர் (வேலூர்) தொடர்ந்து திருவண்ணாமலை என ஒப்புதல் கொடுத்திருந்த நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்க லாமா என்று ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் கவலையுடன் கேட்டபோது அய்யா பெரியார் மறுத்து விட்டார். "நான்தானே பேசப் போகிறேன், விரைவில் குணமாகி விடுவேன்; எனவே நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்க வேண்டாம். அதனால் கழகத் தோழர்கள் சங்கடப்படுவார்கள்'' என்று அந்த நிலையிலும் அய்யா பெரியார் பதில் அளித்தது அனைவரையும் நெகிழ்ச்சி கொள்ள வைத்தது!

கவலையுடன் கண்டு கண்ணீர் சிந்தினர்

அய்யாவின் உடல்நிலை மேலும் பாதித்தது. மறுநாள் (21.12.1973) வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அய்யா. டாக்டர் ஜான்சன், டாக்டர் பட், டாக்டர் ராமச்சந்திரா என மருத்துவர்கள் அனைவரும் சிகிச்சை அளித்தார்கள். மேலும் உடல் நிலை பாதித்த நிலையில் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு செயற்கை முறையில் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் இருந்து முதலமைச்சர் கலைஞர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், நினைவற்ற நிலையில் இருந்த அய்யா அவர்களை கவலையுடன் கண்டு கண்ணீர் சிந்தினர்.

23.12.1973 அன்றும் இதே நிலைதான்! அன்னை மணியம்மையார் அவர்களும், ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் துயரம் தோய்ந்த நிலையில், அய்யாவின் அருகில் கண்ணீர் வழிந்தோட, நின்று கொண்டிருந்தார்கள். அன்று இரவும் இதே நிலைதான்! மறுநாள் காலை 7:22 மணிக்கு, நம்மையெல்லாம் பரிதவிக்க வைத்து விட்டு நிரந்தரமாக கண்மூடினார், நம் அய்யா பெரியார்!

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு

பொங்குற்ற வேங்கைபோல் நிமிர்கின்ற பார்வை உண்டு

செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண்

சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில்

சாகும் வரை ஒளி உண்டு!

பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் - இவரோ

படுகிழமாய் போனபின்பும் சுற்றிவந்தார்

எரிமலையாய் சுடுதழலாய்

இயற்கைக் கூத்தாய்

எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடி ஒலியாய்

இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்பு சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்

ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்

எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார், இப்போதோ

இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார்!'' என்று

கண்ணீர்க் காவியம் தீட்டிய முதலமைச்சர் கலைஞர் 

"பெரியார் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார்!

நாம் தொடர்வோம்!'' என்று சூளுரைத்தார்!

தந்தை பெரியார் அவர்களின் இறுதி நிகழ்வுகளை அரசு மரியாதையுடன் நடத்திட வேண்டும் என்று முதல மைச்சர் கலைஞர் அறிவித்தபோது தலைமைச் செயலாளர் சபாநாயகம் அவர்கள் சற்று தயங்கினார். "காந்தியார் மறைவுக்கு ஒன்றிய அரசு மரியாதை செலுத்தவில்லையா? அவர் தேசத் தந்தை என்றால், பெரியார் நம் தமிழ்நாட்டின் தந்தை! எனவே, அவர் அரசு பதவிகளில் இருக்கவில்லையே என்று கவலைப் பட வேண்டாம்; ஒருவேளை இதற்காக எங்கள் அரசு கலைக்கப்பட்டால் அதைவிட மரியாதை எங்களுக்கு வேறு எதுவும் இல்லை'' என்ற தெரிவித்து அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார், முதலமைச்சர் கலைஞர்!

வேலூரில் இருந்து தந்தை பெரியார் அவர்களின் புகழ் உடல் வேனில், சென்னை ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மன்னை நாராயணசாமி, டாக்டர் ஜான்சன்,அன்னை மணியம்மையார், கி.வீரமணி ஆகியோர் உடன்வர, பிற்பகல் 4 மணிக்கு ராஜாஜி மண்டபத்தை அந்த வேன் வந்து சேர்ந்தது!

சத்துவாச்சாரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை, ஒச்சேரி, தாமல், சுங்குவார்சத்திரம், சிறீ பெரும்புதூர், பூந்தமல்லி என வழிநெடுகிலும், மக்கள் திரண்டு நின்று அய்யாவின் உடலுக்கு மலர் மாலைகளை அணிவித்து கண்ணீர் வணக்கம் செலுத்தினார்கள்.

காவல்துறை உயர் அதிகாரிகள் அய்யாவின் உடலை சுமந்து வந்து, ராஜாஜி மண்டபத்தின் உயர்ந்த பீடத்தில் வைத்தார்கள். அய்யாவின் உடலுக்கு, திராவிடர் கழகக் கொடியை போர்த்தும்போது ஆசிரியர் அய்யா கி.வீரமணி துக்கம் தாளாமல் மயங்கி விழுந்தார்! அன்னை மணியம்மையார் அய்யாவின்  அருகில் வந்து நின்று கை கூப்பி வணங்கி கதறி அழுத காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தது. முதலமைச்சர் கலைஞர், அமைச்சர் பெருமக்கள், அனைத்துக் கட்சித் தலை வர்கள், கல்வியாளர்கள், திரைத்துறையினர், அரசு அலுவலர்கள், கருஞ்சட்டைத் தோழர்கள் அணிஅணி யாக திரண்டு வந்து அய்யாவுக்கு புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.

திருச்சி மருதமுத்து என்ற தோழர் அய்யாவின் உயிரற்ற உடலைக் காண முடியாத துயரில் மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே மரணத்தைத் தழுவினார். அவரது இறுதி நிகழ்ச்சிகளை செய்வதற்காக, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் 2000 ரூபாய் கொடுத்து மனிதநேயக் கடமையை சிறப்பாக நிறைவேற் றியது கலைஞரின் அரசு!

தந்தை பெரியார் அவர்களின் மறைவுச் செய்தியை, கருப்பு வண்ணத்தில் அரசிதழில் வெளியிட்டும், தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், காவல் துறையினரின் சோகஇசையுடன் 36 குண்டுகள் முழங்க இறுதி நிகழ்ச்சியை நடத்தியும், இறுதி நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசின் செய்திப் படமாக தொகுத்து வெளி யிட்டும், அனைத்துக் கட்சி தலைவர்களின் இரங்கல் உரையுடன் சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியும், தந்தை பெரியாரின் தன்னிகரில்லா பணிக்கு வீரவணக்கம் செலுத்தியது கலைஞரின் அரசு!

நாள்தோறும் அறிவார்ந்த வகையில் தலையங்கம் தீட்டி, வருகிற 'விடுதலை' நாளேடு அய்யா மறைந்த நாளில் கருப்பு வண்ண கட்டத்தில், எதையும் அச் சிடாமல், அய்யாவின் மறைவு குறித்து எழுத வார்த் தைகள் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. "அணி வகுப்போம் - பணி முடிப்போம்" என்ற தலைப்பில் ஆசிரியர் அய்யா அவர்கள் விழிநீரைத் துடைத்துக் கொண்டு அடுத்தகட்ட பணிகள் குறித்த அறிக்கையினை "விடுதலை"யில் வெளியிட்டார். பெரியாரின் மறைவுக்குப் பின்னர் திராவிடர் கழகம் செயல்படுமா, அல்லது தி.மு.க.வுடன் இணைந்து விடுமா என்று சிலர் அவதூறுப் பிரச்சாரம் செய்தபோது "கழகம் கலையாது, இணையாது, முன்பைவிட வேகமாக பந்தயக் குதிரை யாக பாய்ந்தோடும் - லட்சியப் பயணம் தொடரும்'' என்று அம்மாவும் - ஆசிரியரும் பிரகடனம் செய்தார்கள்!

இயற்கை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது!

அன்புத் தோழர்களே, பல ஆண்டுகள் கழித்து, அறிவு ஆசான் அய்யா பெரியார் மறைந்த அதே நாளில் மற்றொரு துயரச் சம்பவமும் நம்மை இடியெனத் தாக்கியது. "பெரியார் ஊழியன்'' என்று அடக்கத்துடன் கூறிக்கொண்ட - கழகத்தின் கருவூலமான துரை.சக்ர வர்த்தியை சாலை விபத்தில் இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது!

"என்னால் கண்டுபிடிக்கப்பட்டு, ஆளாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த உறைவாளை மரணம் சுக்கல் நூறாக சிதைத்துவிட்டபோது, என்னால், நம்மால் இதை எப்படி மீண்டும் கட்டி எழுப்ப முடியும்? கலங்காமல் இருக்க முடியும்? என் சுமையை சுமக்க வந்த சுமை தாங்கியை, என் பாசத்திற்குரிய கட்டுப்பாட்டின் இலக் கணத்தை, கடமையின் கொள்கலனை, கொள்கை விளக்கத்துக்கு நம் ஆசான் கொடுத்த பணியை முகம் சுளிக்காமல் முடித்துக் கொடுத்திடும் செயல் வீரனாய்த் திகழ்ந்த கழக ராஜ்ஜியத்தின் என் சக்ரவர்த்தி எங்கே? எங்கே?

நம் நெஞ்சில் அலைமோதுகின்றன!

என் அருமைச் சகோதரனே! உங்களை கழகத்தில் வளர்த்து படிப்படியாக பக்குவப்படுத்தி, கடமைகளை ஆற்றும் பொறுப்புணர்ச்சி கண்டு ஆயத்தமானவர் என்பதை அறிந்துதானே கழகப் பொதுச் செயலாளராக்கி நான் உங்களோடு சாதாரண உறுப்பினர் பணிக்கு ஆயத்தமானேனே'' என்று நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கண்ணீர் சிந்தினார்களே, அந்த கண்ணீரின் கதகதப்பு இன்றைக்கும் அணையவில்லை என்பதுதானே உண்மை! அதே விபத்தில், மண்டை உடைபட்டு, முகமெல்லாம் சிதைந்து மரணத்தின் வாயில் வரை எட்டிப்பார்த்து, உயிர்பிழைத்த நம்முடைய உரத்தநாடு குணசேகரன், அந்த வடுக்களுடன் போர் வீரனாக இன்றைக்கும் ஓடியாடி பெரியார் தொண்டனின் அடையாளம் இதுதான் என்று தொண்டறம் தொடர் கிறாரே இதனை எப்படி மறக்க முடியும்? டிசம்பர் 24 என்கிறபோது இந்த நினைவுகள் எல்லாம் நம் நெஞ்சில் அலைமோதுகின்றன!

அன்பின் இனிய தோழர்களே, இறுதியாக ஒரு கருத்தை சொல்லி என் உரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன். 48 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மாலை 4:57 மணிக்கு, தந்தை பெரியாரின் புகழ் உடலை பெரியார் திடலில் நாம் புதைத்தோம்; அல்ல அல்ல விதைத்தோம்! அப்போது பெரியார் அணிந்திருந்த கண்கண்ணாடியை கழற்றி ஆசிரியரிடம் ஒப்படைத்தார் முதலமைச்சர் கலைஞர்! உமர் முக்தார்  திரைப்படத்தில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுமரணம் தழுவிய உமர்முக்தாரின் கண்ணாடியை, அவரது பேரனை ஒத்த சிறுவன் ஏந்திக் கொள்வதாக அந்தத் திரைப்படம் முடியுமே, அந்தக் காட்சி அப்போது நம் நினைவுக்கு வந்தது!

காவிக் கும்பலின் வஞ்சகச் செயலை பெரியார் மண் முறியடிக் கும்!

அய்யாவின் உடலை அடக்கம் செய்ய, குழியில் இறக்கியபோது அதனைத் தாளமுடியாமல் மயங்கி சரிந்த நம் ஆசிரியரைத் தோளில் தாங்கி ஆறுதல் தெரிவித்த கலைஞரும், காமராசரும் இணைந்து நின்ற காட்சி நம் நினைவுக்கு வருகிறது. இன்று கலைஞர் இல்லை! காமராசர் இல்லை! ஆனாலும்கூட தளபதி மு.க.ஸ்டாலின் இருக்கிறார்; வைகோ இருக்கிறார்; 

ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் இருக்கிறார்; திருமாவளவன் இருக்கிறார்; இரா.முத்தரசன் இருக்கிறார்; கே.பால கிருட்டிணன் இருக்கிறார்; காதர் மொய்தீன் இருக்கிறார்; ஜவாஹிருல்லா இருக்கிறார்; இவர்கள் சார்ந்த இயக் கங்கள் இருக்கின்றன! இந்த இயக்கங்கள்  எல்லாம் ஆசிரியருக்கு, திராவிடர் கழகத்திற்கு என்றென்றும் துணையாக நிற்கும்! அவைகளைப் பயன்படுத்தி, காவிக் கும்பலின் வஞ்சகச் செயலை பெரியார் மண் முறியடிக் கும்! முறியடிக்கும் என்று உறுதி கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

 நன்றி! வணக்கம்!

-இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment