வெறும் விழா அல்ல - வினை முடிக்கும் சூளுரை நிகழ்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

வெறும் விழா அல்ல - வினை முடிக்கும் சூளுரை நிகழ்வு!

தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் குழுத் தலைவருமான மானமிகு டி.ஆர். பாலு அவர்களால் எழுதப்பட்ட "பாதை மாறா பயணம்" (2 பாகம்) வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் (7.1.2023) நடைபெற்றது.

அவ்விழா நூலாசிரியருக்கான வெறும் பாராட்டு விழாவாக அமையாமல் திராவிட இயக்கத்தின் இலட்சிய விளக்கத்தையும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களையும் குறிப்பாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சியாகவும் அமைந்ததுதான் அவ்விழாவின் தனி முத்திரையாகும்.

17 வயதில் தி.மு.க.வில் அடி வைத்து, இன்று வரை ஒரே இயக்கம், ஒரே தலைமை, ஒரே கொடியின் கீழ், எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் அவரது உயரத்தைப் போலவே மேலும் உயர்ந்த மாமனிதராக டி.ஆர். பாலு அவர்கள் ஒளிவிடுகிறார். இந்த உயரத்தை மட்டும் பார்த்து விடக் கூடாது - இந்த உயரம் - உழைப்பு - விசுவாசம் திறமைகளால் கிடைத்தது என்பதை கவனிக்கத் தவறக் கூடாது.

திராவிடர் கழகத் தலைவர் இந்த நிகழ்ச்சியில் நூலின் முதல்படியைப் பெற்றுக் கொண்டு தன் உரையில் ஒரு முக்கிய கருத்தினைப் பதிவு செய்தார்.

ஒவ்வொரு கட்சியிலும் அல்லது இயக்கத்திலும், அமைப்பிலும் உள்ளவர்களுக்கான கை விளக்கு என்று அதனைக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒன்றிய அரசின் காபினட் அமைச்சராகவும் முக்கியமான துறைப் பொறுப்புகளில் இருந்தவருமான சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு ஆளும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்த நிலையில் - ஒரு முறை அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படவில்லை. அப்பொழுது கட்சித் தலைவராக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆவார்.

சராசரி மனிதராக இருந்தால், அந்த நிலையில், தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு வருத்தப்பட்டு ஏதோ ஒரு வகையில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தவே செய்திருப்பார்கள்.

நமது டி.ஆர்.பாலு அவர்கள் அசாதாரண மாமனிதராக இருந்த காரணத்தால், அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போல, பதவி என்பது தோளில் போட்டுள்ள துண்டு; கொள்கை என்பது இடுப்பில் கட்டியுள்ள வேட்டி என்பதை ஆழ உணர்ந்த காரணத்தால் அப்படி நடந்துகொள்ள முடிந்தது என்பது - திராவிடர் கழகத் தலைவர் அனைத்துக் கட்சியினருக்கும் தெரிவித்துள்ள அரிய கருவூலமாகும்.

தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருக்கும் மாண்புமிகு துரைமுருகன் வயதோடும் - நீண்ட காலமாக கட்சியில் இருந்த நிலையிலும், அதே போல டி.ஆர். பாலு அவர்களும், முதல் அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் 'வாடா போடா' என்று ஒருவருக்கொருவர் பேசிப் பழகிய நிலை ஒரு கட்டத்தில் இருந்தபோதிலும் - தளபதி வகிக்கும் பொறுப்பு என்ற நிலையை உணர்ந்து, அவரது தலைமைக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் அளித்து நடந்து கொள்ளும் போக்கு உன்னதமானது. முன் உதாரணமானது!

தி.மு.க.வின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று சொற்களும் காகிதத்தில் வடிக்கப்பட்டவை அல்ல- காரியத்தில் நடந்து காட்டப்பட வேண்டியவை என்பதற்கு இவை எல்லாம் அடையாளம்!

இதில் பிறழ்ந்தவர்கள் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்து குடை சாய்ந்து போனதுதான் கடந்த கால வரலாறு.

தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் 'தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது; தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்று சொன்னதற்குத் தக்க பதிலடி கொடுத்ததுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் "தமிழ்நாடு" என்று குரல் கொடுக்க, கூடியிருந்த மக்கள் கடல் "வாழ்க! வாழ்க!" என்று முழங்கியது - ஆளுநர் ரவிக்கு மட்டுமல்ல - விபீடணர்களுக்கும் கொடுத்த உணர்வு ரீதியான பதில் ஆகும்.

முக்கியமாக தமிழர் தலைவர் தொடங்கிக் கொடுத்ததும், அதை வழிமொழியும் வகையில் முதலமைச்சர் கருத்தாக்கமாகப் பேசியது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாகும்.

இதன் பின்னணியில் 150 ஆண்டு கால வரலாறு உண்டு.

திராவிட இயக்க மாநாடுகளில் எத்தனைமுறை தீர்மானங்கள், எத்தனைமுறைப் பல்வேறு போராட்டங்கள், நாடு தழுவிய பிரச்சாரக் கூட்டங்கள் என்பதைப் பட்டியலிட்டால் மிகவும் நீளும்.

இந்தத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் வளம் பெறும், பொருளாதார செழுமை எனும் வளர்ச்சி ஏற்படும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும், மீன் பிடித் தொழில் வளர்ச்சி பெறும், சிறு, பெரு துறைமுகங்களும் வளர்ச்சி அடையும், வெளிநாட்டுச் செலாவணியும் இந்திய அரசுக்குக் கிட்டும், பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் முக்கியம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

இதை உணர்ந்திருந்த காரணத்தால்தான், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அப்பொழுது கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த  பிரகாஷ் கோயல் அதற்கான அனுமதியையும் கொடுத்தார் என்பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். அப்பொழுதெல்லாம் "ராமன் பாலம்" என்பது இல்லாமல் போய் விட்டதா? இப்பொழுது திடீர் என்று இராமர் பாலம் குதித்தது எப்படி? அதுபோலவே அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வலியுறுத்தப்பட்டு இருந்ததையும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிய விதம் சிறப்பானது.

இவர்கள் கூறும் ராமன் பாலம் என்பது என்ன? தனுஷ்கோடிக்கும்,தலைமன்னாருக்கும் இடையே இருக்கக் கூடியது வெறும் மணல் திட்டுகளே! அவற்றின்மீது பாசிப் படிமங்கள் தோன்றி பாலம் போன்ற அமைப்பு உருவானது என்று அறிவியல் கூறுகிறது. ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்டநெடிய தூரத்திற்கு இது போன்ற அமைப்புகள் உண்டு. அவற்றை எந்த ராமன் கட்டினான்?

ராம ராஜ்ஜியம், ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கப் போவதாக - ஆட்சியின் கடமைக்குச் சம்பந்தமே இல்லாதவற்றைக் கொண்டு வந்து மதவாதத்தைக் கையில் எடுப்பது அப்பட்டமான ஆட்சி முறைக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில்  உள்ள மதச்சார்பின்மைக்கும் விரோதமானதாகும்.

முதலமைச்சர் தனது நிறைவுரையில் முத்தாய்ப்பாக சொன்னது முக்கியமானதாகும். அருமை நண்பர் டி.ஆர்.பாலு அவர்கள் நமக்குக் கிடைத்த பேராயுதமாகும். அவரை டில்லிக்கு அனுப்பி  வைத்துள்ளோம். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது அவரின் பொறுப்பு என்றாரே - அது ஆயிரம் ஆயிரம் பொன் பெறும்  - தமிழ்நாட்டு மக்களின் குரலைத்தான் முதல் அமைச்சர் ஒலித்திருக்கிறார்.

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு அவர்கள் நீடு வாழ்க! வாழ்க! சாதனை படைத்து மேலும் உயர்க உயர்க என்று வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment