தாய்த் திருநாடு “தமிழ்நாடு” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

தாய்த் திருநாடு “தமிழ்நாடு”

2021 மே 7ஆம்நாள், தலைவர் தளபதி அவர்கள், தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இனிமேல் இந்திய ஒன்றியம் என்றும் தமிழ்நாடு என்றும் குறிப்பிடுங்கள் என அறிவுறுத்தினார்கள். அன்றிலிருந்து, தமிழ்நாடு என்றே சொல்லுங்கள் எழுதுங்கள் என்று தோழர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். நானும் மிகவும் கவனமாக அப்படியே குறித்தும் பேசியும் வருகிறேன். அரசு/அமைச்சரவை/ அமைச்சர்கள் சார்ந்து வரும் செய்திகளும் தமிழ்நாடு என்றே குறிப்பிட்டு வெளி வந்தன. ஆனால் இடையில் சற்று தொய்வு ஏற்பட்டு விட்டதைப் பார்க்க முடிகிறது. தமிழகம் என்ற சொல்லே பேச்சிலும் எழுத்திலும் வரத்தொடங்கி விட்டது. மீண்டும் எழுத்திலும் பேச்சிலும் தமிழ்நாடு என்றே குறிப்பிட வேண்டும்.

அதன் முக்கியத்துவத்தை இப்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உணர்த்தியிருக்கிறார். ”தமிழ் நாடு என்பதைவிட, தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்” என்றிருக்கிறார். காசி தமிழ்ச் சங்கமம் ஏற்பாட்டாளர்களுக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசும்போது இப்படிக் கூறியிருக்கிறார். “தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும், நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் கொண்டுவந்தால் தமிழ்நாடு அதை வேண் டாம் என்று சொல்கிறது” என்றும் பேசியிருக்கிறார்.

கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை அன்று - ஆரியத்தைக் குடியேற்றி இருக்கிறது ஆர்எஸ்எஸ்  பாஜக கூட்டணி. அந்த ஆளுநரின் நாக்பூர் மூளை அவ்வப்போது நச்சைக் கக்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் நம் தாய்த்திருநாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்பது. பெயரை மாற்றினால், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறிவிடுமா?  

இதையெல்லாம்தாண்டி,  அரசியல் அமைப்பின் படி அமைந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில், 1967இல் ஜுலை 18ஆம் நாள், முதல்வர் பேரறிஞர் அண்ணா முன்மொழிய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்கள் ஏற்க, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, இந்த ‘மா’நிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. அந்த நாளையே, “தமிழ்நாடுநாள்” என்றும் நம்முடைய திராவிடமாடல் அரசு அறிவித்துள்ளது. இப்படி வரலாற்றில் மட்டு மின்றி தமிழ் இலக்கியங்களிலும் நிலைபெற்றுவிட்ட தமிழ்நாடு என்ற பெயரை மாற்றவேண்டும் என்று சொல்கிறார் என்றால், இந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை, தமிழ்நாடு சட்டமன்றத்தை மதிக்கவில்லை, தமிழர்களின் உணர்வை மதிக்க வில்லை என்றுதானே பொருள்!

”இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் கொண்டு வந்தால் தமிழ்நாடு அதை வேண்டாம் என்று சொல்கிறது” என்கிறார் ரவி. இந்தியா என்ன, இந்தப் பூமிப்பந்தில் எந்த மூலையில் மனிதகுலத்திற்கு விரோ தமான ஆதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டாலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு அதற்கு எதிராகத்தான் நிற்கும்.

அதனால்தான் நாங்கள் எப்போதும் பெருமை யுடன், தலைநிமிர்ந்து சொல்கிறோம், எங்கள் தமிழ்நாடு தனித்துவமானது என்று. எப்படியெனில்,  எங்கள் தமிழ்நாட்டின் அரசியல் -  சமூகநீதி அடிப் படையிலானது - தனித்துவமானது;  எங்கள் தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை -  இருமொழிக் கொள்கை - தனித்துவமானது; எங்கள் தமிழ்நாட்டின் சமூகவியல் பண்பாடு - சுயமரியாதை திருமணச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்கல்வி, பார்ப்பனிய எதிர்ப்பு - என தனித்துவமானது;  எங்கள் தமிழ்நாட்டின் வாழ்வியல் கோட்பாடு  - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - தனித்துவமானது;  மொத்தத்தில் இந்திய ஒன்றியத்தில் எங்கள் தமிழ்நாடு தனித்துவமான மாநிலம்தான் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்து கொண்டே வருகிறோம்.

டெல்லி நம்மை ஆதிக்கம் செலுத்த முற்படும் போதெல்லாம்,  இந்தக் கருத்து வலிமையாகத் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்துவதைப் போல தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை என்றால் அதற்குத் தமிழ் நாட்டில் திராவிடஇயக்கம் -  தந்தைபெரியார் மூட்டிய பார்ப்பனிய எதிர்ப்புக்கனலே காரணம்.  அந்தக் கனலின் சூடுதணியாமல் பார்த்துக் கொள்கிறது திராவிட இயக்கத்தின் அரசியல் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகம். பேரறிஞர் அண்ணா,  முத்தமி ழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் இன்று தமிழ்நாட்டின் பாட்டுடைத் தலைவனாகத் திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை, தந்தைபெரியார் என்னும் ஆதிக்க எதிர்ப்புத் தீப்பந்தத்தை ஏந்தி நிற்பது கண்டு, காவிக் கும்பல் கும்பி எரிகிறது.

“எங்கள் பாதையைப் பெரியார் திடல்தான் தீர்மானிக்கிறது” என்கிறார், கோவில்களின் நிர்வாகத் தையும் எந்தக் குறையுமின்றி கொண்டு செல்கிறார். முதல்வர்தான் இப்படி என்றால், தமிழ்நாட்டு மக்களைப் பாருங்கள்; காவி கட்டிக் கொண்டு பழனிக்கும், கருப்பு கட்டிக் கொண்டு சபரிமலைக்கும் செல்லும் பக்தர்கள், தந்தைபெரியார் சிலை மீது சங்கிகள் கைவைத்தால், செ...பு பிய்ந்துவிடும் என்கிறார்கள், அடித்து உதைத்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். தமிழ்நாட்டின் குழந்தைகள்கூட பெரியாரின் கருத்துகளை முரசொலிக்கிறார்களே எனக் கொதித்துப் போய்க் கிடக்கிறது ஆரியக் கூடாரம்.

அதனால்தான், தமிழ்நாட்டின் அரசியல் அடிப் படையை எப்படியாவது மாற்றிவிட வேண்டும், அல்லது சிதைத்துவிட வேண்டும் என எண்ணுகின் றனர். ஏறத்தாழ ஒரு மூன்றாண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்,  சென்னை ”மாம்பலத்தில்” நீட்டுக்கும் சிஏஏவுக்கும் ஆதரவாக நடந்த கூட்டம் ஒன்றை யூட்யூபில் பார்க்க நேர்ந்தது. அதில் திருப்பதி நாராயணன் உள்ளிட்ட பலர் மேடையில் அமர்ந் திருந்தனர். பேசியதில் பாதி திமுகவின் மீதான வன்மமாக வந்து விழுந்தது. பார்வையாளர்களிடமும் கருத்துக் கேட்டனர். அப்போது ஒருவர் எழுந்து ஆவேசமாக, ’மொதல்ல இந்தத் தமிழ்நாடுங்கற பேர மாத்தனும்ங்க, அதனாலதான் இப்படிப் பேசிட்டு அலையறாங்க’ என்றார். உடனே திருப்பதி நாரா யணன், ‘அதுலெல்லாம் நாம கைவைக்கக் கூடாது. பிரச்சனையாயிரும்’ என அவசரமாக மறுத்தார். இந்த இடத்தில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன் னது நினைவுக்கு வருகிறது.” தாய்த்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டவடிவம் கொடுத்திருக்கிறோம். இருமொழிக் கொள்கை - தமிழ், ஆங்கிலம் - மட்டும்தான், மும்மொழிக்கு இட மில்லை. இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தால், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும்,  அந்த அச்சம் இருக்கின்றவரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்”. இன்றுவரை அந்த அச்சம் அந்தக் கும்பலுக்கு இருப்பதால்தான், சுற்றி வளைத்து, நம்மில் சிலரையே முன்னிறுத்தி பின்னிருந்து சதி வேலைகளை செய்கின்றனர்.

தமிழ்நாடு என்று பெயர் இருப்பதால் நாங்கள் தனித்துவமாக இருக்கிறோம் என்பதல்ல, தமிழர் களாகிய நாங்கள் எங்களுக்கென்று சிறப்பான இன, மொழி வரலாற்றைப் பெற்றிருக்கிறோம், மனிதத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த மானுடவியல் கோட்பாடான சமூகநீதி -  திராவிட இயக்கக் - கோட்பாட்டைக் கொண்டிருக்கிறோம்;  பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்ப்பதற்குப் பக்குவப் படுத்தப்பட்டிருக்கிறோம்,   மொத்தத்தில், உரிமைக்குக் குரல்கொடுக்கவும்,  (தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால்)  உறவுக்குக் கைகொடுக்கவும் எங்கள் தலைவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தமிழ்நாடு தனித்துவமானதாகத் திகழ்கிறது.

தமிழ்நாடு மட்டுமன்று, இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலமும் தமிழ்நாடாக - உரிமைக்குரல் எழுப்புவதில் - மாறும்நாள் தொலைவில் இல்லை. தமிழ்நாட்டின் முதல்வர், எங்கள் மானமிகு ஆசிரியர் அய்யா பெருமிதத்துடன் குறிப்பிட்டாரே, “சமூகநீதி யின் சரித்திர நாயகன்” முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதற்கான கூட்டுமுயற்சிக்குத் தலைமை ஏற்றிருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”  என்பார் தொல்காப்பியர். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு. சுயமரியாதை என்னும் ஒற்றைச் சொல்லுக்குப் பின்னால் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அப்படித்தான் தமிழ்நாடு என்ற சொல்லுக் கும் ஒரு வரலாறும், பெருமிதமும் இருக்கிறது. அந்த வரலாறும், பெருமிதமும் நம் இன எதிரிகளுக்கு ஒவ்வாமையைக் கொண்டுவந்து சேர்க்கிறது. ஆனால் நமக்கு, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பவை உணர் வோடும் உயிரோடும் கலந்துவிட்ட கருத்தியல் சொற்கள். அதை நாம் ஒருநாளும் விட்டுவிடக் கூடாது.

உரத்து முழங்குவோம்,

தமிழ்நாடு வாழ்க!

தமிழ்நாடு வாழ்க!!

தமிழ்நாடு வாழ்க!!!

என்றும் தோழமையுடன்,

- இரா. உமா

No comments:

Post a Comment