'தமிழகம்' என்று கூறிய ஆளுநர் தற்போது புது விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

'தமிழகம்' என்று கூறிய ஆளுநர் தற்போது புது விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று இன்று (18.1.2023) வெளிவந்துள்ளது.

(1) தமிழகம் என்று நான் ஏன் கூறினேன் என்று விளக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது ஏன் என்பது முக்கிய கேள்வி.

(2) காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என்று விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கும், இந்த வெளிப்பாட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? தமிழ்நாடு சட்டப் பேரவை யில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது 'தமிழ்நாடு' என்ற பெயர். தமிழ்நாடு அரசின் இலச்சினையிலும் தமிழ்நாடு என்றுதானே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் அதற்கு மாறாகக் கூறுவது  அரசமைப் புச் சட்ட விரோதமான செயல் அல்லவா?

(3) இந்த விளக்க அறிக்கையிலும்கூட அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்று இருக்க வில்லை என்று மீண்டும் ஒரு புது சர்ச்சையை எழுப்புகிறார். இதிலிருந்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை சமாதானம் ஆகாது - பிடிவாதத்தைத்தான் காட்டுகிறது. 'பெருமாள்' போய் 'பெத்தபெருமாள்' ஆன கதைதான் இது!

பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்று இருப் பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும் எடுத்துக் காட்டிய பிறகும், ஆளுநர் வேறு மாறாகக் கூறுவது ஏன்? ஆளுநர் என்ன தமிழ் இலக்கியங்களைக் கற்ற புலவரா? ஆய்வாளரா?

(4) தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் மட்டுமல்ல - பெரும் எதிர்ப்பு வெடித்த நிலைக்குப் பிறகும்கூட, ஆளுநரின் பொங்கல் வாழ்த்தில், 'தமிழகம்' என்று குறிப்பிடுவதோடு, தமிழ்நாடு அரசின் இலச்சினையில் தமிழ்நாடு என்ற பெயர் வருகிறதே என்பதற்காக, அந்த இலட்சினையையே எடுத்தது ஏன்?

(5) காசி சங்கம நிகழ்ச்சியில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் உண்மையில் பேசியது என்ன?

''தமிழ்நாட்டில் வித்தியாசமாக ஓர் அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்.... தமிழ் நாடு என்பதைவிட, தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் பொய்ப் பரப்பு ரையை நாம் முறியடிக்கவேண்டும்'' என்று ஆளுநர் பேசவில்லையா? இது அப்பட்டமான அரசியல் பேச்சு அல்லவா? அரசியல் பேசுவது ஆளுநருக்கான பணியா?

(6) 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள் விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை விளக்க அறிக்கை இல்லை - குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதை யாகவே இருக்கிறது.

(7) தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்; இனி புரிந்துகொள்ள வேண்டியது ஆளுநர்தான்!

இனிமேலாவது ஆளுநர் 'தமிழ்நாடு' என்று சொன்னால் சரி!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.1.2023

                                          ..................................................................

தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
சென்னை,ஜன.18- தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 
"2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை Ôமிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை Ôதமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம். 
                       -இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment