Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒரு நல்லாட்சி என்பதற்கு அடையாளமே அங்கு சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ்வதே!
January 13, 2023 • Viduthalai

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பேசுவதா?

ஒரு நல்ல நாடு, நல்லாட்சி என்பதற்கு அடையாளமே - அந்நாட்டில் சிறுபான்மையின மக்கள் நிம்மதியாகவும், சம உரிமையுடனும் வாழ்வதற்கு இடம் தருவதுதான்; மாறாக, ஆளும் கட்சியின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகை யில் பேசுவது கூடாது என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

நமது நாட்டின் ஆட்சி மக்களாட்சி; யதேச்சதிகாரம் கொண்ட சர்வாதிகார ஆட்சி அல்ல; அதனால்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இதனை- ‘‘இறை யாண்மை படைத்த, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு''  என்று முகப்புரையிலேயே தெளிவாக வரையறுத்துக் கூறிவிட்டனர் - அதனை உருவாக்கிய சட்ட வல்லுநர்களான வரைவுக் குழுவினர்.

அரசமைப்புச் சட்டம் இட்டுள்ள கட்டளையாகும்!

இதில் சிறுபான்மையினருக்கும் சம உரிமைகளும், சம வாய்ப்புகளும்கூடத் தரவேண்டும் என்பது அரசமைப்புச் சட்டம் இட்டுள்ள கட்டளையாகும்!

நாட்டின் இறையாண்மை என்பது ஒரே மக்களிடம் மட்டும்தான் உண்டு; வேறு எந்தப் பெரிய அமைப்பு களிடமும் இல்லை. இதன்படி "We, the People மக்களாகிய நாம், நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்'' என்ற அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசகங் களுக்கு, ஆழமான பொருள் உண்டு; அதை எவரும் மாற்றிவிட முடியாது. காரணம், அது அடிக்கட்டு மானத்தின் பகுதியாக - முகப்புரையாக உள்ளது! (அதையே தோண்டி எறிவோம் என்று குடியரசுத் துணைத் தலைவர் மூலமாகவே சொல்ல வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஆட்சி!)

மதச்சார்பின்மைத் தத்துவத்தைக் குழிபறிப்பதா?

மதச்சார்பின்மை தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்து அதன்மீது ஒன்றிய அரசின் பிரதமரும், அமைச்சர்களும், மாநில ஆளுநர்களும் நடந்து கொள்வது மிகப்பெரிய அரசியல் பிழையாகும்.

அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றம்!

‘‘அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றம்'' என் பதை உணர்த்திடும் நிலை நாட்டில் நாளும் உருவாகி வருகிறது!

தங்களது ‘வித்தைகள்', ‘‘ஏமாற்றுப் பேச்சு வியூகங்களாலும்'' எப்படியோ ஒன்றிய ஆட்சியைப் பிடித்துவிட்டனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை - ஒவ்வொரு குடிமகன், மகளுக்கு வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய் வாக்குறுதி தந்து, ஆட்சியைப் பிடித்தனர்; ஏன், பிரதமரின் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு, அது வெறும் ‘ஜூம்லா' - ‘சும்மா சொன்னது' என்று அனாயசமாகக் கூறி, தாங்கள் பெற்ற அதீத பெரும்பான்மைப் பலத்தால், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முக்கிய பிரிவுகளை சீர்குலைப்பதுபோல் நடக்கிறார்கள்.

வெறுப்பு அரசியலை நடத்துவதா?

வெறுப்பு அரசியலை விதைத்து, வாக்குகளாக அவற்றை அறுவடை செய்யத் திட்டமிடுகிறார்கள்.

அதைவிட ஒருபடி மேலே போய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், வெறுப்பு அரசியலையும் தாண்டி அச்சுறுத்தல் அரசியல் போக்கைச் சிறிதும்கூட தயக்கமின்றிப் பேசுகின்றார்.

ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கூற்றின் பிரதிபலிப்பு!

ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸின் கொள்கை கர்த்தா வான எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ். எதிரிகள் என (ஆதாரம்: அவரது நூல் 'ஞானகங்கை).

1. முஸ்லிம்கள் - (‘‘திட்டமிட்ட உள்நாட்டு அபாயங்கள்'' என்ற தலைப்பில்).

2. கிறிஸ்துவர்கள்

3. கம்யூனிஸ்டுகள் 

என்று கூறியதை ஆட்சிமூலம், அவர்களது பல அமைப்புகள் குறிப்பாக பஜ்ரங் தளம்மூலம் வன் முறைகளில் ஈடுபட்டு நிலைநாட்டி வருகின்றனர்.

இப்போது அவர்கள் மீது வெறுப்பு அரசியலை உமிழ்வதுடன், அச்சுறுத்தும்படியும் பேசுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்.

முஸ்லிம்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாங்கள் மேலாதிக்கம் (Supremacy) உள்ளவர்கள் என்றும் கொண்டிருக்கும் சிந்தனையைக் கைவிட வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்!

ஹிந்துக்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்களாம்!

அதுமட்டுமா?

‘‘வரலாற்றுத் தவறுகள்'' என்ற பெயரில், ஹிந்து சமூகம் ஆக்கிரமிக்கப்பட்டது; எனவே, ஹிந்துக்கள் ‘‘யுத்தத்தில்'' ஈடுபட்டுள்ளார்கள்'' என்றும் வெளிப்படை யாக மத அடிப்படையில் மக்களிடம் போர் மூட்டவும், வெறுப்பினை நியாயம்; தேவை என்றும் பேசியுள்ளார் அண்மையில்.

அமைதியைக் கெடுத்து - சிறுபான்மையினரிடையே ஒரு பீதியைக் கிளப்பி, அவர்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து, இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் கூடப் பங்களித்த குடிமக்கள் என்ற பேருண் மையை மறைத்து இப்படிப் பேசுவது மிக வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒரு நல்ல நாடு என்பதற்கு 

அடையாளம் யாது?

தீவிரவாத குற்றவாளியாக கைது செய்யப்பட்ட  பிரக்யா சிங் தாக்கூர் போன்றவர்களின் பேச்சை விடவும் மோசமானது ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தப் பேச்சு.

ஒரு நல்ல நாடு என்பது சிறுபான்மையினர் நிம்மதி யோடு வாழ்கிறார்கள் என்பதுதான்; அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்பதை ஏனோ மறந்து இந்த மதவெறிப் பாம்பு ஏன்  படமெடுத்து ஆடவேண்டும்?

சகோதரத்துவம் (Fraternity) நமது அரசமைப்புச் சட்டம் கூறும் நெறி. அதற்கு நேர் விரோதப் பேச்சுக்கு அவர்மீது சட்டம் பாயவேண்டாமா?

'திராவிட மாடல்' அரசு

வெறுப்பு அரசியல் நடத்திய தலைவர்களுக்கு வரலாறு அளித்துள்ள இடம் என்னவென்று தெரியாதா? ஹிட்லருக்கு வரலாறு அளித்துள்ள இடம் எங்கே என்பதை மறக்கலாமா, காவிகள்?

‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற 'திராவிட மாடல்' ஆட்சித் தத்துவம் எவ்வளவு சிறந்தது என்பதால், இப்படிப்பட்ட வெறுப்புப் பேச்சுக்கு இந்த மண்ணில் இடம் தர அது ஒருக்காலும் அனுமதிக்காது!

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் அண்மையில் வெறுப்பு அரசியல் ஏற்படுத்தும் கேடுகள்பற்றியும் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரிய வர்த்தத்தில் தான் இவை செல்லுபடியாகலாம் அதுவும்கூட தற்காலிகமே! 

‘திராவிட மாடல்' ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் அது செல்லாது! 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.1.2023

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn