''ஹிந்துக்களில்'' எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் பெரும்பான்மை என்றாலும் ''ஹிந்துத்துவ வக்கீல்கள்'' இட ஒதுக்கீடு விடயத்தில் அதை மறந்தது நியாயமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

''ஹிந்துக்களில்'' எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் பெரும்பான்மை என்றாலும் ''ஹிந்துத்துவ வக்கீல்கள்'' இட ஒதுக்கீடு விடயத்தில் அதை மறந்தது நியாயமா?

*     உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒடுக்கப்பட்டோர் வெறும் 14 விழுக்காடு பதவிகள்தானா?

* EWS பிரிவினருக்கு 10 சதவிகிதம் எந்த புள்ளிவிவர அடிப்படையில் என்று உச்சநீதிமன்றம் கேட்காதது ஏன்?

புலிகள் எப்போதும் தூங்காது - அரசமைப்புச் சட்ட இறையாண்மை மக்களிடம்தான் உள்ளது

85 முதல் 95 விழுக்காடுள்ள பெரும்பான்மை மக்களுக்கு உயர்நீதிமன்றப் பதவிகளில் வெறும் 14 விழுக்காடுதானா? அதேநேரத்தில் பொருளாதாரத் தில் நலிந்த (ஒரு நாள் வருவாய் ரூ.2200) பிரிவினருக்கு குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கு அவசர அவசரமாக 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்தது ஏன்? மக்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கமாட்டார்கள்; இறையாண்மை என்பது மக்கள் கைகளில்தான் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, நீதித்துறை சார்பில் சட்டம் - நீதி சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவரும், பீகார் மாநில மேனாள் துணை முதலமைச் சருமான சுசில் மோடி தலைமையிலான அக்குழுவிடம்.

உயர்நீதிமன்றங்களில் 

எஸ்.ஸி., எஸ்.டி., ஒ.பி.சி. புறக்கணிப்பு

‘‘கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டுவரை நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 537 நீதிபதிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவர்களில் பழங்குடியினர் (எஸ்.டி.,) 1.3 சதவிகிதத் தினரே!

ஆதிதிராவிடர் (எஸ்.சி.,) 2.8 சதவிகிதத்தினரே!

இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) 11 சதவிகிதத் தினரே!

அதாவது மொத்தம் 100 என்றால்,

அதில், எஸ்.டி., - 1.3 சதவிகிதத்தினர்

எஸ்.சி., - 2.8 சதவிகிதத்தினர்

ஓ.பி.சி. - 11 சதவிகிதத்தினர்.

மக்கள் தொகையில் சுமார் 85 முதல் 90 விழுக்காடு உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ‘சர்வ வல் லமை' பொருந்தியதாகவும், ஜனநாயகத்தில் நம்பிக்கைத் தூணாகவும் விளங்கவேண்டிய நீதித் துறை, உயர்ஜாதி யின் ஏகபோகமாகியுள்ளதால் - சமூகநீதி சவக்குழி நோக்கிப் பயணத்தின் கொடுமையே இது!

எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி.யில் தக்க அறிவும், அனுபவ மும் உள்ள வழக்குரைஞர்கள், மாவட்ட நீதிபதிகள் (From the Bench of the Bar) பஞ்சமே இல்லை - என்றாலும், ‘பட்டை' நாமமா?

100 உயர்நீதிமன்றப் பதவிகளில், மேற்காட்டிய புள்ளிவிவரப்படி,

வெறும் 14 சதவிகிதம் போக, எஞ்சிய 86 விழுக்காடு உயர்ஜாதி, குறிப்பாக பார்ப்பனர்களுக்கே ‘‘தாரை'' வார்க்கப்பட்டதின் பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம்!

அரசமைப்புச் சட்டம்பற்றி நீதிமன்றங்களுக்குக் கவலை இல்லையா?

வயது வந்த (21 வயதைக் கூட 18 ஆகக் குறைத்துவிட்ட நிலையில்) வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களால் உருவாக்கப்படும் அரசுகள் இயற்றிடும் சட்டங்கள் - ஆணைகளை விசாரணைமூலம் செல்லும் - செல்லாது என்று கூறிடும் அதிகார வாய்ப்பு படைத்த உயர்நீதிமன்றத்தில் இந்நிலை இருக்கலாமா? (உச்சநீதி மன்றமோ ‘இதற்கப்பன்' என்பது உலகறிந்த உண்மை- உயர்ஜாதி ஆதிக்கத்தில்! சமூகநீதி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்! கறி சமைக்க உதவாத நிலை தான் அரசமைப்புச் சட்டத்தில் கட்டளை இடப்பட்டிருந் தாலும்கூட இந்த நிலைதான்!)

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒடுக்கப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந் தால்தானே, அம்மக்களது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து, சமூகப் பார்வையோடும், மனிதாபிமானத்தோடும் நீதி வழங்கிடும் வாய்ப்பு ஏற்படும்!

103 ஆவது அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்த எவ்வளவு அவசரம்?

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லுமா - செல்லாதா? என்ற வழக்கினை விசாரித்த அய்ந்து நீதிபதிகளும் உயர்ஜாதி நீதிபதிகள்தானே!

இதுபற்றி ஒருவர் வழக்குமூலம் மனு தாக்கல் செய் துள்ளதும், இது நியாயந்தானா? என்று கேட்டதும்கூட, ஊடகங்களால் இருட்டடிக்கப்பட்டதே!

மாறுபட்ட தீர்ப்பு தந்தவர்கள்கூட, பொருளாதார அடிப்படையை எதிர்த்து, 9 நீதிபதிகள் அமர்வான இந்திரா சஹானி வழக்கில் தந்த தீர்ப்புக்கு விரோதம் என்பதைக்கூட கடைப்பிடிக்கவில்லையே!

புள்ளிவிவரம், ஆதாரங்கள் கேட்கப்பட்டதா?

அதுமட்டுமா?

வன்னியர் மற்றும் சில பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு என்ற சட்டம்பற்றி ஆய்வு செய்தாலோ,

அதேபோல, மும்பை மராத்தியர்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம்பெறும் சட்டம்பற்றி வழக்கு என்றாலோ,

அதற்குரிய புள்ளி விவர சேகரிப்பு எங்கே? என்று கேட்ட உச்சநீதிமன்றம் இந்த EWS 10 சதவிகித உயர்ஜாதி ஏழைகளான- நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் சம்பாதிக்கும் ‘பரம ஏழைகள்'பற்றிய வழக்கில், எந்த அடிப்படையில் ஒன்றிய அரசு 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினைக் கொண்டு வந்து, அவசர அவசரமாக 7, 8 நாள்களில் இரு அவைகளின் ஒப்புதல் - புயல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல், அதைவிட, அதற்கென நிதித் துறையில் தனி ஒதுக்கீட்டுத் தொகை அமலாக்க அறிவிப்பு - இவைபற்றி முணுமுணுப்புக்கூட காட்டவில்லையே!

எருதின் புண் அதனைக் கொத்திச் சுவைக்கும் காக்கைகளுக்குத் தெரியாதே!

இறையாண்மை மக்களிடம்தான்!

ஏன் இந்த இரட்டை அளவுகோல்?

ஒடுக்கப்பட்டோரே, உங்களில் பெரும்பான்மையோர் ஹிந்துக்களாக அல்லாமல் வேறு நாட்டிலிருந்த குதித்த மற்றவர்கள் அல்லவே!

ஹிந்துக்களுக்காக முதலைக் கண்ணீர் விடும், ஹிந்து வாக்கு வங்கியாக அவர்களைக் கருதி, வாக்குச் சேகரிக் கும் வல்லாண்மையாளரே, காவிகளே இதற்கென்ன உங்கள் பதில்!

தூங்கும் புலிகள் எப்போதும் தூங்காது! நினை விருக்கட்டும்!!

ஒடுக்கப்பட்ட மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு!

2024 இல் பதில் சொல்லுங்கள்!

இந்திய அரசமைப்புச் சட்டப்படி இறையாண்மை மக்களிடம்தான், மறந்துவிடாதீர்கள்!

விழிப்படைவீர், சமூகநீதியைப் பெற போராட வாரீர்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

3.1.2023

No comments:

Post a Comment