"தலைமுறை கடந்தும் தந்தை பெரியார்" - நினைவு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

"தலைமுறை கடந்தும் தந்தை பெரியார்" - நினைவு நாள் கருத்தரங்கம்

சென்னை, டிச. 25- தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி "தலைமுறை கடந்தும் தந்தை பெரியார்" என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கமாக 24 .12 .2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

அடுத்த தலைமுறையிடம் பெரியாரை கொண்டு சென்றவர் ஆசிரியர்!

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில்:

தமிழர் தலைவர் ஆசிரியர் இல்லாமல் இன்று இந்த நிகழ்வு நடக்கிறது. ஆசிரியர் இல்லை என்ற குறை இன்றி இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு காரணம், ஆசிரியர்தான். ஆம்,  தந்தை பெரியாருக்கு பிறகு அவரின் கருத்தை, கொள்கையை, இந்த இயக்கத்தை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். அதன் விளைவாக தான் இன்றைக்கு பேசக்கூடிய அனைவருமே அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டக்கூடிய இளைஞர்களாக, பெரியாரைப் பேசக்கூடிய இளைஞர்களாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்து, சிறப்புரையாற்ற வருகை தந்த ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார். நிகழ்வில் பங்கேற்ற சிறப்புரையாளர்களுக்கு மட்டுமின்றி, வருகை புரிந்த அனைத்து தோழர்களுக்கும் உற்சாகத்தை, புத்துணர்வை ஊட்டக்கூடிய வகையில் அவரது உரை அமைந்தது.

பிராமினோக்ரசியை ஒழித்துவிட்டு, உண்மையான டெமாக்கிரசியை உருவாக்குவோம்!

மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தனது தொடக்கவுரையில்;

சரித்திரம் மறைந்த செய்தி தலைவனின் மரணச் செய்தி என்று கவிஞர் கண்ணதாசன் வரிகளுடன் தனது உரையை தொடங்கி, மூத்திர சட்டியை ஏந்தியபடி, பட்டி தொட்டி எங்கும் மூடநம்பிக்கையை ஒழித்து, பகுத்தறிவை பரப்ப, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக பேசிய தலைவர் தந்தை பெரியார் என்றும், மறைந்து 49 ஆண்டுகளுக்குப் பிறகும் சங்கி கூட்டம் யார் பெயரை சொன்னால் அஞ்சுகிறதோ அவர்தான் பெரியார் என்றார். ஆட்சிக்கு போகாமலே ஆட்சி செய்யும் இயக்கம் தான் திராவிடர் கழகம் என்றும், அதற்கு பல சான்றுகளில் ஒன்று தான் சுயமரியாதை திருமணச் சட்டமும், பல பெண்ணுரிமைகள் சட்டமும் என்றார். 

ஜாதி ஒழிப்பு,கடவுள் மறுப்பை பேசி 94 வயது வரை வாழ்ந்த தலைவர் பெரியார் என்றும், சமூகநீதியை, சமத்துவத்தை பேசியதால்தான் தலைமுறை கடந்தும் தந்தை பெரியார் தலைவராக இருக்கிறார் என்றார். சங்கி கூட்டம் ராஜாஜி போல் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லாமல் காமராஜர் போல் ஆட்சி நடத்துவோம் என்று சொல்வதில்தான் காமராஜரின் உழைப்பும், தந்தை பெரியாரின் தொண்டும் இருக்கிறது என்றார். அனைவரும் இந்திய சுதந்திரத்தை பற்றி பேசிய போது தந்தை பெரியார் மட்டும்தான் இந்த மண்ணின் விடுதலையை, மனித விடுதலையை பேசினார் என்றார். ஹிந்தி எதிர்ப்பின் போது நீதிமன்றத்தில் 'உங்கள் விசாரணை நாடகத்தை நிறுத்தி விடுங்கள்' என்று சொல்லும் துணிச்சல் பெரியாருக்கு மட்டுமே இருந்தது என்றும், அன்று தண்டனை கொடுத்த நீதிமன்றமும் நீதிபதிகளும் இன்றைக்கு பெரியாரின் பிறந்த நாளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கச் செய்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றார். 

ஜாதியை ஒழிக்க எல்லா எல்லைக்கும் சென்ற பெரியார், ஜாதியை ஒழிக்க சட்டத்தையே கொளுத்தினார். பெரியார், சட்டத்தை கொளுத்துவேன் என்று சொல்வதற்கு முன்னால் சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்தில் இல்லை என்பதை நினைவுபடுத்தி, அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பேசியதை எல்லாம் வரலாற்று குறிப்புகளோடு எடுத்துரைத்து, சமத்துவ சிந்தனையும், பொதுவுடமைச் சிந்தனையும் தமிழ் மண்ணில் விதைத்தவர் தந்தை பெரியார் என்றும், பெண்களுக்கு சுதந்திரச் சிந்தனையை உருவாக்க பாடுபட்டவர் பெரியார் என்றும், பெரியாருக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் தந்தை, தந்தை பெரியார் தான் என்றார்.ஒரு தலைவர் இருக்கும் போது அந்த கொள்கை இருப்பதைவிட அவர் மறைந்த பிறகும் அந்த கொள்கை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆசிரியர் என்றார். தொடர்ந்து இந்தியாவில் ஆரிய பார்ப்பனர்களின் படையெடுப்பு அதிகமாக இருக்கிறது. அது எந்த வழியிலும் வரும் ஆளுநர் என்ற வழியிலும் வரும். அதை எதிர்த்து நிற்க, பெரியார் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும் என்றும். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழு மைக்கும் பெரியாரை எடுத்துச் செல்ல வேண்டும். பிராமி னோக்கிரசியை ஒழித்து விட்டு உண்மையான டெமோகிர சியை உருவாக்க வேண்டும் என்ற குறிப்போடு நிறைவு செய்தார்.

தந்தை பெரியார் சுயமரியாதையின் குறியீடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் சம உரிமைச் சமூக படைப்பில் என்ற தலைப்பில், தனது உரையில்;  தந்தை பெரியாருடைய நினைவு நாளில் அவரைப் பற்றி பேசுவது என்பது அவருக்கு புகழாரம் செலுத்துவதற்கு அல்ல ; மாறாக அவர் கண்ட புதிய உலகத்தை படைப்பதே ஆகும் என்று தொடங்கி, பெரியார் என்ற தலைவர் சொல்லால், நடவடிக்கையால் மட்டும் ஒருவரை தாழ்த்துவது கூடாது என்று இல்லாமல் உளவியலால் கூட ஒருவர் மற்றொருவரை தாழ்த்தாத, தாழ்ந்த நினைக்காத ஒரு சமதர்ம சமூகம் குறித்து கனவு கண்டார்.அவரது நினைவு நாளில் அவரைப் பற்றி பேசுவது என்பது அவரோடு நெருங்கு வதாக அவரோடு உரையாடுவதாக அமைய வேண்டும் என்றும், மார்க்ஸுக்கு ஏங்கெல்சு எழுதிய இரங்கல் அறிக் கையில் குறிப்பிட்டது போல், மார்க்சுக்கு எதிரிகள் இருந் தார்கள். ஆனால், தனிப்பட்ட விரோதி ஒருவர் கூட இல்லை என்றார். அதை அப்படியே பெரியாரோடு பொருத்திப் பார்க்கிறேன். தனிப்பட்ட முறைகள் பெரியார் என்ற மகத்தான தலைவருக்கு  ஒரு விரோதியோ, ஒரு எதிரியோ இருந்த தில்லை. எதிர் கருத்து உடையவர்கள் கூட பெரியாருக்கு தனிமனித விரோதிகளாக ஒருபோதும் இருந்ததில்லை. மார்க்சை எதிர்த்தவர்களை பட்டியலிட்ட அவர், பெரியாரை அப்படி எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்றார்.

சுயமரியாதை என்றால் என்ன?

பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்றோ, தனிப்பட்ட ஒரு இனத்திற்கு எதிரி என்றோ சுருக்கி விட முடியாது. பெரியார் என்பவர் சுயமரியாதையின் குறியீடு ; சாக்ரடீஸ் தொடங்கி இன்று வரை சுயமரியாதை என்று சொல்ல உலகுக்கு அறிமுகப்படுத்திய தலைவர் தந்தை பெரியார் என்றார். சுயமரியாதை என்றால் என்ன என்பதற்கு பல்வேறு அடுக் கடுக்கான சான்றுகளை கூறி, அய்ரோப்பாவிலும், ரஷ்யா விலும் தோன்றிய அறிவுலகம் இந்தியாவில் தோன்றவில்லை. இங்கே எத்தனை தொன்மை இருந்தாலும் அறிவுலகம் பெரியாருக்கு பின் தான் தோன்றியது என்றும், அதேபோல் எத்தனையோ கருத்துகளை சொன்ன, அறிவியல் கருத்து களை சொன்னவர்கள் கூட கடவுள் மறுப்பை பேச தயங் கினார்கள். டார்வின் கூட கடவுள் மறுப்பை பேச தயங்கிய போது, பெரியார் கடவுள் மறுப்பை வெளிப்படையாக பேசினார் என்றார். தொடர்ந்து, தந்தை பெரியாருடைய கடவுள் மறுப்பு என்பது, அறிவுக்கு தடையாக இருந்ததால் அதை எதிர்த்தார் என்பதை விளக்கி, இன்று ஆளுநருடைய மக்கள் விரோத போக்கை எடுத்துரைத்து ஆளுநர் என்பவர் 'servant to the people'  அவர் மக்களுக்கு சேவை செய்பவர் என்பதை மறந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். இன்றைக்கு இந்தியாவினுடைய கருத்தாக்கத்தை, வளர்ச் சியை கெடுக்கக்கூடிய ஆர்எஸ்எஸ், வரலாறு நமக்கு அளித்த நற்குடையான தந்தை பெரியாரை நெருங்க முடியாது. நெருங்கினால் அழிந்து விடுவார்கள் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

தந்தை மட்டுமல்ல, எங்கள் தாய் பெரியார்!

பெண்ணுரிமை பேரிகையாய் என்ற தலைப்பில் உரை யாற்றிய மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர். சே.மெ. மதிவதனி அவர்கள் தனது உரையில்; தழை அடித்து, பாடம் போட்டு குணப்படுத்தும் நோய் அல்ல இது, ஆழ அறுத்து , கிழித்து, அதட்டி சரி செய்ய வேண்டிய நோய். இதை பேசினால் பெண்களே முகம் சுளிப்பார்கள் என்று தெரிந்தும் தான் நான் பேசுகிறேன் என்று தந்தை பெரியார் அவர்களின் கருத்துடன் தொடங்கினார். தந்தை பெரியார் அவர்கள் நம்மையெல்லாம் செல்ல இளவரசிகளாக வாழ நினைக்கவில்லை மாறாக சுதந்திரமான ராணியாக நாம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். ராணியை போல் கிரீடம் அணிந்து, அழகு பாவையாக, நடக்க தெரியாதது போல் நடந்து, பேசத் தெரியாதது போல் இல்லாமல், ராணி யிலும் சுதந்திரமான ராணியாக இருக்க வேண்டும் என்று பெரியார் விரும்பியதையும், அதனால்தான் அவர் நம் தந்தை மட்டுமல்ல; தாய் பெரியார்;  கொள்கை காதலன், நம்முடைய சிக்கலை, பிரச்சனையை நாம் பேசி தீர்க்கும் இடமாக தோழர் பெரியாராக இருக்கிறார் என்றார். 

தாய்மை உணர்வுதான் உலகத்திலேயே பெரியது

தந்தை பெரியார் எப்போதும் அப்டேட்டட் வெர்ஷன் (updated version)  ஆக இருக்கிறார் என்பதற்கான உதாரணமாக, 1946 -ஆம் ஆண்டு சுலோச்சனா-சம்பத் அவர்கள் திருமணத்தில் பெரியார் பேசிய உரையை விளக்கி, பொதுவாக தாய்மை என்ற உணர்வு தான் உலகத்திலேயே பெரியது என்றும், குழந்தையை காட்டி இங்கே பெண்கள் அடிமைப்படுத்தப்படும் போது குழந்தையை விட, இந்த குடும்பத்தின் வாரிசு என்பதை விட ஜாதி ஒழிப்பு தான் பெண்ணுரிமைக்கான அடிப்படை என்பதை உணர்ந்து சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஒரு மாத கைக்குழந்தையுடன் சிறை சென்ற லால்குடியை சார்ந்த கருஞ்சட்டை வீராங்கனை பற்றி பதிவு செய்தார். பெண்ணிய புரட்சியைப் பற்றி பேசுகிறபோது தந்தை பெரியார் நளாயினிகளாக இல்லாமல், ரஷ்ய புரட்சியில் இருந்து பெரோஸ்கியாவாக இருங்கள் என்று சொன்னதை நினைவு படுத்தி, 2016 பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ என்று பிஜேபி கொண்டு வந்த திட்டத்தையும் அதற்காக 2019 வரை செலவிடப்பட்ட விளம்பரத் தொகை மட்டும் 78.91% என்பதை குறிப்பிட்டு அது ஆரிய மாடல் என்றும், பெண் கல்விக்காக மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்பது திராவிடம் மாடல், அதுவே பெரியார் மாடல் என்றார். கடைசி பெண் அடிமைத்தனத்துடன் இருக்கும் வரை அவர்களை மீட்க கடைசி மனிதன் ஒடுக்கப்படும் வரை இங்கே பெரியார் தேவைப்படுவார், வாழ்வார் என்று கூறி நிறைவு செய்தார்.

களத்தில் மோதி வீரச்சாவு அடைவோமே தவிர, ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு அவர்கள் "ஜாதி ஒழிப்பு சமர் களத்தில்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில்: பெரியார் என்ற வார்த்தை சனாதனிகளை இன்றும் குலை நடுங்க வைக்கிறது என்று தொடங்கி, சனாதனம் எப்படி புரட்சியாளர் அம்பேத்கர் - தந்தை பெரியார் ஆகிய இருவரையும் இரு நிலைகளில் நிறுத்தி, பெரியார் பிற்படுத்தப்பட்டவருக்கான தலைவர் என்றும் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தலைவர் என்றும் பரப்புகின்ற சூழ்ச்சியை செய்கிறது என்பதை விளக்கினார். ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, தேசிய இன விடுதலை என்ற களத்தில் இந்திய அளவில் பெரியாரின் தேவை இன்று இருக்கிறது என்றும், பெரியாருடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றும் நம்மை ஜாதி ஒழிப்புக் களத்தில் ஊக்கப்படுத்துகிறது என்றார். குறிப்பாக, அதிருப்தியும் சோர்வும் தற்கொலைக்கு சமம் என்ற அவரது வார்த்தை ஒவ்வொரு நாளும் அதிருப்தியோடும் சோர்வோடும் இருக்கக் கூடாது என்பதை உணர்த்துகிறது என்றும், தந்தை பெரியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும், ஜாதி ஒழிப்பு சிந்தனையோடும் எப்படி காங்கிரசை விட்டு வெளியே வந்தார் என்றும், ஜாதியை ஒழித்து சமத்துவ கொள்கையை நிலைநாட்டுவதற்கு எதிராக மதம், மத நிறுவனம், கடவுள் என்று எது வந்தாலும் அதை போட்டு உடைத்தார் என்பதை விளக்கி, கடவுள் இல்லை என்ற கடவுள் மறுப்பு வாசகம் பெரியாரால் கொண்டு வரப்பட்டதற்கான அவசியம் ஜாதி ஒழிப்பு தான் என்பதை விளக்கினார். 

சட்ட எரிப்பு போராட்டம்

இந்தியாவிலேயே பெயருக்குப் பின் இருந்த ஜாதிப் பெயரை முதலில் நீக்கிய தலைவர் தந்தை பெரியார் என்றும், ஒரு பெரிய பணக்காரராக ஜாதிய பெருமை பேசும் சமூகத்தில் இருந்தும் கூட இச்செயலை செய்த முதல் தலைவர் அவர்தான் என்றும், 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது' என்ற பெரியாரின் கூற்று இன்றளவும் எவ்வளவு உண்மை என்பதை எடுத்துரைத்தார். ஜாதியை ஒருவன் ஏற்றுக்கொள்கிறான் என்றால் அவன் வர்ணா சிரமத்தை ஏற்றுக் கொள்கிறான் என்று பொருள்; வருணா சிரமத்தை ஏற்றுக் கொள்கிறான் என்றால் சனாதனத்தை ஏற்றுக் கொள்கிறான் என்ற பொருள்; சனாதனத்தை ஏற்றுக் கொள்கிறான் என்றால் இந்துத்துவாவை ஏற்றுக் கொள்கிறான் என்று பொருள் என்பதை விளக்கினார். தொடர்ந்து 1957 சட்ட எரிப்பு போராட்டம் குறித்தும், அதில் உயிர்நீத்த திராவிடர் கழகத் தோழர்கள் குறித்தும் விளக்கி, அரசியல் சட்டத்தில் இருக்கும் மத பாதுகாப்பு உரிமை என்பது எப்படி ஜாதியை பாதுகாக்கிறது என்பதை பெரியாரிய கண்ணோட்டத்தோடு விளக்கி, குறிப்பாக வாளாடி பெரியசாமி என்ற சிறுவனின் துணிச்சலும், ஜாதி ஒழிப்பு களத்தில் இவர்களுடைய வரலாறுகள் எப்படி தன்னை ஊக்கப்படுத்துகிறது என்பதை உணர்ச்சியுடன் பதிவு செய்தார். இன்றைக்கு சனாதனத்தை பாதுகாக்க பிஜேபி அரசு ஜாதியை பாதுகாக்கிறது என்றும், அதற்காக ஜாதி சங்கங்களையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்றார். தந்தை பெரியார் அவர்கள் நமக்கு தந்தை மட்டுமல்ல தாயாக, அண்ணனாக தோழராக இருக்கிறார் என்றும், இன்றைய தமிழ்நாட்டின் ஆளுநர்  சனாதனத்தை தூக்கிப்பிடித்து பேசுகிறார் ஆனால், இது பெரியார் மண், இந்த மண் எப்படி ஜாதிக்கு எதிராக, வரலாற்றில் களமாடி இருக்கிறது என்பதை விளக்கி, களத்தில் மோதி வீரச் சாவு அடைவோமே தவிர, ஒருபோதும் பின் வாங்க மாட்டோம் என்று அரங்கம் நிறைந்த கரவொலியுடன் பதிவு செய்தார். ஆளுநருடைய தொடரும் அட்டூழியங்களையும், அவரது சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் குறிப்புகளுடன் விளக்கினார். இன்றைக்கு ஆர்எஸ்எஸ்-சின் நோக்கம் எவ்வாறு ஒவ்வொரு கிளை அமைப்புகளாக பிரிந்து மக்களை மடைமாற்றம் செய்கிறது என்றும், அந்த மடை மாற்றத்திற்கு இப்போது ஆர்எஸ்எஸ் கையில் எடுத்திருக்கும் ஒரு வழிதான் போலி தமிழ் தேசியவாதிகள், அதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியுடன், சனாதனத்தை வேரறுப்போம் என்று தந்தை பெரியாரின் நினைவு நாளில் சூளுரைப்போம் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

மொழியியல் ஆய்வறிஞர் பெரியார் ! 


மொழி இன உரிமைப் போரில் என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி தலைவர் வழக்குரைஞர் இரா. ராஜீவ் காந்தி உரையாற்றினார். அவரது உரையில்:   இந்தியாவே இந்திய சுதந்திரம் என்ற திருவிழாவில் மூழ்கியிருந்தபோது, ஒவ்வொரு தலைவர்களும் இந்திய சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த வேளையில், சமூக விடுதலைக்காக தந்தை பெரியார் என்ற ஒற்றைத் தலைவர் நின்றார் என்பதை விளக்கி ,  காவிகளை விரட்ட கருப்பும், சிவப்பும், நீலமும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நேரம் எழுந்திருக்கிறது என்றார். மொழி, இன உரிமை என்பதை பெரியார் ஒருபோதும் புனிதமாக கருதி போரிடவில்லை என்பதற்கான பல சான்றுகளை விளக்கினார். குறிப்பாக எப்படி மொழி தோன்றியது என்றால் தமிழில் உள்ள இலக்கணமும் இலக்கியமும் அதற்குள் ஒரு பொய்யை, மூடநம்பிக்கையை பரப்பிய போது, மொழியை பகுத்தறி வோடு ஒப்பிட்டு சிந்தித்த ஒரே தலைவர் தந்தை பெரியார் என்றார். ஒருபோதும் மொழியின் மீது புனிதத்தை கட்ட முடியாது என்றும், பெரியார் என்ற தலைவரின் கொள்கை என்பது "மொழியை வழிபடமாட்டேன்; ஆனால் அதே நேரத் தில் அந்த மொழியில் வழிபடக்கூடிய உரிமை இல்லையென் றால் அதற்காக குரல் கொடுப்பேன்" என்று நின்று, வென்ற களங்களை விளக்கினார். இந்தியா என்ற நாட்டில் நாம் இரண்டாம் தர குடிமக்களாக தான் இருக்கிறோம். அதற்கான சான்று தான் ஹிந்தி ஆதிக்கம் என்றும், எப்படி ரயில் நிலங்களிலே ஹிந்தி ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் இருந்த தந்தை பெரியார் எதிர்த்து நின்றார் என்றும், அதனால் இன் றைக்கு மற்ற மாநிலங்களும் ஹிந்திக்கு எதிராக அணிதிரண்டு இருக்கிறது என்பதையும் விளக்கினார். 

கொடியை கொளுத்துவேன்

ஹிந்தியை திணித்தால், கொடியை கொளுத்துவேன் என்ற பெரியாரின் உறுதிப்பாட்டை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். உரிமைக்காக பெரியார் நின்ற களங்களில், ஒருபோதும் புனிதத்தை பெரியார் பேச மாட்டார்; ஆனால் அதே நேரத்தில் சக மனிதன் என்ற உணர்வோடு தான் அவருடைய எல்லா போராட்டங்களும் அமைந்தது என்பதை விளக்கினார். " பெரியார் இல்லை என்றால்,  இன்றும் தமிழ் மொழி கோவிலில் கற்களுடன் மட்டும் பேசக்கூடிய மொழி யாகவே இருந்திருக்கும்" என்ற மறைமலை அடிகளாரின் வரிகளை நினைவுகூர்ந்து, 1938 இல் ஆழமாக இந்தி எதிர்ப்பை தந்தை பெரியார் ஊன்றியதன் விளைவுதான், இன்றைக்கு குஜராத்தி, ராஜஸ்தானி, போஜ்புரி போன்ற மாநில மொழிகள் அழிவை சந்தித்தது போல் இல்லாமல், தமிழ் மொழி தலை நிமிர்ந்து நிற்கிறது என்றார். சமஸ்கிருதம் என்ற மொழி புனிதம் பேசி அழிந்தது என்றும், அந்த வகையில் சரியாக ஆய்வு செய்து தமிழ் மொழியை காப்பாற்றிய தந்தை பெரியாரை மொழியில் ஆய்வறிஞர் என்று சொன்னாலும் தகும் என்றார். அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் நம் சகோதரர்களை நீ கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன்; ஆனால், அதே நேரத்தில் 1925-இல் வைக்கத்தில் பெரியார் போராட்டம் நடத்தவில்லை என்றால், அதன் விளைவாக திருவாங்கூர் சமஸ்தானம் 'இனிமேல் பொது கோவிலுக்குள் அனைவரும் நடக்கலாம்' என்ற சட்டத்தை கொண்டு வராமல்  இருந்திருந்தால், பெரியாரின் போராட்டத்தின் விளைவாக அனைத்து பொது கோவில்களில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமை பெறப்படாமல் இருந் திருந்தால், இன்றைக்கு யாராவது அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வியை கேளுங்கள் என்றார்.

பெரியாரின் வைக்கம் போராட்டம்

அம்பேத்கரின் மகர் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத் திற்கே அடிப்படையாக அமைந்தது தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் என்றும், வழிபடும் உரிமை, தொழும் உரிமை என்று அனைத்து களத்திலும் நின்று, வென்றவர் தந்தை பெரியார் என்றார். அரசியல் சட்டத்தில் இருக்கும் இந்தி மொழிக்கான உரிமைகள் அனைத்து மொழிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனை களையும், இந்தியாவின் மாநில சுயாட்சி என்றும், மொழி உரிமை என்ற நிலையில் பெரியார் என்ற வெடிகுண்டை விதைத்திருக்கிறோம் அது நிச்சயம் வெடிக்கும் என்று அரங்கம் நிறைந்த கர ஒலியுடன் பதிவு செய்தார். கடந்த வாரம் இந்தியா டுடே நாழிதளில் வெளிவந்த தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலம் என்ற செய்தியை நினைவுப்படுத்தி, தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் தனிமனித வளர்ச்சி மட்டும் அல்ல, சமூக விடுதலை என்ற  திராவிடத்தின் குறிக்கோள்; அதற்கு வித்திட்ட தலைவர் பெரியார் என்றார். பெரியார் ஒருபோதும் நம் மொழி மூத்த மொழி, நாம் மூத்த குடி என்பதற்காக அதனை பாராட்டிப் பேசவில்லை. மாறாக, மொழி, இனம் எதுவாய் இருப்பினும் அது மூத்த மொழியாக, மூத்த குடியாகவே இருந்தாலும், அதற்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய மனிதர்கள் அனைவரையும் சமமாக, சமத்துவத்துடன் நடத்த வேண்டும் என்ற பெரியாரின் கருத்துகளை நாம் மனதில் பதிவு செய்து, மொழி உரிமையை, இன விடுதலையை  தந்தை பெரியாரின் உறுதி நினைவு நாளில் முன்னெடுத்துச் செல்வோம் என்ற நிறைவு செய்தார்.

2ஜி, 3ஜி ,4ஜி ,5ஜி என்று அனைத்து அலைவரிசையிலும் பெரியார் சென்றடைந்திருக்கிறார்!

தலைமுறை கடந்தும் தந்தை பெரியார் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தை சிறப்பாக வழிநடத்தி, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் தலைமை உரை ஆற்றினார். அவரது உரையில்; காலையில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அனைத்து தலைமுறையினரும் பங்கேற்ற விதத்தை விவரித்து, 2ஜி 3ஜி 4ஜி 5ஜி என்று அனைத்து அலைவரிசை யிலும் பெரியார், தலைமுறை கடந்து சென்றடைந்து இருக் கிறார் என்றார். பெரியார் இன்றும் எப்படி அனைத்து தலை முறைகளும் பரவி இருக்கிறார் என்பதற்கு சான்று சுய மரியாதைத் திருமண நிலையத்தில் நாள்தோறும் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களே என்றும், மொத்தம் 365 நாட்களில் 762 சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றிருக் கிறது என்பதினை பட்டியலிட்டு,  அதில் ஜாதி மறுப்பு, மணமுறிவு பெற்றோர், துணை இழந்தோர், பார்ப்பனர்கள் உட்பட எத்தனை  சுயமரியாதை திருமணங்கள் நடைபெற்றி ருக்கிறது என்பதை எண்ணிக்கையுடன் குறிப்பிட்டார். பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் செய்து கொண்டிருக்கும் செயல் ஒரு அமைதிப் புரட்சி என்றார். வைக்கம் போராட்டத்தைப் பற்றி சொல்கிறபோது அதுவே முதல் மனித உரிமை போராட்டம் என்றும், பெயருக்கு பின்னால் ஜாதிய பெயர் இல்லாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு நிற்கிறது என்பதோடு, இன்றளவிலும் புத்தக கண்காட்சிகளில் அதிக அளவில் விற்பனையாகும் புத்தகம் பெரியார் எழுதிய புத்தகங்களாகவே இருக்கிறது என்பதை பதிவு செய்தார். 

நான் ஒரு கருத்தாளன்

பெரியார் எழுத்தாளர் மாநாட்டில் தன்னை அறிமுகம் செய்த போது, நான் ஒரு பேச்சாளர் அல்ல; எழுத்தாளன் அல்ல; நான் ஒரு கருத்தாளன் என்று குறிப்பிட்டதையும், அத்தகைய கருத்தாளர் பெரியாரின் கருத்துக்கள் எந்த அளவிற்கு இளைய தலைமுறை இடத்தில் பரவி இருக்கிறது என்பதை விளக்கினார். பெரியாருடைய தொலைநோக்கின் உச்சமாக இனிவரும் உலகத்தில் குழந்தை பிறப்பை பற்றி பெரியார் விவரித்ததையும், ஆண் பெண் சேர்க்கை இல்லாமல், பெண்கள் சிரமப்படாமல் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை அறிவியல் இன்றைக்கு எப்படி வழங்கியுள்ளது என்றும், பெர்லினில் இயங்கும் நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதை  விளக்கினார். தன்னுடைய நண்பர், 'இன்றைக்கு பெரியார் இருந்திருந்தால் ஆப்கானிஸ் தான் பெண்களுக்கு போராடக்கூடிய ஒரே தலைவராக இருந்திருப்பார் ' என்று சொன்ன செய்திகளை நினைவுகூர்ந்து, உலகம் முழுமைக்கும் பெரியார் தேவை; இன்றைக்கு திராவிடம் ஆடல் ஆட்சி பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து, பெரியாரு டைய கருத்துகள் எப்படி கிராம சீர்திருத்தம் வரை சிந்தித்தது என்றும், மறைந்த குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் றிஹிஸிகி என்ற திட்டத்தை கொண்டு வந்த போது, தமிழர் தலைவர் ஆசிரியர் தந்தை பெரியார் 60 ஆண்டு களுக்கு முன்பே அதை பற்றி எழுதியதை பதிவு செய்ததையும், இன்றும் தஞ்சை பெரியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் 67  கிராமங்களை தத்தெடுத்து சீர் செய்யும் பணியையும் விளக்கினார். பிஜேபி, ஆர்எஸ்எஸ் போன்ற எதிரிகள் என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும், பெரியாரின் பேரன்களும் பேத்திகளும் அதை முறியடிப்பார்கள் என்றும், தலைமுறை கடந்தும் பெரியார் நிற்பதற்கான ஒரு செயல் திட்டம் தான் திருச்சி சிறுகனூரில் அமைய இருக்கும் பெரியார் உலகம் என்று ஆழமாக பதிவு செய்து நிறைவு செய்தார்.

கருத்தரங்கத்தை தென் சென்னை இளைஞரணி பொறுப்பாளர் சண்முகப்பிரியன் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தொணடறம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இளைஞர் அணி பொறுப்பாளர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நன்றி கூறினார்.

தொகுப்பு: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி


No comments:

Post a Comment