இரண்டு, மூன்று பார்ப்பனர்களால் முடக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

இரண்டு, மூன்று பார்ப்பனர்களால் முடக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும்!

தமிழ்நாட்டிலுள்ள அத்துணைக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதனை வலியுறுத்துவதே தந்தை பெரியாரின் நினைவு நாள் சூளுரை!

திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் பேட்டி

திண்டுக்கல், டிச.25 இரண்டு, மூன்று பார்ப்பனர்களால் முடக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும்! தமிழ்நாட் டிலுள்ள அத்துணைக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதனை வலியுறுத்துவதே தந்தை பெரியாரின் நினைவு நாள் சூளுரை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (24.12.2022) திண்டுக்கல்லுக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பகுத்தறிவுப் பகலவனின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

பேராயுதமாக தந்தை பெரியார் நின்று கொண்டிருக்கிறார்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஒரு பேராயுதம். இன்றைய மதவெறி, ஜாதி வெறி, பதவி வெறி போன்ற வெறிகளையெல்லாம் தீர்க்கக் கூடிய களத்தில் நின்று, இளைஞர்கள் கையில் ஒரு மிகப் பெரிய பேராயுதமாக தந்தை பெரியார் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார். அதன் விளைவாக, அவர்கள் உடலால் வாழ்ந்த காலத்தைவிட, உணர்வால் நிறைந்த காலமாக இந்தக் காலம் ஆகியிருக்கிறது.

பெரியார் தத்துவங்களைக் கண்டு  இன எதிரிகள் மருளுகிறார்கள்!

இன்று தந்தை பெரியார் அவர்களுக்கு 49 ஆம் ஆண்டு நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பே தவிர, அனைவருமே பெரியாரை மறக்காத வர்கள் என்பதுதான் இன்றைய நிலை.

இன எதிரிகள்  பெரியாரை கண்டு பயப்படு கிறார்கள்; பெரியார் சிலையைக் கண்டே அவர்கள் அஞ்சக்கூடிய அளவில் இருக்கிறார்கள். பெரியார் தத்துவங்களைக் கண்டு அவர்கள் மருளுகிறார்கள்.

காரணம், பெரியார் எப்பொழுதும் வெல்வார்!

வென்றார் என்பதைவிட, வெல்வார் என்பது மிக முக்கியம்.

அதற்கு ஒரு சிறு உதாரணம் -

தென்மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பயன் பெறக் கூடிய  ஒரு திட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்.

யு.பி.ஏ. என்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்ற நிலையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்தனர்.

 வேலை தேடி அலைகின்ற இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும்

அந்தக் கால்வாய்த் திட்டம் முடிவுற்று, திறக்கப் பட்டு இருக்குமேயானால், தமிழ்நாட்டில் தென்மாவட் டங்களில் உள்ள வேலை கிட்டாமல், வேலைத் தேடி அலைகின்ற இளைஞர்களுக்கு வேலை கிடைத்தி ருக்கும். மிகப்பெரிய அளவிற்கு தென்மாவட்டங்கள் பயன்பெற்று இருக்கும்.

இரண்டு, மூன்று பார்ப்பனர்களால்  சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டது

கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியினால், ஒன்றிய அரசினால் அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. மதுரையில்தான் அத்திட்டத்தினுடைய தொடக்க விழாவினை நடத்தினார்கள். சுமார் 2 ஆயிரம் கோடி களுக்குமேல் செலவழிக்கப்பட்டது. வேண்டுமென்றே 2, 3 பார்ப்பனர்கள் சேர்ந்துகொண்டு கற்பனையாக, ''இராமர் பாலம் அங்கே இருக்கிறது; அதை இடிக்கக் கூடாது'' என்று சொல்லி அந்தத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைப் போட்டனர்.

சுண்ணாம்புப் பாறைகள் இருந்த அந்தப் பகுதியை, ராமர் பாலம் என்று சொல்லி, பா.ஜ.க. மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருக்கக்கூடிய பார்ப்பனர் களின் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி அந்தத் திட்டத்தை நிறுத்தினார்கள்.

அதற்குப் பிறகுகூட,  அந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்காக குறிப்பிட்ட இடத்தை மட்டும் விட்டு விட்டு, அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்கள் சொல்லியும்கூட,

இன்றைய வரையில் அதை நாங்கள் செய்வோம் என்று, இன்றைக்கு ஒன்றிய அமைச்சராக இருக்கக் கூடிய நிதின்கட்காரி அவர்கள் உறுதிமொழி கொடுத் தும்கூட, இன்றுவரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல்!

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, அத்துறை சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது, "ராமர் பாலம் அங்கே இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது'' என்று தெளிவாகவே சொல்லிவிட்டார்.

எனவே, இராமன் பாலம் என்ற இல்லாத ஒன்றை காரணமாகக் காட்டி, இவ்வளவு பெரிய திட்டத்தைப் புறக்கணித்தது என்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக - தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடாது என்பதற்காக முடக்கப்பட்ட திட்டம் அது.

அந்தத் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றவேண் டும் என்று தந்தை பெரியார் நினைவு நாளில் கோரிக்கையாக வைக்கின்றோம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை  ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும்

அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள அத்துணைத் தோழமைக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும் என்பதை வலி யுறுத்திடவேண்டும். இதனை தந்தை பெரியார் நினைவு நாளில் சூளுரையாக, எல்லோருக்கும் வேண்டுகோளாக திராவிடர் கழகம் வைக்க விரும்புகிறது.

அதற்காகப் போராட்டங்களை நடத்துவதும், அப் போராட்டத்திற்காக அனைவரையும் ஒருங்கிணைப் பதுதான் அடுத்த ஆண்டினுடைய வேலைத் திட்டம் என்று கூறி முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment