பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,நவ.16- தமிழ்நாட்டின் டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் உடனடி கோரிக்கையான பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நீட்டிப்பது குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். வடகிழக்கு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தேன். செப். 15ஆம் தேதி முதல் தொடங்கிய சம்பா, தாளடி, பிசானம் ஆகிய சிறப்பு பருவத்தில், விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான பதிவை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி  தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது சேவை மய்யங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயிர் காப்பீட்டுக்கான பதிவினை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை. அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்துவருவதாலும், வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களாலும் அவர்கள் காப்பீட்டு பதிவை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே பயிர் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 15 என்ற காலவரம்பை 30ஆம் தேதி வரை நீட்டிக்கும்படி, டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை நவம்பர் 15-இல் இருந்து 30ஆம் தேதி வரை நீட்டிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா 

சென்னை,நவ.16- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய்த்துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு வருவாய்த்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 

கடந்த ஏப்.21ம் தேதி சட்டப்பேரவையில், "வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க ஏதுவாக வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஏற்கெனவே,1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில், மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும், அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என பூர்த்தி செய்யும் பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில், முப்படைகள், துணை ராணுவப் படைகளில் பணியில் இருந்தபோது போரில் உயிரிழந்தவர்கள், செயலிழந்தவர்கள் குடும்பத்தினர், 1976ஆம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்பு சட்டப்படி விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் நிலமற்ற ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற மற்றும் கைம்பெண்கள், முன்னாள் ராணுவப் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளில் புணியாற்றியவர்கள், இதர அடிப்படை தகுதிகளை பெற்ற பயனாளிகள் ஆகியோருக்கு பட்டா வழங்கலாம். 

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment