‘குஜராத் மாடல்' தொங்கு மாடல் - ‘திராவிட மாடல்' தங்கு மாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

‘குஜராத் மாடல்' தொங்கு மாடல் - ‘திராவிட மாடல்' தங்கு மாடல்!

கோபிச்செட்டிப்பாளைத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

கோபிச்செட்டிப்பாளையம், நவ.22 ‘குஜராத் மாடல்' தொங்கு மாடல் - ‘திரா விட மாடல்' தங்கு மாடல் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

இன்று (22.11.2022) கோபிச்செட்டிப்பாளையத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 

திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்ன?

செய்தியாளர்: கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணிக்குத் திராவிடர் கழகத்தின் பங்களிப்பு பெருமளவில் இருந் தது. அதேபோன்று சட்டமன்றத் தேர்தலிலும் இருந்தது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்ன?

தமிழர் தலைவர்: இதுவரையில் இருந்த பங்களிப்பை விட, திராவிடர் கழகம் போன்ற, முற்போக்குச் சிந்தனை யுள்ள, கொள்கை  உள்ள கட்சிகள், இதைவிட தீவிர மாக உழைக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் மக்கள் உள்பட அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் அவர்கள், நிச்சயமாக 

வெற்றிக் கனியைப் பறித்துக் காட்டுவார்

அந்த வகையிலே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்த லில், மிகப்பெரிய வெற்றியை நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகரான மு.க.ஸ்டாலின் அவர்கள், நிச்சயமாக வெற்றிக் கனியைப் பறித்துக் காட்டுவார்.

ஏனென்றால், அவருடைய உழைப்பு என்பது கடு மையானது மட்டுமல்ல, அவருடைய சாதனை என்பது, பிற மாநிலத்தவர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ளவர்கள் போற்றக்கூடிய அளவிற்கு இருக்கிறது - கட்சிகளுக்கு அப்பாற்பட்டு.

அதையும் தாண்டி, உலக அளவில் அவர்கள் பல இடங்களுக்குச் செல்லும்பொழுது, அது தொழிற் துறையாக இருந்தாலும், மற்ற துறைகளாக இருந்தாலும், அவருடைய செயல்பாடுகளைக் கண்டு வியக்கிறார்கள்.

அவர் ஓய்வறியாது உழைப்பவர் மட்டுமல்ல, தன்னு டைய உடல்நலத்தைப்பற்றி கவலைப்படாது, மக்கள் நலனைப்பற்றி கவலைப்படக் கூடியவர்.

இதனை நன்றாக மக்கள் உணர்ந்து கொண்டிருக் கின்ற காரணத்தினால், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி என்பது மிக அதிகமான அளவிற்கு இருக்கும். ஆனால், அதற்காக அலட்சிய மாக, எங்கள் கூட்டணிக் கட்சிகளோ, நாங்களோ இல்லை.

வன்முறையைக் காட்டி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள்.

காரணம் என்னவென்றால், பா.ஜ.க.விடம் ஏராள மான பண வசதி இருக்கிறது. தாராளமாக அவர்கள் செலவழிக்கிறார்கள். காரணம், அம்பானிகளும், அதானிகளும் அங்கேதான் இருக்கிறார்கள்; இது எல் லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

அந்த வகையிலே, ஒரு பக்கம் பண பலம்; இன்னொரு பக்கம் பத்திரிகை பலம். இன்னொரு பக்கம் கூலிப் படைகள் போன்று பல படைகளைச் சேர்த்துக் கொண்டு, வன்முறையைக் காட்டி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள்.

எதைக் காட்டினாலும், தமிழ்நாட்டில் ஒருபோதும் அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. அது வெறும் கானல்  நீர் வேட்கையாகத்தான் அமையும் என்பது உறுதி.

காரணம், என்னதான் இவர்கள் காசி யாத்திரை போனாலும் சரி, அல்லது வேறு எந்த யாத்திரையை மேற்கொண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

அவர்களுடைய வித்தைகளை நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்ற மண் பெரியார் மண்

பா.ஜ.க.வி னுடைய மயக்க பிஸ்கெட்டுகளுக்கு, தமிழ்த் தூண்டில், இவற்றையெல்லாம் கண்டு, தமிழர்கள் கொக்கிகளில் மாட்டிக்கொள்வார்கள் என்று வித்தைகள் செய்கிறார்கள்; அவர்களுடைய வித்தைகளை நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்ற மண் பெரியார் மண்.

இன்னும் கடுமையாக உழைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், வேறு சில எதிர்க்கட்சிகளாக இருக்கிறவர்களை அவர்களை தமிழ்நாட்டில் விட்டு பேச வைத்திருக்கிறார்கள்.

2024 இல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வரும் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கின்றார்கள் என்றால்,அது அவர்களுடைய ஆசையாக இருக்கிறது என்பது ஒரு பக்கத்தில் இருந் தாலும், இன்னொரு பக்கத்தில், அவர்கள் யாருக்காகப் பேசுகிறார்கள், அது எப்படி வரும்? மக்கள் அளித்த நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கின்ற ஓர் ஆட்சி, இரண் டாண்டுகள் நடைபெறக்கூடிய சூழ்நிலையில், அந்த ஆட்சியை அய்ந்தாண்டுகாலம் நடக்கவிடக் கூடாது என்கிற திட்டத்தை அவர்கள் வகுத்துக் கொண் டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சமூகநீதிக்கு வேட்டு வைக்கக் கூடிய அளவிற்கு, கண்ணிவெடிகளை வைத்திருக்கிறார்கள்

அதேபோல, சமூகநீதிக்கு வேட்டு வைக்கக் கூடிய அளவிற்கு, கண்ணிவெடிகளை வைத்திருக்கிறார்கள். அதுதான் உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர் களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு.

இப்படி எல்லாத் துறைகளிலும் அவர்கள் பதிவு செய்துகொண்டிருப்பதை, தமிழ்நாட்டு மக்கள், கிராம மக்கள் உள்பட, மாணவர்கள், இளைஞர்கள் ஒவ் வொருவரும் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவேதான், இவர்கள் என்னதான் வித்தைகள் செய்தாலும், அந்த வித்தைகள் ஒருவேளை வட மாநிலங்களில் பலித்தாலும் பலிக்கலாம்; அங்கும் பிரச் சினைகள் இருக்கின்றன. அந்த வித்தைகள் இங்கே எடுபடாது.

‘குஜராத் மாடல்' தொங்கு மாடல் - 

‘திராவிட மாடல்' தங்கு மாடல்!

இன்னுங்கேட்டால், குஜராத்தில் இப்பொழுது அந்த வித்தைகள் எடுபடுமா? என்பது சந்தேகம்தான்.

‘குஜராத் மாடலே' அங்கு தொங்கு மாடலாக இருக்கிறது.

‘திராவிட மாடல்' இங்கே தங்கு மாடலாக இருக்கிறது, ஆகவே, வெற்றி என்பது நிச்சயம்!

கருநாடகா குண்டுவெடிப்புப் பற்றி வாய் திறக்கமாட்டேன் என்கிறாரே அண்ணாமலை

செய்தியாளர்: தமிழ்நாட்டில், கோவையில் நடத்தப் பட்ட கார் வெடிகுண்டு குறித்து, தமிழ்நாடு உளவுத் துறை தோல்வி அடைந்துவிட்டது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொன்னார். கருநாடகாவில் இரண்டு நாள்களுக்கு முன்பு வெடிகுண்டு வெடித்திருக்கிறது; அங்கே பா.ஜ.க.தான் ஆளுங்கட்சியாக இருக்கிறது; அங்கே உளவுத் துறை தோல்வி அடைந்துவிட்டது என்று வாய் திறக்கமாட்டேன் என்கிறாரே!

தமிழர் தலைவர்: கருநாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால், அது தீவிரவாதத்திற்குத் துணை போகிற ஆட்சியாக இருக்கிறது என்று சொல்வாரா? இங்கே தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில், ஒரு நாளைக்கூட வீணாக்காமல், அந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வை நடத்தியது யார் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்; உட னடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக் கிறார்கள். ஒன்றிய அரசினுடைய துறையில் எப் பொழுது எந்தத் தகவல்கள் சேர்க்கப்படவேண்டுமோ, அதை செய்திருக்கிறார்கள்.

இல்லை, இல்லை, மூன்று மாதங்களுக்கு முன்பே கடிதங்கள் எல்லாம் வந்தது; அப்பொழுது முதலமைச்சர் என்ன செய்தார்? என்று அரைவேக்காடு அண்ணாமலை அவர்கள் சொன்னார்.

ஆனால், அண்ணாமலை அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி, இதே கடிதம், இதே சுற்றறிக்கை, உள்துறையில் இருந்து கருநாடகத்திற்குப் போகவில்லையா? அப்படி என்றால், கருநாடக பா.ஜ.க. முதலமைச்சர் அதனை அலட்சியப்படுத்தினாரா? தமிழ்நாடு முதலமைச்சர்தான் அலட்சியப்படுத்தினாரா?

அங்கே குண்டுவெடிப்பு நடந்திருக்கின்றபொழுது, அதற்கு வேறு வகையான உத்தரவு. காரணம், ‘‘நாங்கள் ஆண்டால், எங்கள் இஷ்டப்படி ஆள்வோம்'' என்பது தானே! 

எதிர்க்கட்சிகள் எவ்வளவு  அநியாயமாக நடந்து கொண்டாலும், டிஜிபியை உடனடியாக நிகழ்விடத்திற்கு அனுப்பினார் முதலமைச்சர்; ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கவில்லை அவர். அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்பொழுது, நியாயத்தைப் பேசாமல், வேறு எதையோ திசை திருப்பக் கூடிய அளவிற்குப் பேசுவதா?

உண்மையை பேசுவதில்லை என்று அண்ணாமலை உறுதியெடுத்துக் கொண்டிருக்கின்றார்

அவர்களைப் பொறுத்தவரையில், உண்மைக்கும், அண்ணாமலை அவர்கள் பேசுவதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அதற்கு ஒரு சிறு உதாரணம், அவர் ஓர் அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்திருக்கிறார் என்று சொன்னீர்கள், அவ்வளவு பொறுப்புள்ள ஒருவராக இருந்துகொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் ‘மிசா' கைதியாக சிறைச்சாலைக்குச் செல்லவில்லை என்று சொல்லுகிறார் என்றால், உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இஸ்மாயில் ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் விசாரணை நடத்தி, நாங்கள் எல் லாம் எப்படி தாக்கப்பட்டோம் என்பது குறித்து 120 பக்கம் அறிக்கை கொடுத்த ஒன்றையே அவர்கள் மறந்துவிட்டு, வசதியாக மறைத்துவிட்டு, மிசா கைதியே இல்லை என்று சொல்லத் துணிந்திருக்கிறார் என்றால், இதேபோன்றுதான், உண்மையை பேசுவதில்லை என்று அவர் உறுதியெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் - திராவிடர் கழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

செய்தியாளர்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக் கின்ற உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கண்டித்து, போராட் டங்களை நடத்துவீர்களா?

தமிழர் தலைவர்: முதலமைச்சர் அவர்கள் உடன டியாக அரசியல் கட்சிகளை அழைத்து கடந்த 12 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மறு சீராய்வு மனு போடுவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுத்தார்.

சட்டமன்றத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சிகள் அல்லாது, அதைத் தாண்டியும், மற்ற சமூக அமைப்புகளில் உள்ள ஒத்த கருத்துள்ளவர்களை, இட ஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்பு களை எல்லாம் அழைத்து திராவிடர் கழகம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கடந்த 15 ஆம் தேதி. கூட்டி, தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை வரவேற்றுள்ளது. 

அந்தக் கூட்டத்தில் சட்டப் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும் நடத்துவது என்றும் முடி வெடுத்தது.

அதற்கடுத்து தொடர்ந்து பிரச்சாரங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

1950 ஆம் ஆண்டு வகுப்புரிமைச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, எப்படி ஒரு பெரிய நாடு தழுவிய பரவலான அறப்போர் நடந்ததோ, தந்தை பெரியார் காலத்தில். அதுபோல், அதையும் தாண்டி, இப்பொழுது திட்டமிட்டு இந்தப் பிரச்சாரத்தை நடத்துவோம்.

ஒரு பக்கத்தில் சட்ட முனையில் போராட்டம்; இன்னொரு பக்கத்தில் மக்களை நோக்கிய போராட்டம்!

ஒரு பக்கத்தில் சட்ட முனையில் போராட்டம்; இன் னொரு பக்கத்தில் மக்களை நோக்கிய போராட்டம். சமூகநீதி காப்பாற்றப்படுகின்ற வரையில், இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக இருக்கும்.

முன்பு இல்லாத விழிப்புணர்வு இப்பொழுது இருக் கிறது.தந்தை பெரியார் காலத்தில், வடபுலத்தில்இருந்த வர்களுக்கு, வகுப்புவாரி உரிமையினுடைய முக்கியத் துவம்தெரியாமல்இருந்தது. ஆனால், மண்டல்கமிசன் வந்த பிறகு, அகில இந்தியா முழுவதும் உள்ள ஒடுக் கப்பட்ட மக்களுடைய உரிமைகளைப்பற்றி சிந் திக்கக் கூடிய அளவிற்குப் பரவலான ஒரு தெளிவு இருக்கிறது.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள், சமூகநீதிக் கான ஓர் அமைப்பை அகில இந்திய அளவில் உருவாக்கி இருக்கின்ற காரணத்தினால், நிச்சயமாக அதைச் செய்வார்கள். செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, இது ஒரு அனைத்திந்திய சமூகநீதிப் போராட்டமாகும். காரணம் என்னவென்றால், சமூகநீதி யைப் பல வகைகளில் பறிக்கிறார்கள்.

தனியார்த் துறையில் 

இட ஒதுக்கீடு கிடையாது!

ஒரு பக்கத்தில் 10 சதவிகிதம் என்கிறார்கள்; இன்னொரு பக்கத்தில், மோடி தலைமையில், 

ஆர்.எஸ்.எஸ். ஆட்சி வந்தவுடன், அவர்கள் செய்த மிக முக்கியமான காரியங்களில், எவையெல்லாம் தேசிய மயமாக்கப்பட்டு, நாட்டுடைமையாக்கப்பட்டதோ, அந்த நாட்டுடைமையாக்கப்பட்ட பொது நிறுவனங்கள் எல்லாம், வங்கிகளாக இருந்தாலும், மற்ற மற்ற துறைகளாக இருந்தாலும் தனியார் துறைக்கு, தனிப்பட்ட முதலாளிகள் வசம், கார்ப்பரேட் முதலாளிகள்வசம் போகிறது என்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி, சமூகநீதியை அது வெகுவாகப் பாதிக்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது. பொதுத் துறை என்றால், இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும்.

அதனால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., என்று சொல்லக் கூடிய, ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஆதிதிராவிட மக்கள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள் ஆகியோருக்கு வாய்ப்பில்லாத அளவிற்கு அவர்கள் ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

வாய்ப்பில்லாததோடு மட்டுமல்ல, தனியார் முதலா ளிகள் கைகளில் அது போகின்றபொழுது, அவர்கள், இவர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். காரணம், அங்கு இட ஒதுக்கீடு இல்லை, அந்த உரிமை இல்லை என்பதினால்தான்.

எனவேதான், நாம் பெற்றது குறைவானது;  அதை யும்கூட பறிப்பதற்குத்தான் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது.

அனைத்திந்திய அளவிலே ஏற்பாடுகள்!

ஆகவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதற்கு ஒரு பெரிய இயக்கத்தை, இதோடு இணைத்து, சமூகநீதியினுடைய பல பரிமாணங்களில், பல்முனைத் தாக்குதல்களில் அதுவும் ஒன்றாக இன்றைக்கு இருக்கின்ற காரணத்தினால், அதையும் செய்வதற்கு அனைத்திந்திய அளவிலே ஏற்பாடுகள் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்றன.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

No comments:

Post a Comment