தாராபுரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

தாராபுரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 ராகுல் காந்தியின் நடைப் பயணத்தைக் கண்டு நடுங்கிப் போயிருக்கிறார்கள்!

குஜராத்தில் ‘‘வித்தைகளை காட்டி''னால்தான், பா.ஜ.க.வினரால் வெற்றி பெற முடியுமே தவிர,

மக்களுடைய பேராதரவினால் அவர்களால் வெற்றி பெற முடியாது!

தாராபுரம், நவ.24 பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தோர்  பல வித்தைகளைக் காட்டுகிறார்கள். ‘அற்புதங்கள்' நடந்தால்தான் குஜராத்தில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களுக்கே தெரியும் சில  ‘அற்புதங்களை', வித்தைகளை எப்படி நடத்துவது என்று. இப்படி செய்தால்தான் அவர்கள் வெற்றி பெற முடியுமே தவிர, மக்களுடைய பேராதரவினால் அவர்களால் அங்கே வெற்றி பெற முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (23.11.2022) தாராபுரத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற இயக்கம் திராவிடர் கழகம்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தாராபுரம் நகருக்கு வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தந்தை பெரியார் அவர்களுடைய 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அதேபோல, அண்மையில் சமூகநீதிக்கு ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்துகள் இவற்றைபற்றியெல்லாம் தெளிவாக விளக்கிட, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற் படுத்துகின்ற இயக்கமான திராவிடர் கழகமும், அதனுடைய தோழமை கட்சிகளும் இணைந்து இன்றைக்கு ஒரு சிறப்பான பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாராபுரத்திற்கு  வந்திருக்கிறேன். செய்தியாளர்கள், ஊடகவிய லாளர்களான உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இன்றைக்கு சமூகநீதி, இட ஒதுக்கீடு என்பதற்கு மிகப்பெரிய ஆபத்து

இன்றைய தினம், காலங்காலமாக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந் தலைவர் காமராசரும், அதேபோல, நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் மிகப்பெரிய அளவிற்கு அரும்பாடுபட்டு, நீதிக்கட்சி காலத்திலிருந்து ஏற்பாடு செய்த சமூகநீதி, இட ஒதுக்கீடு என்பதற்கு மிகப்பெரிய ஆபத்துகள் இன்றைக்கு சூழ்ந்திருக்கின்றன. அந்த ஆபத்தினை மக்களிடம் உணர வைக்க வேண்டும். ஏற்கெனவே நம்முடைய கல்வி உரிமைகள், நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

ஆளுநர் மூலமாக அவர்கள் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்கள்

அப்படிப்பட்ட சூழ்நிலையில், மேலும் மேலும் அடிமேல் அடி என்பதைப்போல, மாநில உரிமைகளைப் பறித்துக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ஓர் அரசு, அதனுடைய பணிகளை, மசோதாக்களை நிறை வேற்றுவதன்மூலமாக, புதிய சட்டங்களைக் கொண்டுவருவதன்மூலமாக,நல்லாட்சிநடத் துவதற்குவாய்ப்பை அளிக்காமல்,ஆளுநர் மூலமாக அவர்கள் ஒரு போட்டி அரசாங் கத்தை நடத்தக்கூடிய சூழலும் இன்றைக்கு இருக்கின்றகாரணத்தினால்,இவற்றைப்பற்றி யெல்லாம் அரசமைப்புச் சட்ட ரீதியாக நடக்கவேண்டியவர்கள், அதற்குப் புறம் பாக,முரணாகஎப்படிநடக்கிறார்கள்என்பதை விளக்குவதற்காகத்தான் மாலை பொதுக்கூட்டம்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வரு வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. எங்களுடைய கழகத் தோழர்களும் சரி, தோழமைக் கட்சியினரும், தி.மு.க. தோழர்களும் சரி எல்லோரும் எனக்கு உற்சாகமான வர வேற்பினை அளித்திருக்கிறார்கள்.

2014 இல் சொன்ன உறுதிமொழி 

என்னாயிற்று?

செய்தியாளர்: ஒன்றிய அரசின் சார்பில், 71 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப் பதாகச் சொல்லியிருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுபோன்று சொல்லியிருக்கிறார்கள். ஏற் கெனவே மோடி அவர்கள், 2014 இல் சொன்ன உறுதிமொழி, ஓராண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொல்லித்தான் பதவிக்கு வந்தார்.

2 கோடியை எட்டால் பெருக்கினால் 16 கோடி. 

16 கோடியை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், இப்பொழுதுதான் இதைத் தொடங்கியிருக்கிறார். 

16 கோடியில் 71 ஆயிரத்தை கழித்து விட் டால், மீதம் உள்ள கணக்குப்படி 2024 ஆம் ஆண்டுக்குள்ளாவது அவர் சொன்ன வாக் குறுதிப்படி வேலை வாய்ப்பைக் கொடுப்பாரா?

அதைவிட இன்னும் ஒரு செய்தி, காங்கிரஸ் ஆட்சி 60 ஆண்டுகாலத்தில் சாதிக்காததை நான் அய்ந்தே ஆண்டுகளில் சாதித்துக் காட்டுவேன் என்று சொல்லித்தான் மோடி அவர்கள், வித்தை காட்டுவதைப்போல, பதவிக்கு வந்தார்.

2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னதையும் தாண்டி, இன்னொரு வாக்குறுதியையும் கொடுத்தார்.

‘‘சப்கா சாத், சப்கா விகாஸ்'' என்று சத்தமாகச் சொன்னார்; மிகப்பெரிய வளர்ச்சி, வளர்ச்சி என்று சொன்னார்.

அவர் சொன்னதில், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று வந்து விழும் என்று சொன்னார்.

வங்கிகளில் பணம் விழவில்லை - அதற்கு மாறாக, வங்கிகளே வீழ்ந்திருக்கின்றன!

விவசாயிகள் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி, ஒரு தவணை கட்ட தவறினால், அந்த விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று வங்கி அதி காரிகள், விவசாயிகளை இழிவாகப் பேசி, அவமரியாதை செய்வதினால் விவசாயிகள்  பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆனால், வங்கியில் கார்ப்பரேட் முதலாளிகள் பெற்ற கடன் 10 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக் கிலும் 15 லட்சம் ரூபாய் வந்து விழும் என்று - ஆனால், வங்கிகளில் பணம் விழவில்லை - அதற்கு மாறாக, வங்கிகளே வீழ்ந்திருக்கின்றன.

நம் நாட்டில் லட்சுமிதான் செல்வத்திற்குக் கடவுள் என்று சொல்வார்கள். ஆனால், இப் பொழுது லட்சுமி விலாஸ் வங்கியே வீழ்ந்து போயிருக்கிறது.

‘பிசாசு', ‘பேய்' என்பதெல்லாம் 

ஒரு கற்பனை

செய்தியாளர்:  பி.ஜே.பி. ‘பிசாசு'த்தனமாக தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் சொல்லியிருக்கிறாரே, அப்படியொரு வளர்ச்சி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர்:  அவர் சொன்ன வார்த்தை களை நன்றாக கவனிக்கவேண்டும்.

‘பிசாசு' என்பது வெறும் பயம்தான். ‘பிசாசு' என்ற ஒன்று கிடையாது.

‘பிசாசு'த்தனமாக வளர்ந்து வருகிறது என்று சொன்னால், ஒரு பிரமைதான்.

இருட்டைப் பார்த்து ‘பிசாசு' என்று நினைத்துக் கொள்வார்கள்.ஆனால், ‘பிசாசு', ‘பேய்' என்பதெல்லாம் ஒரு கற்பனை. அதுபோன்ற ஒரு கற்பனையை இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அது கற்பனையாக இருந்தாலும், அதை அலட்சியப்படுத்த முடி யாது; அதை எதிர்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் சொல்லியிருக்கிறார்.

பா.ஜ.க. எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதற்குஅடையாளம்,அதனுடையதமிழ் நாட்டுத் தலைவர் இரண்டு நாள்களாக கொடுத் திருக்கின்ற அறிக்கைகள் - யார், யாரை கட்சி யிலிருந்து நீக்கியிருக்கிறார்; அவர்கள் என்ன மாதிரி பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; அந்தக் கட்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தாலே, அது ‘பிசாசு'த்தனமா அல்லது வேறுவிதமான தனமா என்பது நன்றாக விளங்கும்.

குஜராத் தேர்தலில் 

பி.ஜே.பி.யின் நிலைமை என்ன?

செய்தியாளர்: குஜராத் தேர்தலில் பி.ஜே.பி. யின் நிலைமை என்ன?

தமிழர் தலைவர்: இதுவரையில் மோடி சந்திக்காத அளவிற்கு ஒரு பெரிய சவாலைச் சந்திக்கிறார்.

27 ஆண்டுகள் அவர்கள் பதவியில் இருக் கின்ற காரணத்தினால், விலைவாசி உயர்வு, பாலம் விபத்து இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டிய ஒரு கட்டாயம்.

பெரிய அளவிற்கு, ‘குஜராத் மாடல்', ‘குஜராத் மாடல்' என்று சொன்னார்கள். குஜராத் மாடல், அறுந்து தொங்கிக் கொண் டிருக்கின்றது.

‘‘வளர்ச்சி, வளர்ச்சி'' என்று சொன் னார்கள், இப்பொழுது  என்ன நிலை என்றால், அங்கு பாலம் எப்படி தொங்கிக் கொண்டிருக்கிறதோ, அதுபோல, குஜராத் மாடல் என்பது, தொங்கும் மாடல். ‘திராவிட மாடல்' என்பது தங்கும் மாடல்!

ஆகவேதான், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, குஜராத்தில் அவர்கள் யாத்திரை போகிறார்கள்.

ராகுல் காந்தியினுடைய யாத்திரையை கண்டு, மோடி அவர்கள், குஜராத்திற்குச் சென்று, தன்னுடைய கட்சிக்காரர்களைப் பார்த்து, வேகமாக செயல்படவேண்டும் என்று சொல்லிய பிறகு, அவர்கள் யாத்தி ரையையும் நடத்தியிருக்கிறார்கள்.

ஆகவே, பல வித்தைகளைக் காட்டு கிறார்கள். ‘அற்புதங்கள்' நடந்தால்தான் குஜராத்தில் அவர்கள் வெற்றி பெறு வார்கள். அவர்களுக்கே தெரியும் சில  ‘அற்புதங்களை', வித்தைகளை எப்படி நடத்துவது என்று. இப்படி செய்தால்தான் அவர்கள் வெற்றி பெற முடியுமே தவிர, மக் களுடைய பேராதரவினால் அவர்களால் அங்கே வெற்றி பெற முடியாது.

இன்னொன்று, குஜராத்தில் அந்தக் கட்சி எவ்வளவு சிக்கலில் இருக்கிறது என்பதற்கு அடையாளம்- 

இதற்கு முன்பு மோடி என்ன சொன் னார், ‘‘இலவசங்களால் நாடே பாழாகி விட்டது; இலவசங்களைக் கொடுக்கக் கூடாது'' என்றார்.

இப்படி சொன்ன மோடி, குஜராத்தில் இலவசங்களை அறிவிக்கிறார் என்றால், அவருடைய கட்சி பெரிய போராட் டங்களுக்கிடையே இருந்துகொண்டிருக் கிறது என்பதுதான் காரணமாகும்.

எனவே, தீவிர சிகிச்சைக்குப் பிறகுதான் அவர்கள் வெளியே வரவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலைதான் யதார்த்தமான சூழல்.

இவ்வாறு செய்தியாளர்களிடையே திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

No comments:

Post a Comment