‘தத்துவ மேதை' டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா - நூல் வெளியீட்டு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

‘தத்துவ மேதை' டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா - நூல் வெளியீட்டு விழா!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட- தமிழர் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்!

சென்னை, நவ.25- திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘தத்துவ மேதை’ டி.கே. சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா-நூல்கள் வெளியீட்டு விழா நேற்று (24.11.2022) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. 

டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

விழாவில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், திமுக பொருளாளர், நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். விழாவில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

‘தத்துவ மேதை’ டி.கே.சீனிவாசன் அவர்களின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது எழுத்துகளை, எண் ணங்களை மூன்று நூல்களாகத் தொகுத்து வெளியிடும் விழாவாக நடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் சகோதரர் டி.கே.எஸ்.இளங் கோவன் அவர்களுக்கு முதலில் எனது பாராட்டை, வாழ்த் துகளை, நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அப்பாவைப் போலவே சிறந்த எழுத்தாளராக - பேச்சா ளராக வலம்வரக் கூடியவர்தான் நம்முடைய டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். கழகத்தின் செயற்குழு - பொதுக் குழு ஆகியவற்றில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவாக இருந்தாலும் - ஏன் மாநாடுகளில் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்கள் எதுவாக இருந்தாலும், அதனை வடிவமைப் பதில் நம்முடைய இளங்கோவனின் கைவண்ணம் நிச்சயம் இருக்கும்.

டி.கே.எஸ்.இளங்கோவனைப் 

பாராட்டுகிறேன்!

கழகக் கொள்கைகள் மீது ஆழமான பிடிப்பு கொண்டு, கழகத்துக்கு கிடைத்திருக்கும் கொள்கைத் தூண்களில் ஒருவராக நம்முடைய இளங்கோவன் விளங்கிக் கொண் டிருக்கிறார்.

அவரைப் பற்றி பேசுகிறபோது, நம்முடைய பொதுச் செயலாளர் நகைச்சுவையோடு சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். இன்று மதியம்கூட அறிவாலயத்தில் உட்கார்ந் திருந்தபோது, டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களிடத்தில் ‘‘எத்தனை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப் போகிறது? எத்தனை மணிக்கு முடிப்பீர்கள்?” என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, நான் கேட்டேன், ”உங்களைப் பற்றி என்ன பேசுவது?'' என்று. அப்போது, ‘‘என்னைப் பற்றி நீங்கள் எதை அறிந்திருக் கிறீர்களோ அதைப் பேசுங்கள்” என்று சொன்னார். 

உங்களைப் பற்றி நான் பல செய்திகளை அறிந்ததுண்டு. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், தலைவரிடத்தில் அதிக திட்டு வாங்கியவர் யார் என்று கேட்டால், நம்முடைய டி.கே.எஸ். அவர்களாகத்தான் இருப் பார். உரிமையோடு திட்டுவார். எங்களைக்கூட அவ்வாறு திட்டியது கிடையாது. எனவே பிள்ளைகளைக்கூட அவ் வளவு திட்டியது கிடையாது. பிள்ளையைவிட அதிகம் பாசம் கொண்டிருக்கும் டி.கே.எஸ். இளங்கோவனைத்தான் அதிகம் திட்டியிருக்கிறார். 

எனவே இன்றைக்கு அவர் இந்த விழாவை நம்முடைய திராவிட உணர்வோடு, இந்த இயக்கம் வாழ வேண்டும், வளர வேண்டும், எழுச்சி பெற வேண்டும், என்ற அந்த உணர்வோடு இந்த நிகழ்ச்சியை நல்ல வகையில் பயன்படுத்தி அதை நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்காக மீண்டும் ஒருமுறை என்னுடைய பாராட்டுகள்.

‘தத்துவமேதை' டி.கே.சீனிவாசன் அவர்கள், மாநிலங் களவை உறுப்பினராக இருந்தவர். அவருடைய மைந்தன் இளங்கோவனும் மாநிலங்களவை உறுப்பினராக ஒருமுறை அல்ல, இரண்டு முறை இருந்தவர். மாநிலங்களவையில் இருந்து அவர் ஆற்றிய உரை, கழகத்தின் கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் லட்சியங்களை, தமிழ்நாட்டிற்கு என்ன தேவை என்பதை அழுத்தமாக, ஆணித்தரமாக அவர் எடுத்த வைத்த அந்த உரைகள் எல்லாம் மறக்க முடியாத வையாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு தந்தையின் வார்ப்பாக விளங்கிக் கொண் டிருக்கும் இளங்கோவன் அவர்கள், இந்த விழாவை ஏற்பாடு செய்து அதில் நான் பங்கெடுத்திருக்கிறேன் என்று சொன் னால், ஒரு குடும்பப் பாச உணர்வோடு நான் பங்கெடுத் திருக்கிறேன். அதுதான் உண்மை.

முத்தமிழறிஞர் கலைஞர் - தயாளு அம்மையார் மணவிழாவில் வாழ்த்துரை வழங்கியவர்!

எதற்காக இதைச் சொல்கிறேன் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் - எனது ஆருயிர்த் தாயார் தயாளு அம்மையார் அவர்களுக்கும் திருமணம் நடந்தபோது நம்முடைய டி.கே.எஸ். அவர்கள்தான் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்களும் கலந்து கொண்டு மணக்கோலம் பூண்டிருந்த கலைஞரை வாழ்த்தி யிருக்கிறார்.

திருமணத்தை நடத்தி வைக்க அண்ணா அவர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அண்ணா அவர்களால் வர முடியவில்லை. அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நாள். திருமணத்தன்று காலையில் அண்ணா அவர்கள் வரவில்லை. அவருக்காகக் காத்திருந்த நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்-டி.கே.எஸ். அவர் களும் ஹிந்தி எதிர்ப்பு மறியலில் கலந்து கொள்கிறார்கள். மணமகன் கோலத்தில்தான் அந்தப் போராட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் திரும்பி மணவிழா நிகழ்ச்சிக்கு அந்த மண்டபத்திற்குச் செல்லும்போது அண்ணா வந்துவிடுவார் என்று நினைக் கிறார்கள். போராட்டம் முடிந்து மண்டபத்துக்கு வந்தபிறகும் அண்ணா அவர்கள் வரவில்லை. உடனேயே கலைஞர் அவர்கள், தானே மாலையை எடுத்து தயாளு அம்மாள் அவர்களுக்கு அணிவிக்கிறார். அம்மாவும் - தலைவருக்கு மாலை அணிவிக்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன் அவர்கள், மணமக்களை வாழ்த்திப் பேச தொடங்கிவிட்டார். அத்தோடு திருமணம் முடிகிறது.

அந்த வகையில் எங்கள் குடும்பத்தில் ஒருவர்தான் 

டி.கே.சீனிவாசன் அவர்கள். அதனால்தான், குடும்பப் பாசத்தோடு நான் இதில் பங்கெடுத்திருக்கிறேன் என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

டி.கே.சீனிவாசன் போன்றவர்களது நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால், அவரைப் பெருமைப் படுத்துவதற்காக மட்டுமல்ல; அவருக்கு நாம் நம்முடைய நன்றிக் கடனை செலுத்தும் அடையாளமாகவும்தான் இந்த விழா நடந்து கொண்டு இருக்கிறது.

இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்கள்,

நீதிக்கட்சி இருந்த காலத்திலேயே திருச்சியில் திராவிட வாலிபர் கழகம் நடத்தியவர் டி.கே.சீனிவாசன் அவர்கள்.

தந்தை பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்தில் செயல் பட்டவர். திராவிடர் கழகத்திலும் இயங்கியவர்.

பேரறிஞர் அண்ணாவுடன், முத்தமிழறிஞர் கலைஞருடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்பட்டவர்.

திராவிடக் கொள்கையின் தீரர்தான் சீனிவாசன்

இப்படி நீதிக்கட்சி - திராவிட வாலிபர் கழகம் - சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் என தொடர்ச்சியாக இயங்கிய திராவிடக் கொள்கையின் தீரர்தான் நம்முடைய அருமை அண்ணன் டி.கே.சீனிவாசன் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்: “நமது இயக்கம் இன்று தார்ச்சாலையில் பயணம் போய்க் கொண்டு இருக்கிறது. இந்தச் சாலையைப் போடுவதற்காக தார் காய்ச்சி - அந்த வெப்பத்துக்குப் பக்கத்தில் உடலை உருக்கி நின்று கொண் டிருந்த எத்தனையோ பேரில் டி.கே.சீனிவாசனும் ஒருவர்” என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். இதனை விட டி.கே.எஸ் அவர்களின் தியாகத்தை யாராலும் வர்ணிக்க முடியாது!

சில நேரங்களில் தலைவர் கலைஞரையே கூட டி.கே.சீனிவாசன் அவர்கள் விமர்சித்து இருக்கிறார். அதைத்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள் சூசகமாக குறிப்பிட்டுச் சொன்னார்.

இருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்கள், டி.கே.எஸ், அவர்களுக்கு ஏதாவது உடல்நலப் பாதிப்பு என்றால் உடனே போய் உதவி செய்பவராக இருந்திருக்கிறார்கள். இது பற்றி ஒரு மேடையில் பேசும்போது டி.கே.சீனிவாசன் அவர்களே கலைஞர் அவர்களிடம், “இது ஏன் என்று எனக்கு ஆச்சர்ய மாக இருக்கிறது” என்று கேட்கிறார்.

அப்போது கலைஞர் அளித்த பதில்தான் இன்று நாம் ஏன் டி.கே.சீனிவாசன் அவர்களை 100 ஆண்டுகள் கழித்தும் நினைக்கவேண்டும் என்பதற்கான காரணமாக அமைந் திருக்கிறது.

களங்கம் இல்லாதவர்

தலைவர் கலைஞர் அவர்கள் சொல்கிறார், ''என்னை விமர்சித்தாலும், அவருக்கு நான் ஏன் உதவிகள் செய்தேன் என்றால், டி.கே.சீனிவாசன் அவர்கள் களங்கம் இல்லாதவர்; எதையும் நேராகப் பேசக் கூடியவர்; நான் இல்லாத இடத்தில் புறங்கூறித் திரிபவர் அல்ல!" என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லி இருக்கிறார். ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு டி.கே.சீ. அவர்கள்.

அதனால்தான் இன்று டி.கே.சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

திராவிட இயக்கம் என்றாலே, பேச்சாளர்கள் இயக்கம்! எழுத்தாளர்கள் இயக்கம்! கலைஞர்கள் இயக்கம்! கதை, வசனகர்த்தாக்களின் இயக்கம்! கவிஞர்களின் இயக்கம்! பத்திரிகையாளர்கள் இயக்கம்! படைப்பாளிகள் இயக்கம்! முற்போக்காளர்களின் இயக்கம்! மொத்தத்தில் இது ஓர் அறிவியக்கம்!

கொள்கைகளை விளக்கும் 

கதைகளைத் தந்தவர்!

இந்த அறிவியக்கத்தின் ஆற்றல் மிக்க ஆளுமைகளில் ஒருவர்தான் டி.கே.சீனிவாசன் அவர்கள்.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், தத்துவமேதை டி.கே.சீனிவாசன், தில்லை வில்லாளன், ராதாமணாளன், முல்லை சக்தி, பண்ணன், சிறுகதை மன்னர் எஸ்.எஸ். தென்னரசு- என்று பலரும் சிறுகதைகள் எழுதி னார்கள், நாடகங்களை இயற்றினார்கள், புதினங்களைத் உருவாக்கினார்கள்.

இவை அனைத்தும் கற்பனைக் கதைகளாக மட்டுமல்ல கொள்கைகளை விளக்கும் கதைகளாக-நமது இலட்சியத்தை எடுத்துக்காட்டும் கதைகளாக அமைந்திருந்தன.

கதைகளின் வழியாக, நாவல்களின் வழியாக, வீதி நாட கங்கள் வழியாக நம்முடைய இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

அதேநேரத்தில், அவை வெறும் பரப்புரைக் கதைகளாக மட்டுமல்லாமல் - இலக்கியத் தரம் வாய்ந்த, கொள்கை தரம் வாய்ந்த கதைகளாக அமைந்திருந்தன.

தமிழ் உரைநடையில் புதுப்போக்கையே தோற்றுவித் தார்கள். பாத்திரத்தின் பேரைச் சொல்லாமல் அவன், அவள் என்று குறிப்பிட்டு கதை எழுதுவதை நவீனமாக இந்தக் காலத்தில் சொல்கிறார்கள் என்றால், இதனை 1950-ஆம் ஆண்டே பயன்படுத்தியவர் டி.கே.சீ.அவர்கள்.

உணர்ச்சியூட்டும் எழுத்து நடை!

பெண்ணுரிமைக் கருத்துகள் கொண்டவை அவரது கதைகள். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய ஆங் கிலப் புத்தகத்தை ஒருவர் படித்துக் கொண்டு இருக்கிறார். அவர் முன்பு திடீரென்று ராபர்ட் க்ளைவ் வருகிறார். ராபர்ட் க்ளைவுக்கும் - அவருக்கும் உரையாடல் நடப்பதாக ஒரு கதை எழுதி இருக்கிறார். அந்தக் கதையைப் படித்தாலே 400 ஆண்டுகால பிரிட்டிஷ் வரலாற்றை அறியலாம். 'வரலாறு திரும்புகிறது' என்ற ஒரு கட்டுரையைப் படித்தால், திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறியலாம். மிகப்பெரிய கழகக் கருவூலத்தை மீண்டும் அனைவருக்கும் வாரி வழங்கி இருக்கிறார் நம்முடைய டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள்.

தத்துவமேதை டி.கே.சீனிவாசனின் எழுத்துநடை இன்று படித்தாலும் உணர்ச்சிமயமாக இருக்கிறது.

“எங்கிருந்தோ இரைதேடி வந்த கூட்டம் இங்கே புகுந்து மலர்க்காடாம் தமிழ்நாட்டை மயானமாக மாற்றி வருகிறது. உடல்பலத்தால் அல்ல, உள்ளத்தில் மலிந்து கிடக்கும் கள்ளத் தால்!” என்று எழுதியவர் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்கள். யாரைச் சொல்கிறார் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதல்ல!

‘‘சிலர் உழைக்காமலே வாழ்கிறார்கள். பலர் வாழாமலேயே உழைக்கிறார்கள்'' என்று எழுதினார். இதனைவிட உழைக்கும் வர்க்கத்தின் நிலைமையை யாராலும் எடுத்துச் சொல்ல முடியாது.

போருக்கும் புரட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பதை எழுதி இருக்கிறார். ‘‘அரசுகளைக் காப்பாற்ற நடப்பவை போர் கள். மக்களைக் காப்பாற்ற நடப்பவை புரட்சிகள்'' என்கிறார்.

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்!

“அண்ணா என்பது அவரது பெயரின் சுருக்கம் மட்டுமல்ல, அவருக்கும் நமக்கும் உள்ள நெருக்கம்!” என்று பேரறி ஞருக்கும் அவரது தம்பிமார் படையான நமக்கும் இடையேயான பாசப்பிணைப்பை அவர் விவரித்துள்ளார்.

தாழ்ந்த தமிழகமே! என்று அண்ணா குரல் கொடுத்தபோது, “நிமிர்ந்துவிட்டேன் தளபதியே” என்று நாடு குரல் கொடுத்ததாக எழுதி இருக்கிறார்.

கலைஞரைப் பற்றி, திருக்குறளைப் போல எழுதி இருக்கிறார் டி.கே.சீ அவர்கள்.

“எந்தத் திட்டத்துக்கும் உரு கொடுப்பவர் அண்ணா!

உயிர் கொடுப்பவர் கலைஞர்!”

”கழகத் தோழர்கள் முடிவுகளுக்காக அண்ணாவையும்

விளைவுகளுக்காக கலைஞரையும் எதிர்பார்ப்பார்கள்.”

- என இப்படி எத்தனையோ வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இங்கே நம்முடைய ஆசிரியர் அவர்களும், அண்ணன் துரைமுருகன் அவர்களும் குறிப்பிட்டதைப்போல, அனை வரும் இந்த மூன்று தொகுதிகளையும் வாங்கிச் செல்ல வேண்டும். அதை படித்தே தீர வேண்டும். 

பன்முகத்தன்மை கொண்ட 

படைப்பாளி!

சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக நடிகர், வெண்குரல் பேச்சாளர், போராட்டக்காரர், விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாதம் சிறையிருந்த தியாகி, அரசியல்வாதி, நாடாளுமன்றவாதி - எனப் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளிதான் டி.கே.சீனிவாசன் அவர்கள்.

மொழியியல் அறிஞராகவும் அவர் இருந்துள்ளார். அவரது குறிப்பேட்டில் இருபது மொழிகளுடைய எழுத்து களை எழுதி வைத்திருக்கிறார். பத்து மொழிகள் புரியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் பணியாற்றியதால் புனைபெயர்களில் எழுதத் தொடங்கினார். அதில் இருந்தபடியே தஞ்சாவூர் எஸ்.எம்.டி.  தொழிலாளர் போராட்டத்தில் இறங்கியதால் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலக்கியவாதியாகவும், அரசியல்வாதியாகவும் இருந்தவர் டி.கே.சீ.  டி.கே.சீ.யைப் போன்ற திராவிட இயக்க எழுத்தாளர் களது படைப்புகள் முழுமையாக மீண்டும் வெளிவர வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் முழுமை யாக வெளிவந்ததைப் போல, தலைவர் கலைஞரின் கடிதங் கள் முழுமையாக வெளிவந்ததைப் போல மற்ற படைப்பாளி களது படைப்புகளும் வெளிவர வேண்டும்.

‘திராவிட மாடல்' 

பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்!

திராவிட இயக்கம் என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, இது அறிவியக்கம்! நமது அறிவியக்கக் கோட்பாடுகளை அறிய உதவும் இத்தகைய நூல்கள் ஏராளமாக வர வேண்டும். இன்றைய தேவை இதுதான்!

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் 234 தொகுதி யிலும் நடந்து முடிந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அத்தோடு அப்பணி முடியவில்லை. தொடர வேண்டும் என்கிற வேண்டுகோளை நம்முடைய டி.கே.சீ. அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறபோது, திமுகழகத்தின் தலைவர் என்கிற முறையில் நான் எனது அன்பான வேண்டுகோளாக அல்ல, கட்டளையாகப் பிறப்பிக்கிறேன். அது தொடரவேண்டும் என நான் விரும்புகிறேன்.

இந்தப் பாசறைக் கூட்டங்களில் பங்கெடுத்த இளைஞர்கள் இது போன்ற புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்! உங்களைக் கூர் தீட்டிக் கொள்ளுங்கள்! கொள்கை இருந்தால்தான் கட்சி! கட்சி இருந்தால்தான் ஆட்சி! என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். கொள்கையைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யலாம்; எதையும் இழக்கலாம்! ஆனால் பதவியைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்துவிட முடியாது! இத்தகைய கொள்கை உரத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள்தான் டி.கே.சீனிவாசனைப் போன்ற எழுத்தாளர்கள்.

எனவே அவருடைய எழுத்துக்களை-எண்ணங்களை மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருக்கும் டி.கே.எஸ். இளங் கோவன் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா-முத் தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் பணியை விவரித்து எழுதும்போது,

கள்ளிக் காளான்கள் படர்ந்து கட்டாந்தரையாகக் கிடந்த தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்தி அதற்கொரு உயர்வு தந்தவர் தந்தை பெரியார்.

அந்த நிலத்தில் எப்படிப்பட்ட கட்டடம் அமைய வேண்டும் எனத் திட்டமிட்டவர் அண்ணா.

திட்டமிட்ட அந்தக் கட்டடத்தைக் கட்டி முடித்தவர் கலைஞர் என்று எழுதி இருக்கிறார் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்கள்.

தமிழ்நாடு என்ற கட்டடத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது! தத்துவ மேதையின் நூற்றாண்டு விழாவான இன்று, அதற்கு நாம் அத்தனை பேரும் உறுதி எடுத்துக் கொள்வோம், உறுதி எடுத்துக் கொள்வோம் என்று கூறி, விடைபெறுகிறேன், நன்றி! வணக்கம்!

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment