திருமணத்தில் சுயமரியாதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

திருமணத்தில் சுயமரியாதை!

விஜி முருகு, திண்டுக்கல்

"பெண்களிடம் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள்." - தந்தை பெரியார் -  என்ற வாசகத்தோடு துவங்கு வதுதான் இந்தக் கட்டுரைக்கு சிறப்பாக இருக்கும். 

திருமண வாழ்க்கை என்பது ஒத்த கருத்தோடு வாழ்வதற்கு  ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம். இங்கு ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று பிரித்து வைக்கப் பட்ட வாழ்க்கை முறை -  அதில் ஒத்த கருத்து ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு - அப்படியிருக்க பெண்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை அதில் இருக்கும் குறைகளை சரிசெய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.  சரியான வாழ்க்கை முறை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே பிரச்சினைகளின்றி மகிழ்ச்சியாக வாழமுடியும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்கு முன் அவசியம் ஏதாவது வேலைக்கு சென்று -  சம்பாதிக்க துவங்கிய பின் திருமணம் செய்ய வேண்டும் என்ற உறுதியை  எடுக்க வேண்டும்.

ஆண்கள்  சம்பாதிக்காமல்  திருமணம் செய்ய இந்த சமூகம் அனுமதிக்காது .  அதே சமூகம் தான் பெண்ணை வேலை பார்க்கும் முன்பே திருமணம் செய்து வைத்து விடுகிறது. பெண் மட்டும் ஏன் சம்பாதிக்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் . ஆணுக்கு இருக்கும் அதே பொறுப்பு, கடமை எல்லாம் பெண்களுக்கும் இருக்கிறது என்பதை கல்விக்கூடங்கள் ஏன் கற்றுத் தருவதில்லை. அது மட்டுமின்றி, பெற்று வளர்த்த பெற்றோரை தவிக்க விடும் பேராபத்தைபற்றி பெண்கள் சிந்திக்க வேண்டும்.  அப்படி  சிந்திக்கிறார்களா? இல்லையே!

இது எத்துணை கொடுமையான விசயம் - யோசித்துப் பார்த்தால் இந்த சமூகத்தின் கட்டமைப்பின் மேல் கடுங்கோபம் வருகிறது. பெண் சம்பாதிக்காமல் இருந்தால் பெற்றவர்களை யார் பார்த்துக்கொள்வது..... தானும் அடுத்த வீட்டில் உழைக்காமல் இருந்துகொண்டு-   அதுவும் ஊதியமற்ற வேலையில் விழி பிதுங்கி பெற்றோரையும் பார்க்க முடியாமல் தங்கள் அபிலாசைகளை சுருக்கிக் கொண்டு வாழ வேண்டுமா என்ன?!  

பெண்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாவது பெண்கள் வாங்கிய பின் திருமண வாழ்க்கைக்குள் செல்லுங்கள்.  அதுவே  நிறைய பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்து விடும். ஆண்களும் வேலைக்குப் போகாத பெண்களை திருமணம் செய்வதை பற்றி யோசிக்க வேண்டும். இது பெண்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். 

அடிமைத்தனத்தை போக்க இதைவிட சிறந்த வழி ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. வேலைக்குப் போனாலும் அதே பிரச்சினைதான் என்று புலம்புவது கேட்காமல் இல்லை. ஆனாலும், வேறு வழியில்லை. `சுயமரியாதை' உழைப்பால் மட்டுமே கிடைக்கும். குடும்பத்தில் வீட்டு வேலைக்கு பணியாட்களை வைத்துவிட்டு நல்ல படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்வதை கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு பின் வேலை பார்க்கலாம் என்று நினைத்தால் ஒரு பத்து ஆண்டுகளாவது கடந்து விடும். அதன் பின் வேலைக்கு போகும் ஆர்வமும் வராது. வேலைக்கு போக நினைத்தால் பிடிக்காத வேலைக்குத் தான் போகும் சூழல் ஏற்படும். வாழ்க்கை என்பது மன துக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதை விடுத்து எல்லோரும் பின்பற்றுகிறார்கள் என்பதை போல வாழ்க்கையை அமைத்து பின் அதிலிருந்து மீள வழி தெரியாமல்  மனம் உடைந்து வேதனையுடன் வாழக் கூடாது .

மனிதப் பண்புகளில் இடம், பொருள் ஏவல் என்ற இலக்கணம்   வாழ்க்கை முழுமைக்கும் பொருந்தும்.  எந்த இடத்தில் மரியாதை கிடைக்குமோ அதனை தக்க வைத்துவிட்டு வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ள பெண்கள்  நினைக்க வேண்டும். ஆண்களை போல வாழ வேண்டும். அருகிலிருக்கும் ஆண்கள் அலங்கரிப்பதில்லை - பொது வெளிகளை இயல்பாக தக்கவைத்து இருக்கிறார்கள் - ஏன் இவை கண்ணிற்கு தெரிவதில்லை? ஆண்கள் கட்டமைத்த பொது சமூகம் உங்களை அழகு பொம்மையாக மாற்றி வாழ்க்கையை சீர்குலைத்து இருக்கிறார்கள் - என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே, அவர்களுக்கு நீங்கள் அழகாகத் தெரிய வேண்டும் என்ற முனைப்பைக் கடந்து உங்கள் உழைப்பு, உழைப்பால் கிடைக்கும் ஊதியம், உங்கள் முன்னேற்றங்கள் பற்றி சிந்தியுங்கள்.  முதலில் ஆதிக்க சமூகத்தின் கட்டுக்களை உடைக்க பொருளாதார தற்சார்பு பெறுங்கள். 

அதன் பின் திருமணம் வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள் .பெண்கள் படும் பாடுகளை நினைத்துப் பார்த்தால் கண்ணீர் வராது, கண்களில் இருந்து இரத்தம் சொட்டி விடும். அத்தனை துன்பங்கள், துயரங் கள். திருமண கொண்டாட்டங்கள் - அழகுதான் பார்ப்பதற்கு! அதன் பின் நடப்பவை எல்லாம் கொண்டாட்டமாக இருக்குமா - என நினைத்தால் பதில்  கிடைக்காது. பணம் என்பது வாழ்க்கையில் மிகத் தேவையானதாகும். எனவே, யோசிக்காமல் சிறைப்பட வேண்டாம். `விட்டில் பூச்சி' கதைதான் நினைவிற்கு வருகிறது. நன்றாக யோசித்து, பொருளீட்டி, தங்களுக்கு பிடித்த இணையுடன் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்வது இன்னும் சிறப்பாக அமையும். தந்தை பெரியார் சொன்னது போன்று, "கரண்டியை  விடுத்து புத்தகங்களை எடுங்கள்!"

No comments:

Post a Comment