நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

 மேனாள் நீதிபதி கே.ஆர்.சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா!

இயக்கத்தில் அய்ந்தாம் தலைமுறைக் குடும்பம் இது!

ஈரோட்டுப் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றவர் சத்தியேந்திரன் - 

அதே பயிற்சிப் பட்டறையில் பயின்றவன்தான் நானும்!

நீதிபதி சத்தியேந்திரன் அவர்களுடைய தொண்டைப் போற்றுவதற்கு, தொண்டறத்தை வாழ்த்துவதற்கு வந்திருக்கிறார்கள் இது சமுதாய மாற்றத்தினுடைய ஓர் அருமையான சின்னம்!

சென்னை, அக்.11  குடும்ப உறவினர்கள் என்பதைவிட, கொள்கை உறவினர்களாக இங்கே ஏராளம் இருக்கிறார்கள். அதையும் தாண்டி, அய்.ஏ.எஸ். பெருமக்கள், அய்.பி.எஸ். பெருமக்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்று அத்தனை பேரும் இந்த விழாவிற்கு வந்து, மேடைக்கு வராவிட்டாலும், பேசவேண்டிய அவசியமில்லை - அவர்கள் மரியாதை செலுத்த வந்திருக்கிறார்கள். நீதிபதி சத்தியேந்திரன் அவர்களுடைய தொண்டைப் போற்றுவதற்கு, அவருடைய தொண்டறத்தை வாழ்த்துவதற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இது சமுதாய மாற்றத்தினுடைய ஓர் அருமையான சின்னம்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா

கடந்த 3.9.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிபதி கே.ஆர்.சத்தியேந்திரன் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரை வருமாறு:

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவராக இருக்கக்கூடிய 

நூற்றாண்டு விழா நாயகர்!

நம்முடைய கொள்கை வீரர், லட்சிய வீரர்,  வாழ்க்கையில் ஒரு சிறந்த இலக்கோடு வாழ்ந்து, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவராக இருக்கக்கூடிய நூற்றாண்டு விழா நாயகர் - அருமை அய்யா நீதிபதி சத்தியேந்திரன் அவர்களுடைய நூற்றாண்டு விழா என்ற சிறப்பான விழாவை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்து, இதே மேடையில், இதே அரங்கத்தில் யாரையெல்லாம்பற்றி குறிப்பிட்டார்களோ, அவர் களில் பல தலைமுறையினர் இங்கே வந்திருக் கின்றார்கள். 

ஆனால், அய்யா அவர்கள் இங்கே படமாகத் திறக்கப்பட்டு இருக்கிறார்கள், அவரைப் பெருமைப் படுத்த. அப்படிப்பட்ட அருமையான விழாவிலே, வரவேற்புரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோ

அதேபோல, சிறப்பான வகையில் எனக்கு முன், நூற்றாண்டு மலரை வெளியிட்டு, ஓர் அருமையான உரையை, ஒரு வரலாற்றை அவரைப்பற்றிய செய்தி களை இனிமேல் தனியாகச் சொல்லவேண்டிய அவ சியமில்லை; வேறு செய்திகளைத்தான் சொல்ல வேண்டும் என்பதை இவ்வளவு நினைவுக் குறிப்புக ளோடு ஒன்றுகூட தவறாமல், மாநாடுகள், வரலாற்று குறிப்புகள் அத்தனையையும் ஓர் ஆவணப்படுத்தி சொல்ல முடியும் என்று சொன்னால், அது திராவிட இயக்கத்தின் போர்வாள் எங்கள் வைகோ அவர்களால் தான் முடியும் என்று சொல்லக்கூடிய பெருமைமிகுந்த அருமைச் சகோதரர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் மானமிகு மாண்புமிகு வைகோ அவர்களே,

அதேபோல, இந்நிகழ்ச்சியில், சிறப்பான முறையில் உரையாற்றி, நம்முடைய சிந்தனைகளையெல்லாம் - திராவிட இயக்கம் என்ன செய்தது? ஏன் அவர்கள் திராவிட இயக்கத்திலே, சுயமரியாதை இயக்கத்திலே கலந்துகொண்டார்கள், பங்கேற்றார்கள் - அதனுடைய விளைவுகளும் விளைச்சல்களும் என்ன என்பதை மிக அழகாக எடுத்துரைத்த மேனாள் தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினரும், சிறந்த பொருளாதார நிபுண ருமான அன்பிற்குரிய அருமைச் சகோதரர் முனைவர் மு.நாகநாதன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர் பாளர் தலைசிறந்த நாடாளுமன்றவாதி என்று அழைக் கக்கூடிய அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

அருமைச் சகோதரியார் 

திருமதி சங்காமிர்தம் குருசாமி

இந்நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட நூற் றாண்டு மலரைப் பெற்றுக் கொண்டவரும், இந்தக் குடும்பத்திற்குரியவருமான அருமைச் சகோதரியார் திருமதி சங்காமிர்தம் குருசாமி அவர்களே,

தன்னுடைய பணிக்காலத்தில் 

முத்திரைப் பதித்தவர்

சிறந்த முறையில் தன்னுடைய பணிக்காலத்தில் முத்திரைப் பதித்து, பதவியில் இருந்தாலும், பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, பெருமைப்படக்கூடிய, நம் இனம் பெருமைப்படக் கூடிய நீதிபதிகளாக இருக்கக்கூடிய அருமை நீதிபதி அய்யா மாண்புமிகு இராமமூர்த்தி அவர்களே, நீதிபதி மாண்புமிகு இரா.சுப்பையா அவர்களே,

இந்நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கிய எங்கள் அருமைச் செல்வம் அவர்களே,

இந்தக் குடும்பத்தைத் தாண்டி, கருணாகரன் மற்றவர் களைத் தாண்டி, அரங்கத்தில் அமர்ந்திருக்கின்றவர் களைப் பார்க்கின்றபொழுது எல்லையற்ற மகிழ்ச்சியை எங்களைப் போன்றவர்கள் பெறுகிறோம்.

ஒரு காலத்தில் பார்க்க முடியாத காட்சி, அதைத்தான் அவர்கள் சிறப்பாகச் சொன்னார்கள்; இளங்கோ அவர் களும் சொன்னார்கள்; நாகநாதன் அவர்களும் சொன் னார்கள்; வைகோ அவர்களும் வரி பிளந்து சொன் னார்கள்.

நீதிபதி சத்தியேந்திரன் அவர்கள் 

படம் மட்டுமல்ல; பாடம்!

இப்படிப்பட்ட ஒரு காட்சியை ஒரு நூற் றாண்டுக்கு முன்பு பெற்றிருக்க முடியுமா? சத்தி யேந்திரன் அவர்கள் வெறும் படம் மட்டுமல்ல; பாடமும் கூட!

எந்த  வகையில் அவர் பாடமாக அமைந்தி ருக்கின்றார் என்று சொன்னால், இங்கே இணைப் புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற எங்கள் செல்வம் - அய்ந்தாவது தலைமுறை - நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - திராவிடக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்தக் குடும்பம் - அய்ந்தாவது தலைமுறையாக வந்திருக் கிறது.

பிள்ளைகளுடைய பெருமைகளைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை!

எனவே, விழுதுகள் பலமாக இருக்கிறது; இராமச் சந்திரனார் காலத்தில் தொடங்கியது - அந்த விழுதுகள் பலமாக இருக்கின்றன. காரணம் என்ன? அந்த வேர் பலமாக இருந்தது. அந்த வேருக்கு அடித்தளம் தந்தை பெரியார் ஊட்டிய அந்த உணர்வுகள். இந்தப் பெரியார் திடலிலே அவர்களுடைய சிறப்பான மகிழ்ச்சியைப் பார்க்கின்றோம். பிள்ளைகளுடைய பெருமைகளைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு துறையில், பாரம்பரியமாக இருக் கிறார்கள். 

சமுதாய மாற்றத்தினுடைய 

ஓர் அருமையான சின்னம்

எதிரிலே உறவினர்களாக, குடும்ப உறவினர்கள் என்பதைவிட, கொள்கை உறவினர்களாக இங்கே ஏராளம் இருக்கிறார்கள். அதையும் தாண்டி, அய்.ஏ.எஸ். பெருமக்கள், அய்.பி.எஸ். பெருமக்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்று அத்தனை பேரும் இந்த விழாவிற்கு வந்து, மேடைக்கு வராவிட்டாலும், பேசவேண்டிய அவசியமில்லை - அவர்கள் மரியாதை செலுத்த வந்திருக்கிறார்கள். நீதிபதி சத்தியேந்திரன் அவர்களுடைய தொண்டைப் போற்றுவதற்கு, அவருடைய தொண்டறத்தை வாழ்த்துவதற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இது சமுதாய மாற்றத்தினுடைய ஓர் அருமையான சின்னம்.

ஈரோட்டு பயிற்சி முகாமிற்கு 

நாங்களும் சென்றிருக்கின்றோம்

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, எதிரே அமர்ந்திருக்கின்ற ஒவ்வொருவரையும் தனித்தனியே விளிக்காவிட்டாலும்கூட, அவர்களைப் பார்க்கிறபொழுது, நான் மற்றவர்களுடைய பேச்சையும் கேட்டுக்கொண்டு, பல நினைவுகள் எனக்கு வந்தன ஏனென்றால், மாணவப் பருவத்திலிருந்து இந்த இயக்கத்திலே என்னை ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த பயிற்சி முகாமிற்கு நீதிபதி சத்தியேந்திரன் அவர்கள் சென்றார்களோ, அதே ஈரோட்டு பயிற்சி முகாமிற்கு நாங்களும் சென்றிருக்கின்றோம்.

வீதிபதிகளின் மூலமாக 

நீதிபதிகள் உருவாகவேண்டும்!

அதே நீடாமங்கலம் மாநாட்டில் நானும் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன், மாணவனாக.  எனவே நாங்கள் இயக்கக் குடும்பத்திலும் பணியாற் றியவர்கள். அவர் நீதிபதியானார்; நான் வீதிபதியானேன்.

வீதிபதிக்கு என்றைக்கும் வேலை இருக்கும்; நீதிபதிக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இருக்கும். இன்றைக்கு வீதிபதிகளுக்குத்தான் அதிக வேலை இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த வீதிபதி வேலை இருக்கிறதே, அதற்கு என்றும் ஓய்வில்லை. வீதிபதிகளின் மூலமாக நீதிபதிகள் உருவாகவேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படையாகும்.

எனக்கு இரண்டு மூன்று நிகழ்வுகள் நினை விற்கு வந்தன. அய்யா சத்தியேந்திரன் அவர் களுடைய வாழ்க்கையைப்பற்றி, அருமையாக வைகோ அவர்கள், வரி பிளந்து வரி வரியாக வரலாற்றுச் சுருக்கத்தைச் சொல்லி, புலிகளை ஆதரித்த காலம்வரை, கருணாகரன் வரையில் வந்துவிட்டார் அவர்.

அதைவிட மிக முக்கியம், இந்த அரங்கத்தையும் பார்த்து, அவருடைய உரையையும் கேட்டு, தோழர்கள் ஊட்டிய உணர்வுகளையும் பார்த்த நேரத்தில், ஒன்று எனக்கு நினைவிற்கு வந்தது.

தருமபுரியில் தந்தை பெரியார் சிலையை 

திறந்து வைத்தார் முதலமைச்சர் கலைஞர்!

அண்ணா அவர்கள் மறைந்த பிறகு, தருமபுரியில் அவரால் திறக்கப்படவிருந்த தந்தை பெரியார் சிலையை, முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சரானவுடன், அவரை அழைத்துத் திறக்கச் சொன்னோம்.

அப்போது, அட்வகேட் ஜெனரலாக இருந்த நாரா யணசாமி முதலியார் அவர்களும் கலந்துகொண்டார்.

கலைஞர் திறந்த முதல் பெரியார் சிலை தருமபுரியில்தான். சிலை திறப்பு விழாவில் அவர் உரையாற்றிய முதல் வரி இப்பொழுது எனக்கு  நினைவிற்கு வந்தது; இரண்டையும் தொடர்புபடுத்தி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

நான் உருப்பட்டேனா இல்லையா என்பதை 

ஊர் அறியும், உலகம் அறியும்!

அவர் சொன்னார்,

‘‘நான் மாணவப் பருவத்திலே சரியாகப் படித்தேனா என்பதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், பெரியாருக்குப் பின் சென்று விட்டேன் என்று சொன்னவுடன், என்னைப் பார்த்து சபித்தவர்கள் சொன்னார்கள், ‘இவன், பெரி யாருக்குப் பின்னால் சென்றிருக்கிறான்; இந்த இயக் கத்திற்குப் போயிருக்கிறானே, இவன் உருப்படுவானா?' என்றுதான் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள் அந்தக் காலத்தில். நான் உருப்பட்டேனா இல்லையா என்பதை ஊர் அறியும், உலகம் அறியும்'' என்று அவருடைய உரையைத் தொடங்கினார்.

அதேபோலத்தான், இங்கே இந்தக் கொள்கையை ஏற்றவர்கள் உருப்பட்டார்களா? என்று பல பேருக்குச் சந்தேகம் வேண்டாம்; நாங்கள் உருப்பட்டது மட்டுமல்ல; நாங்கள் உயர்ந்தது மட்டுமல்ல, பல பேரை உருவாக்கி யிருக்கக் கூடிய நிலைக்கு வந்திருக்கின்றோம் என்பதற்கு அடையாளம்தான், சத்தியேந்திரன் அவர்களுடைய நூற்றாண்டு விழா படத் திறப்பாகும்.

அவர்கள் ஏணியாக இருந்தார்கள்; இந்தக் குடும்பமும் ஏணியாக இருந்திருக்கிறது. அவர்கள் மட்டும், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று இல்லை. யார் யாருக்கு உதவி செய்யவேண்டுமோ, உதவி செய்து அவர்களை உயர்த்தினார்கள்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினுடைய உயர்ந்த ஆவணமாக  - வரலாற்றில் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று!

நம்முடைய ஒப்பற்ற உச்சநீதிமன்றத்தினுடைய நீதியரசராக இருந்து வரலாறு படைத்த ஜஸ்டீஸ் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் - மண்டல் கமிசன் வழக்கில் அவர் எழுதிய தீர்ப்பு இருக்கிறதே, காலங் காலமாக என்றைக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினு டைய உயர்ந்த ஆவணமாக  - வரலாற்றில் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

அந்த வழக்கில், 9 நீதிபதிகள் தீர்ப்பு எழுதுகிறார்கள். அவர்கள் தீர்ப்பு எழுதுவதற்கு முன்பு, ஒரு சம்பவம் நடைபெற்றது.

அப்பொழுது நடந்த நிகழ்வை, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு சொன்னார்கள். அதை உங்களுக்குச் சொல்கிறேன்.

ஒருவர் தீர்ப்பு எழுதுவார், மற்றவர்கள் அதனை ஒப்புக்கொள்வார்கள். அப்படி எழுதும்போது, இல்லை, இல்லை எல்லோரும் சேர்ந்து ஒரே தீர்ப்பாக எழுதி விடலாம் என்று ஆலோசித்தார்கள். ஓர் அடிப்படையை ஒப்புக்கொள்ளுகின்ற நேரத்தில், தனித்தனியே தீர்ப்பு எழுதவேண்டுமா? என்று நீதிபதி ஜீவன்ரெட்டி கேட்டார்.

நம்முடைய நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் அவர்கள் சொன்னார், ‘‘இல்லை, நான் தனியாகத்தான் தீர்ப்பு எழுதுவேன்; எழுதவேண்டிய அவசியம் இருக்கிறது'' என்றார்.                            (தொடரும்)

No comments:

Post a Comment