மத்தியப் பல்கலைக் கழகங்களில் ஹிந்தி பயிற்சி மொழியா? போராட்ட எரிமலை வெடிக்கும் எச்சரிக்கை! எச்சரிக்கை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

மத்தியப் பல்கலைக் கழகங்களில் ஹிந்தி பயிற்சி மொழியா? போராட்ட எரிமலை வெடிக்கும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

மத்தியப் பல்கலைக் கழகங்களில் இனி பயிற்சி மொழி ஹிந்தியாம் - முதலமைச்சரின் எச்சரிக் கையை அலட்சியப்படுத்தினால், போராட்ட எரிமலை வெடிக்கும் - எச்சரிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்தியில் ஆளும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கொள்கை ஆட்சியாளர் பிரதமர் மோடி ஆட்சியின் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்தி மொழியைத் திணிக்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அரும்பாடுபட்டு வருகிறார்!

ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர் அதைவிட ஒரு படி மேலேபோய், வடமொழியான சமஸ்கிருதத்தை - அதன் கலாச்சாரத்தை மற்ற மக்கள் மீது திணிக்க, தங்களது புல்டோசர் மெஜாரிட்டியைப் பயன்படுத்த முனைந்துள்ளனர்!

ஹிந்தி திணிப்பு - முதலமைச்சர் எச்சரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின்  அவர்கள் தெளிவானதோர் அறிக்கை வெளியிட்டு, சரியான எச்சரிக்கையை ஹிந்தி, சமஸ்கிருத வெறியர்களுக்கு எதிராக விடுத்துள்ளார்!

‘‘நெருப்பை உரசிப் பார்க்கவேண்டாம்; ஹிந்தியைக் கட்டாயமாக்கும் உங்கள் முயற்சிகள்மூலம் மற்றொரு மொழிப் போரைத் திணிக்காதீர்கள். நாட்டின் ஒருமைப் பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் திணித்து விபரீத விளைவுகளை அறுவடை செய்யாதீர்கள்'' என்று தெளிவாகவே கூறியிருக்கிறார்கள்!

அரசியல் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ் நாட்டில் - பா.ஜ.க. என்ற காவிக் கட்சி தவிர மற்ற அத்துணைக் கட்சிகளும் ஹிந்தித் திணிப்புக்கு எதி ராகவே குரல் எழுப்பி, கண்டனம் தெரிவித்து வருகின்றன!

இந்த சுவரெழுத்தைப் படித்துப் புரிந்து கொள்ளத் தவறினால், வருங்காலம் உங்களை வாழ்த்தாது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்று தனியாக ஒன்று உள்ளதா?

அரசமைப்புச் சட்டம் தந்துள்ள குடிமக்களின் உரி மையை - பன்மதங்கள், பல மொழிகள் - 22 மொழிகள் உள்ளன என்றுள்ள நிலையில், ‘‘தேசிய மொழி'' (National Language) என்ற தனித்துவத்தை எந்த மொழிக் கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடாத நிலையிலும்,

இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை நீடிக்கும் என்று அந்நாள் பிரதமர் நேருவின் அரசியல் வாக்குறுதி தனிச் சட்ட மாக்கப்பட்டு, தொடரும் நிலையிலும், அதற்குப் பின் வந்த ஒன்றிய அரசின் நிலைப்பாடுகளும் ‘‘நீர்மேல் எழுதிய எழுத்தல்ல; கற்பாறையில் செதுக்கப்பட்ட உறுதிகள்'' என்பதை, ஹிந்தி மொழி வெறியர்களும் மறந்து, மக்களின் மொழி உணர்ச்சி என்ற நெருப்போடு விளையாடுகிறார்கள்!

ஹிந்தியை எதிர்க்கும் ஏராள மாநிலங்கள்!

பெரியார் மண்ணான தமிழ்நாடும், அதன் ‘திராவிட மாடல்' ஆட்சியும்தான் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கிறது என்று நுனிப்புல் மேய வேண்டாம்; உங்களின் அதிகாரப் போதை கண்களை மறைக்கலாம். சற்றே அகலமாக விழித்துக் கொண்டு விரிந்த பார்வையோடு பாருங்கள்.

பஞ்சாப் எதிர்க்கிறது!

மேற்கு வங்கம் எதிர்க்கிறது!

வடகிழக்கு நாகாலந்து, மேகாலயா, அசாம் எதிர்க்கிறது!

தென்னாடு -

ஆந்திரம், தெலங்கானா, கருநாடகம், கேரளம் எதிர்க்கிறது!

ஏன் மகாராட்டிரம்கூட எதிர்க்கிறது.

இதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்?

வரலாற்றின் சம்பவங்களைக் கொண்டு நாடாளும் நாயகர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தவறலாமா?

வங்கதேசம் பிரிந்தது ஏன்?

முஸ்லிம் மதத்தினை ‘அரசு மதமாக்கிய' பாகிஸ் தானில்,  - முஸ்லிம்கள் வாழும் பகுதியாக இருந்த வங்கத் தின் பகுதிகள் ஏன், எப்படி, எதனால், பிரிந்து தனி நாடா கியது? வங்கதேசம் என்று ஆகியதற்கு - பாகிஸ்தான் முஸ்லிம் மதத்தினரின் உருது மொழித் திணிப்புதானே - வங்கத்தைப் புறக்கணித்ததுதானே முக்கிய காரணம் என்பதை ஏன் மறக்கவேண்டும்?

மொழி உணர்ச்சிபூர்வமானது (Sensitive) அதில் கைவைப்பது மின்சாரத்தில் கை வைப்பது - விபரீத விளையாட்டு அல்லவா?

நாட்டில் நீறுபூத்த நெருப்பை ஹிந்தி வெறித்தனமும், அதிகார ஆணவமும் விசிறி விடுகிறது - விளைவுபற்றிக் கவலைப்படாமல்.

மத்திய பல்கலைக் கழகத்தில் 

பயிற்சி மொழி ஹிந்தியா?

மத்தியப் பல்கலைக் கழகங்களில் இனி ஹிந்திதான் பயிற்சி மொழியாம்!

அனைத்திந்திய போட்டித் தேர்வுகள், ஒன்றிய அரசுப் பணிகளுக்கானவை இனி ஹிந்தியில்தானாம்!

என்னே கொடுமை!

எப்படிப்பட்ட வன்மம்!

எம் இளைஞர்கள் இனி ‘தற்குறிகளாகி',  பல்கலைக் கழகத்தினுள்ளும், அரசுப் பணிகளுக்குள்ளும் நுழைய முடியாமல் செய்ய, இப்படித் திடீர் தடுப்புச் சுவர்களா?

இவற்றை இடித்துத் தள்ளிட, இந்நாட்டு இளைஞர் களும், மாணவர்களும் தயாராகிவரும் நிலையை உருவாக்குவது ஒன்றியத்தில் ஆள்வோருக்குத் தேவையா?

இதை இப்போது இப்படிக் கிளப்பிவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம்பற்றி பேசாமல் இருக்கவும், இந்தப் பக்கம் எதிர்க்கட்சிகள் விலையேற்றம்பற்றி பேசிடும் நிலையும் - நாளும் நலிவடையும் நிதிநிலைபற்றிய நினைப்பும் மக்களிடமிருந்து மறைக்கப்பட வழியும் ஏற்படும் என்ற திசை திருப்பல் உத்தியா?

எப்படியாயினும் எல்லோரும் இணைந்து எதிர்ப்பு என்ற தீ பரவினால் என்னாகும்?

எனவேதான், வீண் பிடிவாதம், ‘முதலைத்தனத்தை' மிஞ்சும் மூர்க்கத்தனத்தைக் கைவிட்டு, நாட்டின் அனைவரையும் ஒத்த குடிமக்களாக்கி, ஒன்றிய  அரசை நடத்த முன்வாருங்கள்!

போராட்ட எரிமலை வெடிக்கும் - எச்சரிக்கை!

குறைந்தபட்சம் அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் எடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றுங்கள். இல்லையேல், போராட்ட எரிமலை வெடிப்பது தவிர்க்க இயலாது!

எல்லோரையும், எல்லா காலத்திலும், எப்போதும் தேர்தல் வித்தைகள்மூலம் ஏமாற்றி வெற்றி பெற முடியாது என்பது பேருண்மை - அதை மறவாதீர் ஆட்சியாளரே!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

11.10.2022


No comments:

Post a Comment