முதலமைச்சருக்கு மேனாள் அமைச்சர் மனந்திறந்த பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

முதலமைச்சருக்கு மேனாள் அமைச்சர் மனந்திறந்த பாராட்டு

 அருட்பெருஞ்சோதி சிதம்பரம் இராமலிங்க அடிகள் பெயரில் வடலூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பன்னாட்டு மய்யம் அமைக்கும் அறிவிப்பை அவர் பிறந்த அக்டோபர் 5-ஆம் நாள் அறிவித்து இனிவரும் ஆண்டுகளில் வள்ளலார் பிறந்த அக்டோபர் 5-ஆம் நாளை தனிப்பெரும் கருணை நாளாக அரசு கொண்டாடுவது தமிழ் நாடு திராவிட அரசின் கடமை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியிருப்பது வரலாற்றில் ஒரு மைல் கல்! மறக்க முடியாத நாள். எனக்கு மு.க. ஸ்டாலின் இரண்டாவது எம்.ஜி.ஆராக காட்சி யளிக்கிறார். இறவாப்புகழுடன் நோயில்லாமல் வாழ என் இதயம் நிறைந்த வாழ்த்துகள். அறிஞர் அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கைப்படி தி.மு.க. ஆன்மீகத் திற்கு விரோதி என்ற தவறான குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். இது திடீர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்களுக்காக அறிவிக்கப்பட்டதல்ல. தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்பதை நினைவுப் படுத்தியிருக்கின்றார்.

பசிப்பிணி நீக்கும் அன்னதானம் மாத்திர மல்ல, ஜாதி மதவேறுபாடுகள் இல்லாத சமநிலை சமூக அமைப்புதான் அவசியம். "ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை ஊராகி உலகியல் நடத்த வேண்டும்" என்பது தான் வள்ளலாரின் அறவழி. இது மட்டுல்ல. மனிதனும் தெய்வமாகலாம் என்பதை நீதிமன்றத் தில் நிரூபித்தவர் வள்ளலார். கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் பாடிய பாடல்கள் அருட்பா அல்ல. மருட்பா என ஆறுமுகநாவலர் தொடுத்த வழக்கிற்கு - துறவிகளின் வழக்கத்திற்கு மாறாக காவி உடுத்தாமல், சடாமுடி தாடி வளர்க்காமல் தூய வெள்ளை ஆடையில் நீதிமன்றத்திற்குள் பிரதிவாதி இராமலிங்க அடிகளார் நுழைந்த வுடன் வழக்குப் போட்ட ஆறுமுக நாவலர் உள்பட அனைவரும் அவரை எழுந்து வணங் கினரே. அவர் அபூர்வ அதிசயப் பிறவி.

மற்ற போதகர்கள் போல் அவரின் பூதஉடல் இறக்கவில்லை . மறைந்தார். எப்படி பஞ்சபூதங் களுடன் கரைந்தார். என்பது வெள்ளையர் ஆண்ட போதிருந்த  இங்கிலாந்து  - ஸ்காட் லாண்ட் யார்டு போலீசுக்கும் தெரியாது. சுதந் திரம் பெற்ற இன்றைய இந்திய அரசுக்கும் தெரியாது. சிதம்பர ரகசியத்தைவிட உலக ரகசியம்.

"கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக" என உரத்தகுரலில் முழங்கினார். ஒரு சமயம் காஞ்சி பரமாச்சாரியர் சமஸ்கிருதம் தமிழுக்குத் தாய் என்று சொன்னபோது - அப்படி என்றால், தமிழ் சமஸ்கிருதத்திற்கு தந்தை என நேருக்கு நேர் தமிழுக்காக வாதாடியவர் வள்ளலார்.

விவேகானந்தர், இரவீந்திரநாத் தாகூர் போல் உலகளவில் புகழ்பெற வேண்டியவர் வள்ளலார். அன்னதானத்தை பிரதானமாக்கி அவர் கடைப் பிடிக்கச் சொன்ன அறநெறிகளை கடைப் பிடிக்கத் தவறிய மக்களைப் பார்த்து மனம் நொந்து "கடைவிரித்தேன் கொள்வாரில்லை. கட்டிவிட்டேன் கடையை" என்று அறைக்குள் போனவர் இன்று வரை திரும்பி வரவில்லை. வள்ளலார் பெயரில் மாபெரும் பன்னாட்டு மய்யம் அமைத்து ஆண்டு முழுவதும் அன்னதானம் செய்து அவர் கொள்கையை இந்திய அளவிலும் உலகளவிலும் பரப்ப எடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியை கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த மேனாள் மூத்த அமைச்சராக - எம்.பி.யாக பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

தமிழ்நாடு முதலமைச்சராக எம்ஜிஆர். வந்தார். 8ஆவது வள்ளல் என அழைக்கப் பட்டார். வள்ளலார் வழியில் ஏழைக் குழந் தைகள் பள்ளிக்குப் போவதற்கு முன்பே அவர்களுக்குக் கிராமங்களிலும் நகரங்களிலும் ஜாதிமத பேதமின்றி அனைத்துக் குழந்தை களுக்கும் சத்துணவு தந்தார். இதனை அய்.நா. சபை பாராட்டியது. மேலும் சத்துணவு மய்யங் களில் அனைத்து ஜாதி பெண்களுக்கும் வேலை கொடுத்தார் எம்.ஜி.ஆர். இப்பொழுது முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வள்ளலார் மனம் குளிரும் விதம் பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலையில் சுவையான உணவு தருகிறார். வள்ள லாரின் நெறி, புகழ் வளர்க்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

- வி.வே. சுவாமிநாதன்

குறிப்பு: 97 வயது நிறைந்த மேனாள் தமிழ்நாடு (அதிமுக) அமைச்சர் - முதுபெரும் திராவிட இயக்கச் செம்மல்.


No comments:

Post a Comment