பண்டிகைகளின் பெயரால் பணமும், உழைப்பும் பாழ்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

பண்டிகைகளின் பெயரால் பணமும், உழைப்பும் பாழ்!

"பண்டிகை என்ற பெயரால் மக்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணமும், காலமும், உழைப்பும் பாழாவது பற்றி யாருக்கும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

மாதந் தவறினாலும் பண்டிகைகள் தவறுவது கிடையாது. இந்த ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என்று இத்தியாதி இத்தியாதி பண்டிகைகளின் வரிசை!

விளம்பரங்கள் மூலம் வியாபாரிகள் மக்களை ஈர்த்து கறந்து விடுவதற்கு அளவேயில்லை. 

ஆயுத பூஜை   முடிவடைந்தது

1. பூ மற்றும் மாலை -  4 கோடி மக்கள், வாகனங் களுக்கு, படங்களுக்கு  - 8 கோடி மாலை - ஒரு மாலை 50  ரூபாய் என்று வைத்தால் கூட 400 கோடி ரூபாய்.

2. வாழைக் கன்று - 5 கோடி கன்றுகள் - தொழிற்சாலை, லாரி, பஸ் ஒன்றுக்கு ரூபாய் 50 என்று வைத்தால் கூட ரூ.250 கோடி.

3. இனிப்பு ஒரு ஆளுக்கு கால் கிலோ என்று வைத்தால் 2 கோடி பேர் - ரூ.400 கோடி.

4. வீட்டுக்குத் தேவையான பூஜை சாமான்கள் ஒரு குடும்பத்துக்கு ரூ.100 என்று வைத்துக் கொண்டால் கூட ரூ.200 கோடி.

5. இது தவிர தொழிற்சாலைகள் ஒரு கோடி மக்களுக்கு பரிசுப் பொருட்கள் ரூ.500 என்று வைத்துக் கொண்டால் 500 கோடி ரூபாய்.

கூட்டினால் ரூ.2500 இலிருந்து ரூ.3000 கோடி. 

ஒரு நாளில் அதுவும் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வகையில்   பண்டிகைகள் உள்ளன.

இந்தப் பண்டிகைக்கு வரும் முக்கால்வாசி பொருட்கள் விவசாயம் சார்ந்தவை. சிறு வியாபாரிகளிடம் வாங்கலாம்.

இங்கே பண்டிகைகளும் திருவிழாக்களும் தான் இந்தியாவின் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிக்கின்றன என்பதை எல்லாரும் உணர வேண்டும்

இதை எல்லாம் அழித்தால் பின் நம் பொருளாதாரம் அழிந்து விடும். பிறகு ஆப்ரிக்கா நாடுகள் போல நாமும் நமது பாரம்பரியத்தை இழந்து மேற்கத்திய  நாட்டினரிடம் தான்  கை ஏந்தி நிற்க வேண்டும்.

கடவுளை கும்பிடும் போது  பல பேர் வாழ்வார்கள். முக்கியமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலமுடன் வாழ்வார்கள்.” 

-இவ்வாறான பதிவுகள் சமூக ஊடகங்களில் பெரும் அளவில் பகிரப்படுகின்றன.

மேற்கண்ட சமூக வலைத்தளப்பதிவுமூலம் வியாபாரத்துக் குத்தான் பக்தி என்பது வெளிப்படையாகிவிட்டது. 

மேலும் அந்த வியாபாரத்தின்மூலம் பக்தி, பண்டிகையின் பெயரால் அப்பாவி மக்கள் பொருளிழப்புக்கு ஆளாகி விடுகிறார்கள் என்கிற உண்மையை யார் எடுத்துக்கூறுவது?

அந்த வியாபாரத்தின்மூலம் நுகர்வோர் பெற்ற பயன் என்ன என்ற கேள்வி எழும்போது, பதில் சூன்யமாகிவிடுகிறது.

மதம், கடவுள், பக்தி, பழக்க வழக்கம் என்பதன் பெயரால் அறிவை இழப்பது ஒன்றே இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது. பண்டிகைகளின் பெயரால் மக்களின் பொருள் சுரண்டப் படுவது மட்டும் அல்லாமல், அறிவும் அல்லவா இழக்கப் படுகிறது. பகுத்தறிவின்றி மக்கள் பாழ்படுத்தப்படுகிறார்கள் என்பதுதானே உண்மையிலும் உண்மை.

ஓர் ஆண்டில் பாதி நாட்களை விரயமாக்கும் ஒருநாடு எப்படி முன்னேறும்?

பணம் கையில் இல்லையெனில் கடன் வாங்கி செலவழிக்கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது!

மக்கள் இப்படி தறி கெட்டுப் போவதற்கு ஊடகங்களும் முக்கிய காரணிகளாகும்.

வாரா வாரம் ஆன்மிக இதழ் என்றும், சோதிட வார இதழ் என்றும், பண்டிகைகள் வந்தால் அவை குறித்த சிறப்பிதழ்களும் வெளியிட்டு, மக்களின் சிந்தனையை மழுங்கடிப்பது ஆரோக்கியமானது தானா?

'நாய் விற்ற காசு குரைக்காது' என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது. 

No comments:

Post a Comment