படையெடுப்புகளிலேயே பண்பாட்டுப் படையெடுப்புதான் மிக மிக ஆபத்தானது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

படையெடுப்புகளிலேயே பண்பாட்டுப் படையெடுப்புதான் மிக மிக ஆபத்தானது!

‘‘சமஸ்கிருத மயம்'' படையெடுப்புக்காகவே ஹிந்துமதப் பண்டிகைகள் -ஒரு மூளைச் சாயத் தொழிற்சாலை என்பதை உணருங்கள், பிறருக்கு உணர்த்துங்கள்!

பொங்கல் விழா ஒன்றுதான் எல்லோருக்கும் உணவளித்து வாழ வைக்கும் உழைப்பு

வேளாண்மைத் திருவிழா - மனிதநேயப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட விழா!

படையெடுப்புகளிலேயே பண்பாட்டுப் படையெடுப்பு தான் மிகமிக மிக ஆபத்தானது; ஆரியப் பண்பாடு, ‘சமஸ்கிருத மயம்' படையெடுப்புக்காகவே இந்தப் பண்டிகைகள் - ஒரு மூளைச் சாயத் தொழிற்சாலை என்பதை உணருங்கள்!  பிறருக்கு உணர்த்துங்கள்! உணர்த்துங்கள்!!  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஹிந்து மதம்' என்று அன்னியரால் பெயர் சூட்டப் பட்டு, இன்று பலராலும் அவ்விதம் அழைக்கப்பட்டுவரும் சனாதன மதமான பார்ப்பன - ஆரிய வேத மதத்தின் பண்பாட்டுப் படையெடுப்புக் காரணமாகவே கொண் டாடப்படும் பல பண்டிகைகள் உள்ளன!

இவையெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு இருந்த திராவிடர் நாகரிகம், பண்பாட்டு, மொழி வரலாற்றில் கிடையாது என்பது ஆராய்ச்சி அறிஞர்கள் கூற்றாகும்!

ஆர்.எஸ்.எஸ். போன்ற ஆரிய அமைப்பும், அதன் பிரிவுகளானவிசுவ ஹிந்து பரிஷத்' போன்றவையும் தங்களுடைய சித்தாந்தங்களைப் புகுத்தும் வகையில், நம்மக்களிடையே இதனை இன்று தீவிரமான பிரச்சார மாகக் கையிலெடுத்துக்கொண்டு, பக்திப் போதையை ஊட்டி, திருவிழாக் கொண்டாட்டங்கள்மூலம் ஒரு புது வளர்ச்சியை அடையத் துடியாய்த் துடிக்கின்றன!

ஹிந்து மதப் பண்டிகைகள் நம் மக்களுக்கு உரியதல்ல!

திராவிட வரலாற்று உணர்வும், தமிழ் ஆராய்ச்சி அறிவும் உள்ளவர்கள், அறிஞர்கள் அறிவுபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளபடி இந்தப் பண்டிகைகள்பற்றிய கதைகளைச் சற்று ஆழமாகப் பரிசீலித்தாலே அவை நம் மக்களுக்கு உரியதல்ல என்பது புரியும் - நிதானமான நிலையில் நின்று பார்ப்பவர்களுக்கு இது எளிதில் புரியும்.

1. தீபாவளி

2. விநாயகர் சதுர்த்தி

3. கந்தர் சஷ்டி

4. ஸ்ரீராம நவமி

5. கோகுலா அஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி

6. சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை

7. விஜயதசமி

8. சங்கராந்தி

மேற்காட்டிய பெயர்களில் ஏதாவது ஒன்றாவது தமிழ்ப் பெயரா?

எப்படி தமிழ் வருஷப் பிறப்பு என்று கூறிடும் 60 வருஷங்களில் ஒரு பெயர்கூட தமிழ்ப் பெயர் கிடை யாதோ, அதுபோலத்தான்!

தைப் பொங்கல் ஒன்றுதான் உழவர் திருவிழா!

வேளாண்மையை வெறுப்பது ஆரியம்!

வேளாண்மையை வெறுப்பது ஆரியம்!

வேளாண்மையை போற்றுவதற்காகத்தான் அறு வடைத் திருவிழா - நமது பண்பாட்டு விழா!

மற்றவற்றிற்குப் புராணக் கதைகளில் எல்லாம் அசுரர் களைத் தேவர்கள் கொன்றதைக் கொண்டாடும்பண்டி கைகள்' என்ற தத்துவ அடிப்படையிலானவைகளாகும்!

தேவ - அசுரப் போராட்டம் என்பது ஆரிய - திராவிடப் போராட்டம்தான்!

பெரும்புலவர்கள் மறைமலையடிகளார், டி.பி.மீனாட்சிசுந்தரனார், நாவலர் .சோமசுந்தர பாரதியார், தேவநேயப்பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்!

தேவ-அசுரப் போராட்டம்' என்பது ஆரிய - திராவி டப் போராட்டம் என்பதன் உருவகம்தான் என்பதை வரலாற்று அறிஞர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீரத்தால் வென்றதைவிட ஆரியர்கள் சூழ்ச்சியால், தந்திரத்தால் பலம் பொருந்திய திராவிடர்களை வென் றார்கள் என்பதை அப்புராணக் கதைகளின் கூற்றி லிருந்தே தெரிந்துகொள்ளலாம்!

திராவிட இனத்தை சூழ்ச்சியால் போரில் கொன்ற கதையையே ஆரியம் வென்ற கதை போல உருவாக்கி, அதை இன்று அந்த மக்களுக்கே மத போதையாய் ஊட்டி, அந்தப் பண்டிகைகளைமயக்க பிஸ்கட்டு களாக்கி' நம் உரிமைகளில், அரசியல், சமூக, பொருளா தார, பண்பாடு அனைத்துத் துறைகளிலும்ஆக்டோபஸ்' போல ஆதிக்கம் செலுத்துகின்றனர்!

எப்படி கிருமிகள் கண்ணுக்குத் தெரியாமல் உடலி னுள் புகுந்து தாக்கி, நோய்மூலம் ஆட்கொல்லிகளாக ஆகி, தங்களது பசிக்கு இரை தேடுகின்றனவோ, அதுபோல, ஆரியம் இன்று இந்தப் பண்டிகைகள்மூலம் நம் மக்கள் அறிவையும், உழைப்புமூலம் ஈட்டிய பொருளையும் உறிஞ்சிப் பாழ்படுத்துகின்றன!

நமது பகுத்தறிவுப் பிரச்சாரம் பயன்பெறும்!

டாஸ்மாக் குடிவெறியர்கள் முன்பு மதுவிலக்குப் பிரச்சாரம் உடனடியாகப் பயன்பட்டு போதிய விடியலை ஏற்படுத்தாவிட்டாலும், மற்றவர்களாவது தங்கள் வாழ்க் கையை செம்மையாக, அறிவுப்பூர்வமாக நடத்திட, நமது பகுத்தறிவுப் பிரச்சாரம் பயன்பெறும்! பெற்று வருகிறது!!

(‘சுரன் - குடிப்பவன்; ‘அசுரன்' - குடிக்காதவன் என்பதும் மறந்துவிட்டதா?)

அறிவை அடிமையாக்கியதைவிட கொடுமையைப் புரிந்துகொள்ளாமல் அந்த அடிமைகள் நம்மைப் பார்த்து கேலி பேசுவது. நாம் அதைப்பற்றி துளியும் கவலைப் படவில்லை -  நம் பணியைத் தொடருகிறோம்.

மனிதநேயப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைத் திருவிழா - பொங்கல் விழா!

பொங்கல் விழா ஒன்றுதான் யாரையும் கொல்லாத, எல்லோருக்கும் உணவளித்து வாழ வைக்கும் வேளாண்மைத் திருவிழா - இயற்கையான அறிவும், மனிதநேயப் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட விழா.

மனுதர்மத்தில் அத்தியாயம் 10 இல், சுலோகம் 84 இல் - ‘‘பெரியோர்களால் நிந்திக்கப்பட்ட பிழைப்பு - பயிரிடும் தொழில்'' என்று வன்மையான கண்டனத்தைத் தெரிவித்திருப்பது எதைக் காட்டுகிறது?

இதைக்கூட வடநாட்டில் தங்கள் பண்டிகையாக மாற்றி - ‘சங்கராந்தி' என்ற வேறு பெயருடன்தான் நடத்துகின்றனர்!

படையெடுப்புகளிலேயே பண்பாட்டுப் படையெடுப்புதான் ஆபத்தானது!

படையெடுப்புகளிலேயே பண்பாட்டுப் படை யெடுப்புதான் மிக, மிக, மிக ஆபத்தானது.

தமிழ்நாட்டுத் தமிழ்க் குழந்தைகள் முதல், ஆண், பெண்கள் பலரது பெயர்களும் அவரது தாய்மொழி தமிழில் உள்ளதா?

இல்லை! இல்லை! மகா வெட்கக்கேடு!!

அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை.

என்னே கொடுமை!

தமிழ்நாட்டில், தமிழில் இசை கிடையாது.

நமதுயாழ்' காணாமற் போய்! வீணை' நுழைந்து விட்டது கொடுமை!

முற்கால சங்க இலக்கியங்களில் சரஸ்வதி, லட்சுமிக்கு இடம் உண்டா?

உணருங்கள், பிறருக்கு உணர்த்துங்கள்!

தமிழறிஞர்களே, சமஸ்கிருத மயம் படையெடுப்புக்காகவே இந்தப் பண்டிகைகள் - ஒரு மூளைச் சாயத் தொழிற்சாலை என்பதை உணருங்கள்! உண்மைகள் உலா வரட்டும்!!

பிறருக்கு உணர்த்துங்கள்! உணர்த்துங்கள்!!     

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.10.2022




No comments:

Post a Comment