மனித சங்கிலி போராட்டம் வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

மனித சங்கிலி போராட்டம் வெற்றி

தொல்.திருமாவளவன் நன்றி

சென்னை,அக்.13- சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் வெற்றி பெற்றதற்கு,  பங்கேற்ற கட்சிகள், இயக்கங்கள், ஆதரவளித்த மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் 33 அரசியல் கட்சிகள் 44 இதர இயக்கங்கள் உள்ளிட்ட  எண்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பங்கேற்றுள்ளன.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் மட்டுமே இவ்வளவு இயக்கங்கள் ஆர்எஸ் எஸூக்கு எதிராக ஒன்று குவிந்தன என்பது புதிய வரலாறு. தமிழ்நாடு பிற மாநிலங்களிலிருந்து மாறுபட்ட அரசியல் பார்வையும் மதவெறி அரசியலுக்கு எதிரான போக்கும் கொண்ட ஒரு மாநிலமாகவுள்ளது என்பதை இந்த அறப்போரில் நிகழ்ந்த அணிதிரட்சி ஒரு சான்றாகவுள்ளது. சனாதன சூழ்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவதாகவே இந்த மனிதச் சங்கிலி அறப்போர் அமைந்தது. சனாதன சங்பரிவார் சதிக் கும்பலிடமிருந்து சமூகப் பிரிவினை வாதிகளிடமிருந்து நம்  தமிழ்மண்ணைப் பாதுகாப்போம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பிழப்பு : விரிவான பதில் தேவை - 

ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, அக்.13 பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டது. 

பிரதமர் மோடி, கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி திடீரென தொலைக்காட்சியில்  தோன்றிப் பேசினார். அப்போது அவர், அதிரடியாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இது கருப்புப் பணத்துக்கு எதிரான துல்லிய நடவடிக்கை என அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், திடீரென இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பலரும் பாதிப்புக்குள்ளாகினர். செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு தரப்பட்டாலும் பல மணி நேரம் வங்கிகளில், ஏ.டி.எம். மய்யங்களில் கால் கடுக்க காத்து நிற்கும் நிலை உருவானது.  இந்த பணமதிப் பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 57 'ரிட்' வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் நீதிபதிகள் கவாய், போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், நாகரத்தினா ஆகி யோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னி லையில் நேற்று (12.10.2022) விசாரணைக்கு வந்தன. அப்போது அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, "பண மதிப்பிழப்பு சட்டத்தை சரியான பார்வையில் எதிர்க்காவிட்டால், இந்த பிரச்சினை தத்துவார்த்த ஆர்வமாக மட்டுமே இருக்குமே தவிர நடைமுறை தொடர்பு இல்லாததாக (அகாடமிக்) இருக்கும்" என்று குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள், "இந்த பிரச்சினைக்கு பதில் அளிக்க நாங்கள் அது தத்துவார்த்த ஆர்வமாக மட்டுமே இருந்து, நடைமுறை தொடர்பு இல்லாததா, அப்படி இல்லையா அல்லது நீதித்துறை பரிசீலனைக்கு அப்பாற்பட்டதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். இது அரசின் கொள்கை மற்றும் அதன் விவேகம் சார்ந்தது என்பது இந்த வழக்கின் ஒரு அம்சம். எங்களுக்கு  சட்டத்தின் எல்லை எப்போதுமே தெரியும். ஆனால், பண மதிப் பிழப்பு செய்யப்பட்ட விதம், ஆராயப்பட வேண்டும். அதை முடிவு செய்ய நாங்கள் வழக்குரைஞர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்" என கூறினர்.

நீதிமன்ற நேரம் வீணடிப்பா? 

ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அனுமானம் அல்லது கோட்பாடு சார்ந்த (அகாடமிக்) பிரச்சினையில், நீதிமன்ற நேரம் வீணடிக்கப்படக்கூடாது" என கூறினார். இதற்கு வழக்குதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சியாம் திவான் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், "இந்த வழக்குகள் அரசியல் சாசன அமர்வின்முன் தான் விசாரிக்கப்பட வேண்டும் என்று முந்தைய அமர்வு கூறிய நிலையில், அரசியல் சாசன அமர்வின் நேரம் வீணடிக்கப் படுகிறது என்ற வார்த்தைகள் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது" என கூறினார். மற்றொரு வழக்குதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ப.சிதம்பரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்பற்றப்படாத விதிமுறைகளை சுட்டிக்காட்டி வாதங்களை முன்வைத்தார். உத்தரவு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்குகள் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டனர். இந்த வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


No comments:

Post a Comment