பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

பதிலடிப் பக்கம்

ஆங்கிலேயருடன் ஆலிங்கனம் செய்த ஆர்.எஸ்.எஸ். - ஜனசங்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

சங் குடும்பத்தைக் குறித்து புத்தகம் எழுதிய ஆண்டர் சனும், டாம்லேயும் கூறுவது இதுதான்:

"கோல்வால்கர் காலகாலமாக வழங்கி வரும் பொருளில் ஒரு புரட்சியாளர் அல்ல. பிரிட்டிஷாருக்கு இது புரிந்திருந்தது. பிரிட்டிஷ் அரசின் உள்துறைச் செயலகம் 1943இல் தயாரித்த அறிக்கை, "ஆர்எஸ்எஸ், சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு உடனடி அபாயம் என்று வாதிடுவது கடினம்" என்கிற முடிவுக்கு வந்தது. 1942இல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது நடந்த வன்முறை குறித்து தன் கருத்தைத் தெரிவித்த பம்பாய் மாகாண உள்துறைச் செயலகம், 'சங் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதில் கவனமாக இருந்தது; குறிப்பாக, 1942இல் வெடித்த கலவரங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நின்றது...' என்றது.

செப்டம்பர் 3, 1939இல் இரண்டாம் உலகப் போர் துவங் கிய போது, மாகாண அமைச்சரவைகளிலிருந்து காங்கிரஸ் ராஜினாமா செய்தது. சாவர்க்கர் அன்றைய வைஸ்ராய் லின்லித்கோவினை அக்டோபர் 3, 1939 அன்று சந்தித்து போர்க் காலத்தில் பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பதாக உற்சாகமாகச் சொன்னார். இதனை இந்திய விவகாரங்களைக் கவனிக்கும் பிரிட்டிஷ் அமைச்சர் ஜெட்லாண்ட் பிரபுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் லின்லித்கோவ் இப்படிக் குறிப்பிடு கிறார்:

"மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்துக் களின் பக்கம் திரும்பி அவர்களின் ஆதரவுடன் பணிபுரிய வேண்டிய நிலைதான் இருக்கிறது என அவர் (சாவர்க்கர்) கூறினார். சமீபத்திய நிகழ்வுகள் காட்டுவது போல் பிரிட்டனுக்கும் ஃபிரான்சிற்கும் இடையிலான உறவுகளிலும், ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகளிலும் பிரச்சினை இருப்பது போலவே, இந்துக்களுக்கும் நமக்கும் இடையே கடந்த காலத்தில் பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். தற்போது நமது நலன்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நாம் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். இப்போது அவர் மிகவும் மிதவாதியான மனிதராக இருந்தாலும் கடந்த காலத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியில் இருந்தார் என்று எனக்குத் தெரியுமென்று நினைக்கிறேன் (அதை பின்னர் உறுதி செய்து கொண்டேன்.) தற்போது நம் நலன்கள் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருப் பதால் இந்து மதமும் கிரேட் பிரிட்டனும் நண்பர்களாக இருக்க வேண்டும்; பழைய விரோதம் இனி தேவையற்றது."

ஜூலை 4, 1911 அன்று அந்தமான் சிறைக்கு வந்ததி லிருந்து சாவர்க்கரின் செயல்பாடுகளுடன் இந்த நிலைப்பாடு ஒத்துப் போகிறது. காங்கிரஸை எதிர்ப்பது, பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பது என்கிற இந்த நிலைப்பாட்டைத்தான் ஆர்எஸ்எஸ்ஸும் சாவர்க்கரின் சேவகர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியும் பின் பற்றினர். இதற்கான ஆதாரங்களை இந்தியாவின் விடுதலைக்குப் பின்னர்தான் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

வாஜ்பாய் அரசில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி அது வரை ஆவணக் காப்பகங்களிலிருந்த, ஆனால் பிரசுரிக்கப்படாத ஆவணங்களைப் பிரசுரிக்க விடாமல் தடுப்பதில் தீவிரமாக இருந்தார் என்பதில் வியப்பேதும் இல்லை.

1943-1944 ஆண்டுகளின் ஆவணங்களைக் கண்டறிந்து தொகுத்த பார்த்தசாரதி புதியதொரு பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டினார் (அவர் பிரசுரித்த தொகுப்பின் பெயர்: Towards Freedom: Documents on the Movement for Independence in India 1943-44 Part Ill; Oxford University Press, 1997)

பேராசிரியர் பிபன் சந்திரா போன்ற ஆய்வாளர்களும் இந்தப் பணியைச் செய்தனர். சான்றாக, அவர் எழுதிய Communalism in Modern India (Vikas, 1987)  என்கிற புத்தகத்தைக் குறிப்பிடலாம்.

ஜனசங்கத் தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தன்னுடைய ஹீரோவான சாவர்க்கரை கொள்கை ரீதியாக நெருக்கமாகப் பின் தொடர்ந்தார். பாகிஸ்தான் பிரிவினை கோரி லாகூரில் முஸ்லிம் லீக் 1940இல் நிறைவேற்றிய தீர்மானத்தை முன் மொழிந்த மவுல்வி ஏ.கே. ஃபஸ்லூல் ஹக்கின் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பதில் முகர்ஜிக்கு பிரச்சினை இல்லை; சிந்து மாகாணத்தின் சட்டசபை நாட்டின் பிரிவினைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் அந்த அமைச்சரவையில் இந்து மகாசபை அங்கம் வகித்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

ஆகஸ்டு 8, 1942இல் காங்கிரஸ் நிறைவேற்றிய 'வெள்ளை யனே வெளியேறு' தீர்மானத்தினை இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸ்ஸும் எதிர்த்தன. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட எழுச்சியினை நசுக்க வேண்டும் என்று ஆலோ சனை கூறி வங்கத்தின் கவர்னர் சர் ஜான் ஹெர்பெர்ட்டுக்கு ஜூலை 26 அன்று முகர்ஜி கடிதம் ஒன்றை எழுதினார் என்கிற உண்மை சிலருக்கு மட்டுமே தெரியும். அக்கடிதத்தின் பின்வரும் பகுதிகளைப் பார்த்தால் மேலும் விளக்கமே தேவையில்லை. 

"சென்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நாம் விரிவாக விவாதித்த பிர்ச்சினைகள், குறிப்பாக காங்கிரசின் போராட்ட அறிவிப்பால் எழுந்திருக்கும் பிரச்சினைகள் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சிக்கலான இந்த காலகட்டம் குறித்து ஒரு கவர்னர் என்கிற முறையில் உங்களுக்கும் அரசாங்கத்தில் இருக்கும் உங்கள் சகாக்களுக்குமிடையே முழுமையான புரிதல் இருக்க வேண்டும். 

"காங்கிரஸ் அறிவித்திருக்கும் பரந்துபட்ட இயக்கத்தின் விளைவாக வங்க மாகாணத்தில் எழச் சாத்தியமுள்ள நிலைமை குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன். போர்க் காலத்தில் உள்நாட்டுக் கலவரங்களையும், பாதுகாப்பின்மை யையும் விளைவிக்கக் கூடிய வெகுஜன உணர்வுகளைத் தூண்டத் திட்டமிடும் எவரையும் அந்த நேரத்தில் பொறுப்பி லிருப்பவர் எதிர்க்க வேண்டும். 

"இன்று இரண்டு தரப்பும் கடந்த கால வேறுபாடுகளைக் கிளறக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இன்றைய பிரச்சினை இதுதான்: இன்று ஜப்பானிடமிருந்தோ ஜெர்மனியிடமிருந்தோ வரும் புதிய தாக்குதலை இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் மனித சுதந்திரத்திற்கு நேரும் அபாய மாக நாம் கருதுகிறோமா? அவர்கள் (விடுதலை வேண்டு வோர்) எந்த லட்சியங்களுக்காகப் போராடினார்களோ அவற்றை அடைந்து விட்டனர் என்று நான் கூறுவேன். இந்தியா சுதந்திரமாக இருப்பதற்கான உரிமையை பிரிட்ட னும் அதன் இந்தியப் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டிருக் கின்றனர். எனவே நம்முடைய கடந்த கால உறவு குறித்து அவர்களுக்கும் நமக்கும் சண்டை இல்லை. 

"வங்கத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த இயக்கத்தை எப்படி எதிர்ப்பது என்பதுதான் கேள்வி. காங்கிரசின் தீவிர முயற்சிகளையும் தாண்டி இந்த இயக்கத்தினை மாகாணத்தில் வேர் விடாமல் தோல்வியடையச் செய்யும் விதத்தில்தான் மாகாணத்தின் நிர்வாகம் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் எந்த சுதந்திரம் வேண்டி இயக்கத்தைத் துவங்கியதோ அது ஏற்கெனவே மக்களின் பிரதிநிதிகளுக்குச் சொந்தமாகி விட்டது என நாம், குறிப்பாக பொறுப்புணர்வு மிக்க அமைச் சர்கள், மக்களிடம் சொல்வது சாத்தியமாக இருக்க வேண்டும். ஓர் அவசர நிலையில், சில பகுதிகளில் சுதந்திரம் மட்டுப் பட்டிருக்கலாம். இந்தியர்கள் பிரிட்டிஷாரை நம்ப வேண்டும். 

“இந்தக் காரணத்திற்காகத்தான், நீங்கள் உடனடியாக நிலம், நீர், ஆகாயத்தில் செயல்படும் ஒரு மக்கள் ராணு வத்தை வங்கத்தில் உருவாக்க உடனடி நடவடிக்கைகள் எடுத்து அவர்களுடைய சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என் சக்தி முழுவதையும் திரட்டி வலியுறுத்துகிறேன்.'' 

"இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதத் தூண்டிய உணர்வை நீங்கள் பாராட்டுவீர்கள் என நம்புகிறேன். எதிர்காலம் நமக்கு எதை வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்த நெருக்கடியான தருணத்தில், உங்கள் அரசின் ஓர் அமைச்சராக நான் உங்களுக்கு என் இதயம் நிறைந்த ஒத்துழைப்பைக் கொடுக்கவும், மாகாணத் திற்கும் இந்தியாவிற்கும் சேவை புரியவும் தயாராக இருக்கிறேன்.'' 

முகர்ஜி முகமது அலி ஜின்னாவை மும்பையில் சந்தித்தார். அவர்கள் மூன்று மணி நேரம் பேசினார்கள்.

அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறினாலும், இந்து ராஜயம் குறித்து முகர்ஜிக்கு தெளிவான பார்வை இருந்தது. “மக்கள் தொகையில் 70 சதவீதம் இந்துக்களாக இருக்கையில், இந்தியா ஒரு ஜனநாயகப் பூர்வமான அரசை ஏற்படுத்திக் கொண்டால், இயல்பாகவே இந்துக்களுக்கு அதில் பெரிய பங்கு இருக்கும். இந்தியாவைப் பிரிக்கும் எந்த ஆலோ சனையையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை" என்பதுதான் அவரது பார்வை. அதாவது பெரும்பான்மை சமூகம் சட்டத்தை வகுக்கும் வகையிலான ஒரு பெரும் பான்மைவாத அரசாக இருக்கும் அது; ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகம் போல் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதாக அது இருக்காது. பிரிவினை கோரு வோருக்கு வசதியாக இருந்தது முகர்ஜியின் தர்க்கம்.

"இந்துக்கள் தாம் இழந்த கீர்த்தியைத் திரும்பப் பெறும் வகையிலான எந்த ஒரு ஆக்க பூர்வமான வேலையிலும் என்னை மூழ்கடித்துக் கொள்ள நான் நினைத்தேன்” என்றார் அவர். இந்த வேலையின் ஒரு நீட்சியாகத்தான் அரசியல் இருக்கும். வங்கத்தின் மக்கள் தொகையில் 54.7 சதவீதம்தான் அங்குள்ள முஸ்லிம் பெரும்பான்மை இருக்கிறது; இது பொருளாதார, அரசியல் தளங்களிலும் பிற துறைகளிலும் இந்துக்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைவு. நிலைமை இப்படி இருக்க, முகர்ஜி 'ஒரு சிறுபான்மை சமூகம் என்கிற வகையில் மதவாதத் தாக்குதலுக்குப் பலியாகும் இந்துக்களுக்கு" பாதுகாப்பு வேண்டுமென்றார். 1939இல் சாவர்க்கர் வங்கத்திற்கு வந்தார்; அப்போது இந்து மகாசபையில் சேர்ந்த முகர்ஜி சாவர்க்கரைத் தொடர்ந்து 1943இல் அதன் தலைவரானார்.

இந்து மகாசபையின் தலைவராக முகர்ஜி நிகழ்த்திய உரைகளில் அவர் முன்பு பகிரங்கமாக வெளிப்படுத்தாத ஒரு கண்ணோட்டம் வெளிப்பட்டது. ஏழு வருடங்களுக்குப் பின், இந்தத் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் பாரதீய ஜனசங்கத்தைத் தோற்றுவித்தார்.

தற்போது பிஜேபியினர் நிகழ்த்தும் மேடைப் பேச்சு களின், குறிப்பாக மோடி பிரதமரான பிறகு பேசும் பேச்சு களின், மூலத்தை முகர்ஜியின் பின்வரும் பேச்சுகளில் காணலாம்:

“இந்துக்கள் தங்களின் இன உணர்வை குறுகிய நோக்கத்திற்காக அல்லாமல், மனித குலத்தை மேம்படுத்தும் சர்வதேச இயக்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளும் உறுதிப்பாட்டுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். நூற்றாண் டுகளாக அரசியல்ரீதியாக நாம் அடிமைப்பட்டிருந்ததால் நம் எதிர்ப்புணர்வு அழிந்து, நாம் ஒரு காலத்தில் இந்த நாட்டின் விதிகளை நிர்ணயிப்பவர்களாக, வெளிநாடுகளின் சிந்தனையிலும், கலாச்சாரத்திலும் தாக்கம் செலுத்துபவர் களாக இருந்த சுதந்திரமான, பெருமிதம் மக்க இனத்தின் வாரிசுகள் என்று நினைக்கத் தைரியமற்றவர்களாகி விட்டோம்.

இங்கு மதவாதம் இனவாதத்துடன் இணைக்கப்படுகிறது. இந்த உண்மை அதிகம் கவனிக்கப்படாத ஒன்றாகும்

முகர்ஜியின் பார்வையில் ஒரு தனியான தேசிய ராணு வத்தை உருவாக்குவது இந்து மகாசபையின் கடமைகளில் ஒன்றாக இருந்தது. ஓர் அவசர காலத்தில், ஒடுக்கப்பட்ட வர்களின் கவுரவத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பணியைச் செய்யவும் இந்த ராணுவம் அழைக் கப்படும்.

அஹிம்சையில் இந்து மகாசபைக்கு நம்பிக்கை இல்லை. நூற்றாண்டுகளாக இந்துக்கள் அரசியல் ரீதியாக அடிமைப் பட்டுக் கிடந்ததால் இந்துக்களின் வீரத்தையும், வலிமை யையும் குறித்த நினைவே ஏறக்குறைய அழிந்து போய் மக்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுவிட்டது" என்றும் அவர் பேசினார்?

'கணிதமும், கோவில்களும்' இந்து மகாசபையின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படவேண்டும் என்றார் முகர்ஜி.

பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பது என்கிற கொள்கை மிகவும் லாபகரமாகப் பின்பற்றப் பட்டது. நவம்பர் 29, 1941 அன்று அவர் இவ்வாறு பேசினார்: 

"தரைப்படை, கப்பற்படை, விமானப் படைகளில் இந்துக்கள் அனைவரும் எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவில் சேர்ந்து, இன்று சூழலின் கட்டாயம் காரணமாகவும், பெரும்பாலும் தன் நலனைக் கருத்தில் கொண்டும் பிரிட்டிஷ் அரசு நமக்கு கொடுக்க முன்வரும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்துக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவிலாவது நாம் இப்படைகளில் சேராமல் இருந்தால் அவற்றில் இந்து சக்திகள் குறைவாக இருக்க அனுமதித்தால் நாம் மாபெரும் தவறு செய்தவர்களாகி விடுவோம்.”

அவருடைய வாதம் எளிமையானது. “நாட்டின் நலன் களும் இந்துக்களின் நலன்களும் ஒன்றாக இருக்கும்போது, இந்துக்கள் தம் உரிமைகளுக்காக நிற்க ஏன் தயங்க வேண்டும்?' என்பதுதான் அது. உண்மை விவரங்கள் அவருக்குத் தேவையில்லை. 1921 ஆம் ஆண்டு டிசம்பர் 31ற்குள் இந்தியா விடுதலையடைந்து விடும் என்று காந்தி அறிவித்தார். ஆனால் "அதே ஆண்டில் பூரண சுதந்திரம் வேண்டிய தீர்மானத்தை காங்கிரஸ் மாநாட்டில் ஹசரத் மோஹானி முன் மொழிந்த போது அது காலத்துக்கு முந்தியது என்று கூறி காந்தி நிராகரித்தார்.''

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த போது, முகர்ஜி ஆர்எஸ்எஸ்ஸுடன் தொடர்பேற்படுத்திக் கொண்டார். 1940இல் அவர் ஹெட்கேவாரைச் சந்தித்தார்."

ஆர்எஸ்எஸ்ஸின் யுக்தி பலனளித்தது. அதற்கு இந்தியா முழுவதிலும் 1500 கிளைகளும் 2 லட்சம் உறுப்பினர்களும் இருப்பதாக அக்டோபர் 25, 1942 அன்று கோல்வால்கர் கூறினார். அதன் உறுப்பினர்கள் குடிமைச் (சிவில்) சமூகம் மற்றும் ராணுவத்தின் அனைத்து முக்கிய சேவைகளிலும் ஊடுருவி விட்டனர். நம்பத்தகுந்த அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், குமாஸ்தாக்களையும் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்ட ஆர்எஸ்எஸ் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்த துப்பாக்கித் தொழிற்சாலையிலும், கமாரியா விலிருந்த ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையிலும் ஷாகாக் களை அமைத்தது.”

ஆட்சியாளர்களுக்கு இதெல்லாம் தெரியாமலிருக்க வில்லை. 

கானுங்கோ இவ்வாறு எழுதுகிறார்: 

"ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் தன்னைப் பற்றிய உடைக்க முடியாத ஒரு ரகசியத்தைப் பேணியது; ஆட்சியா ளர்களின் கவனத்தை ஈர்க்காமலிருக்க மிகவும் சிரமப்பட்டது. இந்துக்களால் ஆளப்படும் இந்தியா என்பதைத் தன் உச்சகட்ட நோக்கமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் அதனை அடைவதற்கான தயாரிப்புகளில் பல ஆண்டுகளாக அமைதியாக ஈடுபட்டு வருகிறது. பஞ்சாப் மாகாண அரசாங் கம் ஜனவரி 21, 1944 அன்று, ஆர்எஸ்எஸ் ஒரு மதவாதத் தன்மையுள்ள அமைப்பு என்றும் இந்துக்களிடையே அது தொடர்ந்து அதிகமாகப் பிரபலமாகி வருகிறதென்றும் புது டில்லியிலிருந்து மய்ய பிரிட்டிஷ் அரசை எச்சரித்தது. இந்தியாவில் இந்து ஆதிக்கத்தை ஏற்படுத்தும் பணியில் கவனமாக இருக்க வேண்டுமென்று நினைத்த அதன் தலைவர்கள் அமைப்பின் நடவடிக்கைகளை பெருமளவு ரகசியமாக நடத்தினர். மற்ற மாகாணங்களிலிருந்து வந்த அறிக்கைகளும் வேறு மாதிரியாக இல்லை . இதற்கு எதிர்வினையாக பிரிட்டிஷ் அரசு பயிற்சி முகாம்களையும், அணிவகுப்புகளையும் கட்டுப்படுத்தும் ஓர் ஆணையைப்(Camps and Parades (Control) Order) பிறப்பித்து ஆர்.எஸ்.எஸ், - கக்சார் இயக்கம் [அன்னிய ஆட்சியை நாட்டை விட்டு விரட்டி, இந்து-முஸ்லிம் அரசினை ஏற் படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது], முஸ்லிம் லீகின் தேசியப் பாதுகாப்புப் படை ஆகியவற்றை (National Guard) ஒரு சேர கட்டுப்படுத்து நினைத்தது.

பார்த்தசாரதி குப்தா தொகுத்த நூலில் 1944இல் நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளைப் பற்றிய அதிகாரபூர்வக் குறிப்பும் அரசின் எதிர்வினையும் இருக்கிறது."

1946-1947இல் நடந்த கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாகப் பங்கெடுத்தது. மதவாதத்தினால் அதிகரித்த பதற்றம் அதன் பிரச்சாரத்திற்குப் பயன்பட்டது. பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பு, காங்கிரசுக்கு எதிர்ப்பு என இரு முனை யுக்தியை அது மேற்கொண்டது. பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறப் போவதால் முஸ்லிம்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்பதுதான் அதன் பிரச் சாரம். மாவட்ட நிர்வாகங்களிலிருந்து வந்த அறிக்கைகளின் அதிகாரபூர்வ தொகுப்பு இப்படிச் சொன்னது:

"அரசாங்கத்தின் பார்வையில், ஆர்எஸ்எஸ்ஸினால் சட்டம், ஒழுங்கிற்கு உடனடி அபாயம் இல்லை. இவ்வாறு, அரசின் கண்காணிப்புக்கு வெளியில் தன்னை நிறுத்திக் கொண்டு ஆர்எஸ்எஸ் குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஆண்டுகளில் விரிவடைந்தது. அக்டோபர் 25, 1942 அன்று பேசிய கோல்வால்கர் ஆர்எஸ்எஸ்ஸிற்கு நாடு முழுவதும் 1,500 கிளைகளும், 2 லட்சம் உறுப்பினர்களும் இருப்பதாகக் கூறினார். ஆயினும் அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி பிரிட்டிஷ் இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ஸின் உறுப்பினர் எண்ணிக்கை 1943க்குள் 76,000ம் தான் (இதில் இந்தியர்களால் ஆளப்பட்ட சமஸ்தானங்களில் அதன் உறுப்பினர் விவரம் சேர்க்கப்படவில்லை.)”

அரசாங்கத்தின் ஆணைகளை ஏற்றுக் கொள்வது போல் கோல்வால்கர், நடந்து கொண்டது, அவர் துறந்து விட்டதாகச் சொன்ன நடவடிக்கைகளை மிதப்படுத்தி ரகசியமாகச் செயல்படுவதற்கான ஒரு புகைத் திரைதான். நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய மாகாணங்களின் அரசு வெளியிட்ட ஒரு ரகசிய பிரசுரம் ஆர்எஸ்எஸ் அமைப்பு, அதன் பலம் மற்றும் நடவடிக்கைகளைக் குறித்து மாவட்ட நிர்வாகங்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை களின் தொகுப்பாகும். அது இவ்வாறு சொன்னது: "அவர்கள் மேலும் தயாராகும் வரையிலும், அவர்களின் தலையீட்டுக்கு உகந்த சூழல்கள் நாட்டில் உருவாகும் வரையிலும் பொறுத் திருப்பதுதான் அவர்களின் தந்திரம்...சங் இப்போதைக்கு அபாயமற்றதாக இருந்தாலும், மோசமான மதக் கலவரங்கள் நடக்கும் நேரத்தில் அபாயகரமான அமைப்பாக மாறும்...''

எஸ்.பி. முகர்ஜியின் கண்ணோட்டத்திலும் இந்தத் தந்திரம் வெளிப்படுகிறது. இந்து சமூகத்தின் கசடுகள்தான் மதம் மாறி முஸ்லிம்கள் ஆயின என்று கூறி அவர் முஸ்லிம்களை வெறுத்தார்.

ஏ.ஜி.நூரானி எழுதிய "ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு 

ஓர் அச்சுறுத்தல்" எனும் நூலிலிருந்து 

தமிழில்: ஆர்.விஜயசங்கர்


No comments:

Post a Comment