மூடத்தனத்திற்கு எல்லையேயில்லையோ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

மூடத்தனத்திற்கு எல்லையேயில்லையோ?

ரயில் விபத்துகளைத் தவிர்க்க  தண்டவாளத்திற்கு பூசையாம்

சேலம்,அக்.5- கடவுள், மதம், பக்தி என்பதன் பெயரால் நம்பிக்கை என்று கூறுவது ஒருவரின் தனிப்பட்ட நிலைப்பாடாக வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய, மதச்சார்பற்ற ஒரு நாட்டில் குறிப்பிட்ட மத நம்பிக்கை என்கிற பெயரால் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மதவிழாக்களை அனுமதிப்பது முற்றிலும் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானதாகும்.

மத அடிப்படையில் ஆயுத பூசை என்கிற பெயரால் தனியார் தொழில் நிறுவனங்களில் தாங்கள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கும் பொருள்களுக்கும் பூசை செய்வதைப் போல் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சட்ட விரோதமாக அதனை செய்கின்றனர்.

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலை களில் கீ மேன்கள் என்று அழைக்கக்கூடிய தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் தண்டவாளத்திற்கு பூசைகள் செய்தனராம். ஒவ்வொரு தண்டவாளத்திற்கும் தேங்காய், பூ, பழம் வைத்து கற்பூரம் காட்டி ரயில் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ரயில் பாதையில் பயணிக்கும் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டியும் தண்டவாளத்திற்கு பூசை செய்தனராம்.

ரயில்வண்டி அறிவியலின் கண்டுபிடிப்பாகும். அதனை இயக்கவும், பராமரிக்கவும் முறையான அறிவியல் ரீதியிலான பயிற்சி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பின்னரே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், ஆயுத பூசை செய்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்கிற மூடத்தனத்தை என்னவென்று சொல்வது? பக்தி வந்தால் புத்தி போகும். 

மைல்கல்களையும் விட்டுவைக்கவில்லை 

ஆயுத பூசை என்கிற பெயரால் வீடுகளில், தொழில் நிறுவனங்களில் பூசைகள் செய்து வந்த மூடத்தனத்தின் உச்சமாக சாலையோரங்களில் ஊர்களின் பெயரைத் தாங்கி தொலைவைக்காட்டுகின்ற மைல்கல்களுக்கும் கோவை பகுதியில் பூசை செய்துள்ளனராம். கோவையில் ஆயுத பூசை என்கிற பெயரால் சாலையோரங்களில் அமைக்கப் பட்டுள்ள தொலைவைக் காட்டும் மைல்கல்லுக்கு பொட்டு வைத்து பூசை செய்து படையலிட்டு வழிபாடு செய்துள் ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் பழைய மைல்கல் சேதம் அடைந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய மைல்கல் வைக்கப்பட்டு இருந்தது. சிறுவாணிக்கு 20 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள மைல்கல்லுக்கும், முக்காளி என்ற இடத்திற்கு 45 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்ட கல்லுக்கும் பூசை செய்துள்ளனர். அந்த மைல்கற்களுக்கு இருபுறமும் வாழைக்கன்று வைத்து, மாவிலையால் தோரணம் கட்டி, மாலையிட்டு, பொட்டு வைத்து படையல் வைத்துள்ளனர். கரூர் பகுதியில் சாலைப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து  சாலையோரம் உள்ள மைல் கல்லுக்கு ஆயுத பூசையின் பெயரால் பூசை செய்தனராம்.

தந்தைபெரியார் கூறியதுபோல், 'பக்தி வந்தால் புத்தி போய்விடும்' அல்லவா? கடவுள், மதம், பக்தி என்பனவற் றுக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பேதும் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

காந்தி உருவம்போல மகிசாசுரன் பொம்மை

அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள ரூபி கிராசிங் பகுதியில் துர்கா பூஜை பந்தல் அமைத்திருந்தனர். 

இந்த பந்தலில் கொலு பொம்மைகள் பல வைக்கப் பட்டிருந்தன. இந்த நிலையில்,  காந்தியாரின் தோற்றம் கொண்ட மகிசாசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவியின் சூலாயுதத்தால் வதம் செய்யப்படுவது போல அமைக்கப் பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், காவல் துறை அறிவுறுத்தலின் படி காந்தியாரின் பொம்மையை மாற்றி மகிசாசுரன் பொம்மை ஒன்றை அங்கே வைத்தனர். 

காந்தியாரின் உருவத்தை போல மகிசாசுரன் பொம்மை வடிவமைக்கப்பட்ட சம்பவம், தற்செயலாக  எதேச்சையாக நடந்தது அல்ல "இது தேசத் தந்தையை அவமதிக்கும் செயலாகும். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயலாகும். இப்படிப்பட்ட அவமதிப்பு பற்றி பாஜக என்ன சொல்ல போகிறது? காந்திஜியைக் கொன்ற நபர் எந்த கொள்கையை கொண்ட முகாமை சேர்ந்தவர் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்" என்று  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் குணால் கோஷ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment