படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை

 டி.எஸ்.பிரேமா அம்மையாருடைய இழப்பு - சேதுராமன் குடும்பத்திற்கு மட்டுமல்ல - இயக்கத்திற்கும், கொள்கைக்கும் இழப்பு

சென்னை,அக்.22  டி.எஸ்.பிரேமா அம்மையாருடைய இழப்பு என்பது சேதுராமன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்தக் கொள்கைக்கும் இழப்பு, இந்த இயக்கத்திற்கும் இழப்பாகும். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பிள்ளைகள் தொடர்ந்து இந்தக் கொள்கையில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மயிலை சேதுராமன் துணைவியார் மறைந்த டி.எஸ்.பிரேமா படத் திறப்பு - நினைவேந்தல்

கடந்த 18.10.2022 அன்று காலை  சென்னை மயிலாப்பூரில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமனின் துணைவியார் மறைந்த டி.எஸ்.பிரேமா அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில், அவரது படத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது  நினைவேந்தல் உரை வருமாறு:

சேதுராமன் எளிமையானவர் - நிகழ்ச்சியையும் எளிமையாக ஏற்பாடு செய்திருக்கிறார்!

செயல் வீரரான மயிலை சேதுராமன் அவர்களுடைய வாழ்விணையர் மறைந்த டி.எஸ்.பிரேமா அம்மையாரின் படத்திறப்பு நிகழ்வு ஒரே நாளில் ஏற்பாடு செய்யப்பட்டு, மிகவும் ஆடம்பரம் இல்லாமல், அவர் எப்பொழுதும் எப்படி எளிமையாக இருப்பாரோ, அதேபோல இந்த நிகழ்ச்சியையும் மிக எளிமையாக நடத்தியிருக்கின்றார்.

அம்மா அவர்கள் மறைந்த அந்த செய்தி வந்தவுடன், நேரிலே வரவேண்டும் என்று விரும்பினாலும்கூட, பல தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலவில்லை. அதற்குப் பிறகு இரண்டு, மூன்று முறை இங்கே வரலாம் என்று சொன்னபொழுது, அவரே, ‘‘அய்யா நீங்கள் இரண்டு மாடி ஏறிவரவேண்டும்; உங்கள் உடல்நலம் கருதி அதைத் தவிர்க்கவேண்டும்'' என்று கூறி, பிறகு இந்தப் படத்திறப்பிற்கான ஏற்பாட்டினை இன்றைக்கு செய்தார்கள்.

இதன்மூலம், அவருடைய குடும்பத்து உறுப்பினர்கள், உறவுக்காரர்கள் அத்துணை பேரையும் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு மிகச் சிறப்பான ஒன்றாகும்.

நம்முடைய மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், திராவிட முன்னேற்றக் கழக சகோதரர்கள், அனைத்து இயக்கங் களைச் சார்ந்த பொறுப்பாளர்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

யார், என்ன ஜாதி? என்ன பிரிவு? என்று எப்பொழுதுமே நாங்கள் பார்த்தது இல்லை

நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், யார், என்ன ஜாதி? என்ன பிரிவு? என்று எப்பொழுதுமே நாங்கள் பார்த்தது இல்லை. பல ஆண்டுகள் பழகிய வர்களாக இருந்தாலும், அதை அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பும் எங்களுக்குக் கிடையாது; விருப்பமோ, தேவையோ எங்களுக்குக் கிடையாது.

ஆனால், ரத்த உறவைவிட, கொள்கை உறவு மிகக் கெட்டியானது என்று சொல்லக்கூடிய வகையில், அவருடைய குடும்பத்தினுடைய நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் நாங்கள், உறவுக்காரர்களைவிட, ஒருபடி மேலே ஏறி, கூடுதலாகச் சென்று, அவருடைய துன்பத்தை, இன்பத்தை பகிர்ந்துகொள்ளக்கூடியவர் களாக, கஷ்ட நஷ்டங்கள் ஏற்படுகின்றபொழுது ஆறுதல் கூறக் கூடியவர்களாக இருப்போம்.

மயிலை எம்.கே.காளத்தி அவர்களுடன் பெரியார் திடலுக்கு வருவார் சேதுராமன்!

அந்த வகையில், நம்முடைய மயிலை எம்.கே.காளத்தி அவர்களுடன், நீண்ட காலமாக பெரியார் திடலுக்கு  சேதுராமன் அவர்கள் வருவார். அடக்கமாக இருப்பவர், அவரைப்பற்றிகூட விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்.

மறைந்த அம்மையாரும், அவருடைய பிள்ளைகளும் இந்தக் கொள்கைக்கு வந்தார்கள்

பிறகுதான் அவரைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்தோம். அவருடைய வாழ்விணையர், இவருக் குத் துணையாக இருந்தார். பிள்ளைகளும் அதேபோன்று இந்தக் கொள்கைக்கு வந்தார்கள்.

பெரியாருடைய இயக்கத்தில் யாருமே ஜாதி பார்ப்பதில்லை. அரசியல் கட்சியாக இருந்தால்கூட, விருப்பம் இல்லாவிட்டாலும், வாக்கு வங்கியைப் பார்க்கும்பொழுது, அவர் என்ன ஜாதி? என்று பார்க்கவேண்டியது இருக்கும். இன்ன ஜாதி ஓட்டு அதிகமாக இருக்கிறது; அங்கே இருக்கிறது என்று. நல்ல வாய்ப்பாக நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள் என்பதினால், அந்த அவசியம் எங்களுக்கு இல்லை.

நம்முடைய அய்யா சேதுராமன் அவர்கள் என்ன ஜாதி? என்ன பிரிவு? என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

கும்பகோணம் ராமமூர்த்தி - பத்மாவதி!

கும்பகோணம் ராமமூர்த்தி அவர்களின் உறவுக்காரர் என்று  சொல்லும்பொழுதுதான் தெரிந்தது. ராமமூர்த்தி அவர்களின் துணைவியார் பத்மாவதி அவர்கள் - மிகத் தீவிரமானவர்கள். என்னிடம் கொள்கை ரீதியாக சண்டை போடுபவர்.

எந்த அளவிற்குத் தீவிரமானவர் என்றால், மற்றவர்கள் இறந்த நேரத்தில், பத்மாவதி போன்றவர்கள் எல்லாம் அந்தப் பாடையை சுமந்துகொண்டு போன தெல்லாம் ‘விடுதலை’யில் செய்தியாக வந்திருக்கின்றன. ‘பாடைக் காவடி' என்று நடத்துவார்கள், அதில் ராமமூர்த்திதான் படுத்திருப்பார். அந்தப் பாடைக் காவடியை சுமந்து செல்பவர் பத்மாவதி அவர்கள்தான். குடந்தையில் அவர் மிகத் தீவிரமானவர்.

சில சமூகத்தைச் சார்ந்தவர்களுக்குத் திராவிடர் கழகம் என்றாலே அலர்ஜியாக இருக்கும்!

எனக்கு ஆச்சரியமாக இருந்தது; ஒரு சில சமூகத்தைச் சார்ந்தவர்களுக்குத் திராவிடர் கழகம் என்றாலே அலர்ஜியாக இருக்கும். பயம் வேறு. 

கருப்புச் சட்டைக்காரர்களா? மிகவும் கொடுமைக் காரர்கள் என்று எங்களைப்பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

நம்முடைய ராமமூர்த்தியைப் பார்த்தால், எனக்கு உற்சாகம் ஏற்படும்.

ஆனால், சேதுராமன் என்ன ஜாதி? என்ன பிரிவு? என்று தெரியாது. நம்முடைய கொள்கைகள் எல்லா இடங்களிலும் பரவுகிறது. தி.மு.க.வில் நிறைய தோழர்கள் இருப்பார்கள்; அதேபோன்று, மதுரை, கும்பகோணம் போன்ற சில குறிப்பிட்ட பகுதிகளில் தோழர்கள் அதிகமாக இருப்பார்கள்.

மதுரையில் சவுராஷ்டிரா சமுதாயத்தில் 

ஒரு சீர்திருத்த திருமணம்!

சில நாள்களுக்கு முன்புகூட, நம்முடைய தோழர்கள், சவுராஷ்டிரா சமுதாயத்தில் இருந்து ஒரு சீர்திருத்த திருமணம் செய்துகொள்வதற்காக என்னை அழைத் தார்கள். அவர்கள் எல்லோரும் கருப்புச் சட்டைதான் அணிந்திருந்தார்கள். மதுரையில் இயக்கத்தில் பொறுப் பாளராக இருக்கிறார் அவர்.  அவர்கள் ஆச்சிரியத்தோடு என்னிடம் வந்து,  ‘‘நீங்கள் முதல் முறையாக இந்தப் பகுதியில் திருமணம் நடத்தி வைக்கிறீர்கள்; உங்களு டைய கருத்துகளை கேட்கவிருக்கிறோம்'' என்றனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஏதோ மனிதன் முதன்முறையாக நிலவுக்கோ செவ்வாய்க்கோளுக்கோ சென்றதுபோல இருந்தது.

லண்டன் உள்பட வாதாடியவர் துளசிராம்!

அப்பொழுது நான் சொன்னேன், நீதிக்கட்சி தொடங்கியபொழுது, நீதிக்கட்சிக்காக வாதாடியவர்கள் - முன்னணி தலைவர்களாக இருந்த சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், சர் ஏ.டி.பன்னீர்செல்வம் போன்றவர்கள். அதேபோன்று, லண்டன் நகர நீதிமன்றம் உள்பட வாதாடியவர் துளசிராம் அவர்கள். அவர் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்.

அந்தத் துளசிராம் அவர்களுடைய கொள்ளுப்பேத்தி அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். இந்தத் தகவல் எனக்குத் தெரியாது.

நான் அந்த மணவிழாவில் உரையாற்றி முடித்ததும், என்னை சந்தித்து, அய்யா நான் துளசிராம் அவர்களுடைய கொள்ளுப்பேத்திதான் என்றார்.

நீதிக்கட்சியின் வரலாற்றைப்பற்றி நாங்கள் புத்தகம் வெளியிட்டு இருக்கிறோம். துளசிராம் அவர்கள் லண்டனுக்குச் சென்று வாதாடியவர். பிறகு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்ற தகவல்களையெல்லாம் சொன்னோம்.

அடிப்படை காரணம் மறைந்த அம்மையார்தான்

 சேதுராமன் அவர்களைப் பொறுத்தவரையில், இயக் கத்தில் அருமையாகப் பணியாற்றுபவர். அன்றைக்கும், இன்றைக்கும் அவருடைய பிள்ளைகள் மிகப்பெரிய அளவிற்கு ஆதரவாக இருந்தார்கள் என்றால், அதற்கு அடிப்படை காரணம் மறைந்த அம்மையார்தான்.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வாழ்விணையரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்!

காரணம் என்னவென்றால், பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்விணையர் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் பொதுவாழ்க்கையில் நிம்மதியாக இருப்பார்கள்; அந்தந்த இயக்கப் பணிகளை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

அந்த வகையில், அம்மையாருடைய இழப்பு என்பது இந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்தக் கொள்கைக்கும் இழப்பு, இந்த இயக்கத்திற்கும் இழப்பாகும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பிள்ளைகள் தொடர்ந்து இந்தக் கொள்கையில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குடும்பம் எங்கள் குடும்பம் - 

எங்கள் உறவு!

ஆகவே, இன்றைக்கு நாம் எல்லோரும் அந்த அம்மையாருக்கு மரியாதை செலுத்துகின்றோம் அவரை வெறும் படமாக மட்டும் பார்க்காமல், பாடமாகப் பார்த்துக்கொண்டு, சேதுராமன் அவர்கள் அவருடைய கொள்கை வழியில் நிற்பதற்கு, அவருக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருந்த அம்மையாருடைய புகழை இன்றைக்கு நாம் மறக்காமல் நினைவூட்டி, அதன்மூலம் இந்தக் குடும்பம் என்றும் கொள்கைக் குடும்பமாக இருக்கும். எல்லா வகையிலும் திராவிடர் கழகம் துணை நிற்கும். இந்தக் குடும்பம் எங்கள் குடும்பம் - எங்கள் உறவு என்ற அந்தப் பெருமையோடு என்னு டைய நினைவேந்தல் உரையை நிறைவு செய்கிறேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க அம்மையாருடைய புகழ்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.


No comments:

Post a Comment