கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற- கவின்மிகு சுற்றுலா (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற- கவின்மிகு சுற்றுலா (1)

வீ.குமரேசன்

தந்தை பெரியார்தம் கொள்கைகளை உலக மய மாக்கிடும் பணியில் திராவிடர் கழகத்தின் முன்னெடுப் பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் பல நாடுகளில் பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  உலகின் பல பகுதிகளி லிருந்தும், மனித நேயர்கள், பகுத்தறிவாளர்கள், சமூக நீதியில் நாட்டமுடைய அறிஞர்கள், செயல்பாட்டா ளர்கள்,  மனிதநேயக் கொள்கை ரீதியில் பணிபுரிப வர்கள் என பலதரப்பட்டோரும் பங்கேற்றுக் கருத் துறவாடிடும் நிகழ்வாக பன்னாட்டு மாநாடுகள் நடை பெற்று வருகின்றன.  2017 ஆம் ஆண்டில் ‘பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு’ ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் நடைபெற்றது.  2019ஆம் ஆண்டில் இரண்டாம் மாநாடு, ‘சுயமரியாதை மனித நேய பன்னாட்டு மாநாடாக’ அமெரிக்க அய்க்கிய நாட்டின் மேரிலேண்ட் மாநிலத்தில் சில்வர் ஸ்பிரிங் நகரில் நடைபெற்றது.  முதல் மாநாட்டை அமெரிக்கா- பெரியார் பன்னாட்டமைப்பு மட்டும் ஒருங்கிணைத்து நடத்தியபின், இரண்டாவது மாநாடு, அமெரிக்க மனிதநேயர்கள் சங்கத்துடன்  (American Humanist Association - AHA)  இணைந்து நடத்தப்பட்டது.  இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தில், 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் உலகையே உலுக்கிய கரோனா (Covid 19)  பெருந்தொற்று காரணமாக உரிய காலத்தில் மூன்றாம் மாநாடு நடைபெறவில்லை.

கனடாவில் பெரியார் பன்னாட்டு மாநாடு

கனடா நாட்டு மனிதநேய அமைப்புகளான - அறிவாய்வு மய்ய கனடா நாட்டு கிளை (Center for Inquiry, Canada),  கனடா மனிதநேயர் அமைப்பு (Humanist Canada )   டொரண்டோ மனிதநேயர் சங்கம்(Humanist Association of Toronto)   ஆகிய வற்றின் ஆதரவோடு அமெரிக்க - பெரியார் பன்னாட்ட மைப்பு ஒருங்கிணைத்த மூன்றாம்  மாநாடான சமூக நீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டை கனடா நாட்டின் டொரண்டோ நகரில் 2022 செப்டம்பர், 24 & 25 ஆகிய இரண்டு நாள்கள் நடத்திட முடிவு செய்யப் பட்டு அதற்கான ஏற்பாடுகள் உரிய காலத்தில் தொடங் கப்பட்டன.

பல்வேறு நாட்டவரும் கலந்துகொள்ளும் பன் னாட்டு மாநாட்டிற்கு தமிழ்நாடு - புதுச்சேரி  மாநிலங் களிலிருந்து 16 சுயமரியாதை இயக்கத் தோழர்கள் பேராளர்களாகப் பங்கேற்க விரும்பினர்.  அதற்கான பணிகள் தொடங்கின.

மாநாட்டில் பங்கேற்பதுடன், மாநாடு நடைபெறு வதற்கு முன்னதாக, கனடா நாட்டின் சில முக்கிய நகரப் பகுதிகளைப் பார்த்துவிட்டு, சுற்றுலாவின் நிறைவில், மாநாடு நடைபெறும் டொரண்டோ நகருக்குச் சென்று சேருவதாகத் திட்டமிடப்பட்டது.

தமிழர் தலைவரின் அறிவுரை

இயக்கத்தின் முக்கியப் பணிகாரணமாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் பன்னாட்டு மாநாட்டில் நேரடியாகப்  பங்கேற்றிட இயலாத நிலை யில் பங்கேற்க இருந்த, 16 தோழர்களையும் 18.09.2022  அன்று சென்னை - பெரியார் திடலில் வரவழைத்து, பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்புப் பற்றிய அறிவுரைக் குறிப்புகளுடன் கனடா நாட்டுப் பயண ஆயத்தப் பணி பற்றிய ஆலோசனைகளையும் கூறி அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்.  

மாநாட்டில் பங்கேற்றிட 5 மகளிர் 11 ஆடவர் என 16 தோழர்கள், 19.09.2022 அன்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தடைந்தோம்.  கனடா மாநாட்டிற்குச் செல்லும் தோழர்களைத் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தையன் அவர்களுடன், ஏனைய பொறுப்பாளர்கள் கோ.நாத்திகன், மோகன்ராஜ், குணசேகரன் ஆகி யோர் விமான நிலையத்திற்கு வருகை தந்து பேராளர் கள் அனைவருக்கும் பய னாடை அணிவித்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.  கழகச் சொற் பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச் செல்வன், வலைக்காட்சி அன்பரசன், மகேஷ் மற்றும் பெரியார் திடல் தோழர்களும் விமான நிலையத்திற்கு வந்து எங்களை வழி அனுப்பி வைத்தனர்.

அதிகாலை 5.15 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, லண்டன் வழியாக கனடா நாட்டு மாண்ட்ரீல் நகருக்குச்  செல்வதாகத் திட்டம்.  வெளிநாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானங்கள் இரவு நேரத்தில் கிளம்புவதாலும், அன்று ஞாயிற்றுக்கிழமை - விடு முறை நாள்; அடுத்து திங்கள்கிழமை பயணம் என்ப தாலும் விமானநிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக பெரும் பயணியர் கூட்டம் நிரம்பி வழிந்தது.  பயணம் செல்லவேண்டிய பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானக் கவுண் டரில் பயண உடைமைகளை ஒரே குழுவாக ஒப் படைத்து இரண்டு பயண அட்டைகளைப் (சென்னை - இலண்டன், இலண்டன் - மாண்ட்ரீல்) பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்குச் செல்பவர்களுக்கான பரிசோதனைக்காகக் காத்திருந்தோம்.  2 மணி நேரத் திற்கும் மேலாக காத்திருந்து வெளிநாட்டு புறப்பாடு / பாதுகாப்புப் பரிசோதனை உட்பட அனைத்தையும் முடித்துவிட்டு விமானம் புறப்பட இருந்த வாயிலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வந்துவிட்டோம். உரிய நேரத்தில் விமானத்திலும் அனைவரும் அமர்ந்து விட்டோம்.  பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழலுவதால்,  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்வதாக விடியல் இருக்கும்.  அதிகாலை 5.15 மணி, இரவு முடிந்து விடியல் கசியும் நேரம்; விமானப்பயணம் முழுவதும் இரவு நேரம் தொடர்கிறதா, விடியல் வந்துவிட்டதா என பிரித்து பார்க்கமுடியாமல் சில மணி நேரம் பயணம் இருந்தது. இன்னொரு வகையில் சொல்வ தானால்- கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி விடியலை அழைத்துச் சென்று கொண்டிருந்ததைப் போல!

விமான நிலையத்திலும், பயணத்திலும் அறிவிப்பு மொழிக்குறித்த ஒப்பீடு 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புப் பரிசோதனைகள் முடிந்து,  எங்கள் விமானத்திற்குரிய வாயில் எண்ணை அறிந்துக்கொள்ள மின்னணு அறிவிப்புப் பலகையில் பார்த்த பொழுது ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மாறி மாறி வரவேண்டிய அறிவிப்புகள் நீண்ட நேரம் ஹிந்தி மொழியில் தான் நீடித்தன.  இது தமிழ்நாட்டு விமான நிலையத்தில் நிலவும் ஹிந்தித் திணிப்பை வெளிக்காட்டுவதாக இருந்தது.  விமான எண், புறப்படும் நேரம் ஆகியவற்றை மட்டும் பார்த்து (மற்ற விவரங்கள் ஹிந்தியில் இருந்தன) லண்டன் செல்லும் விமானம் புறப்படவிருந்த உரிய வாயிலுக்குச் சற்று இன்னலுடன் வந்து சேர்ந்தோம்.  விமானத்தில் அமர்ந்ததும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் அறிவிப்பாளர்கள் தெள்ளத்தெளிவாக ஆங்கிலத்திலும் தமிழிலும் செய்திகளைச் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.  நம் நாட்டு விமான நிலையத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தமிழ்மொழி மூலம் விவரங்களை அறிய முடியாத நிலையில், வெளிநாட்டு விமானத்தில் தமிழில் அறிவிப்புகள் செய்ததைக் கேட்டதும் அன்று தந்தை பெரியார் இந்திய நாட்டு சுதந்திரத்தைப் பற்றி தொலைநோக்குடன் சொன் னதுதான் நினைவுக்கு வந்தது. இந்த இடத்தில் இன் னொன்றையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும். ஹிந்தித் திணிப்பு மட்டுமல்ல. பண்டைய அடையாளங்கள் என்னும் பெயரில் விமான நிலையம் முழுக்கவும் பார்ப்பனிய  வேத மதத்தின் சிற்பங்கள், சிலைகள்தான் பொருத்தப்பட்டுள்ளன. இவைதான் இந்நாட்டின் அடையாளங்கள் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துவதும், பாரம்பரியம் எனும் பெயரில் மதச் சார்பின்மையை நழுவவிடுவதுமே இதன் நோக்கம் என்று தோன்றுகிறது.

லண்டனுக்கு விமானப்பயணம் 

முதல் நாள் (18.9.2022) இரவு விமான நிலையம் வந்த நாங்கள் அடுத்த நாளான 19.09.2022 அன்று அதிகாலை யில் லண்டனிற்குப் பயணம் ஆனோம்.  செப்டம்பர் 8 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் மறைந்த இராணியார் எலிசபெத் உடல் செப்டம்பர் 19 அன்றுதான் அடக்கம் செய்யப்படவிருந்தது. இராணியார் இறுதி நிகழ்வை யொட்டி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் செப்டம்பர் 19 அன்று மட்டும் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது.

குறிப்பாக இங்கிலாந்து நேரப்படி இராணியார் உடல் அடக்கம் நடைபெறும் பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலான காலத்தில் நாடு முழுக்க, 2 நிமிடங்கள் அமைதி காக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், லண்டன் வான்வெளியிலும் அமைதி காக்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்தச் சமயத்தில் வழக்கமாக திட்டமிடப்பட்டிருக்கும் புறப்பாடும், தரையிறங்கலும் தள்ளிவைக்கப்பட்டன. 

நாங்கள் செல்லும் சென்னை - லண்டன் விமானம் ஹீத்ரூ விமான நிலையத்தில் வழக்கமாகத் தரை யிறங்கும் நேரம் பகல் 11.50 மணி. லண்டன் நெருங்கும் வேளையில் விமானப் பயணத்தில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பாக மறைந்த இராணியார் அவர் களுக்கு, இரங்கல் அறிவிப்பைத் தொடர்ந்து அமைதிக் காத்து மரியாதை செலுத்தப்பட்டது.  தரையிறங்கும் நேரத்தைத் தள்ளிப் போடுவதற்காக, இங்கிலாந்து நாட்டின் வான்பரப்பில் மூன்றுமுறை வட்டமடித்து விட்டு ஏறக்குறைய பத்து மணி நேரப் பயணத்திற்குப் பின் லண்டன் நேரம் பகல் 12.15 மணிக்கு இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் (London Heathrow Airport) தரையிறங்கினோம். அவ்விமான நிலையம் மிகப்பெரியது. விமானத்திலிருந்து இறங்கி மாண்ட்ரீல் செல்லும் விமானம் புறப்படும் வாயிலுக்கு செல்வதற் காக மின்சார இரயிலில் (விமான நிலையத்திற்குள்ளேயே)  பயணம் செய்ய வேண்டியிருந்தது. மறுபடியும் பாது காப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு அடுத்த விமானம் புறப்படும் வாயிலுக்கு வந்தடைந் தோம்.  இடைவெளி 6 மணி நேரம்.  இராணியார் எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படுகையில் நாங்கள் இலண்டனிலேயே இருந்தது தற்செயலாக இருந்தாலும், ஒரு முக்கிய நிகழ்வாகவே இருந்தது. விமான நிலையத்தில் இராணியார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்தினை கணினி மூலம் நிலைப் படுத்தி இருந்தனர்.         (தொடரும்)

இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...

இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...


No comments:

Post a Comment