தமிழ்நாட்டில் 1,197 ரேசன் கடைகள் நவீன மயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

தமிழ்நாட்டில் 1,197 ரேசன் கடைகள் நவீன மயம்

சென்னை,அக்.10 தமிழ்நாட்டில் 1,197 ரேசன் கடைகள் நவீனமயமாக் கப்பட்டது. 73 கடைகளுக்கு அய். எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள் ளது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

தமிழ்நாட்டில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறையின் சார்பில் 34 ஆயிரத்து 790 ரேசன் கடைகள் செயல்படுகின்றன. 246 கிடங்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. இதன்மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 ரேசன் அட்டைதாரர்கள் பயன் பெறு கிறார்கள். இந்த ரேசன் கடைகள் செயல்படும் கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வசதி குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில் பொது மக்கள் கோரிக்கையை ஏற்று ரேசன் கடைகளை நவீனமயமாக்க திட்ட மிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ரேசன் கடையும் ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டு அங்குள்ள வசதிகள், பொது மக்கள் மனநிலை உள்ளிட்டவை ஆராயப்பட்டது. 

1,197 கடைகள் நவீனமயமாக்கல் 

இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 929 ரேசன் கடைகளை நவீனமயமாக்க வேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 896 கடைகள் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தேர்வும் செய்யப்பட்டது. இந்த கடைகளில் பழுது பார்த்தல், தரைத்தளம் சீரமைப்பு மற்றும் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 744 கடைகளில் பழுதுபார்க்கும் பணியும், 634 கடைகளில் தரைத்தளம் சீரமைப்புப் பணியும், 1,367 கடைகளில் வண்ணம் பூசும் பணியும் நிறைவடைந்திருக்கிறது. கடந்த மாதம் 30-ஆம் தேதி நிலவரப்படி இதுவரை 1,197 ரேசன் கடைகளில் நவீனமயமாக்குதல் பணி நிறைவுபெற்று, அந்த கடைகள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. குறிப்பாக இதில் 300 கடைகளின் முகப்பு தோற்றம் அழகுற மாற்றப்பட்டு இருக்கிறது. எஞ்சிய கடைகளில் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கடைகளும் பொலிவு பெற காத்திருக்கின்றன. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை களால் ரேசன் கடைகளுக்கு வரும் பயனாளிகளும் மகிழ்ச்சி அடைந் திருக்கிறார்கள். 

அய்.எஸ்.ஓ. தரச்சான்று 

குறிப்பாக 73 ரேசன் கடைகளுக்கு அய்.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது. இதில் தர்மபுரியில் 3 கடைகளும், காஞ்சீபுரத்தில் 4 கடைகளும், நாமக்கல்லில் 9 கடைகளும், தேனியில் 40 கடைகளும், திருவள்ளூரில் 17 கடைகளும் அடங்கும். இதில் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட ஜே.ஜே.754, தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இச்சங்கத்தின் கீழ் 5 ரேசன் கடைகள் செயல்படுகின்றன. இங்கு உறுப்பினர்களின் தேவையறிந்து உரம் விற்பனை செய்தல், நகைக்கடன், சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு 'இ-சேவை' மய்யமும் செயல்பட்டு வருகிறது.

இதில் இதுவரை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த தாமரைப்பாக்கம் கூட்டுறவு ரேசன் கடைக்கு, கடந்த 2020-ஆம் ஆண்டில் சட்டமன்ற தொகுதி நிதியின்கீழ் புதிய கட்டடம் கட்டிதரப்பட்டது.  இந்த நிலையில் அய்.எஸ்.ஓ. தரச்சான்று அளிக்கும் அதிகாரிகள் குழுவினர் தாமரைப்பாக்கம் கூட்டுறவு ரேசன் கடைக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டடத்தின் தரம், பொருட்கள் சேமிப்பு, விற்பனை, இருப்பு மற்றும் பதிவேடு பராமரித்தல் உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. அனைத்து ஆய்வுகளும் திருப்தியளித்த நிலையில் இந்த ரேசன் கடைக்கு அய்.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. ரேசன் கடைகள் நவீனமயமாக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment