முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மதவாத சக்திகளை முறியடிப்போம் தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மதவாத சக்திகளை முறியடிப்போம் தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

* தந்தை பெரியார் பிறந்த நாளைச் சீர்குலைக்க  சங்பரிவார்களின் வன்முறைகள் 

* வட மாநிலங்கள் போல, தந்தை பெரியாரின் திராவிட மண்ணில் கலவரத்தை நடத்த அனுமதியோம்!

தமிழ்நாடு அரசு குறிப்பாகக் காவல்துறை 

வன்முறை சக்திகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கட்டும்!

தந்தை பெரியார் பிறந்த நாளில் பல இடங்களில் கலவரத்தை ஏற்படுத்திய மதவாத சங்பரிவார்க் கூட்டத்தின்மீது சட்டப்படியான நடவடிக்கை தேவை. மதச் சார்பின்மை கொள்கை உடைய முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மதவாதசக்திகளை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியார் பிறந்த நாளும் - சங்பரிவார்களின் அத்துமீறல்களும்

தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரு விழாவாக தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

“திராவிட மாடல்” அரசான தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார் பிறந்த நாளை “சமூகநீதி நாளாக” அறிவித்து முதல் அமைச்சரே உறுதிமொழி கூறி அரசு அலுவலர்களை உறுதிமொழி எடுக்கச் செய்தார்.

தமிழ்நாடு அரசு ‘பெரியார் அரசு’ என்று பகிரங்கமாக முதலமைச்சர் அறிவித்தார்  - “பெரியார் திடல்  எங்கள் தாய் வீடு” என்றும் வெளிப்படுத்தினார்.

தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பாக அமைதியாக நடந்து விடக் கூடாது என்று திட்டமிட்டு, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். - இந்து முன்னணி போன்ற சங்பரிவார்கள் ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுவரொட்டிகளைக் கிழிப்பதா?

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுவரொட்டிகளைக்  கிழித்து எறிந்திருக்கின்றனர். கழகக் கொடியை ஏற்றிட சென்ற இடங்களில் தகராறுகளைச் செய்திருக்கின்றனர். சில இடங்களில் காவல் துறை ஏனோ தானோ என்று நடந்திருக்கிறது. மேட்டுப் பாளையத்தில் காவல் துறையினரே சுவரொட்டியைக் கிழித்துள்ளனர்!

திருச்சி சீரங்கத்தில் நடந்தது என்ன?

திருச்சி விமான நிலையப் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்ட விடாமல், அவற்றைக் காவல்துறையினர் பறித்துச் சென்றுள்ளனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தவர்களை சிலைக்கருகே வர விடாமல் 30 அடிக்கு முன்னாலேயே கழகத் தினரும், பொதுமக்களும் காவல் துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

50 ஆண்டு காலமாகப் பறந்துகொண்டிருக்கும் சிறீரங்கத்தில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றச்சென்ற கழகத் தோழர்களைத் தடுத்துள்ளனர்.

கம்பத்தில் காலித்தனம்

கம்பத்தில் அனைத்துக் கட்சியினரும் தந்தை பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாகச் சென்றனர்  - (காவல்துறையிடம் எழுதிக் கொடுக்கப்பட்டு இருந்தது) அவர்களை, பிஜேபியினர் பேச்சைக் கேட்டுத் தடுத்துள்ளனர்.

தேனியிலும் பெரியார் பிறந்தநாளையொட்டி அனைத் துக் கட்சியினரும் ஊர்வலமாகச் சென்ற நிலையில் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மணிகண்டன்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கம்பம் வழிகாட்டுகிறது

கம்பத்தில் உடனடியாக தி.மு.க., தி.க. சி.பி.அய்., சி.பி.எம்., இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத் தைகள்  கட்சி, மதிமுக, மக்கள் அதிகாரம், அ.இ.பார்வேடு பிளாக், ஆதி தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சியினர், தமுமுக, இ.யூ.முசுலிம் லீக் உள்ளிட்டக் கட்சி முன்னணியினர் சி.பி.எம். அலுவலகத்தில் ஒன்று கூடி மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பிரமாண்டமான சமூக நல்லிணக்கப் பேரணி ஒன்றை நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் 

பிறந்தநாள் என்ற பெயரில்....

இது அல்லாமல், அண்மைக் காலமாக தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் என்று திடீரென அறிவித்து, பெரியார் போல தாடி உருவத்தில் உருவகப்படுத்தி, ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரொட்டியின்மீதும் திட்டமிட்டே ஒட்டி வீண் வம்புக்கு வந்துள்ளனர்.

மதக் கலவரத்தைத் தூண்டுவதா?

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உத்தமபாளை யத்தில் தொழுகை முடிந்து பள்ளிக்கூடம் திரும்பிய முஸ்லிம் மாணவர்களை வழிமறித்து மிரட்டி விரட்டி யுள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே தாழ்த்தப்பட்ட  மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாடகைக்கு வீடு தராதீர் என்ற பெண்மணியின் காட்சிப் பதிவு வைரலாக பரவி வருகிறது.

தென் காசியில் மசூதி சுவர்களில் மோடி பிறந்த நாள் சுவரொட்டியை ஒட்டி, தட்டிக் கேட்டவர்களைத் தாக்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி வ.உ.சி. தெருவிலும் பிரதமர் பிறந்த நாள் சுவரொட்டி ஒட்டுவது என்ற பெயரால் அடிதடியில் இறங்கியுள்ளனர். அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, பீர் பாட்டிலை வீசியுள்ளனர் பி.ஜே.பி.யினர்.

சென்னை கோடம்பாக்கத்தில் குல்லாய் அணிந்திருந்த 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை தாக்கிய வட இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மானமிகு ஆ. இராசாவைக் குறி வைப்பதா?

சென்னை பெரியார் திடலில் ஆதாரப்பூர்வமாக மனு தர்மத்தில் சூத்திரன் என்று கூறப்பட்டுள்ளதற்கான பொருளை விளக்கிக் கூறிய திமுக துணைப் பொதுச் செயலாளர் மானமிகு ஆ. இராசா அவர்களைக் கண்டிப்பதாகக் கூறி அவர் உருவப் படத்தைக் கொளுத்தியுள்ளனர்.

கோவில்பட்டியில் ஆ. இராசா குறித்து அவதூறு சுவரொட்டிகளை ஒட்டிய இந்து முன்னணியினரைத் தடுத்தபோது, காவல்துறையினரையே இந்து முன்னணியினர் தாக்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடை அடைப்புக்கு அழைப்புக் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காலூன்ற கலவர அணுகுமுறையா?

தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டுமானால் வடமாநிலங்களைப்போல் தந்தை பெரியாரின் திராவிட மண்ணிலும் கலவரங்களை உண்டாக்கிக் குளிர் காயலாம் என்று திட்டமிட்டு இருப்பது நன்கு விளங்குகிறது.

தமிழ்நாடு அரசு குறிப்பாக காவல்துறை இதில் முக்கிய கவனம் செலுத்தி கலவரக்காரர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். காக்கிச் சட்டைக்கு பதில் காவிச் சட்டை அணிந்திருப்பாக சில காவல்துறை அதிகாரிகள் நடந்து வருவது மகா வெட்கக் கேடு!

காவல்துறையின் கவனத்துக்கு

காவல்துறை சில இடங்களில் நடந்து கொள்ளும் முறை கவலை அளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

அமைதிப் பூங்காவை அமளிக் காடாக்க அனுமதிக்கக் கூடாது.

மதவாத நடவடிக்கைகளை  எதிர்த்து மதச் சார்பற்ற சக்திகள் கைகோர்த்து ஒன்றிணைந்து மக்கள் ஒற்றுமையை வென்றெடுப்போம்!

வன்முறையை சட்டம் - ஒழுங்கு வேடிக்கை பார்க்கலாமா?

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

19.9.2022

No comments:

Post a Comment