கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

புதுடில்லி, செப். 4- கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ மற்றும் தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் விஜயேஷ் லால்  சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட்,  ஹீமா கோலி அமர்வு முன்பு 1.9.2022 அன்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கொலின் கன்சால்வேஸ், ‘நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடை பெற்று வருகிறது. பிரார்த்தனை கூட்டங்களுக்கு தடை ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான தரவு களை மனித உரிமை அமைப்புகள் அளித்துள் ளன’ என்று தெரிவித்தார். இதனை மறுத்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர்  ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு களில் பெரும்பாலானவை போலியானவை என  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணைய ஊடகங்களில் வெளியான சில கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றம் இதை விசார ணைக்கு ஏற்கக் கூடாது’’ என்றார். இருதரப்பு வாதங் களையும் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம், ‘‘தனிநபர்  மீது நடத்தப்படும் தாக்குதல்களை, சமூ கத்தினர் மீதான  தாக்குதல்களாகக் கருதக் கூடாது. எனினும், மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளவாறு ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந் தனவா? என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய விரும்புகிறது. இதுபோன்ற தாக்குதல்களைக் கண்காணிப்பதற்கான அதிகாரி களை மாநிலங்கள் நியமிக்க வேண்டுமென  உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய வேண்டியுள்ளது. எனவே, தாக்குதல் சம்பவங்கள் குறித்து உத்தரப்பிரதேசம், மத்தியப்  பிரதேசம், அரியானா, கருநாடகா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுக ளிடமிருந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் இரு மாதங்களுக்குள் விவரங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் 

கூடுதல் மாணவர் சேர்க்கை

உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு

சென்னை,செப்.4- நடப்பாண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ள உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சமீபகாலமாக மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால் ஒவ்வொரு கல்லூரிகளிலும் சேர்க்கை இடங்களைவிட கூடுதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

அரசு, தனியார் உட்பட அனைத்துவித கல்லூரிகளிலும் இந்நிலை நீடிப்பதால் முந்தைய வருடங்களை போலவே இந்த ஆண்டும் சேர்க்கை இடங்களை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த கல்வியாண்டை போல் இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ள தால் மாணவர்களின் நலன்கருதி, நடப்பு கல்வியாண்டில் (2022-23) கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 25 சதவீதம் கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி கோரி கல்லூரிக் கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியிருந்தார். அதை யேற்று நடப்பு கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் 20 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இதேபோல், அரசு உதவி கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர் களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

நிபந்தனையை பின்பற்ற வேண்டும்

இதற்காக சார்ந்த பல்கலைக்கழகங்களின் ஒப்புதலை அந்தந்த கல்லூரிகள் பெற வேண்டும். கூடுதல் மாணவர் களை சேர்க்கும்போது கூடுதல் பணியிடங்கள் கோரக் கூடாது போன்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். மேலும், புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங் களை கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிக்கையாக சமர்ப் பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை

விருதுநகர், செப்.4 தமிழ் படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.   திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு  முதலாம் ஆண்டு வகுப்பினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு இல்லை. தமிழ் படிப்பதற்கு ஆட்கள் கிடையாது. தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் என்ற நிலைமை மாறி இன்று தமிழ் படித்தால் தான் வேலை என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. வேலைவாய்ப்புகளில் உங்களுக்கு உறுதி அளிக்கக் கூடிய திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத் தித் தந்துள்ளார்.  தமிழ் படித்தால் தான் வேலை வாய்ப்புகள் என்று பார்த்தவுடன் இன்று வேலை வாய்ப்பு தேடுபவர்கள் தமிழை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள். தற்போது தமிழ் படித்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதையடுத்து முதலாமாண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். விழாவில் திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத்தம்பி, ஒன்றிய குழு துணைத்தலைவர் மூக்கையா, ஒன்றிய கவுன்சிலர் சந்தன பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் நரிக்குடி போஸ், கல்லூரி முதல்வர் மணிமாறன், நகர செயலாளர் சிவக் குமார், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment